Monday, December 2, 2019

பெண்ணும் பிறந்தவீடும்

..
ஏன் இந்த தண்டனை..?
யாருக்காக நான் சுமக்கிறேன்
இந்தச் சிலுவையை.?
பாவமன்னிப்பு.. ஹா.
யாருடைய பாவங்களை
யார் மன்னிப்பது?
தாயே.. எனக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்
நீ சுமந்த வேதனையை.
எனக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்
நீ சிந்தாமல் வைத்திருந்த கண்ணீரை
அம்மா.. பிறந்தவீடு..
உனக்கில்லாமல் போனதை
என்மீது சுமத்தியது எதற்காக?
உன் சாபவிமோசனமாய் நானும்
என் நாட்களும்.
எனக்கும் பிறந்தவீடு இல்லை.
கதவுகளை அவர்கள் பூட்டிவிட்டார்கள்.
மதியாதார் வாசல் மிதியாமை கோடிபெறும்..
அப்பாவின் மந்திரம்..
என் உயிர்மூச்சின் சுவாசமாய்
அறிவார்களோ..
கதவுகளைப் பூட்டிய கண்ணியவான் கள்
அப்பாவின் நிழலும்
அம்மாவின் வரமும்
நானாகிப்போனதில்
அப்பா கட்டிய வீட்டின் இரும்புக் கதவுகள்
பூட்டிக் கொண்டதோ.
நடுவீட்டில் குடியிருந்த மனசாட்சி
மரணித்துவிட்டதோ
பாவம்.. அப்பாவின் பிள்ளைகள்!
அம்மாவுக்குத் தெரியும்..
இன்னும் வெடிக்காத
என் கருவறையின் சாபம்..
அந்தரத்தில் மிதக்கிறேன்.
அனாதையைப் போல அலைகிறது
என் பிறந்தவீட்டு கனவுகள்.
வீடு என்பது வெறும் அறைகளும்
மாடியும் மட்டுமா..
வீடு என்பது சொத்தின் மதிப்பாக
நீங்கள் பத்திரப்படுத்திப் பூட்டி
வைத்திருக்கும் பட்டாவிலா இருக்கிறது!
வீடு என்பது…
வீடு என்பது..
தாயின் கருவறை.
தந்தையின் நிழல்
.
பணத்தின் வாசனையை மட்டுமே
அறிந்தவர்களுக்கு
வீட்டின் வாசனை எப்படி தெரியும்?
என் யெளவனத்தை சுமந்திருக்கும்
வீட்டின் கதவுகள் ..
ஊமையாகிவிட்டன.
என் கனவுகளை தூக்கிச் சுமந்த
வீட்டின் மொட்டைமாடி
வெறிச்சோடி கிடக்கிறது.
கர்ண புத்திரியாய்..
காத்திருக்கிறேன்..
அப்பாவின் வாரிசுகளே..
உங்களுக்காக ..
தாயிடம் கொடுத்த அந்த சத்தியவாக்கு
பலிக்கட்டும்.
காத்திருக்கிறேன்..
என்றாவது உங்களில் யாருக்கேனும்
என் உடலோ உயிரோ தேவைப்பட்டால்
அன்றும்..
கர்ணபுத்திரியாய்.. நானே..
என்னை நீங்கள் அறுத்த ரத்தச்சுவடுகளுடன்
வருவேன் உங்களுக்காக.
அப்பாவின் வாரிசுகள் வாழட்டும்.
அம்மாவின் புதல்வியர் வாழட்டும்.
அனாதையாக திரிகிறது..
அம்மா..
நீ அறிந்தே சுமந்த
சாபவிமோசனத்தின் கடைசித்துளி..
நதியில் பெருவெள்ளம்
மூழ்கி மூழ்கி கரைந்துவிட வேண்டும்
தாயே... தாமிரபரணியே....
நின்னைச் சரணடைந்தேன்.

2 comments:

  1. மிகவும் ரசித்தேன். பல் பெண்களின் கண்ணீராய்த் தெரிந்தது

    ReplyDelete
  2. இது நமது நாட்டு பெண்களின் சாபக்கேடு. வேறென்ன சொல்ல?

    கவிதை வரிகள் ஒவ்வொன்றிலும் வேதனை தெரிகிறது.

    ReplyDelete