Tuesday, July 21, 2015

குடிகாரன் அயோக்கியனா?

மதுவிலக்கு காவலர்களுக்கு
--------------------------------------------------
மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் மதுவிலக்கை கொண்டுவரப்போவதாக ஒருவர் சொல்கிறார். மதுவிலக்கு பேசி தன்னையும் தன் கூட்டத்தையும் தமிழினத்தின் காவலராக காட்ட இன்னொருவர் களத்தில் ஏற்கனவே நிற்கிறார்... தமிழினத்தின் காவலர்களாக போட்டியில் நிற்கும் இவர்களின் கவனத்திற்கும்
பொதுமக்களின் பார்வைக்கும் .. பாசறைமுரசு மார்ச்-ஏப் 2015ல்
வெளிவந்த என் கட்டுரை மீள்வாசிப்புக்காக.
குடிகாரன் அயோக்கியனா?
-----------------------------------------------------------
சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட பெறினே யாம் பாட தான்
மகிழ்ந்துண்ணும் மன்னே
அவ்வையின் வரிகள் இவை. தமிழ்ச்சமூகத்தின் கொண்டாட்டங்களில்
கள் முக்கியமானது. கள் குடித்திருக்கிறார்கள் நம் பெண்களும்.
கள் குடிப்பவன் சமூகத்திற்கோ தன் குடும்பத்திற்கோ இழுக்கு
ஏற்படுத்தவில்லை. குடி குடியைக் கெடுக்கும் என்ற பொய்யுரை
உருவாகவில்லை. எப்போது குடி குடியைக் கெடுக்கும் என்ற
கருத்துருவாக்கம் உருவானது? அதைப் பொதுப்புத்தியில் ஓர்
அறமாக புகுத்தியதன் பின்னணி என்ன? அதிலிருக்கும் அரசியல்
என்ன? இக்கேள்விகளை முன்வைப்பதே என் நோக்கம்.
கிராமங்களில் எங்கள் குழந்தைப்பருவத்தில் கள் இறக்கும்
தொழிலாளர்களை நான் பார்த்திருக்கிறேன். பொதுவாக
காலையில் இறக்கும் கள் அந்தப் பனை மரத்தின் உரிமையாளருக்கும்
மாலையில் இறக்கும் க்ள அந்த தொழிலைச் செய்பவருக்குமென
ஒரு எழுதாதச் சட்டம் நடைமுறையில் இருந்தது.
பனையில் பதனீர் பொடுவது ஒரு கலை, ஆண் பனையில் பூக்கள் உள்ள
குருத்துகள் மட்டும் வரும், இந்த பனையில் நுங்கு கிடைக்காது.
பெண் பனையில் நுங்குகான குருத்து வரும். பதனிக்காக விடப்படும்
மரங்களில் இந்த குருத்துகளின் நுனியை இடுக்கியால் இடுக்கி பின்னர்
அரிவாளால் செதுக்கி விடுவார்கள்... இதனால் அது பதநீரை சுரக்கும்
. இதை ஒரு மண்கலயத்தில் சுண்ணாம்பு தடவி சேகரிப்பார்கள்...
சுண்ணாம்பு தடுவுதால் பதநீர் கெட்டு விடாது,
மேலும் அதில் வரும் தேனீ, பூச்சிகள் இறந்துவிடும்
. இதை குடிப்பதால் எந்த கெடுதலும் இல்லை
(பதனி சாப்பிட்டு யாரும் சுகமில்லாமல் ஆனது இல்லை)..
. ஆனால் அளவுக்கு அதிகமாக பதநீர் சாப்பிடுவது வயிற்று இளக்கத்தை கொடுக்கும்.
நுங்குக்காக விடபடும் மரங்களில் பதநீரோ, கள்ளோ கட்டுவது இல்லை.
இப்படி பதநீர் இறக்கும் இடங்களில் சிறந்த பெண் பனைகளை
தேர்ந்தெடுத்து கள்ளுக்காக விட்டுவிடுவர். சுண்ணாம்பு தடவாத
கலயம் பதநீரை கள்ளாக மாற்றும். அதிக நேரமான சுண்ணாம்பு
தடவிய பதநீரும் புளித்து கள்ளாகும்,
நல்ல கள் அளவாக குடித்து வாழ்ந்தவர்கள் நம் தாத்தாக்கள்.
எங்கள் வீட்டில் "ஆப்பம்" செய்ய, மாவு புளிக்க கள் சேர்ப்பதுண்டு.
இதனால் சுவை அதிகமாக இருக்கும்.
குடிப்பழக்கம் என்கிற சமூகக் கொண்டாட்டம்,
குடியைக் கெடுக்கும் பழக்கமாகவும் ஒரு குற்றச் செயலாகவும் மாற்றப்பட்ட வரலாறு
ரொம்பவும் சோகமானது. அரசு மற்றும் சமய அதிகார மய்யங்களின்
கட்டுக்குள் மக்களைக் கொண்டுவருவதற்கான பெருந்தடைகளில் ஒன்றாகவும் மக்களின் குடிப்பழக்கத்தைக் கண்டும் இவை அஞ்சின, வெறுத்தன.
அதைப்போவே சமூகம் கட்டமைக்கிற மரியாதைகளையும் புனிதங்களையும் போட்டுடைக்கும் நிலையைக் குடி மனிதனுக்கு வழங்குவதை அரசும் சமூக ஆதிக்கச் சக்திகளும் கண்டு கலங்கின.
இன்று மதுவிலக்கை உரத்தக்குரலில் சொல்லிக்கொண்டிருக்கும் சிலர்
குடி மட்டுமே நம் சமூகத்தின் கேடு என்பதான ஒரு கருத்தை உருவாக்கி மற்ற கேடுகளை மூடி மறைக்க நினைப்பதும் புரிகிறது, சாதி இந்த சமூகத்தில் இருக்கலாம். திவ்யாக்கள் இளவரசங்களை மணந்துவிட்டால் தமிழ்ச்சமூகம் தன் புனிதத்தை இழந்துவிடும் என்று தமிழ்ச்சமூகத்தின் புனிதக்காவலர்கள் மதுவிலக்குப் பற்றிப் பேசும் போது அது உண்மையில் "மதுவின் கெடுதல்களைப்
பற்றிய விழிப்புணர்வு பேச்சல்ல, தங்களை மட்டுமே தமிழ்ச்சமூகத்தின் புனிதத்தைக் காப்பாற்றும் காவலர்களாக காட்டும் வேஷத்தின் முக்கியமான ஒப்பனை"
அவ்வளவுதான்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட ‘மதுவிலக்கு’ அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல.
ஆகவே, “மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை
இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.”(கு.அ.3.10.1937)
என்று கூறிய தந்தை பெரியார், ‘பர்மிட்’ உள்ளவர்கள் குடிக்கலாம் என்று ஆகிப்போன நடைமுறை குறித்தும் வருந்திக் கண்டித்தார்.
”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று சட்டம் செய்து கொண்டானோ அது போல் போலீசாரும், அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான்." என்றார்.
தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள்
கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது. (விடுதலை 9.11.68)
”100 ஆண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பு மது குற்றமற்ற ஒரு சாதனமாகத் தான் இருந்தது. அரசாங்கம் மதுவை அரசாங்க வியாபாரப் பொருளாக ஆக்கினதுடன் அரசாங்கமே மது வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகுதான், மது அருந்துவது (குடி) கெட்டது என்று சொல்லும்படி ஆகிவிட்டது. மது வியாபாரிகள் மதுவுக்குள் இயற்கை போதையைவிட அதிக போதை ஏற்படும் படியான பக்குவம் செய்ததால் மதுவால் கெடுதி என்று சொல்லும்படியான நிலை ஏற்பட்டுவிட்டது.”(விடுதலை 9.11.68)
உடல் உழைப்பின் காரணமாகவே விளிம்புநிலை மக்கள் மது அருந்துகிறார்கள் என்பதையும் அம்மக்களுக்கு மதுவிலக்கைப் பற்றி மிக அதிகமாக பேசிய மகாத்மா காந்தியடிகளே மது வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குப்பைக் கூட்டுவது, சாக்கடையை சுத்தம் செய்வது, மலக்குழியில் இறங்கி அடைப்புகளை சீரமைப்பது என்று இந்த நாட்டில் சாதியின் பெயரால் குறிப்பிட்ட சில மக்களே காலம் காலமாக மேற்கண்ட துப்புரவு தொழில்களைச் செய்து வருகிறார்கள்.
கையால் மலம் அள்ளுவதற்கு இந்திய அரசே தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நாட்டில் எவருக்கும் மதுவிலக்கு பற்றி பேசும் அருகதை இல்லை.
அம்மக்கள் மது அருந்துவது மட்டுமே அத்தொழிலைச்
செய்வதற்கும் அத்தொழில் செய்வதில் இருக்கும் மனச்சோர்வை அகற்றுவதற்கும் அவர்களுக்கான வலி நிவாரணியாகவும் இருக்கிறது, மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் அருந்தும் மது தான் நம் சமூகத்தின் அறங்காவலர்கள் முன்னிறுத்தும்
"சமூகக்குற்றம். உடல் உழைப்பை சமூகத்தகுதி நிலையில்
கீழ்நிலை ஆக்கியவ்ன தான் குடிப்பவன் குற்றவாளி என்ற கருத்தைப் பொதுப்புத்தியில் ஏற்றியவன்.ஒடுக்கப்பட்டவனின் குடிப்பழக்கம் சமூகத்தின் அவமானமான செயலாக மாற்றப்பட்டதின் பின்னணி இதுதான். இதைத்தான் தந்தை பெரியார்
மது ‘கீழ்’ ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது. (விடுதலை 16.2.69)”,
“நான் கீழ் ஜாதி என்பதை எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ
அப்படித்தான் குடிகாரன் குற்றவாளி என்பதையும்
ஒப்புக்கொள்வதில்லை. (விடுதலை 16.2.69)” என்றார்.
உடல் உழைப்பை மதிக்காத சமூகத்தில் மதுவிலக்கைப் பற்றிப் பேசுவது கூட அதிகாரத்தின் ஆணவப்போக்கு தான். மது அருந்துவது என்பது தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. மதம் இனம் ஆட்சி அதிகாரத்தின் பெயரால் அந்த உரிமையைப் பறிக்க முடியாது. பறிக்கவும் கூடாது.
இன்றைய பத்திரிகைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களும்
டாஸ்மார்க் கடைகளில் குடித்துவிட்டு வருவதும் சாலைகளில்
விழுந்துக்கிடப்பதும் என்ற செய்திகள் வருகின்றன.
இச்செய்திகளின் வழியாக "குடி குடியைக் கெடுக்கும்" என்ற
கருத்து தீவிரமாக்கப்படுகிறது.. ஆனால் கவனிக்க வேண்டிய
இன்னொரு கருத்து இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
அதாவது ..இந்த நாட்டின் கல்வி கற்கும் மாணவர்களிடம்
கூட விழிப்புணர்வை ஏற்படுத்த நம் கல்வி தவறி இருக்கிறது
என்ற மாபெரும் உண்மையை!
உடல் உழைப்பு தொழிலாளி மது அருந்துவன் என்றால் இன்று
அதிலும் 90க்குப் பின் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மாற்றத்திற்குப் பின் மது அருந்துவது மது போதைக்கு அடிமை ஆவது கூடி இருப்பது
ஏன்? என்ற கேள்வி எழுவது இயல்பு. 90க்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும்
கணினி - ஐடி துறை வளர்ச்சி உடல் உழைப்பு தரும் அசதியை விட
மோசமானது. இரவு ப்கல் பாராது வேலை செய்ய வேண்டிய நிலை,
வேலை நிரந்தரமில்லாத பாதுகாப்பின்மை என்ற சூழலின்
இந்தியா எங்கும் வொயிட்காலர் அடிமைகளை உருவாக்கி இருக்கிறோம்.
இதுவும் ஒருவகையான காலனி ஆதிக்கம் தான் என்பதை
இந்திய ஜனநாயகம் மூடி மறைக்கிறது. டாலருக்கு அடிமைகளாகிவிட்ட நம் இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு பலியாகி விட்டார்கள்.
இதைப் பற்றிப் பேச வேண்டிய சமூகம் சமூகம் திசைமாறி
இதையும் மதுவிலக்கையும் முடிச்சு போடுகிறது.
கள் இறக்குபவனை பனை ஏறுபவ்னை உடல் உழைப்பின் காரணமாக
குடிப்பழக்கம் அதிகமாக இருக்கும் துப்புரவு தொழிலாளியை..
இவர்களை எலலாம் ஒடுக்கி ஒதுக்கி தாழ்த்தப்பட்டவ்ர்களாக்கிய
நம் சமூகம் மல்லையாக்களை உருவாக்கியது. குடிசைத் தொழிலாக
இருக்கும் வரை உடல் நலத்திற்கான கள்ளாக இருந்தக் குடி,
நம் ஆண் பெண்களின் கொண்டாட்டத்தில் இடம் பெற்ற குடி
வாகன் வசதிகளும் அடி ஆட்களும் பெரும் முதலீடும் கொண்ட
மதுவாக மது உற்பத்தியாக மாறிய போது குடி நம் குடியைக்
கெடுத்தது.. கெடுக்கிறது என்ற அரசியலை நாம் பேசியாக
வேண்டும்.
குடியைக் கொண்டாட வேண்டும். எல்லோரும் குடிக்கலாம் வாருங்கள்
என்று சொல்வதல்ல் என் நோக்கம். மதுவிலக்கு சார்ந்த பொதுப்புத்தியில் சுமத்தப்பட்டிருக்கும் புனிதம், தூய்மை, அறவொழுக்கம் என்ற போதைகளைக்
களைவதும் மதுவிலக்குப் பேசும் சிலரின் அரசியல் உள்நோக்கத்தை
அடையாளம் காட்ட வேண்டும.
மது தடைப்படுத்தப்பட்ட நாடு அடிமை நாடேயாகும். (விடுதலை 16.2.69)
“ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக் கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று கேட்கின்றேன்.” (விடுதலை 18.3.71)
என்று சொன்ன தந்தை பெரியார் தான் மைனர் வாழ்க்கை வாழ்ந்தக் காலத்திலும் தன் வாழ்நாளில் கடைசிவரை மது அருந்தியதில்லை.
நம் சமூகத்தில் ஒரு பொதுவழக்கு எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. அது என்னவென்றால்.. 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு"
கள்ளுக்கும் மதுவுக்கும் அது பொருந்தும்.
இந்த பொது அறத்தை தனி மனித ஒழுக்கத்தின் அறமாக்க வேண்டுமே தவிர குடிப்பவன் எல்லாம் அயோக்கியன் என்ற பொய்யுரைகளை அல்ல.
----
Like   Comment   

No comments:

Post a Comment