Sunday, November 8, 2015

எஸ்.ரா.வின் உப பாண்டவம்

-இன்னும் எத்தனை பாண்டவர் கதைகள் களம் கண்டாலும்
அத்துனை பார்வைகளுக்கும் இடம் கொடுக்கும் பெரும் சமுத்திரமாக
மகாபாரதக்கதை விரிகிறது.
எஸ்.ராவின் உபபாண்டவம் புனைவிலக்கிய உத்திகளின் உச்சம்.
கதைகளைத் தானே உருவாக்கி கதைமாந்தர்களைப் படைக்கும் எழுத்தாளனுக்கு அக்கதையும் அக்கதையை நகர்த்தி செல்லும் சம்பவங்களும் முன்னுரிமை பெறும்.
ஆனால் மகாபாரதம் போன்ற அனைவரும் அறிந்தக் கதையை மறுவாசிப்பில்
தன் படைப்புக்குள் கொண்டுவரும் எழுத்தாளனுக்கு கதையோ நிகழ்வோ
முன்னுரிமை பெற வேண்டிய அவசியமில்லை. கதையை மாற்றவோ அல்லது
கதைப் போக்கை தீர்மானிக்கவோ வேண்டிய அவசியமும் இல்லை.
அதனால் தான் தெரிந்தக் கதையில் தெரியாத பக்கங்களை நாம் அறியாத முகங்களை வெளிச்சப்படுத்திவிடும் வித்தையை செய்துவிட முடிகிறது.
எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் வெளிச்சப்படுத்தும் மாந்தர்கள்
மகாபாரதக் கதையில் உள்வட்டதை விட்டு விலகி நிற்கும் கதை மாந்தர்கள்.
விதுரனைப் போலவே பணிப்பெண்ணுக்குப் பிறந்த திருதராஷ்டிரனின்
மகன் விகர்ணன் அஸ்தினாபுரத்தின் அரண்மனையில் தொடரும்
விதுரன்களை நோக்கி நம் பார்வையை நகர்த்துகிறான்.


மயன் பாண்டவர்களுக்காக கட்டிக்கொடுத்த இந்திரபிரஸ்த மாய மாளிகை
மகாபாரதக்கதையில் குரு வம்சத்தின் அழிவுக்காக திட்டமிடப்பட்டே கட்டப்படும் ஆதிவாசியின் சாபம்.
பாஞ்சாலி துகிலுரியப்பட்டதையும் குருஷேத்திரத்தில் பாண்டவர்கள் வெற்றியையும்
" தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்றே
எப்போதும் போதிக்கப்பட்டு வந்திருக்கிறோம். தர்மம் வென்றதாகவே இருக்கட்டும்,
ஆனால் ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சியை காவு கொண்டுவிட்ட வெற்றியாகவே
பாண்டவர்களின் வெற்றி.
கதைப்போக்கில் பாண்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரி பாண்டு இறந்தப்பின் தீயில் விழுந்து உடன்கட்டை ஏறுகிறாள். அதற்கான காரணங்களை  நோக்கி கதை நகரும் போது
பாண்டவர்களின் தாயாக கடைசிவரை மகாபாரதக்கதையில் உயிர்ப்புடன் வாழும் குந்தி எதிர்மறை பாத்திரமாக மாறிவிடுகிறாள்.
தம்தம்  சகோதரியின் பிள்ளைகளுக்காக சகுனியும் வாசுதேவனும்   போராடுகிறார்கள், அவரவர்களுக்கான நியாயங்களுடன்.

பாஞ்சாலி துகிலுரியப்பட்டதில் ஏற்பட்ட அவமானத்தை துடைக்க கெளரவர்களின் மனைவியர் 100 பெண்களும் விதவைகளாக. !
தன் நூறு புத்திரர்களைப் போரில் இழந்த சோகத்தை விட
காந்தாரிக்கு தன் புத்திரர்களின் விதவை மனைவியரை
 எதிர்கொள்வதில் ஏற்படும் சோகம்.
அதை தவிர்க்க விரும்பும் காந்தாரி.. இன்னொரு முறையும்
 மகாபாரதக்கதை மறுவாசிப்பு செய்யப்படலாம்.
 அக்கதையில் துரியோதனின் மனைவி பானுமதி பேசினால்.. ..
அல்லது திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி பேசினால்..
மகாபாரதக்கதை வாசகனை மட்டுமல்ல,
ஒவ்வொரு படைப்பாளரையும் கூட
மீண்டும் மீண்டும் தனக்குள் கரைத்துக் கொள்கிறது.


2 comments:

 1. அவசியம் படிக்கின்றேன்..

  ReplyDelete
 2. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete