Tuesday, September 18, 2018

சூர்யா@நட்புமண்டலம்.12




திடீரென ஒருநாள் என் அலைபேசியில் உன் முகம்
மின்னலடித்தது. 
என்னால் நம்ப முடியவில்லை. 
உன் குரல்..ஆண்டுகள் பலவாகியும் உன் குரல்
அதே அலைவரிசையில் என்னிடம்.
நலம் விசாரித்தாய்..
கணவர்  நலமா?
பிள்ளைகள் நலமா?
எப்போது ஊருக்கு வருகிறாய்..?
எனக்குத்தான் அன்று தொண்டைக்குழிக்குள் தீக்கங்குகள்.
நீண்ட இடைவெளியில் என்னை எரித்த தீயின்
மிச்சமாய் தீக்கங்குகள் அணையாமல்
எனக்குள்.. என்னை எரித்துக்கொண்டும் அணைத்துக்கொண்டும்.
அப்போதுதான் 

நீ தாத்தாவாகி விட்டதை என்னிடம் சொன்னாய்.
எப்போதுடா என்றேன்
இப்போதுதான்.. 10 நிமிடங்கள் ஆகியிருக்கும்..என்றாய்
வாழ்த்துக்கள் சொல்ல வாய் வரவில்லை.
எனக்குத் தெரியும்..
நீ என்னிடம் தான் முதன் முதலில் சொல்கின்றாய் என்று.
கண்களில் கண்ணீர் வழிந்தது.
எனக்குத் தெரியும் அதைச் சொல்லும் போது
உன் கண்களிலும் கண்ணீர் வடிந்தது என்று.
கண்ணீர் பலகீனத்தின் அடையாளம் என்று
பேசிய நாமிருவரும் கண்ணீர் விட்டோம்.
காற்று அதைப் பார்த்து கை கொட்டி சிரித்தது.


இளம்வயதிலேயே திருமணம் செய்து கொண்டால் 
உன்னைப் போல 50வயது தாண்டுவதற்கு
முன்பே தாத்தாவாகிவிடலாம்.
எல்லாத்திலும் நீ முன்வரிசையில் தான் டா.

உன் பேத்திக்கு பரணி என்று 
பெயர் வைத்திருப்பதாய் எழுதியிருந்தாய்.
என்னால் நம்ப முடியவில்லை.
என் பெயரை .. எனக்கு நீ வைத்திருந்த பெயரையே
 .. இன்று உன் வாரிசுக்கும்..
ஏன் டா பல சமயங்களில் நீ 
உன் சின்னச் சின்ன செயல்களிலும்
என்ன்னை ஆட்டிப் படைக்கின்றாய்.!!

எனக்குப் பரணி என்று பெயர் வைத்தாயே
அந்த நாள் நினைவிருக்கின்றதா?
ஒருநாள் ஜாதகம் சோதிடம் பற்றி என்னிடம் பேசினாய்.
அறிவியலும் மூட நம்பிக்கையும் சேர்ந்து பெற்ற 
முட்டாள் பிள்ளை தான் சோதிடம் என்றாய்.
நாள் நட்சத்திரங்கள் பார்த்து செய்வதைக் கேலி செய்தாய்.
உன் பிறந்த நட்சத்திரம் என்ன என்று கேட்டாய்?
"பரணி " என்றேன்.
பரணியில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்களாமே!
ஜோதிடம் சொல்கிறது தாயே
நீ எந்த தரணியை ஆளப் போகின்றாய் 
என்னைச் சீண்டி விட்டாய்.
கேலி செய்தாய்.
அன்றுமுதல் நான் அழுமூஞ்சியாக
உன்னிடம் வரும்போதெல்லாம்
பரணியில் பிறந்தவள் நீ
அழலாமோ
தரணியை ஆளப்பிறந்தவர்கள் அழலாமோ
என்று கிண்டல் செய்வாய்..

நீயா 
இன்று உன் வாரிசுக்கு பரணி என்று பெயர் வைத்திருக்கிறாய்!!!


உன் பரணி..
உன் நெஞ்சில் தன் பட்டுக் கால்களை வைத்து 
மிதிக்கின்றாளா?
உன் மூக்கு கண்ணாடியைக் கழட்டி வீசி 
உன் கண்விழிகளில் என்னைப் பார்க்கின்றாளா?
உன் சட்டைப் பைக்குள் கையை விட்டு  
தேடுகின்றாளா?
உன் மடியில் படுத்து தேவதைகள் பூ காட்ட 
தூக்கத்தில் சிரிக்கின்றாளா?
உன் தடி தடியான புத்தகத்தை கிழிக்கின்றாளா?
உன் தோள்களில் தொட்டில் கட்டி 
தூங்கிக் கொண்டிருக்கின்றாளா?
உன் படுக்கையை ஈரமாக்கி உன்னை எழுப்பியவள்
உன் மார்பின் கதகதப்பில்
தன்னை மறந்து
இன்னும் தூங்கிக் கொண்டிருக்கின்றாளா?
அவளைத் தூங்கவிடு.
எழுப்பி விடாதே.
அவள் உன் பரணி..

பரணிக்கு நம் வண்ணத்துப் பூச்சிக்களைக் காட்டு.
அவளுக்கு நம் வண்டிப் பாதைகளைக் காட்டு.
நாம் நீச்சலடித்த கிணறுகளைக் காட்டு.
நாம் ஏறிய வேப்ப மரங்களைக் காட்டு.
நம் நட்பின் அடையாளமாய் 
உன் வீட்டுக் கொல்லையில் நாம் நட்ட
கொய்யாமரங்களைக் காட்டு.

அந்தக் கொய்யாமரங்கள் வளர்ந்திருக்குமே?
அந்தப் பழங்களை நான் சாப்பிடும் நாள் வருமோ
 என்னவோ
உன் பரணிக்கு அந்த கொய்யாப்பழங்களைக் 
கொடுப்பாய் தானே.

கொய்யா மரத்தில் காய்ப்பது 
கொய்யாப் பழங்கள்தான்.
ஆனால்-
உன்கொல்லையில் மட்டும்
எனக்குத் தெரியும்
நெல்லிக்கனிகள் காய்த்திருக்கும் என்று.
நம் கொய்யா மரத்தில் காய்த்த
நெல்லிக்கனிகள்
நம் நட்பின் அடையாளம்

உன் பரணியிடம்
எல்லாம் சொல்வாய்தானே
குழந்தை உள்ளம் கள்ளம் கபடு அறியாதது..
சந்தேகம், பொறாமை அதற்கில்லை.
இந்த--
மனுச உலகின்
புழுதிக்காற்று
அவள் மேனியில் படும் முன்பே
உன் பரணியிடம்
எல்லாம் சொல்லிவிடு

சொல்வாய் தானே..

அவளை நீ பரணி என்று அழைக்கும் 
ஒவ்வொரு அழைப்பிலும்
என் கண்களைத் தானே தேடுகின்றாய்.
சொல்.
அவள் கைப்பிடித்து நடக்கும்போது
என் வாசனையைத் தானே நாடுகின்றாய்
சொல்
அவளிடம் நீ உன் பரணியைத் தானே 
தேடிக்கொண்டிருக்கின்றாய்.
சொல்.
பெயரில் என்ன இருக்கின்றது?
என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்.
பரணி என்ற பெயரில்
ஒரு எழுதாதக் காவியம் எழுதப்பட்டதை
அதன் உச்சரிப்பில்
நாம் மகிழ்வதை
நம் உணர்வுகள் நடனமிடுவதை
உணர்கின்றென்.
இனி வெறும் பெயரில் என்ன இருக்கின்றது
என்று எண்ணவே மாட்டேன்.
பெயரில் என்னவெல்லாமொ இருக்கும்
இருக்கிறது.. 


இதை நான் புரிந்துகொள்ளக் கூட
நீ தான் ஆசான் ஆனாய்.
என் பிள்ளைக்கு மறைந்த தன் கணவரின் பெயரைத்தான் 
வைக்க வேண்டும் என்று என் மாமியார் விரும்பியபோது
எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா?
பத்துமாதம் சுமந்து பெற்றவளுக்கு 
தன் பிள்ளைக்கு தன் விருப்பப்படி
பெயர் வைக்க கூட உரிமையில்லையா? என்றெல்லாம்
 ஒரு போராட்டம் அல்லவா
நடத்தி இருக்கின்றேன்.
உன் பரணி வந்துதான் எனக்கு ..
என் முட்டாள்தனத்தை உணர்த்தியிருக்கின்றாள்.
எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக , 
மேம்போக்கான அர்த்தமில்லாத போராட்டங்களை
உரிமைக்குரல் என்று எண்ணி 
காலத்தை வீணடித்திருக்கின்றேன்.

உறவுகளைக் காயப் படுத்தி இருக்கின்றேன்.

சூர்யா..
நெருப்பில் எரிந்துப் போகாத சிறகுகளுடன்
என்னை வானத்தில் பறக்கவிட்டது
உன் குணதிசையின் வெளிச்சம் தான்


என்னை என் கால்களை
மண்ணில் பதியவைத்து
அதன் புழுதிகளை,அழுக்கை, சூட்டை
உணரவைத்தது
உன் குடதிசையின் மலைகள் தான்.
சூர்யா..
வடக்கும் தெற்குமாய் அலைந்துவிட்டோம்.
களைத்துப் போய்
கண்துஞ்சும் முன்னே
சேர்த்து பயணிப்போம் வா..
ஒன்பாதாவது திசையில்
சூரியன் அஸ்தமிப்பதே இல்லையாம்.



1 comment: