Friday, October 4, 2019

சிவதாண்டவம்


Image result for shiva modern artஊர்த்துவத் தாண்டவத்தில்
உன்னிடம் தோற்றுப்போன
சந்திரகாந்த தேவி அல்லவே நான்.
இதோ..
நானும் காலைத் தூக்கிவிட்டேன்.

உன் பிரணவ ஒலியில் கரைந்துவிட
உ ன் உமையல்ல நான்.
அண்ட சாரசரங்களை
எனக்குள் அடக்கும்
யோனி பீட த்தில்
உன் நெற்றிக்கண் தீப்பிழம்பாய்
எரிந்து சாம்பாலாகிப் போனது.
அந்தச் சாம்பலிலிருந்து
உன் ஆட்ட த்திற்குள் அடங்கும்
காத்யாயனி தேவியைக்
கண்டுபிடித்திருக்கிறாய்.
அவளோடு நீயாடும்
சிருங்காரதாண்டவம்
உனக்காக என்னை
ஏங்கித் தவிக்கவிடும்
கனவுகளில் நீ
கங்காதேவியையும்
துணைக்கு அழைக்கிறாய்.!
பித்தனே.. மறந்துவிடாதே.
பாற்கடலில் நீயுண்ட நஞ்சை
ஸ்கந்தமாதாவின் கைப்பிடிக்குள்
பத்திரமாக வைத்திருக்கிறேன் என்பதை.

மகாப்பிரளயம் சாட்சியாக
நீ ஆடப்போகும்
ஊழிக்கூத்துக்கு ஒத்திகைப் பார்க்க
என்னை அழைக்காதே.

என் கருமுட்டையிலிருந்து
நீ கற்றுக்கொண்ட பாடம்
ஆக்கலும் அழித்தலும்.
என்னில் சரிபாதியாக
நீ கொண்ட
அர்த்த நாரீஸ்வர கோலம்
உனக்கு நான் போட்ட
காதல் பிச்சை.

போதும்..
சிவதாண்டவ வேடங்களைக் களைந்து
வெளியில் வா..
காத்திருக்கிறேன் காதலியாக.
உன் நெற்றிக்கண்ணுக்கு
மட்டுமே தெரியும்
மூன்றாவது முலையோடு.

(மெளனத்தின் பிளிறல்- கவிதை தொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment