Tuesday, December 29, 2015

நீ கற்பனையாகவே இருந்துவிட்டுப்போ



நீ இருப்பதாக நான் நினைப்பதெல்லாம் கற்பனையாம்
மருத்துவர் சொல்கிறார்.
 புரியவில்லை சூர்யா.. எதுவும் புரியவில்லை.
கண்கள் குளமாகும் போதெல்லாம் என் அருகில் வந்து
"நானிருக்கிறே..!ன்" என்று கனத்த குரலின் மெல்லிய ஒசை
காற்றில் தவழ்ந்து வருகிறதே..
அதுவும் கற்பனையா சூர்யா?
உன் தோள்களில் தலைசாய்த்து அழும்போதெல்லாம்
தாயின் தாலாட்டு வாசனைக்கு ஈடான
நட்பின் வாசனை என்னைச் சூழ்கிறதே,,!
இதுவும் கற்பனையா சூர்யா?
எனக்கு கற்பனை வியாதியாம்.
கொஞ்சம் ஒருமாதிரி ஆகிவிட்டேனாம்
என்னைப் பிச்சி என்று அடையாளப்படுத்துகிறது
அவர்களின் அறிவியல் உலகம்.
கற்பனைகள் உடையும் போது நானும் உடைந்துவிடுவேன்
பயமுறுத்துகிறது அவர்களின் ஆராய்சி முடிவுகள்..
அப்படியானால் எனக்குள் இருக்கும் நீ..
என்னை உடையாமல் வைத்திருக்கும்
நீ.. நிஜமா ? கற்பனையா? கனவா?
இதோ இந்த  இரவில் தூக்கம் தழுவாத இரவில்
கனவுகள் வர மறுக்கும் இரவில்
உன்னிடம் இறுதியாக சொல்கிறேன் சூர்யா..
அவர்களின் குறிப்புகள் குறித்தக் கவலை எனக்கில்லை.
சூர்யா.. நீ கற்பனையாகவே இரு.
என் கனவுகளில் மட்டுமே வா.
போதும் எனக்கு.
மருத்துவர் சொன்னது உண்மையாகவே இருந்துவிட்டுப்போகட்டும்.
நிஜங்களை நம்பி நம்பி தொலைந்துப்போவதை விட
 என்னைத் தொலைக்காமல் இருக்க
சூர்யா.. நீ கற்பனையாகவே இருந்துவிட்டுப்போ.
என் கனவுகள் நிஜமானவை என்று அப்போதுதான்
அவர்கள் நம்புவார்கள்..

No comments:

Post a Comment