Tuesday, September 1, 2015

MANJIHd , THE MOUNTAIN MAN

இத்திரைக்கதை ஓர் உண்மைக்கதை.
மான்ஞ்சி நாம் வாழ்ந்தக் காலத்தில் வாழ்ந்தவன்.
ஒரு மலையை ஒரு தனிமனிதன் தன் மனைவியின் அகால
மரணத்திற்குப் பின் தனியாக உடைத்து எடுக்கிறான்..
ஏற்கனவே இதைப்பற்றி நான் முகநூலில் பதிவு செய்திருக்கிறேன்.
தசரத் மன்ஞ்சியாக நடித்த நவஷுதின் சித்திக் மிகச் சிறப்பாக
நடித்திருக்கிறார். குறிப்பாக மன்ஞ்சி மக்களின் பேச்சுமொழி,
உடல்மொழி ஆகியவற்றில் கவனம் செலுத்தி இருப்பது
பாராட்டுதலுக்குரியது. அவன் மனைவியாக பகுனியா பாத்திரத்தில்
நடித்திருக்கும் ரத்திகா அப்தே அம்மண்ணின் பெண்முகத்தைப்
ப்ரதிபலிக்காமல் ஒரு பாலிவுட் கதாநாயகி முகத்தையே
காட்டி , முதல் குளறுபடியைச் செய்திருக்கிறார் இயக்குநர்.

கதைத் துண்டு துண்டாக , ஒரு காட்சியிலிருந்து இன்னொரு
காட்சிக்கு தாவி இருக்கிறது. ஒப்பனை, காட்சி அமைப்பு என்று
கவனம் செலுத்த வேண்டிய பகுதியிலும் கவனம் செலுத்தவில்லை
இயக்குநர் கேத்தன் மேக்தா.

சினிமா பார்த்தப்பிறகு சில காட்சிக்ள் எதற்காக, எந்த
நோக்கத்திற்காக கதை ஓட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது
என்ற கேள்வி பார்வையாளருக்கு ஏற்படுகிறது

காலில் செருப்பு கூட அணிவதற்கு தடை செய்யப்பட்ட
சாதிய அமைப்பு கொண்ட கிராமத்தில், மிகவும் ஒடுக்கப்பட்ட
சாதிப் படிநிலையில் வாழ்கிறான் கதையின் நாயகன் மான்ஞ்சி.
அவன் மனைவியை ஊர் சந்தையில் வைத்து பண்ணையாரின்
மகன் கேலி செய்து நெருங்கும் நேரத்தில் மான்ஞ்சி திரைப்பட
கதாநாயகர்களுக்கு உரிய அதே அந்தஸ்த்துடன் ஓடிவந்து
மனைவியின் கையைப் பிடித்து இழுத்துவனை அடித்து உதைக்கிறான்.
அதற்கு பலிவாங்க, அவன் அன்றிரவு அடியாட்களை அழைத்துக்கொண்டு
இவர்கள் குடியிருப்புக்கு வந்து தசரத மான்ஞ்சி யைத் தேடுகிறான்.
அவன் அண்ணனை இழுத்துப்போட்டு அடிக்கிறான். மான்ஞ்சி அப்போது
மனைவியுடன் ஊடல் கொண்டு இருவரும் குடியிருப்புக்கு பின்னால்
இருக்கும் மலையடியில் ஓடிப்போய் ஊடல் தீர்க்கிறார்கள்..
ஆனால், வீட்டில் மான்ஞ்சி இல்லை என்று சொன்ன இன்னொருவனின்
மனைவியை அவர்கள் இழுத்துப் போகிறார்கள், அன்றிரவு பெண்டாள.
மறுநாள் விடியும் போது அவள் குளத்தில் பிணமாக மிதக்கிறாள்.
மனைவியின் உடலைத் தூக்கிக்கொண்டு வீட்டுககு வரும் மான்ஞ்சியின்
நண்பன்,, இறந்துப்போனவளின் உடலை வீட்டுக்குள் வைத்துவிட்டு
வெளியில் வந்து அந்த குடிசை வீட்டுக்கு தீ வைக்கிறான்.
அவனும் தீ போல கிளம்பி செல்கிறான்.
கதை விறுவிறுப்பாக இருக்கிறது. சாதிக்கொடுமை, அதனால் பாதிக்கப்படும்
பெண்கள் என்று இந்தியாவின் சாதிய முகத்தை, கிராமங்களில் இன்றும்
நிலவும் சாதிப்படிநிலையை, ஆண்ட சாதிகளின் ஆணவத்தை
இக்காட்சி மனதில் பதிய வைக்கிறது.
ஆனால் இக்காட்சியின் தொடர்ச்சியாக கதையின் பிற்பகுதியில்
வரும் வசனம் நெருடலாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாஞ்சியின்
நண்பன் தான் அந்த ஊருக்குள் ஊடுருவும் நக்சலைட்டாக
இருக்கிறான். தன்னையும் தன் மக்களையும் கொடுமைப்படுத்திய
பண்ணையாரை இழுத்து வந்து துப்பாக்கி முனையில் ஊர் மக்கள்
நடுவில் தூக்கிலிடுகிறான். அப்போது கதையின் நாயகன் மூலமாக
நக்சலைட்டுகளை நோக்கி ஒரு வசனம்..
"உன் துப்பாக்கியால் என்ன செய்யமுடியும்?
மலையைப் பிளந்து ரோடு போட முடியுமா ? " என்று கேட்கிறது.
(யாரைத் திருப்திப்படுத்த இந்த வசனமோ?)

பாதிக்கப்பட்டவர்கள் தான் தீவிரவாதத்தை முன்னெடுக்கும் நக்சலைட்டுகளாக  மாறி இருக்கிறார்கள்
என்ற அடிப்படை கருத்தை விளக்க வந்த ஒரு கதாபாத்திரத்தை
நோக்கி கதையின் நாயகன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதன்
மூலம் சமூக மாற்றங்களுக்கு எடுக்கப்படும் தீர்வுகளும்
வழிமுறைகளும் கேலிக்குரியதாகிறது. காந்தியின் அஹிம்சை,
சாத்வீக முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது
என்ற கருத்தை வலியுறுத்த இப்படி சொல்வதாக வைத்துக்
கொண்டாலும் கதையில் அதற்கான தேவை இல்லை.

மாஞ்சியின் காதலை ஒரு சமுக மாற்றத்திற்கான அடையாளமாக,
ஒரு தனிமனிதன் ஒரு மலையையே பிளந்து சாலை அமைக்க
முடியும் என்றால் மனிதர்கள் சேர்ந்து சாதி என்ற பெருமலையை
உடைப்பதும் தகர்ப்பதும் பிளந்து அதனூடாக பாதை அமைத்து
பயணிப்பதும் சாத்தியம் தான் என்று குறியீடாகி இருக்க
வேண்டிய காட்சிகளை எப்போதுமே திரைப்படங்கள்
காட்டுவதற்கு தயங்குகின்றன.
ஒடுக்கபப்ட்ட மான்ஞ்சியின் தன் வரலாற்று கதை கூட
ஒரு காதலின் அடையாளமாக குறுகிப்போயிவிடுகிறது.

தசரத்மாஞ்சி மலைப் பிளந்தது காதலுக்காக மடடும்தான்,
அதை வர்க்கப் போராட்டமாகவோ சாதியத்திற்கு எதிரான்
போராட்டமாகவோ பார்த்துவிடக் கூடாது என்பதில்
இன்றைக்கும் எல்லோரும் கவனமாகத்தான் இருக்கிறார்கள்.2 comments:

  1. நேர்த்தியான விமர்சனம்!

    ReplyDelete
  2. படத்தினைப்பார்க்கத்தூண்டும் விமர்சனம் யூட்டிப்பிள் இருந்தால் இன்னும் நல்லம் தேடுகின்றேன் ஓய்வான போது!

    ReplyDelete