Sunday, September 9, 2018

ஹவாயின் அரசியும் அவள் விட்டுச் சென்ற மலர்களும்







எங்கள் ஹவாயின் குழந்தைகள் போற்றுதலுக்குரியவர்கள்.
அவர்கள் தங்கள் மண்ணுக்கு விசுவாசமானவர்கள்
கொடுமையான இதயம் கொண்ட தூதுவர்கள்
பேராசையுடன் ஒப்பந்த பத்திரங்களை நீட்டுகிறார்கள்.
கப்பம் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஹாவாயி, 
கீவியின் நிலம் பதில் சொல்கிறது
பிலானி கடற்கரைகள் உதவி செய்கின்றன.
மனோவின் கவாயி தன் ஆதரவைத் தருகிறது
காகுஹிஹெவாயின் மணல் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது.
போட்டுவிடாதீர்கல் உங்கள் கை எழுத்தை
எதிரிகள் நீட்டும் பத்திரத்தில்
பாவத்தின் அடையாளமது.
நம் மக்களின் குடியுரிமையை விலைபேசுகிறது அது.
மலை போல குவிந்திருக்கும் 
இந்த அரசாங்கத்தின் கஜானாவை
நாம் மதிக்கப்போவதில்லை.
நமக்கு நம் பாறைகள் போதும்.
இந்த மண்ணின் அதிசய உணவு இது.
நாம் லில்லிகலானியை ஆதரிப்போம்.
இந்த மண்ணின் உரிமைக்காக போராடி வென்ற கதை
இந்தக் கதையைச் சொல்லுங்கள்
தங்கள் மண்ணை நேசிக்கும் மக்களிடம் சொல்லுங்கள்.
(ஹவாய் தீவின் பாடலிது. )

லில்லியுகலானி..ஹவாயின் அரசி.
அமெரிக்க வல்லரசு ஹவாய் தீவுகளை தங்கள் நாட்டுடன்
எவருடைய ஒப்புதலும் இல்லாமல் சேர்த்துக் கொண்டது.
பகற்கொள்ளை தான்.
The stolen paradise என்று இதைச் சொல்கிறார்கள்
அமெரிக்கர்கள். 
அரண்மனையிலே அரசியை சிறை வைக்கிறது அமெரிக்கா.
அரசி தன் மக்களுக்காக உருவாக்கிய தோட்டத்திலிருந்து
தினமும் மலர்களைப் பெறுவதற்கு மட்டுமே அனுமதி.
தோட்டத்தில் பூக்கும் மலர்களை அன்றைய செய்தித்தாளில்
பொதிந்து அனுப்புகிறார்கள் அவள் ஆதரவாளர்கள்.
வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை அப்படித்தான் 
அந்த அரசி அறிய வருகிறாள். அந்த நாட்களில் அவள் எழுதிய
கவிதைகள்- இசைப்பாடல்கள்.. 162. 
இன்றும் ஹவாயின் பூக்களையும் காதலையும் 
மக்களையும் அவர்கள் மண்ணின் மாண்புகளையும் 
இசைத்துக் கொண்டே இருக்கிறது.
ஆனாலும் வரலாற்றில் ...
சர்வாதிகாரத்தின் ஆயுதப்படைக்கு முன்னால்
அத்தீவு மக்கள் என்ன செய்துவிடமுடியும்?
அடைப்பட்டிருந்த நாட்களில் தன் பாடல்களை
இசைக்குறிப்புடன் எழுதி எழுதி தன் மக்களுக்கு
அவள் விட்டுச்சென்ற மலரின் வாசனை
இன்னும் அத்தீவுகளில் ..
100 வருடங்களுக்குப் பின் 1993ல் அன்றைய ஜனாதிபதியாக
இருந்த பில்கிளிண்டன் ஹவாயி மக்களுக்கும் அவர்கள்
தேசத்திற்கு தாங்கள் செய்த துரோகத்திற்கு
மன்னிப்பு கேட்டார்.
அவ்வளவு தான்.

3 comments:

  1. மன்னிப்பு கேட்பது மனிதப்பண்பு.
    பில் கிளிண்டன் பாராட்டுக்குறியவரே...

    ReplyDelete
  2. மன்னிப்பாவது கேட்டாரே...

    ReplyDelete