Saturday, October 14, 2017

ஆரையடா சொன்னா யடா ..

Starr 061108-9798 Marsilea villosa.jpg

ஆரையடா சொன்னா யடா
ஒரு காலடி நாலிலைப் பந்தலடி
அது என்னடீ..
என்று ஒளவையை "டீ"  போட்டு  அழைத்தானாம்
  கவி சக்கரவர்த்தி என்று போற்றப்படும் கம்பன்.
அவன் அகங்காரத்தை  தன் கவிதைமொழியால்
அடக்கியவள் ஒளவைப் பெருமாட்டி என்பது
 வாய்வழியாக வரும் பழங்கதை.
எங்கள் ஊரில் வயக்காட்டில் ஆரங்கீரை வரப்போரத்தில்
வளர்ந்திருக்கும் . பள்ளிக்கூடத்திற்குப் போகாத எங்க ஊரு
பெரிசுகள் கூட காதில் பாம்படம் ஆட
தங்கள் மூதாட்டி ஒளவையின் பெருமையை
ஆரங்கீரையில் கண்டு அதை என்னிடம் சொன்னது
 இன்று பழங்கதையாகிவிட்டது.
இன்று வயல்களுமில்லை, வரப்புகளுமில்லை,
 ஆரங்கீரைகளும் காணாமல் போய்விட்டன.
ஒளவைகள் கூட  இதை எல்லாம் மறந்து
 பல காலமாகிவிட்டது.

ஆரங்கீரையை ஆரக்கீரை  என்றும் சொல்கிறார்கள் .
ஆங்கிலப் பெயர்: water clover
பொதுவாக நான்கு இலைகளுடன் நீரின்மேல் மிதந்துகொண்டிருக்கும்
மழையின்றி  காய்ந்து போனாலும் பின்னர் மழைக்காலங்களில்
 மீண்டும் உயிர்பெற்று 100 ஆண்டுகள் வரை வாழும் ..

ஒளவையின் பாடல்:
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
கூரையில்லா வீடே  குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா

தெருச்சண்டையில் ஏசுகின்ற சொற்கள்
அவலட்சணமானவனே, எருமையே,
கழுதையே, குட்டிச்சுவரே, ஏ குரங்கே..
என்று ஏசிவிட்டு.. ஆரைப் பார்த்துடா உன் விடுகதைக்கு
விடை கேட்கிறாய் என்று சிலேடையில்
 ஆரங்கீரை என்ற பதிலையும்  சேர்த்து சொன்னவள்
ஓளவை.
இதில் அவலட்சணம் என்ற பொருள் தரும்
"எட்டேகால் லட்சணமே"..
அன்றைய பெண்ணின் கணித  அறிவு.
தமிழில் எட்டு என்பதை ‘அ’ என்றும்
 கால் என்பதை ‘வ’ என்றும் குறிப்பார்கள்.
 எனவே, எட்டேகால் லட்சணம் என்றால்
அவலட்சணம் என்று ..!!
அடேங்கப்பா..
ஆரையடா சொன்னா யடா

5 comments:

  1. விளக்கம் நன்று தலைப்பைப் பார்த்து சற்றே மிரண்டு வந்தேன்
    த.ம.1

    ReplyDelete
  2. அவ்வையின் தனிப்பாடலை மீண்டும் படிக்க ஒரு சந்தர்ப்பம்.விளக்கமும் படமும் நன்று.

    ReplyDelete
  3. நல்ல பா விளக்கம்.

    ReplyDelete
  4. கம்பன் பாடி, அவ்வை முடித்துவைத்த அந்தப் பாடலையும் பதிவிடல் வேண்டும்.

    ReplyDelete