Monday, October 7, 2019

தேவியும் கங்குபாயும்

Related image
என்னடீ தேவி , இன்னும் என்ன மெளனம்?
தண்டியா கோலாட்டம் கால்களின் குதியாட்டம்
ஒலி வெள்ளத்தில் மிதக்கிறது பெரு நகரம்.
தேவி… .. ஏனடி சிரிக்கிறாய்..?
பத்து நாட்கள் பதினொரு அடிமைகள்
ஆஹா .. போதுமா உன் பசி தீர்க்க?
கங்குபாய் காலடிப்பட்ட மண்
உனக்கு மட்டும் புண்ணிய பூமியா!
புரியவில்லை தாயே..
கோலாட்டம் .. பூமியைச் சுற்றி சுற்றி கோலாட்டம்.
ஆடுகிறாள் ஆடுகிறான்
கழுத்தில் நெளியும் பாம்புகளும் ஆடுகின்றன.
அமுதம்.. விஷம்.. காதல் கனவு நிஜம் பொய்
சுற்றி சுற்றி வலம் வருகின்றன.
ஆடி ஆடி களைத்துப்போகிறது இரவு.
மேகங்கள் கூந்தலை வருடிக்கொடுக்கின்றன.
தேவி..
விடியும் போது மயக்கம் தெளியலாம்.
சிவப்பு விளக்கின் பச்சை ஒளியில்
கங்குபாய் சிரிக்கிறாள்.
கனவுகள் வராமலிருக்க கதவுகளை
இழுத்துப் பூட்டுகிறேன்.


பிகு:
தேவியின் சிலைகள் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து
 அப்பெண்கள் காலடிப் பட்ட மண்ணால் மட்டுமே 
பூரணத்துவம் பெறுகின்றன!
கங்குபாய் இம்மாதிரியான சிவப்பு விளக்குப்
பகுதியில் – மும்பையின் காமட்டிப்புரத்தில்
வாழ்ந்தப் பெண்.

No comments:

Post a Comment