Friday, December 25, 2015

அஜயா.. ஆட்சி அதிகாரத்தின் இன்னொரு சரித்திரம்

கைகளில் சதா வில்லும் அம்புமாக திரியும் வேட்டைக்காரனுக்கு
மரத்தில் இருக்கும் பறவையின் கண்கள் மட்டுமே தெரியும்.
ஆனால் இயற்கையை ரசிக்கும் கலைஞனுக்கு
காதலைக் கொண்டாடும் கவிஞனுக்கு
பற்வைகளின் கூட்டிலும் கிளையிலும் தனனையே தரிசிக்கும்
அன்பனுக்கு வெறும் பறவையின் கண்கள் மட்டுமே எப்படி
தெரியும்? அவனுக்கு மரத்தின் கிளையில் இருக்கும் இணைப்
பறவைகளைப் பார்க்கும் போது காதல் கட்டாயம் தெரிந்திருக்கும்.
அதனூடாக அவன் ஜீவராசிகளின் ஆன்மாவைத் தரிசனம் செய்திருப்பான்.
இயற்கையின் பிரபஞ்சம் அவனுக்குள் ஆகாயமாய் விரிந்திருக்கும்.
அவன் கலைஞன், அவன் உயர்ந்த மனிதன்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே கற்றுக்கொடுக்கும்
துரோணாச்சாரிய குருகுலத்தில்
அவன் கடைமாணக்கனாக ஒதுக்கப்பட்டவன்.
துரோணாச்சாரிகளுக்குத் தேவை போரும் போரில் கிடைக்கும்
வெற்றியும் ஆட்சி அதிகாரங்களும் தான்.
அவர்கள் வேட்டைக்காரனையே உருவாக்குவதில்
அன்று முதல் இன்றுவரை அயராது உழைக்கிறார்கள்.
பறவையைக் கொன்றவனையே கொண்டாடும் கலாச்சார
சீரழிவை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.
பானுமதியின் சுயோதனன் (துரியோதனன்) தூற்றப்படுவதும்
காண்டீபம் கொண்டாடப்படுவதும் வெறும் கதையல்ல.
போர் சமூகத்தின் இன்னொரு முகம் தான்..
*
மீன் கூடைக்காரி. சதா மீன் மணக்கும் குடிசையில் வாழ்பவள்.
சதயவதியின் வயிற்றுப்பிள்ளைகள் தான் குரு வம்சத்தினர்.
அதுவும் சத்யவதி தன் மகன் இறந்தப் பின் தன் மருமகள்களின்
கருவறைத் திறக்க தன் முதல் மகன் வியாசனை, அதுவும் திருமண உறவு இன்றி அவள் அஸ்தினாபுர அரசனை மணப்பதற்கு முன் பிறந்த தன் வயிற்று மகன் வியாசனை அழைக்கிறாள். அந்த வியாசன் வழி குரு பரம்பரையில் வந்தவர்கள் தான் திருதராஷ்டிரன், பாண்டூ, விதுரன்
மூவரும். அப்போதெல்லாம் மீனவர் குலப் பெண்ணை, ஒரு சூத்திரப்பெண்ணை அரசியாக ஏற்றுக்கொண்ட அரண்மனையும் அஸ்தினாபுர சமூகமும் அடுத்த தலைமுறைக்கு வரும்போது சாதிப்பிரிவின் உச்சத்தில் வாழ்கிறது. கர்ணன் தேரோட்டியின் மகன் என்பதாலேயே அங்கதேசத்து அரசனான பின்னரும் ஒதுக்கப்படுகிறான.
சுயோதனன் கர்ணன் நட்பு சாதி சமூகப்பின்னணியில்
வைத்து இன்னும் பேசப்பட வேண்டிய இன்னொரு மகாபாரதக்கதை.
**
கேரளாவில் மாளநடா கோவில், பொருவழி கிராமத்தில் இன்றைக்கும்
அக்கோவிலின் வழிபாடு தெய்வமாக பவனி வருகிறான். 100,000 மக்களுக்கு மேல் அனைத்து சாதியினரும் கூடுகிறார்கள் அவனைக் கொண்டாட.
அக்கோவில் துரியோதனனால் கூர்வ குலத்து (தாழ்த்தப்பட்ட சாதி) பெண்ணுக்கு கொடுக்கப்ப்ட்டது. அதனாலேயே இன்றும் அக்குலத்தவரே அக்கோவிலின் முதல் மரியாதைக்குரியவர்களாக இருக்கிறார்கள்.
இக்கோவில் சம்ப்ந்தப்பட்ட கதை : துரியோதனன் வனவாசம் சென்ற பாண்டவர்களைத் தேடி தென் திசை வருகிறான். பசியால் வாடிய அவன் வழியில் ஒரு பெண்ணிடம் தண்ணீர் கேட்கிறான். அவளும் தண்ணீர் என்று சொல்லி அவனிடம் புளித்துப்போன காடியை கொடுத்து பருகச் சொல்கிறாள்.
அவன் அஸ்தினாபுரத்து அரசிளங்குமரன் என்று தெரிந்ததும் அச்சம் கொண்டு தனக்கு தண்டனைக் கிடைக்கும், அதுவும் சாதியில் தாழ்ந்த தன் கையால்
அவனுக்கு காடி கொடுத்த பாவத்திற்கு சிரச்சேதமே செய்யப்படும் என்றும் அவளுக்குத் தெரியும். இருந்தும் தன் சாதி அடையாளத்தை மறைக்காமல்
சொல்கிறாள். அரசனோ "பசியும் தாகமும் சாதியற்றவை. " என்று
மறுமொழி சொல்கிறான். "தண்டனைகளைப் பற்றி எண்ணாமல் என் தாகம் தீர்த்த தாய் நீ" என்று கொண்டாடுகிறான். அக்கிராமத்தவருக்கு கோவில் கட்ட நிலம் தானமாய் வழங்கிச் செல்கிறான். அக்கோவிலில்
க்டவுள் சிலை இல்லை. அவனையே தெய்வமாக அவர்கள் கொண்டாடுகிறார்கள்" என்று சொல்கிரார் ஆனந்த் நீலகண்டன்.
***
அசுரா எழுதிய புனைவுகளின் தொடர்சியாக
ஆனந்த் நீலகண்டன் எழுதி இருக்கும் AJAYA, EPIC OF THE KAURAVA CLAN,
roll of the dice .. முக்கிய இடத்தைப் பெறுகிறது. அதிலும் குறிப்பாக
தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு "அஜயா" புனைவுகளின்
ஊடாக கொண்டு செல்லும் இடமும் சங்கமிக்கும் புள்ளிகளும்
முக்கியமானவை.

No comments:

Post a Comment