Peppa pig …
இன்றைய குழந்தைகளின் மிகவும் விருப்பமான
கார்ட்டூன் தொடர்.
(தயாரிப்பு யு.கே கம்பேனி.)
இதை அப்படியே தமிழ்ப் படுத்தினால் பெப்பா பன்றி..
அல்லது பெப்பா என்ற பன்றி…
ம்கூம் .. நமக்கு சொல்வதற்கும் கேட்பதற்கும்
இனிமையாக இல்லை!
ஏன்? ஏன்? ஏன்?
பெப்பா தொடரில் பெப்பா என்ற பெண்பன்றிக்கு
Play school போகும் வயது.
பெப்பாவுக்கு daddy pig, mummy pig, brother pig (george),
grandpa pig,
Grandma pig என்று குடும்பம் உண்டு. ஆட்டம் பாட்டம் விளையாட்டு
பெப்பாவின் நண்பர்களாக குட்டி யானை, முயல், மாடு
இத்தியாதி சகலமும்
வலம் வருகின்றன. எல்லா கதைகளும் பெப்பா வாயிலாக
குழந்தைகளின்
மொழியில் குழந்தைகளுக்குப் புரியும் வகையில்..
பன்றிகள் எப்போதும் சக்தியில் உருண்டு கொண்டிருக்கும்.
இத்தொடரில் பெப்பா & குடும்பத்திற்கும் சகதியில் விளையாடுவது தான்
மிகவும் பிடித்தமான விளையாட்டு..
பெப்பா டூர் போகிறாள்.பீச்சுக்குப் போகிறாள்,ஸ்கூல் பசங்களுடன்
சண்டைப் போட்டுக்கொள்கிறாள், தம்பியை அழ வைக்கிறாள்..
குழந்தை அம்மா வயிற்றிலிருந்து பிறக்கிறது .. இப்படியாக
ஒன்றும் விடாமல் கதைக் கதையாக .. பெப்பா வலம் வருகிறது
குழந்தைகளின் உள்ளத்தில்.. தொலைக்காட்சியில்…
பெப்பாவுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது என்பது
இன்னும் ஆச்சரியமான செய்தி என்னைப் போன்றவர்களுக்கு.
ஹவாய் தீவு பயணத்தில் ஒரு தாவர இயல் பூங்காவுக்கு
பிற தேசத்து மக்களுடன் பயணித்தோம்.
பயணித்த குழந்தைகள் டிரெயின் ஓரிடத்தில் நிற்கிறது.
எல்லோரும் இறங்குகிறார்கள்.. பெப்பா.. பெப்பா.பெப்பா
என்று கத்திக்கொண்டு… பெப்பா வுக்கு குழந்தைகள்
தோட்டத்தின் உதவியாளர் கொடுத்த பிரட் துண்டுகளைக்
கொடுக்கிறார்கள். பெப்பாக்கள் ஓடி ஓடி பிரட் துண்டுகளைக்
கடித்துக்கொண்டு சகதியில் கும்மாளமிடுகிறார்கள்.
குழந்தைகள் மகிழ்ச்சியில் குதிக்கின்றன.
பெற்றோர்களையும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது.
காமிராக்கள் பளிச் ப்பளீச் என்று புகைப்படம் எடுக்கின்றன.
நான் மட்டும் டிரெயினிலிருந்து இறங்கவில்லை..
நம் இந்தியப் புத்தி..
இருந்திருந்து இந்தப் பன்னிகளைப் பார்க்கறதுக்கா
இறங்கனும்னு .. மண்டைக்குள் புழுத்துக் கொண்டிருந்தது…
பன்னி என்றால் அழுக்கானது.
பன்னி என்றால் அருவெருப்பானது.
பன்னி ரசனைக்குரியதல்ல.
இது எல்லாவற்றையும் விட இன்னொரு கேவலம்
பன்னி கீழ்ச்சாதிக்கானது!
இது ..இது.. இதுதான்யா..
இப்போ பளிச்சினு என் மண்டைக்குள்ளிருந்து
வெளியில் வந்து என்னை வெட்டிச் சரிக்கிறது.
கூர்ம அவதாரம்.. மச்ச அவதாரம்.. வராக அவதாரம்..
அப்படி இப்படி அவதாரம் சொல்லியவர்கள் தான்
மச்சி நாற்றமெடுக்கிறது என்றார்கள்.
வராகம் அழுக்கானது என்றார்கள்.
ஆனால் சங்க இலக்கியத்தில் காட்டுப்பன்றியும் வீட்டுப்பன்றியும்
முள்ளம்பன்றியும் பற்றிய செய்திகளும் வர்ணனைகளும்
உண்டு.
பன்றி கூட்டமா வரும்.
சிங்கம் தான் சிங்கிளா வரும் நு சூப்பர் ஸ்டார் சொன்ன ஒரு
பஞ்ச் டயலாக்.. நம்ம ஊரில் புகழ்பெற்றது.
சிங்கம் என்றால் உயர்வு
பன்றி என்றால் தாழ்வு என்ற மனப்பான்மையிலிருந்து
ஒருவிதமான தூய்மை - புனிதத்துவ மன நிலையில்
சுஜாதா எழுதியது. கவிஞர் அறிவுமதி இதைப் பற்றி
இந்தப் பஞ்ச் டயலாக் வந்தவுடனேயே எதிர்த்து
பரப்புரை செய்தார்.
தன் குட்டிகளைக் காப்பாற்ற ஆண்பன்றி புலியுடன் கூட
மோதும், சண்டைப்போடும், பன்றிகள் கூட்டமாக
வருகிறது என்றால் அது கூட்டுக்குடும்பத்தின்
கூட்டு இனக்குழுவின் அடையாளம்.
திருடுகிறவன் தான் தனியா வருவான் ! என்பார் அறிவுமதி.
ஆனால் நமக்கு சூப்பர் ஸ்டார் புண்ணியத்தில்
மனசில் நிற்பது என்னவோ
“ சிங்கம் சிங்கிளா தான் வரும்ம்ம்ம்ம் “ என்பது தான்.
இந்தச் சிங்கத்தை எல்லாம் பேசினா அசிங்கமாயிடும்.
வேண்டாம்..
ஆக மொத்தத்தில் பெப்பா பன்றி
குழந்தைகளின் உள்ளத்தில் இடம் பிடித்துவிட்டதில்
எனக்கு மகிழ்ச்சியே.
காரணம் அவர்கள் இனி பன்றியை வெறுக்க மாட்டார்கள் தானே.
ஹெய்..peppa pig..
No comments:
Post a Comment