Thursday, September 27, 2018

Adultery is not a crime, “திருமண உறவுக்கு வெளியே ஆண்-பெண் பாலுறவு சட்டப்படி குற்றமல்ல”


“திருமண உறவுக்கு வெளியே ஆண்-பெண் பாலுறவு
சட்டப்படி குற்றமல்ல”
இந்த தீர்ப்பு கொஞ்சம் சென்சிட்டிவ் ஆன விஷயம் தான்.
அப்படி எல்லாம் இல்லை என்று எந்தப் புரட்சி முகமூடியும்
போட்டுக்கொள்ள வேண்டியதில்லை.
“திருமண உறவுக்கு வெளியே ஆண்-பெண் பாலுறவு
சட்டப்படி குற்றமல்ல”
Adultery is not a crime, 
India's supreme court rules.
1860ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வயது வந்தோர் சட்டத்தின் கீழ், ஆண் ஒருவர், வேறொரு திருமணமான பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டிருந்தால், அந்த பெண்ணின் கணவர் இதுகுறித்து புகார் அளித்தால், முறையற்ற உறவு சட்டத்தின் கீழ், பாலியல் உறவு கொண்ட ஆண் குற்றவாளியாக கருதப்படுகிறார். குற்றம் உறுதி செய்யப்பட்டால் ஐந்தாண்டு சிறை தண்டனை அல்லது அபராதம், சில சமயங்களில் சிறை தண்டனையும் அபராதமும் சேர்த்து வழங்கப்படும் என்று வழக்கில் இருந்த 157 ஆண்டுகால பழமையான சட்டத்தை இப்போது இந்த தீர்ப்பு
மாற்றி அமைத்துள்ளது.
இத்தீர்ப்பு திருமணத்தின் புனிதத்தைக் கெடுத்துவிடும், நீர்த்து போகச்
செய்துவிடும் என்பதே கலாச்சாரக் காவலர்களின் கவலையாக இருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் சமூக ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் பிரவீனா கோடோத், "கணவரின் அனுமதியுடன் திருமணத்துக்கு வெளியே உறவுகொண்டால் அது குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் கணவரே கட்டாயப்படுத்தி தன் மனைவியை வேறு ஒருவருடன் உறவுகொள்ள வைத்தால் என்ன தண்டனை என்பது குறித்து கூறப்படவில்லை," என்கிறார்.
இத்தீர்ப்பு வந்தவுடன் ஆஹா ஒஹோ என்று கொண்டாடவோ 
அல்லது இத்தீர்ப்பை வைத்துக்கொண்டு இதுவே பெண்ணுக்கு
கிடைத்திருக்கும் பாலியல் விடுதலை என்று முடிவு செய்யவோ
முடியாது என்பதே என் கருத்து. காரணம்.. நடைமுறை வாழ்க்கை
என்பது இந்திய சமூகத்தில் என்னவாக இருக்கிறது என்பதைக்
கருத்தில் கொண்டு இத்தீர்ப்பை நான் அணுகுகிறேன். தோழி
கிருபா முனுசாமி அவர்கள் முன்வைக்கும் கருத்துடன் முழுக்கவும்
உடன்படுகிறேன். வழக்கறிஞர் கிருபா முனுசாமி 
“"பெண்களுக்கு சொத்துரிமை ஏற்கனவே சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடைமுறையில் இல்லை. திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்க முன்வரும் குடும்பங்கள், தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு வழங்காமல் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்குகின்றன. சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் தீண்டாமை, சாதியப் பாகுபாடு ஆகிய இன்னும் நடைமுறையில் உள்ளன. அதேபோல்தான் திருமணத்துக்கு 
வெளியேயான உறவு இனி சட்டப்படி குற்றமில்லை 
என்றாலும் நடைமுறைக்கு இது உடனடியாக வர 
வாய்ப்பில்லை," 
அதாவது வெளிப்படையாக சட்டப்படி குற்றமில்லை என்பதாலேயே
இந்திய பொதுச்சமூகம் இவற்றை ஏற்றுக்கொள்ளாது.
இதை எழுதும் போது அண்மையில் வாசித்த இன்னொரு கள ஆய்வும்
நினைவுக்கு வருகிறது. நம் இந்திய சமூகம் ஆண்-பெண் பாலியல்
உறவில் எப்போதுமே ஒரு முகமூடியைப் போட்டுக்கொள்கிறது.
அந்த முகமூடி தலைவர்கள் முதல் கடைக்கோடியில் கோவணத்துடன்
வாழும் ஆண்- பெண் வரை அனைவருக்குமானதாக இருக்கிறது.
முகமூடியின் கனமும் நிறமும் அவரவர் சூழலுக்கு ஏற்ப மாறுகிறது
அவ்வளவு தான். ஆனால் முகமூடிகள் நிஜமானவை. (Pls ref: 
Union government’s National Family Health Survey (NFHS-4), 
published in December 2017)
மகாராஷ்டிரா, உத்திரபிரதேச கள ஆய்வுகள் சொல்லும் சில
நடைமுறை பாலியல் உறவுகள்:
> பெண்கள் தங்கள் உடல் இச்சையைத் தீர்க்க பல்வேறு வழிகளைக்
கையாளுகிறார்கள்.
> வயிற்றுப்பசியைப் போலவே உடல் இச்சையான காமப்பசியும்.
இதில் ஆண் பெண் உடல்களுக்கு வேறுபாடில்லை.
>கணவனின் உடல் உபாதைகள்/ கணவனின் பிரிவு/ கணவனின் இயலாமை
இப்படியான காரணங்களால் அவன் மனைவி கணவன் குடும்பத்திலேயே இன்னொரு
ஆணுடன் உடலுறவு கொண்டிருப்பதை அக்குடும்பம் கண்டும் காணாமல் இருப்பது தொடர்கிறது காலம் காலமாக!
> குடும்பத்திற்குள் தொடரும் இந்த திருமணத்திற்கு அப்பாற்பட்ட
உறவை அக்குடும்பத்தினர் ஏற்றுக்கொள்கிறார்கள். காரணம்..
பிரச்சனை குடும்பத்திற்குள்ளேயே இருக்கும், வெளியில் தெரிந்துவிடாது
அத்துடன் பிறக்கும் குழந்தைகள் இக்குடும்பத்தின் இரத்தவாரிசாகத்தானே இருக்கும்! என்ற வலுவான காரணமும் 
> இன்னும் சில கிராமங்களில் இரு பெண்கள் சேர்ந்து வாழ்ந்து 
கொண்டிருக்கிறார்கள். ரகசியமாக பெண்களுக்குள் “ அவர்கள் 
இருவரும் கணவன் மனைவி போல’ என்ற நக்கல் சிரிப்பு மட்டும்
இருக்கும். ஆனால் அவர்களையும் கண்டும் காணாமல் இருக்க
மக்கள் பழகி இருக்கிறார்கள்.
மேலே சொன்ன அனைத்துமே நடைமுறை யதார்த்தங்கள்.
கள ஆய்வின் இந்த முடிவுகள் .. இந்திய சமூகத்தில் எத்தனை
முகமூடிகள் இருக்கின்றன என்பதை உணர்த்துகின்றன.
தனியறையில் உறவு நிலை எப்படி இருந்தாலும்
ஆண் - பெண் உறவுகளுக்குள் போட்டுக்கொண்டிருக்கும்
முகமூடிகள் கழட்டுவது சட்டத்திற்கும் சரி.. சமூகத்திற்கும் சரி
அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை.. என்றே நினைக்கிறேன்.

No comments:

Post a Comment