Friday, September 7, 2018

தீவுகளின் கண்ணீர்..

தீவுகளின் கண்ணீர்..
தீவுகளின் கண்ணீரில் பசிபிக் கடல் உப்புக்கரிக்கிறது.… 


அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்..?
தேசத்துரோகமா?கொலை செய்தார்களா? 
அவர்கள் செய்தக் குற்றம் என்ன?
அவர்களுக்கு தொழு நோய் வந்ததால் அவர்கள்
நாடு கடத்தப்பட்டார்கள்.
மனித வரலாற்றில் சில மறைக்கப்பட்ட பக்கங்களில் இதுவும் ஒன்று.
ஹவாய் தீவுக் கூட்டத்தில் இருக்கும் அழகிய சிறிய தீவு.. mOlokai.
தீவுக்கு அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்.
அவர்கள் தீவில் விடப்பட்ட இடம் 
கல்லோபப்பா. (kapaupapa). இப்பகுதிதான் நாடு கடத்தப்பட்டவர்களின்
இருப்பிடமாக மாறியது. (Lepor colony ) 
1800களில் ஐரோப்பிய கப்பல்கள் ஹவாய் தீவுகளில் வந்து இறங்கியபோது
அவர்கள் தங்களுடன் கூடவே வியாதிகளையும் இறக்குமதி செய்தார்கள்.
பால்வினை வியாதிகளில் இறந்தவர்கள் 10,000 .
டைபாய்ட் காய்ச்சலில் இறந்தவர்கள் 5,000.
1853ல் சின்ன அம்மை வியாதியில் இறந்தவர்கள் மட்டும் 15,000..
இப்படியாக அன்றைக்கு மருந்துகள் கண்டுபிடிக்காத காலத்தில்
ஹவாய் தீவுகளின் தீர்க்க முடியாத வியாதிகள் அவர்களைப்
பயமுறுத்தின,. விளைவு.. தொழு நோய் பரவிய போது அந்த நோயினால்
பாதிக்கபப்ட்டவரின் தோற்றம், விளைவுகள்.. சொல்லமுடியாத 
பீதியைப் பரப்பியது என்னவோ உண்மைதான்.
ஹவாய் தீவுகளின் அரசன் ஐந்தாம் ஹமேஹாமேஹா. 
( King Kamehameha V, who issued an 
“Act of Prevent the Spread of Leprosy” in 1865.)
தொழு நோயாளிகள் தாங்களாகவே முன் வந்து சரணடைய வேண்டும்.
இல்லை என்றால் அவர்கள் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று ஆணையிட்டான்.
அரசாங்கம் அந்த நோய் பரவுவதைத் தடுப்பதாகச் சொல்லி
அந்த நோய் வந்தவர்களைப் பிடித்துக் கொண்டு போய்
பிற மனிதர்கள் செல்ல முடியாத தனிமைச் சிறையில் - கல்லோபப்பா தீவில்
கொண்டு விட்டது.
ஜனவரி 6, 1866 ல் 12 பேர் இத்தீவுக்கு நாடு கடத்தப் பட்டார்கள்.
அதன் பின் தொடர்சியாக 
சாவதற்காக அத்தீவுக்கு வந்த 8000 பேர் அந்தத் தீவில் வாழ்ந்து மடிந்தார்கள்.
இன்றும் 1300 கல்லறைகள் அத்தீவில் அவர்கள் வாழ்க்கையை
தன் மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பதைக் காணலாம்.
மீதி பேர்..?! 
2009ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஓபாமா அவர்கள்
அத்தீவிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கேயே இறந்துப் போன
8000 பேருக்கும் நினைவுச்சின்னம் எழுப்பப்படும் என்று
அறிவித்தார். (நம்ம ஊரு மாதிரிதான் அறிவிப்புகளும்.
ஆட்சியாளர் மாறும் போது மறக்கப்பட்டுவிடுமா தெரியவில்லை!)
அத்தீவில் ஆரம்பத்தில் பள்ளிக்கூடம் இல்லை.
ஆனால் தேவாலாயங்கள் இருந்தன!
33 வயதில் பெல்ஜியம் கிறிஸ்தவ மிஷினரியைச் சார்ந்த
அருள் தந்தை டெமியன் டி வெஸ்டர் இந்த மக்களின் வாழ்க்கையில்
(Father Damien deVeuster, ) பெரும் மாற்றங்களை
ஏற்படுத்தினார். அதுவரை குகைகளிலும் மரப்பொந்துகளிலும்
வாழ்ந்து வந்த இம்மக்களுக்கு கூரைகள் கொண்ட வீடுகள்,
குடி தண்ணீர் வசதி, சுகாதார மருத்துவ வசதிகள்
ஏன் மரணித்தவர்களுக்கு கல்லறை கட்டும் வசதி வரை
இவர் ஏற்படுத்திக் கொடுத்தார். இம்மக்களின் ஒருவராகவே
வாழ்ந்தவருக்கு இம்மக்களில் ஒருவராகவே ஆன சோகமும்
நடந்தேறியது. ஆம்.. இவருக்கும் தொழு நோய் வந்தது ..
இந்த மண்ணிலெயே அவரும் மடிந்தார்.
இவருக்குப் பின் இவர் வழி வந்தவர்கள்
Brother Joseph Dutton & Mother Marianne,
இருவரும் இவர் விட்டுச் சென்ற மக்கள் பணியைத் தொடர்ந்தார்கள்.
அங்கேயே வந்தவர்களுக்குள் காதல் இருந்தது.
ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடந்தன.
வாழ்க்கை அவர்களுக்காக காத்திருந்தது.
ஆனாலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை
பிறந்தவுடன் தாயின் முகம் பார்க்கும் முன்பே 
குழந்தையைப் பிரித்து தத்தெடுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு
அனுப்பி குழந்தைகளின் பாதுகாப்பு என்ற பெயரில்
இன்னொரு சோக வரலாறும் அரங்கேறியது.
இப்பிரிவுகள் குறித்து எழுதப்பட்ட கதைகள் புதினங்கள்
இவர்களின் கண்ணீரைப் பதிவு செய்திருக்கின்றன.
அப்படி நான் வாசித்த கதையின் ஒரு பகுதி..
“40 வயதில் தெரியவந்தது என் அம்மா அத்தீவில் இருக்கிறாள்
என்பது.. அவள் இப்போது எப்படி இருப்பாள்..?
அவள் என்னை நினைத்துக்கொண்டிருப்பாளா?
அவள் வாழ்க்கையில் நான் இருக்கிறேனா..
அம்மா.. உன்னை ஒரு முறைப் பார்த்தால் 
என் பசி அடங்குமா..
அவள் அம்மாவைப் பார்க்க வருகிறாள்..
இருவருக்கும் இடையில் சிக்கன் ஸ்கீர் திரைகள் அசைந்துக்
கொண்டிருக்கின்றன…
அவள் அம்மாவைப் பார்க்க மீண்டும் மீண்டும் வருகிறாள்.
சிக்கன் திரைகள் விலக்கப்பட்ட நாட்களில்
அம்மா.. அவளுடன் வாழும் அவளுடைய தீவு மக்களுடன்
அமர்ந்திருக்கிறாள்.. 
அவர்கள் தொலைக்காட்சியில் எதோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
திரையை அவள் பார்க்கும் போது அவளை அம்மா பார்க்கிறாள்.\
அவள் அம்மாவைப் பார்க்கும் போது 
அம்மா திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
இருவரும் மாறி மாறி..
விழிகளின் பாவனைகள் தொடர்கின்றன.
அவள் அம்மாவிடம் கேட்க நினைத்தது எதையும் கேட்கவில்லை.
அம்மாவும் மகளிடம் சொல்ல நினைத்ததைச் சொல்லவில்லை.
அவள் அம்மாவைச் சந்திக்க ஒவ்வொரு ஆண்டும்
வந்து கொண்டிருக்கிறாள்..
அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்..
பின்குறிப்பு:
As per WHO 
Leprosy still exists,
The top three are India, Brazil and Indonesia, 
where 81% of the world's cases are found.
More than 60% of the world's cases are found in India.
More than 700 official leprosy settlements exist in India today

2 comments:

  1. வேதனை சகோதரியாரே
    அறுபது விழுக்காடு இந்தியா என்னும்போது வேதனை கூறுகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆம். WHO ஆதாரத்துடன் தரும் இத்தகவல் எனக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. மிக்க நன்றி.

      Delete