Monday, December 14, 2015

ந்நோ பீப் பீப்ப் ..கெட்டவார்த்தை பேசுவோம்


அண்மையில் சமூக வலைத்தளங்களில்  நாறு நாறாக கிழிந்துக் கிடந்த பீப் பீப் ..
காகிதங்களை ஓரளவு ஒட்ட வைத்து வாசித்தப்போது
கோபம் வந்தது உண்மை. ஆனால் கொலைவெறி அளவுக்கு அல்ல.
"கெட்டவார்த்தை பேசுவோம்" என்ற தலைப்பில் பெருமாள் முருகன் மணல்வீடு சிற்றிதழில் எழுதியிருந்த கட்டுரைகளைத் தொடராக வாசித்திருக்கிறேன்.
(புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது) நாட்டுப்புற வழக்கில் சர்வசாதாரணமாக சில வார்த்தைகள் கோபத்தில் வெளிவரும். அச்சொல் கோபத்தின் உச்சத்தைக் காட்டும்.
சிற்றிலக்கியம் என்று பாரதிக்கு முந்திய காலக்கட்டத்தில் படைக்கப்பட்ட தமிழ் இலக்கியத்தில் பெண் காமப்பசி தீர்க்கும் நுகர்ப்பொருள்.காளமேகப்புலவரின் சிலேடை வெண்பாக்கள் இந்த கெட்டவார்த்தை ப்பேசுவோம் விஷயத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன. சிறுகதைகளில் புனைவுகளில் கெட்டவார்த்தைகள்
பேசுவதாலேயே நவீன எழுத்தாளர்களாக தங்களை முத்திரைக் குத்திக் கொண்டவர்கள் உண்டு.
அப்போதெல்லாம் எவரும் அதை விமர்சனப்படுத்தியதில்லை.
கறுப்பு சிவப்பு சித்தாந்தவாதிகளும் இதில் விதிவிலக்கல்ல.
சினிமாக்களில் உதயசூரியனை முலைக்கவசமாக அணிந்து தன் கதாநாயகிகளுடன் வலம் வந்தார் எம்ஜிஆர். இன்றைய முதல்வர் ஜெ அவர்களை அவருடைய அரசியல்
ஆட்சியை விமர்சிப்பதைவிட அவர் ஒரு நடிகையாக இருந்தவர் என்பதையும் அவர் பெண் என்பதையும் முன்னிலைப் படுத்தி விமர்சிக்கும் அரசியல்வாதிகளைத்தான் தமிழகத்தில் பார்க்கிறோம். தமிழ்க்கலாச்சாரத்தில் பொற்காலம் என்று போற்றப்படும் சங்க இலக்கியத்தில்( கலித்தொகை) அடுத்தவன் மனைவியை அதுவும் சேரநாட்டு அரசியை
அவள் அல்குல், முலை குறித்த வர்ணனைகளுடன் பாடி இருக்கும் புலவனும் இருக்கிறான்.
ராஜ்கெளதமன் இம்மாதிரி வர்ணனைகள் ஒப்பீட்டளவில் சேரநாட்டு பெண்களைப் பற்றி அதிகமாகவும் பாண்டியநாட்டு பெண்கள் குறித்து குறைவாகவும் இருப்பதாக சொல்கிறார்.
பாரதக் கலாச்சாரத்தில் பெண்ணின் பதிவிராத தன்மையைக் கொண்டாடும் மண்ணில் யு டூயுப் தளத்தில் பாலான பாலான படங்களும் பாடல்களும் இந்திய மொழிகள் அனைத்திலும் மலிந்து கிடக்கின்றன. அப்போதெல்லாம் அதைப் பார்த்தும் பார்க்காமல் போன நாம்
இன்று எதற்காக இவ்வளவு ஆத்திரப்படுகிறோம்?
ஆத்திரப்படுவதைக் கேள்வி கேட்பதாலேயே அப்பாடலை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தமல்ல. நான் அறிய விரும்புவது.... சினிமாவில் வசனத்தில் பாடல்களில்
சிற்றிலக்கியத்தில் நவீன இலக்கியத்தில் விளம்பரத்தில் .. பெண்ணை எப்படி அவர்கள் பார்த்து வளர்ந்தார்களோ அப்படித்தான் அவர்கள் பெண்ணைப் பற்றியும் அவள் உடல் பற்றியும் உணர்வுகள் பற்றியும் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிர்மலா கொற்றவை அவர்கள்
இப்பாடல் குறித்து ஆத்திரத்துடன் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். வாசித்தேன்.
அவருடைய கருத்துகள் அனைத்திலும் உடன்படும் நான்.. இப்படி ஒரு ஆண்மகனை பெற்று வளர்த்தற்காக அவன் தாயை/சகோதரிகளை கேள்வி கேட்பதும் ஏன்? என்றுதான்
புரியவில்லை. எவனும் கெட்டுப்போனால், சமூகம் ஏற்றுக்கொள்ளாத விஷயத்தை
செய்தால் அதற்கு ஏன் அவனைப் பெற்றவளை, ஒரு பெண்ணை குறை சொல்ல வேண்டும்?
அவனுடைய செயலுக்கு அவன் தாய் எப்படி பொறுப்பாவாள்? அதிலும் குறிப்பாக
ஆணின் பாலியல் சார்ந்த உணர்வுகள், கற்பனைகள், கருத்துகள் அனைத்திற்கும் தாய் மட்டும் காரணமல்ல, அவனைச் சுற்றி இருக்கும் சமூகம்தான் காரணம்.
அதைப்பற்றி எதுவும் பேசாமல் சகித்துக் கொண்டிருந்தோமானால், இதைப் பற்றியும்
எதுவும் பேசாமல் இருந்துவிட வேண்டியது தானே? ஏன் முடியவில்லை.
குழந்தைக்குச் சொட்டு மருந்து கொடுப்பதற்கு கூட ஒரு நடிகர்/நடிகையை வைத்து மட்டுமே விளம்பரப்படம் எடுக்கும் பொதுப்புத்தியின் பிரதிபலிப்பு தான் இதுவும்.
ஆமாம்.. எனக்கொரு சந்தேகம்..
வார்த்தைகளில் கெட்டவார்த்தை /நல்லவார்த்தை இருக்கிறதா..?

4 comments:

  1. உண்மையை தைரியமாக சொன்னதிர்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வித்தியாசமான பார்வையில் விமர்சித்திருக்கிறீர்கள். நன்று

    ReplyDelete
  3. பயம், குழந்தைகளிடத்தில் சர்வ சாதாரணமாக அந்த வார்த்தை பழகிவிடப் போகிறதே என்பதுதான். மற்றபடி உங்கள் கட்டுரை சரியாகத்தான் வேறு கோணத்தில் விமர்சித்திருக்கிறது.

    ReplyDelete
  4. உண்மைதான் தோழி. “நாங்க எரியும்போது எவன் மசுத்த புடுங்கப் பொனீங்க?” என்று இன்குலாப் கேட்கும்போது கோவம்தான வருகிறது. “முலைகள்” என குட்டிரேவதி வைத்த நூல்தலைப்புப் பற்றி அவர் விளக்கிய போது என்போலும் ஆண்கள் பலருக்கு ஆபாசம் தெரியவில்லை, ஆற்றாமையே மீதூர்ந்தது. ஆனால், அதற்காக இந்த “பீப்பாடலை” எழுதிக் கசியவிட்ட ரகசியக் கேவலர்களை...? நாங்கள் அனைத்து இலக்கிய அமைப்புகளும் சேர்ந்து 18-12-2015 இன்று மாலை ஓர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் - பார்க்க -
    http://valarumkavithai.blogspot.com/2015/12/1000.html

    ReplyDelete