Sunday, September 9, 2018

சூர்யா@நட்புமண்டலம்.10



"தந்தைமகள் உறவில் -ஒரு

தர்மவேலி போட்டாச்சு
தாவணி போட்டபின்னே-சொந்த
தமையன்கூட வேறாச்சு"



அலுவல் காரணமாக அடிக்கடி ஊர் சுற்றுகின்றேன் 
உனக்குத் தெரியுமே. எப்போதாவது வெளிநாடு போக வேண்டியதும் வரும். 
அப்படிப் போகும்போதெல்லாம் ஒவ்வொரு பயணமும் 
ஒரு தனி அனுபவக் கதையாகும்.  
ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் இத்தியாதிகள் எல்லாம்
 என்னவோ தமிழ் நாட்டுக்கும் தமிழ் மண்ணுக்கும் மட்டுமே 
சொந்தம் போல இங்கே மேடைக்கட்டி நாம் 
முழங்குவதெல்லாம் எவ்வளவு பெரிய்ய கேலிக்கூத்து
என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன்.

அன்று என்னுடன் பயிற்சி வகுப்பில் இருந்தவன்
 என்னை அழைத்துக்கொண்டு அவனுடைய காரில் 
அந்த நாட்டு பழங்குடிகளின் நடன நிகழ்ச்சியைப் பார்க்க 
அழைத்துச் சென்றான். 
வழியில் அவர்களின் உள்நாட்டு விமான நிலையத்தில்
ஐந்து நிமிடங்கள் அவன் யாருக்காகவோ காத்திருந்தான்.
அவள் வந்தாள். வந்தவுடன் அவர்கள் இருவரும் 
அதிகமாக எதுவுமே பேசிக்கொள்ள வில்லை. 
இவள் யாராக இருக்க கூடும்? அவன் தோழியா? 
காதலியா?மனைவியா? சகோதரியா...ம்ம்ம் 
என் பாரதப் பாரம்பரியம் ஆயிரம் கேள்விகள் கேட்டு 
தவித்துக் கொண்டிருந்தது. 
அவனிடம் விடை பெறும்முன்பு அவள் அவன் தோள்களில்
தன் முகம் புதைத்து நின்றாள்.
 அவள் அழுதிருக்க வேண்டும்.
அவள் அழுகை அவன் முகத்தில் தெரிந்தது….
அவ்வளவுதான்.
அவள் அவன் தோழியாம். 
தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு 
திரும்ப வருகின்றாள்..

உள்ளத்து உணர்வுகளைச் சொல்ல ஓவியம், காவியம், 
இசை , நடனம்..இப்படி எத்தனை இருந்தாலும் 
அத்தனையும் தொடுதலுக்கு அடுத்தபடிதான். 
ஸ்பரிசம்... தொடுதல்... இதில் உணர்த்தக்கூடிய உணர்வுகளை 
 ஒட்டு மொத்தமாக எந்த நுண்கலையிலும்
 சொல்லிவிட முடியாதுதான். 
அவர்களைப் பார்த்தவுடன் நாம் பண்பாடு என்ற பெயரில் 
எதை எல்லாமோ இழந்து நிற்கின்றோமோ 
என்று தோன்றியது. 
அந்தப் பயணம் முழுக்கவும் உன் தோள்களில்
 என் நினைவுகள் தூங்கி கொண்டிருந்தன. 
ஆம்..  தூங்கி கொண்டுதான்....
விழித்துக் கொண்டால்
அக்கம் பக்கம் பார்த்து அச்சப்படும் நம் விழிகள்
சுற்றம் சுகம் பார்த்து ஓடிவிடும் நம் தோள்கள்..
என்ன செய்வது?

கனவுகளும் நினைவுகளும் கலந்த அந்த விடியலில்
உன் தோள்களில் என் விழிகள் தூங்கும்போது..
அந்த நினைவே என் உள்ளத்தை தாலாட்டியது.
உன் மடியில் தலைச் சாய்க்கும் அந்த மாலைப்பொழுதில் 
பூமி உருண்டை
பூப்பந்து ஆய்விடுமோ?
உன் தோள்களில் கண்துஞ்சும் என் கனவுகளில் 
வானம் என் கைகுட்டை ஆகுமோ?
நினைக்க நினைக்க நினைவுகளே கனவுகளாக 
அந்தக் கனவுகளில் ஒரு சுகம்.

நான் என் பெண்மையை மறந்து 
வெறும் மனிதப்பிறவியாக மட்டும்
உணர்கின்ற சுகம்.
என்னிடம் படைப்பின் அடிப்படை வேறுபாடு 
இல்லாத சூனிய நேரம்.
நீ படைப்பில் ஓர் ஆண் என்ற முத்திரையை  
நான் மறந்த நேரம்.

அப்போது உன் குரல்..

ஆண்-பெண்
கணவன் - மனைவி
ஆதாம் - ஏவாள்
சட்டைகள்
எறி

உயிர்
உடல்
ஆன்மா
வேடங்கள்
களை

நட
நட
உணர்வுகள்
ஊர்தி
உறவுகள்
ஊமை

சின்னத்துளி
நெஞ்சில்
ஈரப்பசை

நடக்கின்றேன்...வானம் காலடியில் நடுங்க நடக்கின்றேன்.
நடந்து கொண்டே கண்ட கனவுகளில் நம் நட்பு ஓடிக்கொண்டிருந்தது.
என் உள்ளமும் உணர்வுகளும் 
உன் எண்ணத்திற்கும் எழுத்திற்கும் 
உரிமைக் கொண்டாட முடியாத உலகத்தில்
 உன் தோள்களின் கனவுகள்
 எனக்கு எட்டாத இமயம்தான்.

நீ எட்டாத இமயமானதற்காக வருந்துவதுகூட 
அப்பன் கோவணத்திற்க்காக அலைந்தபோது 
மகள் காஞ்சிபுரக் கனவுகளைக் கிழிக்கின்ற கதைதான். 
இங்கே ஆண்மை-பெண்மை இரண்டு மட்டும்தான் 
எல்லா உறவுகளுக்கும் வேர்.
அதனால்தான் விதையே செடிக்கு அந்நியமாகிவிடுகின்றது.

அந்நியமாய் ஆயாச்சு-உறவின்
அர்த்தங்கள் போயாச்சு-நான்
அந்நியனாய் ஆயாச்சு-உறவுக்கு
அசலாகிப் போயாச்சு

தந்தைமகள் உறவில் -ஒரு
தர்மவேலி போட்டாச்சு
தாவணி போட்டபின்னே-சொந்த
தமையன்கூட வேறாச்சு

அந்நியனாய் ஆயாச்சு-உறவு
அர்த்தமெல்லாம் போயாச்சு
அந்நியனாய் வந்தவனே-இன்று
அர்த்தமுள்ள உறவாச்சு

அர்த்தம்சொல்ல பிள்ளைவந்தான் - தந்த
புருஷனையே மறந்தாச்சு
மீசை முளைச்சாச்சு-எம்பிள்ளை
மேகமுட்ட வளர்ந்தாச்சு

ஆசையாய் வளர்த்தபிள்ளை-அய்யோ
அந்நியனாய் ஆயாச்சு
பாசவலை மீனாச்சு-உறவு
பாலைவன நீராச்சு

பாதிவழி வந்தாச்சு-சரிதான்
மீதிவழி மறந்தாச்சு-வாழ்க்கை
அர்த்தங்கள் மறந்தாச்சு-வாழ்வில்
அந்நியமாய் வாழ்ந்தாச்சு....

இப்படி உறவுகளின் அந்நியத்தில் உடைந்து போகாத நான்..
அந்த இழப்புகளைக் கூட பருவகாலத்தின் மாற்றங்களாக 
பார்க்கப் பழகிவிட்டநான்
பெயர் சொல்ல முடியாத உன் உறவில்
உணர்வுகளின் ஊசிமுனைகள் குத்தியபோதும் 
ரத்தங்கசியாத சிலிர்ப்பில்
உன்னிலிருந்து அந்நியப்படுவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியாமல்
உன் தோள்களின் கனவுகளில் ,
யாதார்த்தம் மறந்து
அந்த இயலாமைக்காகமட்டுமே துடிப்பது
வேடிக்கையாக இருக்கின்றதா...
இதில் வேடிக்கை என்ன?
நினத்துப்பார்..
இந்த உறவுகள் எல்லாம் 
என் தேர்வுகளுக்கு அப்பால் அனிச்சையாக நடந்தவை.

நான் இன்னாருக்குத்தான் பிறக்க வேண்டும் என்பதை
நானா தீர்மானித்தேன்.?
என் கருவில் இந்த மலர்கள்தான் மலர வேண்டும் என்பதையும்
நானா தீர்மானித்தேன்?
என் ரத்த உறவுகளின் வாசனைகள்
என் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவை
ஆனால் இந்தப் பூமி உருண்டையில்
நீ மட்டும்தான் என் தேர்வு.
உன் நட்பு மட்டும்தான் என் வாசனை...
          

2 comments:

  1. "சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்
    என் கண்ணில் நீர் வேண்டும்
    சுகமாக அழவேண்டும் "

    என்கிற வரிகள் எனக்கு எப்போதுமே பிடிக்கும்... உங்கள் பதிவு மனதைத் தொட்டு இந்த வரிகளை நினைவூட்டியது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஶ்ரீராம்.

      Delete