Saturday, August 23, 2025

பாலியல் சுரண்டல்கள். வைரமுத்து vs சின்மயி

 வைரமுத்து சின்மயி &

கோணங்கி 




  

   “எழுதுகிறவன் தான் எழுதியவற்றைக் காட்டிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் “ மக்சிம் கார்க்கி. 

கலை இலக்கிய உலகத்தின் உன்னதப் பீடங்கள் சரிகின்றன.

அவன் மனிதனாக மனிதாபிமானமுள்ளவனாக இருக்கிறானா என்பது

முதன்மையாகி அவன் தகுதிகள் என்று நினைக்கப்படும் அனைத்தும்

தகுதி இழக்கின்றன. படிப்பு, பட்டம், அறிவுத்திறன், கலை இலக்கிய ஆற்றல்

இத்தியாதி போற்றுதலுக்குரிய தகுதிகள் சரியும் காட்சி கலாச்சார

பண்பாட்டு அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.

சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் நியாயங்களைப் புறந்தள்ளிவிட்டு வாழப்பழகியவர்களுக்கு இன்றையப் பெண்களின் 

குரல் பெரும்வெடிப்பாகி அச்சுறுத்துகிறது. ஆண்மைய அதிகார வர்க்கம் இதை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது.

  “ஒரு குழந்தையுடன் படுப்பது ஓர் உன்னத அனுபவம், ஞானஸ்நானம் போன்ற ஒரு  நிகழ்வு, ஒரு புனிதமான அனுபவம் “ என்று எழுதியவர்

பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் மட்ஷனப்.

(GABRIEL MATZNEFF) குழந்தைகளுடன் அவர் கொண்ட பாலியல் வேட்கையை

 (pedophilia)    பாலியல் பயண அனுபவங்களை அவர்  தன் கதை கட்டுரைகளில் டைரி குறிப்புகளில் எழுதி வந்ததை பிரஞ்சு இலக்கிய உலகம்


குற்றமாக கருதவில்லை. அவருக்கு விருதுகளும் அரசு உதவித்தொகையும்

கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டார்.  ஆனால் 14 வயதில் அவரால்

பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வனேஷா ஸ்பிரிங்கோரா

( Vanessa Springora) தன் அனுபவத்தை எழுதியபோது அதுவரை இலக்கியத்தின்  புனைவு என்ற போர்வையில் பொதிந்திருந்த வக்கிரங்கள் வெட்ட வெளிச்சமாகின.

  கேபிரியலின் கதையை காப்பி அடித்து நம் ஊர் எழுத்தாளர்

தமிழில் எழுதியக் கதை எவ்விதமான சலசலப்புகளும் இன்றி,

 பின்நவீனத்துவ மோஸ்தரில் கொண்டாடப்பட்டது. 

காட்சி ஊடகம், சினிமாப் பாடல்கள் , காட்சிகளின் உடல்மொழி,  இரட்டை அர்த்தம் தொனிக்கும்  வசனங்கள், விளம்பரங்கள் இத்துடன்

உன்னத இலட்சியங்களை விதைக்கும் கலை இலக்கியப் பண்பாட்டு அரசியலும் ‘பாலியல் சுரண்டலை’ அவமானமாக கருதுவதில்லை. சமூகத்தின் தலைகுனிவாக கருதாமல் கள்ள மவுனத்தில் கடந்து செல்வதுடன் , தங்கள் பாலியல் வறட்சியைத் தீர்க்கும் வழியாகவும் கொண்டிருக்கின்றன. 

பெண் மீதான பாலுறவு கவர்ச்சியே பின்நவீனத்துவ கோட்பாட்டில் உலகமயமாக்கப்பட்டுள்ளது.  செக்ஸ் க்ளப்புகள், காபரேக்கள், மசாஜ் நிலையங்கள் எல்லாம் ஆண் பெண் கூட்டாகவும் தனித்தனியாகவும்

அவரவர் ரசனைக்கேற்ப பாலுறவு பண்டங்களை வாங்கிக்கொள்ளும்

சந்தைகளை உருவாக்கி இருக்கின்றன.  இந்த ஆணாதிக்க சுரண்டல் அமைப்பில் ஜனநாயகம் என்பது சுரண்டுவதற்கான வழிகளை விரிவுப்படுத்தி ‘சுரண்டலை’ ஜனநாயகப்படுத்தி இருக்கிறது.. முதலாளித்துவ முறைமையின்

புதிய ஜனநாயக விரிவாக்கங்கள்  பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் அனைத்துவகையான பிரதிகளையும் உருவாக்கி சந்தைப் படுத்திக்கொண்டே பெண்ணுரிமைப் பேசுகிறது. புரட்சி முகமூடிகளை அணிந்து கொண்டு பேரணி நடத்துகிறது.

   

        சரி நிகர் 123ல் ‘கோணேஸ்வரிகள்’ என்ற தலைப்பில் கலா

என்பவர் எழுதிய கவிதை ஆணாதிக்கம் இனவாதத்துடன் இணையும்

போது ஒரு பெண் சந்திக்கும் இனவாத ஆணாதிக்க அடக்குமுறையைத் தெளிவாக முன்வைத்திருக்கிறது.

நேற்றைய அவளுடைய சாவு - எனக்கு

வேதனையைத் தரவில்லை.

மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்

அதிர்ந்து போதல் எப்படி நிகழும்.

அன்பான என் தமிழிச்சிகளே,

இத்தீவின் சமாதானத்திற்காய்

நீங்கள் என்ன செய்தீர்கள் ! ?

ஆகவே: வாருங்கள்

உடைகளைக் கழற்றி

உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்

என் அம்மாவே உன்னையும் தான்.

சமாதானத்திற்காய் போரிடும்

புத்தரின் வழிவந்தவர்களுக்காய்

உங்கள் யோனிகளைத் திறவுங்கள்.

பாவம்

அவர்களின் வக்கிரங்களை

எங்கு கொட்டுதல் இயலும்.

வீரர்களே ! வாருங்கள்.

உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.

என் பின்னால்

என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.

தீர்ந்ததா எல்லாம்.

அவளோடு நின்றுவிடாதீர் !

எங்கள் யோனிகளின் ஊடே

நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.

ஆகவே :

வெடிவைத்தே சிதறடியுங்கள்.

ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி

புதையுங்கள்

இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.

சிங்கள சகோதரிகளே!

உங்கள் யோனிகளுக்கு

இப்போது வேலையில்லை”

இனவாதம், சாதிவாதம், மதவாதம் அனைத்தும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தும் பாலியல் வன்கொடுமைகள், வல்லாங்குகள் பொதுசமூகத்தின் கூட்டு மனநிலையாக இருக்கின்றன.

தனிமனிதனாக பெண்ணிய வன்கொடுமைகளுக்கு எதிராக குரல்கொடுக்கும்

மனிதன், சமூகத்தின் அங்கமாக இருக்கும்போது வேறொருவனாகிவிடுகிறான், அதாவது அவன் தனித்திருக்கும்போது அவன் பிரக்ஞை வெளிப்படுத்தும் நியாயங்கள் சமூகத்திரளின் துளியாக இருக்கும்போது காணாமல் போய்விடுகின்றன. சமூகத்தின் அரசு, அதிகாரவெளி தீர்மானிக்கும் விதிகளுடன்  ஒத்துப்போகிறான்.அல்லது எதிர்க்க முடியாமல் அமைதியாக

இருப்பதன் மூலம் அக்குற்றத்திற்கு அவனும் உடந்தையாகிவிடுகிறான். சமூகத்தின் அதிகாரவெளியோ தன் கொண்டாட்டத்திற்கும் தன்னை மகிழ்விப்பதற்கும்   கலை இலக்கிய பண்பாட்டு அரசியலைப் பயன்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக ஆடல் பாடல் கலைகளை அதிகார வர்க்கம் வளர்த்தெடுத்த பின்னணியிலிருந்து இதை அணுக வேண்டும். 

எதிரியைத் தோற்கடிக்க எதிரியின் மனைவியை வன்புணர்வு செய்யலாம் என்று நம் கடவுள்களைக் கொண்டு கற்பிக்கிறது. (உதாரணம் மகாபாசுவத புராணம்) மதப்பூசல்களுக்கு பெண்ணுடல்கள் பலியாகின்றன. நிறுவனமயம்

ஆக்கப்பட்ட மதம் தன் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பெண்ணுடலை ‘ புனிதம்’ ‘ஒழுக்கம்; என்ற கருத்தாடல்களின் ஊடாக

இழிவுப்படுத்துகிறது.  இப்பண்பாட்டு அரசியலை சடங்கு சம்பிரதாயங்கள் மரபுகள் மூலம் நிலை நிறுத்தியிருக்கிறது. எந்த மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நிலவுடமை சமூகத்தில் கலைஞன் கவிஞன்

ஆகியோருக்கு பொதுசமூகம் உருவாக்கி வைத்திருக்கும் தனிமனித  ஒழுக்கங்களை மீறுகின்ற  லைசன்ஸ் இருந்தது. காரணம் அவன் அதிகாரவர்க்கத்தை மகிழ்விப்பவன். அதிகார வர்க்கத்தின்

எல்லை மீறிய கொண்டாட்டங்களுக்குத் தீனிப்போட்டவன். அதிகாரவர்க்கத்துடன் அதனால் நெருக்கமானவனும் கூட. . 

நிலவுடமை சமூகத்தின் இதே நிலை முதலாளித்துவ சமூகத்தில்

முழுக்கவும் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. விலைப்பட்டியல்கள்

தீர்மானிக்கப்பட்டன.

முடியாட்சியின் அதிகாரவெளியைக் கட்டுடைத்த மக்களாட்சியின் பண்பாட்டு அரசியல்,  ஆடல் பாடலை பொதுஜன வெளிக்கு கொண்டுவந்துவிட்டதில்

மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றாலும் ஆடலும் பாடலும் அதை

 நிகழ்த்துகின்ற உடல்மொழியும் ஆண்மைய அதிகார வேட்கையின் பசித் தீர்க்கும் நுகர் கலாச்சாரப் பண்டம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.  இன்றைய கணினி யுகத்தில் அவை புதியப்புதிய வடிவம் பெற்றிருக்கின்றன. உலகமயமாதல் சந்தையில் பாலியல் ஆதிக்கமும் பாலியல் சுரண்டலும் பல்வேறு உத்திகளுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  ஒரு பக்கம் பெண்ணியம், பெண் உரிமை, பாலின சமத்துவம் பேசிக்கொண்டே பெண்ணுடலை நுகர்பொருள் பண்டமாக்கி சந்தையில் கடைப்பரப்பி விற்கிறது  இன்றைய முதலாளித்துவ டிஜிட்டல் ஜன நாயக உலகம்.. இந்தப் புதிய ஜன நாயகத்தின் பல்லிடுக்குகளில் சிக்குண்டு சிதைந்து தன் இருத்தலுக்காக வாலசைக்கிறது கலை இலக்கிய உலகம்.

     ஆண் பெண் உறவு நிலையில் குடும்பம் என்ற  நிறுவனத்தின் கட்டமைக்கப்பட்ட ஒழுக்கவிதிகளை யாருமே மீறுவதில்லை என்று

என்று சொல்லிக்கொள்வது பெருமையாக இருந்தாலும், இன்று அந்தப்

பொய்யானப் பெருமிதங்களின் தேவை ஆண் பெண் இருபாலருக்கும் இல்லை. சமூகம் ஆண் பெண் உறவு நிலையில் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 

தனிப்பட்ட ஆண் பெண் இருபாலாரின் ஒப்புதலுடன் நடக்கும் பாலியல் விதி மீறல்களை நம் சமூகம் ஏற்றுக்கொள்கிறது. நம் இந்திய சட்டம் கூட திருமணம் ஆன கணவன் மனைவி உறவில் திருமணத்திற்கு அப்பால் இருக்கும் எதிர்ப்பாலின உறவை கிரிமினல் குற்றமாக கருதவில்லை. காரணம் சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரின் ஒப்புதலுடன் நடக்கிறது என்று விளக்கம் தருகிறது. ஆனால் இக்காரணம் மணமுறிவுக்கு வலுவான காரணம் என்பதை இந்தியச் சட்டம் ஏற்றுக்கொள்கிறது.

         கவிஞர் கண்ணதாசனுக்கு பல பெண்களுடன் பாலியல்

தொடர்பு இருந்தது என்பது சமூகப் பிரச்சனையாக்கப்படவில்லை. கண்ணதாசனை எவரும் குற்றமிழைத்தவராக நினைக்கவில்லை.

திராவிட அரசியலை முன்வைத்த அறிஞர் அண்ணா, நடிகை பானுமதி

குறித்து சொன்னது பாலியல் சுரண்டலாகவில்லை. . காரணம் கண்ணதாசனும் அண்ணாவும் பிரபலமானவர்கள் என்ற சமூக அடையாளத்தைப் பயன்படுத்திக்கொண்டு பெண்களை அவர்களின் விருப்பமின்றி அணுகவில்லை. பாலியல் விதிமீறல்கள் இருந்தன. ஆனால் பாலியல் சுரண்டலில்லை. 

எனவேதான் பாலியல் மீறல்கள் என்பதும் பாலியல் சுரண்டல்கள் என்பதும் வேறானவை. பாலியல் மீறல்களில் தனிமனித உணர்வுகள் மட்டுமே காரணமாகின்றன. ஆனால் பாலியல் சுரண்டல் என்பதில் அதிகார வர்க்கத்தின் கை ஓங்கி நிற்கிறது. அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு  நடக்கும் பாலியல் செயல்களையே  பாலியல் சுரண்டல்கள் எனலாம். இன்றைய பெண்கள் அதிகார வர்க்கத்தின் பாலியல் சுரண்டல்களை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்..

      ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து #metoo இயக்கம் அமெரிக்காவில் 2017ல் மிகப்பெரிதாக எழுச்சிப் பெற்றது. 

     #metoo ஹேஷ்டேக் ஓரியக்கமாக மாறி ஆண்மைய சமூகத்தின் உன்னத பீடங்களை கேள்விக்குட்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும்  இரு பாலியல் பிரச்சனைகள்  மிக அதிகமாக விவாதிக்கப்பட்டன. 

1., பத்மசேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபலன் X பள்ளிமாணவிகள் 

2 பாடலாசிரியர் வைரமுத்து X பாடகி சின்மயி

இரண்டும் பாலியல் குற்றச்சாட்டுகள் என்றாலும் இரண்டையும் ஒரே பின்னணியில் அணுகிவிடமுடியாது.

பள்ளி ஆசிரியர் என்பது  குரு ஸ்தானம். “மாதா பிதா குரு தெய்வம்..” என்ற வரிசையில் தெய்வத்திற்கும் முன்னராக வைக்கப்பட்டிருப்பவர் குரு.

சமூக அறமதிப்பீடுகளின் மிக முக்கியமான ஓர் அடையாளம் ஆசிரியர். 

ஓரு ஆசிரியரை நம்ப முடியவில்லை என்றால் வேறு யாரைத்தான் நம்புவது?  என்ற அச்சம் பொதுவெளியில் கவலைக்குரியதானது.

பாதிக்கப்பட்ட மாணவியர் பாலியல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள். மேலும் நம் குடும்ப அமைப்பு பெற்றோர்களிடம்

பிள்ளைகள் இதைப் பற்றி எல்லாம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு

உரையாடல் வெளியையும் புரிதலையும் முழுமையாக கொண்டிருக்கவில்லை. இப்பிரச்சனை ராஜகோபால் என்ற தனிமனிதரின்

பாலியல் வக்கிரமா அல்லது இப்பிரச்சனை பள்ளி நிர்வாகத்துடன்

தொடர்புடையதா?/ குற்றம் செய்தவரை நிர்வாகம் பாதுகாக்கிறதா?

இப்பிரச்சனையை பல்வேறு கோணங்களில்  அணுக வேண்டி இருக்கிறது.


      இரண்டாவது பாடலாசிரியர் வைரமுத்து , பாடகி சின்மயி விவகாரத்தில் பேசப்பட்ட கருத்துகள் . சினிமா உலகின் உள்ளும் புறமும் அறிந்தவர்தான் சின்மயி. இதில் பாடலாசிரியர் அதிகாரமிக்கவர். சினிமாவிலும் சினிமாவைத் தாண்டிய அரசியலிலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்தி இருப்பவர். அவரைக் குற்றம் சுமத்தினால் தனக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தால் சின்மயி உடனே பொங்கி எழவில்லை. இதையும் பெரிய குற்றமாக்க வேண்டியதில்லை. இதுவும் இருத்தலுக்கான போராட்டத்தில் பெண் அனுபவிக்கும் பாலியல் சுரண்டல்.

இதைப் பற்றிய முக்கியமான கருத்துரைகள் நாம் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.


1) பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் 

“இரண்டு எதிர்வுகளும் பொதுப்புத்தியின் நகர்வுகளும்: என்ற தலைப்பில்

சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

“ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக வாதாடும் நபர்கள் பாடகி சின்மயிக்காகவும் வாதாட வேண்டும்; ராஜகோபாலனைக் கண்டிப்பது போலவே வைரமுத்துவையும் கண்டிக்க வேண்டும்; தண்டிக்கும்படி கோரவேண்டும். இதுதான் நேர்மையான/ மனசாட்சியுள்ளவர்களின் வாதம் “

என்பதை முன்வைக்கும் பேரா. அ.ராமசாமி அவர்கள் 

 இப்பிரச்சனையை இன்னொரு கோணத்தை நோக்கி நகர்த்தி இருப்பது கவனிக்கத்தக்கது.  

“வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட சின்மயி எப்போதும் பிராமணிய அதிகாரத்தோடு தன்னை முன்வைக்கிறார். அதனால் அவரது குற்றச்சாட்டு சந்தேகத்துக்குரியதாக மாறுகிறது. சந்தேகத்துக்குரிய ஒன்றில், தமிழகப் பொதுப்புத்தி பிராமணீய எதிர்ப்பையே மேற்கொள்ளும். இதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன “ என்கிறார்  பேரா. அ. ராமசாமி.

     பாலியல் சுரண்டலை காலமெல்லாம் அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட தலித் பெண்களுக்காக பேசுவதை எப்போதும் சாதிப்பிரச்சனையாகவே அணுகும் சமூகம்தான் நம் சமூகமும் .  சின்மயி போன்ற மேல்தட்டு வர்க்கத்து பெண்கள் ஒடுக்கப்பட்ட பெண்களின் பாலியல் சுரண்டலுக்காக என்றுமே குரல்  கொடுத்தவர்கள் இல்லை. பெண்களுக்கும் சாதியும் வர்க்கமும் உண்டு. அதனாலேயே சின்மயி பிரச்சனையைக் கண்டு கொள்ளாமல் செல்லவேண்டும் என்பது அபத்தம்!

       பாலியல் சுரண்டல் ஆண் பெண் உறவு நிலையில் மட்டும் நடக்கும் பாலியல் அத்துமீறல் அல்ல.  சமபாலின உறவுகளிலும் பாலியல் சுரண்டல் இருப்பதை எழுத்தாளர் கோணங்கி மற்றும் எழுத்தாளர் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் பாலியல் விவகாரங்கள் வெளிப்படுத்தின. ஆண் பெண் உறவில் பாலியல் சுரண்டலுக்கு செவிமடுக்கும் பொதுஜனவெளி சமபாலின பாலியல் சுரண்டலைக் குறித்து அதிகம் பேசுவதில்லை.

         “கோணங்கியின் பாலியல் அத்துமீறலை பற்றி பல திசைகளில் இருந்தும் குற்றச்சாட்டு வந்ததும் , கோணங்கிக்கு மயிலிறகால் தடவுவது போல சிலர் கண்டனங்கள் தெரிவித்தனர். அதுவும் எப்படி? கோணங்கி நாமாவளி பாடிவிட்டு , கோணங்கி போற்றி, கோணங்கி சரணம் எல்லாம் மொழ நீட்டுக்கு பாடிவிட்டு …”அண்ணன் கோணங்கிக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் “ எப்படி இருக்கிறது கதை? “ என் கிறார் அராத்து. 

      பாலியல் அத்துமீறலை கலை இலக்கிய உலகித்தினருக்கு விதிவிலக்காகவும்  ஒரு லைசன்ஸாக நம் சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இக்கருத்தை முன்வைக்கும் வகையில் கோணங்கியை கண்டிக்கிறவர்களை எல்லாம் பாமரத்தனமானவர்கள் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். 

கோணாங்கி விவகாரம் மிகத் தீவிரமாக பேசப்பட்ட காலத்தில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையில் “ இலக்கியவாதிகளிடம் மிக அரிதாக அதீதப் பிறழ்வுகளும் இருக்கலாம், அதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு பாமரனிடம் அது இருந்தால் அது மிகவும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதும்தான். ஏனேன்றால் அவன் எதையும் உருவாக்குபவன் அல்ல. இலக்கியவாதியிடன் அவனுடைய படைப்புசக்தியின் மறுபக்கமாகவே அது உள்ளது. அதன் பொருட்டு அவன் மன்னிக்கப்பட வேண்டும் ஏற்கப்பட வேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் அதன் பொருட்டு அவன் பாமரர்களால் வேட்டையாடப்பட;லாகாது. அப்புரிதல் ஒரு சமூகத்தில் சிலரிடமாவது வேண்டும்.”

 தன் கருத்துக்கான ஆதாரங்களை வரலாற்றிலிருந்து முன்வைக்கிறார் ஜெயமோகன். “ வரலாறெங்கும் பெருங்கலைஞர்கள், கவிஞர்கள் பிழைபட்ட ஆளுமை கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். கம்பன் தாசித் தெருவில் அலைந்தவன். கம்பராமாயணம் தமிழிலக்கியத்தின் உச்சம். மெளனியும் ஜி நாஜராஜனும் விபச்சாரத்திலும் குடியிலும் திளைத்ததை அப்படித்தான் இலக்கிய உலகம் புரிந்துக் கொள்கிறது. தாசியின் வீட்டு திண்ணையில் நோயுற்றுக் கிடந்து மறைந்த இசை மேதைகள் தமிழகத்தில் உண்டு. தாகூரின் தீராதக் காதல் வேட்கைகள்  அவருடைய எண்ணற்ற காமத்தொடர்புகள் தாகூர் மறைந்து ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரும் அவருடைய காதலிகள், கள்ளக்காதலிகள் கண்டடையப்பட்டனர். ஆனாலும் தாகூர்தான் இந்தியாவின் கவிமுகம். அவர் மதிக்கப்பட்டது அவருடைய நுண்ணுணர்வாலும் அதன் வெளிப்பாடான கவிதையாலும்தான். அவர் நல்ல மனிதர் என்பதனால் அல்ல. அந்த வேறுபாட்டை உணராதவர்கள் பாமர்ரகளே “  இப்படியாக ஜெயமோகன் கோணங்கியை எழுத வரும்போது காட்டும் இந்த எடுத்துக்காட்டுகளில் தனிமனித  ஒழுக்க மீறல் இருக்கிறதே தவிர பாலியல் சுரண்டலோ தன் அதிகாரத்தை தங்கள் பாலியல் மீறலுக்குப் பயன்படுத்திக் கொண்டதாகவோ இல்லை. இந்த சமூக வேறுபாடு அறியாதவர் அல்ல ஜெயமோகன். ஆனால் எதோ ஒருவகையில் ஜெயமோகன் கோணங்கிக்கு அராத்து சொன்னது போல மயிலிறகால் தடவிக் கொடுக்கிறார் என்பதை ஒரு பாமர வாசகனும் புரிந்துக் கொள்ள முடியும். 

       பெண்ணியம் என்பது ஒற்றைப்புள்ளியில் அடங்கிவிடும் தளமல்ல,

பாலியல் சுரண்டல் என்பது அனைவருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை.

சமூகத்தில் எத்தனைப் பிரிவுகள் இருக்கிறதோ அத்தனையும் பெண்களிடமும்

படிந்திருக்கிறது. அவள் பெண் என்பது மட்டுமல்ல அவளுடைய அடையாளம்.

பல்வேறு வர்க்க இன சாதி மத கலாச்சார அடையாளங்களின் பின்னணியில் தான் அவள் அனுபவங்களை அணுக வேண்டி இருக்கிறது. (intersectionality in feminism)


  காய்த்தல் உவத்தலின்றி இப்பிரச்சனையில் வெளிப்படையாக தெரியும்

சில குளறுபடிகளையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

பாதிக்கப்பட்டப் பெண் சின்மயி விவகாரத்தைப் பேசும் ஊடகங்கள் இது தொடர்பான பலரின் கருத்துளை முழுமையாக முன்வைக்காமல் ஒரு சில வரிகளை மீண்டும் மீண்டும் பேசுகின்றன. 

குறிப்பாக ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி , பாடகியும் இசையமைப்பாளருமான ஏ ஆர் ரெஹானா அவர்கள் பாடகி சின்மயி விவகாரம் குறித்தும்

சின்மயி குறித்தும் என்னவெல்லாம் சொன்னார் என்பதைப் பற்றி முழுமையாக சொல்லாமல் ‘வைரமுத்து  நடத்தை குறித்து பல  பெண்கள் தன்னிடம் சொன்னதாக’ சொன்னதை மட்டும் மீண்டும் மீண்டும் ஒலிப்பரப்பிக் கொண்டி,ருக்கிறார்கள்.

  சின்மயியுடன் சேர்ந்து மொத்தம் 17 பெண்கள் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள்.  அதில், பாடகி சின்மயி

பதிவு செய்திருக்கும் #metoo 17 ..  குற்றச்சாட்டை வாசித்தேன். அதில், 

கல்லூரி மாணவி புத்தகவெளியீட்டில் வைரமுத்துவை  சந்திக்கிறார். அதன் பின் டிவி சேனலில் அப்பெண்ணின் கைபேசி எண்ணை கேட்டு வாங்குகிறார் வைரமுத்து. அதன் பின் அப்பெண்ணை தனியே வந்து சந்திக்கும்படி அழைத்ததாக அப்பெண் சொல்கிறார். இதுவரை ஒகே. 

ஆனால், ஒரு மணி நேரத்தில் 50 அல்லது 60 முறை போனில்

அழைத்துக்கொண்டே இருந்ததாக கூறுவது , போன் தொடர்பு எண்ணை அந்தப் பெண் மாற்றிக்கொண்டே இருந்தாலும் அதையும் கண்டுபிடித்து வைரமுத்து தொந்தரவு செய்ததாக கூறுவது….

இதை வாசித்தவுடன் எழும் சில கேள்விகளைத் தவிர்க்கமுடியவில்லை.

 ஒருவரின் அழைப்பு தொந்தரவு செய்கிறது என்றால் அவரை ப்ளாக்

(block) செய்துவிடும் வசதி உண்டு. எண்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை!     மேலும் இப்பிரச்சனையை  ஊடக நண்பர்கள் உதவியுடன் வைரமுத்து மனைவியை அணுகி ஒருவழியாக இப்பிரச்சனையிலிருந்து விடுபட்டதாக சொல்லியிருக்கிறார் 

#metoo 17 பெண்.!

இதை எல்லாம் வாசிப்பவருக்கு என்னமாதிரியான சந்தேகங்கள்

எழுகின்றன என்பதை அவரவர் வாசிப்பு அனுபவத்திற்கே விட்டுவிடுகிறேன்.


. வைரமுத்து சார்பாகப் பேசிவிட்டால் எங்கே தானும் பாலியல் சுரண்டலுக்கு உடந்தையானவராக அதை ஆதரிப்பவராக இருக்கிறோம் என்று சமூகம் நினைத்துவிடக் கூடாதே என்ற தற்காப்புடன் மவுனமாக இருக்கிறது திரையுலகமும் இசையுலகமும் அரசியல் உலகமும்.. 

இதுபற்றி கருத்து சொல்லியவர்களும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும்

பாடலாசிரியர்கள்தான் தன்னிலை விளக்கம் சொல்ல வேண்டும்

என்று சொல்கிறார்கள். அதாவது தனிப்பட்ட ஓர் ஆண் பெண் சார்ந்த

தனிமனிதப் பிரச்சனையாக பார்க்கிறார்கள். சின்மயிக்கு ஆதரவாக

எழுதி இருக்கும் தாமரை தன் வாழ்க்கையின் சொந்த அனுபவத்துடன்

இதையும் அணுகி இருக்கிறார். பாடலாசிரியர் தமயந்தியும் சின்மயி பக்கம்

தன் ஆதரவை வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார்.

    ஓஎன்வி விருது மறுபரிசீலனைக்கு உள்ளான இக்கட்டான தருணத்தில்

தமிழ் இலக்கிய உலகம் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கடந்து

சென்றிருக்கிறது புதுக்கோட்டை எழுத்தாளர் நா. முத்து நிலவன் அவர்கள்

“ வைரமுத்து இந்த விருதுக்கு தகுதியானவரில்லை என்றால்

வேறு யாருக்குத்தான் அந்த தகுதி இருக்கிறது” என்று இலக்கிய விருதின்

பக்கமாக நின்று குரல் கொடுத்திருக்கிறார். 

   குடும்பத்தில் பள்ளிப்பருவத்தில் கல்லூரி வளாகத்தில் பேருந்தில் பயணத்தில் கூட்ட நெரிசலில் பணி செய்யும் இடத்தில்..இப்படியாக ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்தே மவுனமாக தன் வாழ்க்கையில் பாலியல் கொடுமையை அத்துமீறலை சுரண்டலை பாலியல் வக்கிரத்தை கடந்து வந்திருக்கிறாள். அதனால்தான் பெண்ணியப்பெருவெளி, சின்மயியின் குரலுக்கு செவிசாய்க்கிறது. தார்மீக ஆதரவு கொடுக்கிறது.

   எழுத்தாளர் கேரளாவில் புகழ்பெற்ற கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.,

தன் சுயசரிதை ‘சிதம்பர நினைவுகள் ‘ பக்கத்தில் தன் சபலம் குறித்து

எழுதி இருப்பது நினைவுக்கு வருகிறது.

 அவர் வீட்டில் இருக்கும் போது ஊறுகாய் விற்கும் ஒரு இளம்பெண் வருகிறாள். அவளிடம் சபலப்படும் சுள்ளிக்காடு தவறாக நடக்க முயற்சிக்கிறார். அந்தப் பெண்ணோ அவரை அடித்து விட்டு திட்டுகிறாள். “தான் உடலை விற்றுத்தான் வாழ வேண்டுமென்றால் ஊறுகாய் விற்க வந்திருக்க வேண்டியதில்லை” என்று சீறுகிறாள். பிறகு அவர் புகழ்பெற்ற எழுத்தாளரான சுள்ளிக்காடு என்று அடையாளம் காண்கிறாள். 

     தவறு செய்த சுள்ளிக்காடு பின்னர் கூனிக்குறுகி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார். அந்தப் பெண்ணும் ஆத்திரத்தில் அடித்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறாள். யாரிடமும் இதை சொல்ல மாட்டேன் என்றும் கூறுகிறாள். பின்னர் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு கூட சுள்ளிக்காடு செல்கிறார்.  ஓர் ஆணாக தன் சபலத்தை வெளிப்படுத்தியதற்கு அவர் வெட்கப்படவில்லை. . இத்தகைய தைரியம் எத்தனை பேருக்கு வரும்? சபலப்படுபவர் அடையும் குற்ற உணர்வும், அதை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறையும் சுள்ளிக்காடு விசயத்தில் காண்கிறோம். மேலும் பொதுவெளியில் அனைவர் முன்னும் அதை உரக்கச் சொல்லும்போது அதுவே அவருடைய   நேர்மையின் வெளிப்படாகி கொண்டாடப்படுகிறது. 

   தமிழ் கலை இலக்கிய வெளியில் சுள்ளிக்காடு போல தன் மனப்பிறழ்வை, சபலத்தை, பாலியல் உறவை  வெளிப்படையாக யாரும் பேசியதாக தெரியவில்லை. தமிழ்ச் சமூகம் பாலியல் விவகாரத்தில் ஒரு இரும்புத்திரையை அணிந்திருக்கிறது.

No means NO.

வேண்டாம், விருப்பமில்லை, முடியாது என்று ஒரு பெண்

சொன்னால் ஆண் பெண் உறவில் அதிகாரமிக்க ஆணுலகம்

அதைக் கேட்டாக வேண்டும். தவறினால் தலைகுனிவுகள் ஏற்படும்.

பாலியல் சுரண்டலை பெண் எதிர்க்கும் வல்லமை இதுவரை ஆண்

சந்திக்காத பெண்ணுலகம், பெண்ணின் பேராற்றல் போற்றுதலுக்குரியது.

ஆண் , பெண்ணின் எதிரி அல்ல.

ஆணும் அவன் நட்பும் காதலும் இல்லாத உலகில்

வாழ எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை.

அவள் உடல் மீதான அதிகாரம் அவளுக்கானது.

அதை எந்த அதிகாரமையமும் தனக்கானதாக ஆக்கிக்கொள்ள

முடியாது. 

நம் சட்டங்களும் நீதிமன்றங்களும் சாட்சிக்கூண்டுகளில்

சிறைப்பட்டிருக்கின்றன. . எல்லாவற்றையும் சட்டத்தின் முன்னால்

நிறுத்தி நீதிப் பெற முடியாது. அதனால்தான் எழுதப்பட்ட சட்டம் செய்யாததை மனித இனத்துக்கு மட்டுமே இருக்கும் மனசாட்சி

செய்துவிட முடியும் என்று நம்புகிறோம்.


நடந்தது என்ன?

சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரின் மனசாட்சி மட்டுமே

அறியும். வாழ்வில் ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கான

தண்டனைகளையும் நியாயங்களையும் மனசாட்சியின் முன்னால்

வைக்கட்டும்..  நாமும் தான்.


பின்குறிப்பு. 

தரவுகள்  கட்டுரையில் எடுத்தாளப்பட்டிருக்கும் எழுத்தாளர்களின் இணையதளம்  வலைப்பூ முகநூல், டுவிட்டர், யு டூயுப் பதிவுகளிலிருந்து )

நன்றி: அம்ருதா இதழ்  ஜூலை 2025

#புதியமாதவி

#பாலியல்சுரண்டல்கள்

#அம்ருதாஇதழ்_புதியமாதவி

#வைரமுத்து_சின்மயி

#கோணங்கி



No comments:

Post a Comment