Tuesday, October 29, 2019

சிதம்பர வெளி



Image result for sithampara ragasiyam"

யெளவனம் அழித்து இமயம் வந்தவள்
அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும்.
சிவ சிவ..
அந்தக் கதைகளைச் சொல்லி
விலக்கி வைக்காதே.
வெட்கமறியாத காமத்தீயில்
கங்கையைத் தெளித்து
புனிதங்களைப் போர்த்தாதே.
உமையை கங்கையை
மறந்துவிடச் சொல்லி
கட்டாயப்படுத்த மாட்டேன்.
கழுத்தை இறுக்கும் பாம்புகளை
கழட்டி விடு.
துணையைத் தேடி புதருக்குள் மறையட்டும்.
பாம்பு புற்றுக்கு பாலூற்ற
காத்திருக்கும் கூட்ட த்தை
நாகதோஷத்துடன் அலையவிடாதே.
சிவ சிவ..
காட்சி திரைகள் காலத்தைப் புரட்டுகின்றன.
வசனங்களை எழுதிவிட்டார்கள்.
பாடல் வரிகள் இசையுடன் காத்திருக்கின்றன.
ஒப்பனைகள் செய்தாகிவிட்ட து.
முன்பதிவு செய்தப் பார்வையாளர்கள்
ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்துவிட்டார்கள்.
நீல நிற திரைச்சீலை விலகும் காட்சி
கனகசபை வில்வ மாலையுடன்
ஆனந்த தாண்டவம் ஆடுகிறான்.
கைதட்டல்கள் விசில் சத்தங்கள்
இருளைக் கிழிக்கும் மின்னலென
அருவியை முத்தமிடுகிறாய்
நாடகத்தில் தான்.

உன் முத்த த்தின் ஈரத்தில்
காயாமலிருந்த விஷம்
கருவறையின் பனிக்குடம் நிறைத்து
பள்ளத்தாக்குகளில் படிகிறது.
பாறைகளைப் பிளந்து
சமவெளியாய் விரிகிறது.
பனியாய் உறைந்து கிடந்த
காமத்தின் இதழ்கள்
பற்றி எரிகின்றன.
குங்குமப் பூக்களைச் சாம்பலாக்கிய
பனித் தீ ..
சிற்சபை தாண்டி எரிகிறது.
தீயை அணைக்க வருகிறார்கள் காவலர்கள்.
ஆபத்து ஆபத்து அலறுகிறார்கள் ..அவர்கள்.
உடமைகளை உறவுகளைக் காக்க ஓடுகிறார்கள்.
தீயாக உன்னைத் தீண்டும் இன்பம்..
சிவ சிவா.. யாரறிவார்?
சிதம்பர வெளியில்
சூரியக் கங்குகள்
தொட்டிலில் ஆடுகின்றன.
(நன்றி -ஓம் சக்தி தீபாவளி மலர்2019)

No comments:

Post a Comment