என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நீ அனுப்பிய புத்தகங்கள்தான்
என் அறிவுலகின் சிறகுகள். அந்த வாசிப்பில்தான்
நான் என்னை என் வானத்தை அளந்து கொண்டிருக்கின்றேன்.
இந்தப் பிறந்தநாளுக்கு நீ அனுப்பியிருந்த புத்தகம் "ஹோ சி மின்"
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு க. விஜயகுமார்.
(மூலம் ரஷியமொழியில் யெவ்கனி கொபலெவ்.
அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள்
விக் ஸ்நீர்சன், செர்கே & ஈவான் சுலாகி .. வெளியீடு: தமிழோசை பதிப்பகம், கோவை)
வழக்கத்திற்கு மாறாக சில வரிகளை எழுதி
"உன் நட்பின் சூர்யா" என்று கையொப்பமிட்டிருந்தாய்.
அந்த வரிகள்.....
"தமிழில் வெப்பம் ஊற்றி
அறிவில் செப்பம் செய்யும்
பகுத்தறிவு வெளிச்சத்திற்கு...."
நீ எழுதியிருந்ததை வாசித்துவிட்டு ஏனோ சந்தோசப் படமுடியவில்லை.
அச்சமாக இருந்தது. ஏனேன்றால் நீ எழுதியிருக்கும் அவளா நான்?
என்ற கேள்வி என்னிடம் ..!
நான் நிச்சயமாக நீ எழுதியிருக்கும் அவளில்லை.
இதை என்னைப் பற்றித் தெரியாத
என்னைப் பற்றி அறியாத
எவராவது எழுதியிருந்தால் அச்சப்பட்டிருக்கமாட்டேன்.
என் அகமும் புறமும் அறிந்தவன் நீ
என் ஆசையும் நிராசையும் அறிந்தவன் நீ
என் அழுக்கும் நாற்றமும் அறிந்தவன் நீ
என் வேஷமும் கபடமும் அறிந்தவன் நீ
என் கொள்கைகளின் பலமும் பலகீனமும் அறிந்தவன் நீ
என் முகமூடிகள் உன்னிடம் தோற்றுப்போயிருக்கின்றன.
என் வார்த்தை ஜாலங்கள் உன்னிடம் மண்டியிட்டிருக்கின்றன.
என் அகராதியின் அர்த்தங்கள் உனக்கு அத்துப்படி.
இருந்தும் ஏன் என்னை .. அப்படி அழைத்தாய்..?
கேட்டேன்.. சிரித்தாய்..
யாரை எல்லாம் நாம் கொள்கையின் தீபங்கள்
என்று நினைக்கின்றோமோ அவர்கள்
வெறும் காகிதக் குப்பையின் தீ வெளிச்சங்கள்தான்.
எரிகின்ற வெளிச்சமெல்லாம் இருளகற்றும் வெளிச்சமில்லை.
எது எரிகின்றதோ அதுதான் வெளிச்சத்தை தீர்மானிக்கும்
எதற்காக எரிகின்றதோ அதுதான் வெளிச்சத்திற்கும்
விடியல்தரும்.
"நீ அவளில்லை என்றால்
வேறுயாரை நான் சொல்ல முடியும்?" என்றாய்.
நீதிமன்றத்தில் பகவத்கீதையைக் கையில் ஏந்தி
நான் சொல்வதெல்லாம் உண்மை,
உண்மையைத் தவிர வேறில்லை”
என்று சத்தியம் செய்கிறவனெல்லாம் பகவத்கீதை படித்தவனா!
நீதிபதி களும் அறிந்த சத்தியமல்லவா இதெல்லாம்.
புத்தனுக்கு பிறகு வந்தவரெல்லாம்
புத்தராகவில்லை.
புத்தனாக முயற்சித்தார்கள்.
இதெல்லாம் மதங்களுக்கு மட்டுமா..
இசங்களுக்கும் தான்.
நீ எதாக வாழ்ந்து காட்ட
போராடிக் கொண்டிருக்கின்றாயோ
அதுவே, நீ அதாக வாழ்வதின் அர்த்தம் என்றால் மட்டும்
ஏன் மறுக்கின்றாய்? அச்சப்படுகின்றாய்!
ஆயிரம் கேள்விகள் கேட்கின்றாய்?"
நீ சொன்ன விளக்கத்தில்
எனக்கு உடன்பாடில்லை.
நான் சமூக அவலங்களை
ஊமையாக பார்த்துக் கொண்டிருக்கும் ஊனம்.
என்னைப் பாதிக்காத எதற்காகப் போராடி இருக்கின்றேன்?
சொல்.
வெடிகுண்டுகள் வெடித்த அந்த ரயிலடியில் நானும் சாட்சியாக.
காயப்பட்டவர்களுக்காக அழுததைவிட
இன்னும் வீடு வந்த சேராத என் உறவுகளை எண்ணித்தானே
அழுதிருக்கின்றேன்.
என் சுற்றங்கள் காயப்படவில்லை என்றவுடன்
ஓடோடிச் சென்று கடவுளுக்கு நன்றி சொன்ன
கயமைத்தனத்தை என்னவென்று சொல்வது?
காயப்பட்டவர்களுக்காக
தன் உறவுகளை இழந்து போன அப்பாவி உயிர்களுக்காக
கண்ணீர் விட்டதெல்லாம் இழவு வீட்டில்
ஒப்பாரிக்கு அழுதது போல..வாழ்ந்திருக்கிறேன்.
ஏன் குண்டு வெடித்தது..?
அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தார்களே
அப்போதெல்லாம் கடவுள் ஏன் சிலையாகிப் போனார்?
கேட்டேனா.. இல்லையே.
கருவறையில் கண்ணீருடன் என்னைக் காப்பாற்றியதற்கு
என் சுற்றங்களைக் காப்பாற்றியதற்கு
இப்படியாக எனக்காக மட்டுமே
கை கூப்பி கூம்பிட்டு ..
என் மனசின் கோரங்கள்..ரொம்பவும் விகாரமானவை.
பகுத்தறிவு என் உணர்வுக் குவியலில் சரிந்து விழுந்த
சம்பவங்கள் நிறைய்ய.
என் உதிரம், என் சொந்தம் என்றெல்லாம்
என் வட்டம் வரையப்படாமல்
நான் நானாக மட்டுமே இருந்திருந்தால்
இந்தச் சரிவுகளை எல்லாம்
சந்திக்க வேண்டிய அவலமே அரங்கேறி இருக்காதோ?
இந்த உறவுகளில், உறவுகள் தந்த பிணைப்புகளில்
நான் சரிந்தேன். சரிந்து கொண்டே இருக்கிறேன்.
நீ
எந்த உறவுகளின் பிணைப்பிலும் பிணையக் கைதி ஆகாமல்
உன் சுயமிழக்காமல் உன் கொள்கைகள் சரியாமல்
நிமிர்ந்து நின்றாய்.நிற்கின்றாய்..
அதுவும் உன்னை, உன் அருகாமையை நான் இழந்துவிட்ட
நாட்களில் என்னிடம் நீ கண்ட வெளிச்சமும்
எண்ணெய் இல்லாத திரியாக தீய்ந்து போய்விட்டதை நீ அறிவாயா..?
பகுத்தறிவும் அறிவியலும் கூட நீ பக்கத்திலிருக்கும்போது
வாழ்வியலாகின்றது.
நீயும் உன் துணையும் இல்லாத நாட்களில்
யோகா என்றும் தியானம் என்றும்
என்னை எனக்காக உயிர்ப்பித்துக் கொள்ள
என்னவெல்லாமோ செய்து பார்க்கிறேன்.
தோற்றுப் போகிறேன்.
என் பூமி வறண்டு போகிறது.
உன் நினைவுகள் சூல்கொண்டு
கார்மேகமாய் புறப்பட்டு வருகின்றன.
சூர்யா..
வேர்களின் மண் வாசனையில்
உன் மழைத்துளிகள் பூவாக..
கொட்டிக்கொண்டே இருக்கின்றன.
No comments:
Post a Comment