Wednesday, September 26, 2018

உடல்மொழியின் மறுபக்கம்



உடல்மொழியின் மறுபக்கம்


வரப்போரத்தில்பிரசவித்து
கதிர் அறுக்கும் அருவாளால்
என் தொப்புள் கொடியை
அறுத்தவள்
ஓடையிலே கால்கழுவி
எனக்காக 
ஓடிக்கொண்டிருக்கிறாள்.
நானோ
உன் பட்டுப்போன்ற
சானிடரி நேப்கினைத்
தொட்டுப் பார்க்கும்
ஆசையில்
அம்மாவின் கிழிந்தப் புடவை
தொடைகளில் அறுக்க
குனிந்து வளைந்து
பத்துப்பாத்திரம் கழுவி
வீடுவீடாக 
ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறேன்.

பெண்மொழியை
உடல்மொழியாக்கிய
உன் மொழியைப்
போற்றிப்புகழும் 
புத்திஜீவிகளுக்கு நடுவில்
அனாதையாகிவிடுகிறது
ஆலமரங்கள்
வயல்களில் எழுதிய 
எம் வாய்ப்பாட்டு.
------------------------------

எங்கிருந்தோ ஒலிக்கிறது
என்னை அழைக்கும்
உங்கள் குரல்
ஓடிவந்து உங்கள் வரிசையில்
என்னையும் நிறுத்தும்
கனவுகளுடன்
விழித்துக்கொள்கிறது
என் பூமி.

ஏதொ ஒன்று....
இனம்புரியாத முள்வேலியாய்
நம் எல்லைகளுக்கு நடுவில்.

எல்லைத் தாண்டிய
உம் மேகங்கள்
என் எல்லைக்குள் நுழைவது
சாத்தியமில்லை
உரக்கச் சொல்கிறார்கள்
பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும்
நட்சத்திரங்கள்.

அவர்களிடம் சொல்
முள்வேலியைத் தாண்டி
ரத்தம் சொட்டும் பாதங்களுடன்
உன் பச்சைப்புல்வெளியில்
தடம் பதிக்கப்போவது
எம் பாதங்கள் என்பதை.

(மீள்பதிவு )

No comments:

Post a Comment