Friday, May 5, 2017

தடோபா வனத்தில் இரு தினங்கள்


புலி வருகிறது புலி வருகிறது... this is calling sound
என்று எங்கள் ஜீப்பில் வந்த கைடு சொன்னவுடன் காமிராக்கண்களைத்
 திறந்து வைத்து காத்துக்கொ ண்டிருந்தோம். 
முதல் நாள் பகல் 2 முதல் மாலை ஆறரை வரை 
திறந்த ஜீப்பில் மேடும் பள்ளமுமாக இருக்கும்
 தடோபா காட்டு வழியில் பயணம்.. 
ஆனால் மாலை 6 மணிவரை புலிகள் வரவே இல்லை.

புள்ளிமான்களும் கவரிமான்களும் துள்ளிக்குதித்து ஓடின.
 குரங்குகள் சாலையை மறித்துக்கொண்டு எதற்காகவோ 
தர்ணா போராட்டம் நடத்தின. பெரிய ஆந்தை ஒன்று மரக்கிளையில்
 உட்கார்ந்து இரவுக்காக காத்திருந்தது. காட்டெருமை
கம்பீரமாக நடந்து வந்தது. மயிலொன்று சிறகை விரித்து ஆடிகொண்டிருந்தது.
பெயர் தெரியாத பறவைகளும் விலங்குகளும் எங்களைக்
 கண்டு கொள்ளாமல் அசட்டை செய்தன. குளக்கரையில் இரு முதலைகள்
 தலையை மட்டும் கரையில் வைத்துக்கொண்டு யோகா 
செய்து கொண்டிருந்தன. 
கொற்றவை அந்த வனத்தில் அப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாள்.
அரசர்களின் வேட்டைக்கு உதவும் விளக்குத் தூண்கள்
எண்ணெயின்றி ஒரு ஆவணமாக ஆங்காங்கே
அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தன.

this is calling sound
மீண்டும் நாங்கள் உஷாரானோம். எப்படியும் புலியைப் பார்த்துவிடுவது
 என்ற வேகத்தில் ஜீப் .. ஆளுயர மூங்கில் செடியின் 
காய்ந்தப்போன புதர்களுக்கு நடுவில் புலி ஒன்று படுத்திருக்கிறது 
என்றார் கைடு. எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.
சற்று நேரத்தில் கம்பீரமாக எழுந்து நடந்து சென்றது அந்தப் புலி. 
ஆனாலும் தன் முகத்தை மட்டும் அது காட்டவே இல்லை. 
ஆண்புலி இது என்றார் கைடு.
என்ன ஒரு திமிர் அதற்கு...ம்ம்ம்.
.
7 மணிக்கெல்லாம் சஃபாரி முடிந்து டைகர் ரிசோர்ட்டுக்கு
 வந்து விட்டோம். காட்டிலிருந்து பார்க்கும் போது ஆகாசத்திற்கு
 என்னவோ தனி அழகே வந்துவிடுகிறது., வனத்தின்
யட்சிகளைப் பற்றி எப்போதும் என்னுடன் உரையாடும்
தோழி மீரா நிசப்தமான அந்த வெளியில் என்னுடன்
அமர்ந்து ... நிலவுடனும் நட்சத்திரங்களுடனும் ஏதோ
யட்சிகளின் மொழியில் பேசிக்கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் காட்டுக்குள்
 ஜீப்புடன் இன்னொரு ஷபாரி.
பயணம். 10 நிமிட பயணத்திலேயே புலிகளின் நடமாட்டத்தைக் 
கண்டுப்பிடித்துவிட்டார் கைடு. இரண்டாவது ஜீப்பில் நாங்கள்
 உட்கார்ந்திருந்தோம். அடர்ந்த புதருக்கு அருகில்

இரு குட்டிப்புலிகள் படுத்திருந்தன. சோம்பல் முறித்துக்கொண்டிருந்தப் போது
ஜியாகிரபி சேனல் திரை விரிந்தது . 
இது ஆண்புலியின் அழைப்பு என்றார் கைடு.
காத்திருப்போம் கட்டாயம் இந்த வழியாகத்தான் பெண்புலி
 போயாக வேண்டும் என்றார். அவர் ஊகம் சரியாகவே இருந்தது. 
ஆண்புலியின் அழைப்பு விட்டு விட்டு ஒலிக்க ஆரம்பித்தது. 
சாலையைக் கடந்து ஆண்புலி காத்திருக்கும் அடுத்தப் பகுதிக்குப்
போனது பெண்புலி. என்னவோ வேறு வழியில்லாமல் போவது போல ...


ஆம்.. ஆண்புலி அழைத்தவுடன் செல்லவில்லை என்றால் 
அதுவே அப்பெண்புலியின் குட்டிகளுக்கு உயிராபத்தாக 
முடிந்துவிடும் அபாயம் உண்டு. !
ஆண்புலிக்கு உடலுறவுக்கென்று நேரம் காலமே கிடையாதாம். 
கருமுட்டைக்கும் கருத்தரிப்புக்கும் கூட குறைந்தது 
சில நாட்கள் புணர்ச்சி தேவைப்படுகிறது புலிகளுக்கு! 
கருத்தரிப்புக்குப் பின்னரும் குட்டிகளைப் பிரசவித்தப் பிறகும்
 பெண்புலி ஆண்புலியுடனான உறவை இரு ஆண்டுகள் 
விலக்கி வைக்கிறது. ஆனால்  புணர்ச்சிக்குப் பின் 
கருத்தரிக்கவில்லை என்றாலோ அல்லது குட்டிகள் இறந்துவிட்டாலோ
பெண்புலி மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள்
 உடலுறவுக்குத் தயாராகிவிடுகிறது.
பெண்புலியின் இந்த பாலியல் சூட்சமத்தை அறிந்து கொண்ட 
ஆண்புலி தன் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்ள 
இதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது.
அதாவது குட்டிகள் இருந்தால் தானே இந்தப் பெண்புலி
 தான் கூப்பிட்ட உடனேயே வருவதில்லை என்ற நினைப்பில் (கோபத்தில்) பெண்புலியின் குட்டிகளைக் கொன்றுவிடுகிறது ஆண்புலி. 
ஒவ்வொரு பெண்புலிக்கும் தன் குட்டிகளை ஆண்புலியிடமிருந்து காப்பாற்றி
வேட்டை அனுபவங்களையும் பயிற்சிகளையும் கற்பித்து
 தன் குட்டிகளை ஆளாக்குவதற்கே இரண்டு ஆண்டுகள் ஆகிவிடுகிறது. 

ஒவ்வொரு ஆண்புலிக்கும் குறைந்தது மூன்று பெண்புலிகளாவது
 தன் உடலிச்சையைத் தீர்த்துக்கொள்ள தேவைப்படுகிறது !
. (அதாவது காட்டில் வாழும் ஒவ்வொரு ஆண்புலிக்கும்
என்று வாசிக்கவும். )
200க்கும் அதிகமான விலங்கினங்கள், 75 வகையான பட்டாம் பூச்சிகள், வண்டுகள்
கோடையிலும் வற்றாத அந்தாரி நதியும் ஏரியும் குளங்களும் தடோபா காடுகளின் தாய்மடியாக.
புலிகளின் நடமாட்டத்தை காட்டில் வாழும் பிற விலங்கினங்களுக்கு
 முன்னறிவிப்பு செய்வதில் குரங்குகள் தான் முதலிடம் வகிக்கின்றன. அடுத்து மான்கள். மான்கள் தன் கூட்டத்திலிருக்கும் பிற மான்களுக்கு புலி வருகிறது புலி வருகிறது என்று காலிங் சவுண்ட் கொடுக்கின்றன. ஆண்புலி பெண்புலியை அழைக்கும் ஓசை, பெண்புலி தன் குட்டிகளைப் பாதுகாப்பாக இருங்கள், இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லும் ஓசை, பெண்புலிக்காக ஆண்புலிகள் சண்டையிடும் ஓசை,
சிறுத்தைகளின் பாய்ச்சலும் உறுமலும், தன் கூட்டத்திற்கு தலைவராக மான்கள் ஒருவருக்கொருவர் குஷ்தி சண்டைப்போடும் காட்சி.. காட்டு நாய்களின் உறுமல், கூட்டமாக தன் குட்டிகளுடன் நடக்கும் காட்டுப்பன்னிகளின் சப்தம், வண்டுகளின் ரீங்காரம், ...
காட்டில் எல்லா ஓசைகளுக்கும் அர்த்தமுண்டு.
தேக்கு மரங்களி ன் ஊடாக வளர்ந்திருக்கும் 
வெள்ளை சிற்பங்களான கோஸ்ட் மரங்களின் 
மவுனத்திற்கும் கூட அர்த்தமுண்டு.

10 comments:

 1. காட்டில் எல்லா ஓசைகளுக்கும் அர்த்தமுண்டு.
  தேக்கு மரங்களி ன் ஊடாக வளர்ந்திருக்கும்
  வெள்ளை சிற்பங்களான கோஸ்ட் மரங்களின்
  மவுனத்திற்கும் கூட அர்த்தமுண்டு.

  மறக்க இயலா அனுபவம்தான் சகோதரியாரே

  ReplyDelete
 2. ஆண் புலி குறித்து
  அறியாத பல விஷயங்கள் அறிந்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. சுவாரஸ்யமா பதிவு. புலிகளை பற்றி அறிந்து கொண்டேன்.
  அது என்ன பர்த்தாவுடன் :)

  ReplyDelete
  Replies
  1. செம்மண் புழுதி சாலையில் வனத்தில் திறந்த ஜீப்பில் பயணிக்கும் போது புழுதியும் தூசியும் சேர்ந்து கிளம்பும். மேலும் கொளுத்தும் கோடை வெயில் வேறு.எல்லாத்துக்கும் சேர்த்து தான் இப்படி ஒரு பர்த்தா!
   மிக்க நன்றி.

   Delete
 4. புலியாக இருந்தாலும், ஆண், ஆண் தானா? பெண்களை வதைப்பதுதான் அவன் தொழிலா? என்ற கேள்வி எழுகிறது. இன்னும் என்னவெல்லாம் பார்த்தீர்கள்?

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. “Tigers Trails in Assam by P. Hanley , /
   Tiger: Portrait of a Predator” (1986), by Valmik Thapar,/
   Billy Arjan Singh has written in his book “Tiger Tiger"
   புத்தகங்களில் புலிகள் குறித்து சுவராஷ்யமான நிறைய தகவல்கள்
   ஆய்வுகள் புகைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. மிக்க நன்றி

   Delete
 5. தடோபா இது வரை சென்றதில்லை. ஜிம் கார்பெட், கிர் வனம், காசிரங்கா, ஷிவ்புரி என்று சில வனப் பகுதிகளுக்குள் சென்றதில் பார்த்த மிருகங்கள், இயற்கைப் பகுதிகள் மனதுக்குள்......

  புலிகள் பற்றிய தகவல்கள் புதியது. இங்கே செல்லும் ஆசை வந்து விட்டது.....

  ReplyDelete
  Replies
  1. புலிகள் அதிகமாக வாழும் காடு மத்திய பிரதேசம் பந்தவ்கர்க் என்றே எல்லோரும் சொல்கிறார்கள். நான் இதுவரை போனதில்லை. தடோபாவும் மழைக்காலத்திற்குப் பின் மிகவும் பசுமையாகவும் ரம்மியமாகவும் இருக்கும். புலிகள் குறித்த மேற்கண்ட தகவல்கள் கைடு சொன்னது என்றாலும் ஆண் - பெண் புலிகளின் உறவுநிலை குறித்து நடத்திய ஆய்வுகளும் இதை உறுதி செய்திருக்கின்றன. வால்மிக் தாப்பர், பில்லி அர்ஜீன் சிங் என்று இந்தியர்கள் எழுதி இருக்கும் புத்தகங்களில் கூடுதலான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   Delete
  2. மத்திய பிரதேசத்தின் பாந்தவ்கர் காட்டிற்கும் சென்றதுண்டு. இரண்டு முறை காட்டுக்குள் சென்றும் புலிகளைப் பார்க்க இயலவில்லை. பார்த்தது காலடித்தடங்கள் மட்டுமே.

   Delete
 6. # புலி வருகிறது புலி வருகிறது என்று மான்கள் காலிங் சவுண்ட் கொடுக்கின்றன#
  நாம சொல்றமாதிரிதானே :)

  ReplyDelete