Tuesday, September 15, 2015

முமபை குண்டுவெடிப்பு தீர்ப்புநாள்..

மும்பை குண்டுவெடிப்பு - தீர்ப்புநாள்
-------------------------------------
குண்டுவெடிப்பில் மகனை இழந்த என் உறவினர்
மனம் திறக்கிறார்கள்..நானும் தான்..

2006 ஜூலையில் மும்பையில் மின்சாரவண்டிகளில்
தொடர்குண்டுவெடிப்பு .. அச்சம்பவத்தில் குற்றவாளிகளாக
அடையாளம் காட்டப்பட்டிருக்கும் 12 பேருக்கு
இன்று தீர்ப்புநாள்.
அவர்கள் குற்றவாளிகளா இல்லையா
உண்மையான குற்றவாளி யார் ..?
எய்தவன் இருக்க அம்புகளை உடைத்து என்ன பயன்?
இம்மதக்கலவரங்களுக்கு வித்திட்டது யார்?
எண்ணிலடங்கா கேள்விகளுக்கு நடுவில்
அக்குண்டுவெடிப்புல் தன் ஒரே மகனைப் பறிகொடுத்த
எங்கள் குடும்பத்தின் (கணவர் சங்கரின் அண்ணன் ம்கள் வழி பேரன் - பிரபு)
திரு இராமசந்திரன் - சுசிலா இணையர் இன்றைய தினத்தந்தி நாளிதழில்
(மும்பை பதிப்பு)
"கொலைக்கு கொலை தீர்வாகாது.
தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை வேண்டாம்.
குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கொடுத்தாலும்
எங்கள் மகன் எங்களுக்குத் திரும்ப கிடைக்கப்போவதில்லை"
என்று முதல் முறையாக மனம் திறந்து தங்கள் கருத்தைப்
பதிவு செய்திருக்கிறார்கள்.

அன்று பேரன் பிரபுவின் கடைசிக்காரியங்கள் அனைத்தும்
முடிந்தப் பின் போரிவலியிலிருந்து டிரெயினில் பயணித்த
என் அனுபவம்.. இன்றும் அந்தக் கண்கள் ..
என்னைப் பின் தொடர்கின்றன..


அந்த இசுலாமிய சகோதரனின் கண்கள்
என்னிடம் பேசிய அந்த மவுனத்தின் மனக்குரலை.
போரிவலியில் கொட்டும் மழையில் டிரெயினுக்காககாத்திருந்தோம்.
போரிவலியிலிருந்து கிளம்பும் வண்டி. கூட்டம் அதிகமில்லை.
ஏறியவுடன் பக்கத்திலிருந்தவரைப் பார்க்கிறேன்.
தலையில் வெள்ளை நிற தொப்பி,இளம்தாடி,
நீண்ட வெள்ளைக் கலர் குர்த்தா மிரண்ட கண்கள்,இளைஞன் அவன்..

அவனருகில் , அன்று நானிருந்த மனநிலையில்
பக்கத்தில்  உட்கார முடியவில்லை. ,
மின்சாரம் பாய்ந்தது போல உடனே எழுந்து 
வேறு இருக்கைக்குப் போய்விட்டேன். 
அவன் விழிகள் அன்றுஎன்னிடம் கேட்ட கேள்விகள் பலகோடி.
என்னையும்
என் அறிதல், புரிதல், எழுத்து
எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது அவன் பார்வை.
கிழிந்து போனது நானும்என் எழுத்துகளும்
என் மனித நேயமும்.
அத்தருணத்தில்
என்னிலிருந்த மிருகம் என்னைத் தின்ற காயங்களின் வடு
இந்தப் பிறவியில் ஆறாது.

இத்தீர்ப்பு நாளில் தீர்ப்பு எப்படி வரப்போகிறது..
எனக்குத் தெரியாது.
ஆனாலும் இதோ இத்தருணத்தில்
முகவரி அறியாத அந்த இளைஞனிடம்
நான் மன்னிப்பு கேட்கிறேன்..
உன் அருகாமையை விலக்கி எழுந்த அத்தருணத்தில்
என்னை நீ பார்த்தப் பார்வை.. 

கண்ணீரில் கறையாத இரத்தக் கறைகளுடன்
,தண்டவாளத்திலும் தண்டவாளத்திற்கு வெளியிலும்.
இழப்புகளுக்காக அழும்போதெல்லாம்
அந்த இளைஞனின் அந்தக் கண்கள்
என்னருகில் வருகின்றன..
எதையோ சொல்ல வருகிறது..
அந்த மெளனத்தை நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
(இதைப் பற்றிய விரிவான பதிவு செய்திகளின் அதிர்வலைகள் என்ற
என் புத்தகத்தில் ..)

No comments:

Post a Comment