Tuesday, October 25, 2022

காஃபி வித் நாஞ்சில் நாடன்.


 என் முதல் கவிதை நூல் சூரியப்பயணம் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்த்துரையுடன் வெளிவந்துள்ளது. மிக மோசமான வடிவமைப்பு!!!

கவியரங்க கவிதைகளை வேறு இணைத்திருப்பேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது.

முதல் புத்தகம் என்பதால் வெளியீடு விழா என பிரமாதப்படுத்திக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது. தன் வாழ்த்துரையில் நாஞ்சில் "எல்லாமே கடக்க முடிகிற தூரங்கள் தான், நடக்கத் தயாராக இருந்தால்" என்று முடித்திருப்பார்.

தூரங்களை கடந்திருக்கிறேனா ?!! தெரியாது.

நேற்று நாஞ்சில் நாடன் அவருடைய அண்மையில் வெளிவந்த 4 புத்தகங்களை " புதியமாதவிக்கு வாழ்த்துகளுடன்" என்றெழுதி கையெப்பமிட்டு அனுப்பி இருக்கிறார். காலையில் எழுந்தவுடன்' காஃபி வித் நாஞ்சில்'

பல நினைவுகளையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்துவிட்டது.

என் முதல் புத்தகத்தில் வெளிவந்திருக்கும்  வாழ்த்துரையுடன் அவர் எழுதி இருந்தக் கடிதம்.. அது என்னளவில் மிகவும் முக்கியமானது. அக்கடிதத்தில்

" கான முயல் எய்த அம்பினில்

யானை பிழைத்த வேல் ஏந்நதலினிது"

என்ற திருக்குறளோடு முடித்திருப்பார். என்  ஒவ்வொரு புத்தகம் வெளிவரும்போதும் அவருடைய அக்கடிதத்தை எடுத்து வாசிப்பது இன்றுவரை தொடர்கிறது.

தொல்குடி சிறுகதை தொகுப்பில்‌ தன்னுரையாக "கைம்மண் அளவு" என்று எழுதியவர் இதே திருக்குறளுடன் முடித்திருக்கிறார்..

இன்னும் பக்கங்களைப் புரட்டவில்லை!

முதல் பக்கத்தின் நினைவலைகள் இழுத்துச் செல்கின்றன.

அரசியல் கருத்து முரண்பாடுகள் உண்டு. இருவரும் அறிவோம். அதையும் தாண்டி அவர் எழுத்துகளை வாசிப்பதும் விமர்சிப்பதும் கொண்டாடுவதும் எவ்வித நெருடலும் இல்லாமல் தொடர்கிறோம். தொடர்கிறேன்.

இலக்கியம் அதை எழுதுபவருக்கும்

வாசிப்பவருக்கும்

இதைக்கூட செய்யவில்லை என்றால்!

பேரன்பும் நன்றியும் நாஞ்சில் சார்.

Saturday, October 22, 2022

Ammu..அம்மூ...

 



Ammu….அம்மு

திரைப்படம் பாருங்கள்

எச்சரிக்கை..

 உங்கள் ஆணுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டாம்! 


“அடிக்கிற கைதான் அணைக்கும்”

ஆண் பெண் உறவில் பெண்ணை இதைவிட மோசமாக 

ஏமாற்றும் ஒரு பொன்மொழி ?!!! இருக்கவே முடியாது.

என்னவோ அவனுக்கு மட்டும் கோபம் வருமாம்.

அதை வெளிக்காட்ட அவன் பெண்ணுடலைப்

பயன்படுத்திக் கொள்வானாம்.!

இதைக் காரணமாக சொல்லும் எந்த ஓர் அறிவுஜீவி புண்ணாக்கும் பொம்பளக்கி கோபம் வந்தா என்ன செய்வாடேனு யோசிச்சதில்ல.

அது அப்படித்தான்.

காலம் காலமாக பெண்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள்.

இன்னிக்கு கணினி யுகத்தில் என்னவோ

இந்தப் பொம்பள பிள்ளங்க நாலு காசு சம்பாதிக்காறாங்களே

இதெல்லாம் வந்தப்பிறகு மாறிடுச்சு அப்படின்னு

சொல்லத்தான் ஆசை.

ஆனா.. இந்த மீசைக்காரப்பசங்க

சொல்லவிடுவதில்ல.

புதுசுபுதுசா எப்படி எல்லாம் தன் கோபத்தை

தன் மனைவி/ காதலி மீது காட்டுவது 

என்பதில் பல புதுப்புது வித்தைகளை அறிந்தவர்களாக

இருக்கிறார்கள்.


மிருகம் பாதி, மனிதன் பாதி..

என்பதில் மிருகம் எப்போதும் அவனிடம் தூங்குவதில்லை.

அது பாய்வதற்கு தயாராகவே இருக்கிறது.

அந்த மிருகத்திற்கு வடிகாலாகவே பலருக்கு

திருமண உறவு கை கொடுப்பது அவலம்தாம்!

(எல்லோரையும் சொல்லவில்லை. )

கை நீட்டி நான் என் பொண்டாட்டியை அடிப்பதில்லை 

என்று சொல்லும் ஆணிடமும் இருக்கிறது

அந்த மிருகம்.

அது மவுனத்தைக் கூட ஒரு பாய்ச்சலாக காட்டி

பெண்ணுடலையும் உள்ளத்தையும் பிறாண்டி

ரத்தம் கசிய வைத்து அதில் ஒரு சுகம் காணும்!

எத்தனை விதம் விதமான டார்ச்சர்கள்! ச்சே..

 “பொறுத்துப் போயிடும்மா” என்று சொல்வது தவறில்லைதான்.

ஆனால் “பொறுத்துப் போயிடுப்பா”னு அவனிடமும் சொல்லவேண்டும்.

என் அம்மாவுக்கு இல்லாத இப்பிரச்சனை 

என் தலைமுறைக்கு ஏற்பட்டதாக எப்போதும்

நினைப்பதுண்டு நான். காரணம் அம்மாவுக்கு அப்பாவின் ஆளுமை ஒரு கோவில். அவள் அதில் கேள்விகளின்றி சரணடைந்துவிட்ட பிறவி.

இங்கே உணர்வுப் பொங்க எழுதப்படும்

“நின்னை சரணடைந்தேன” என்பதும் 

காலம் காலமாய் ஒலிக்கும் பெண்ணின் அழுகுரல்.

அவள் சரணடைய தயாராக இருக்கிறாள்.

நீ அதற்கு தகுதியானவனாக 

இருக்கிறாயா?!!! 


இதை எல்லாம் எனோதானோனு எழுதவில்லை.

வேலையை விட்டவுடன் மும்பை Sophia College For Women

ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் சேர்ந்தேன். Women counseling , Domestic violence – law and police help  படிப்பும் பயிற்சியும். அப்பயிற்சியும் படிப்பும் முடித்து அதை

செயல்படுத்தும் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் ரொம்பவும் வித்தியாசமானதாக அமைந்தது. நடுத்தர உயர் நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் அவலங்கள் தெரிய வந்தது.  

‘யாரும்மா உன் புருஷன்?”

அவர்கள் சொன்னவுடன் ஏற்படும் அதிர்ச்சி…

அடப்பாவிகளா உனக்கு இப்படியும் ஒரு முகமா…!

அந்த நபர் எனக்கும் தெரிந்தவராகவும் சிலர் பிரபலங்களாகவும்கூட இருந்தார்கள். அது என்னை ரொம்பவும் மன உளைச்சலுக்குள் தள்ளியது.

மீண்டும் அந்த ஆண்களை சந்திக்கும்போது

பொய்யாக புன்னகைக்க முடியவில்லை.

இப்படியாக நானும் பாதிக்கப்பட்டேன்.

அதன்பின் தான் 

அவனுக்குள் இருக்கும் அந்த வேட்டை மிருகம்

எப்போதும் விழித்திருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.

அவன் அப்படித்தான் இருப்பான்.

நீ பொறுத்துப்போம்மா..என்பதன் அர்த்தம் இன்னும் ஆழமாக எனக்குள் வடுவானது.

பிறகென்ன…

நான் அதிலிருந்து வெளியில் வரவே சிரமப்பட்டேன்.


பெண்ணைப் புரிந்துகொள்ளவே முடியாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார்கள். அது பொய். அப்படி எழுதியதெல்லாம் ஆண்கள்.

ஆனால்… இப்போது சொல்கிறேன்…

ஆண் மனதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.

அவனுக்குள் இருக்கும் அந்த மிருகம்

எப்போது பாயும்?

ஏன் பாய்கிறது?

அவன் தேவை என்ன?

அவன் காலம் காலமாய்

பெண்ணின் சரணாகதி நிலையிலும்

புரிந்து கொள்ள முடியாதவனாகவே இருக்கிறான்.

……

அம்மு … திரைப்படம்

இதன் ஒரு துளி.

பெண்கள் கட்டாயம் பாருங்கள்.

ஆனால் அவனுடன் உட்கார்ந்து பார்க்கவேண்டாம்.

தனியாக உட்கார்ந்து பாருங்கள்.


"take care Ammu

உன்னை உன் சுயத்தை இழந்து

வாழ்ந்துவிட முடியாது.

சரணடைதல் கூட அர்த்தமிழந்துவிடும்

take care மை டியர் அம்மு..

Thursday, October 20, 2022

கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது!?

 “கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது” 

-அறிஞர் அண்ணா.

(அண்ணா , திராவிட நாடு இதழ் , 06/1/1946)

இந்த வரிகளை அறிவார்கள். ஆனால் எத்தனை பேருக்கு

இதன் வரலாறு தெரியும்???

யாருமே பேசியதில்லை. ஏன்?!!!

ராஜாஜியை விவாதத்திற்கு அப்பாற்பட்ட   ஞானியாகவும் உத்தமராகவும் ஒரு பிம்பத்தை ஊடகங்கள் கட்டி எழுப்பியதில் வெற்றி பெற்றிருக்கின்றன. 

ராஜாஜி?!!!

1942ல் அலகாபாத்தில் கூடிய அகில இந்திய காங்கிரசில் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து ராஜாஜி கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 120 வாக்குகளும் கிடைத்தன. தீர்மானம் தோற்றதைக் காரணம் காட்டி ராஜாஜி காங்கிரசின் சகல பொறுப்புகளிலிருந்தும் உறுப்பினரிலிருந்தும் விலகிக்கொண்டார். 


வெள்ளையனே வெளியேறு காங்கிரசின் ஆகஸ்டு புரட்சி பற்றி எரியும்போது தலைவர்கள் சிறையில் இருந்தார்கள். ராஜாஜி கல்கத்தாவின் வணிகப் பேரவை நடத்திய கூட்டத்தில் ‘ஆகஸ்டு புரட்சியைக்’ கேலி செய்து பேசினார். 


இந்திய சுதந்திரம் நெருங்கியது என்றவுடன் ராஜாஜி காங்கிரசில் சேர முயற்சித்தார். அகில இந்திய காங்கிரசு கமிட்டிக்கு காலியாக இருந்த 37 இடங்களில் ஒன்றான திருச்செங்கோடு பகுதியிலிருந்து ‘ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது” 

தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி. அது எப்படி தனக்குத் தெரியாமல் 

திருச்செங்கோடு தேர்தல் நடந்தது என்று திகைத்தார். 

1945 அக்டோபர் 31ல் திருப்பரங்குன்றத்தில் கூடிய தமிழ் நாடு காங்கிரசுகமிட்டி ‘ராஜாஜியை தமிழ் நாடு காங்கிரசுக்குள் சேர்க்க கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் திருச்செங்கோடு கபட செயலுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரசு ராஜாஜி ஆகஸ்டிலேயே காங்கிரசில் சேர்ந்துவிட்டாரே என்று மெளலானா ஆசாத்தை விட்டு அறிக்கை வெளியிட வைத்தது. காமராஜர் ஏமாற்றப்பட்டார். இதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் “ கோடு உயர்ந்தது, குன்ற,ம் தாழ்ந்தது “ என்றார்.

(கோடு – திருச்செங்கோடு, குன்றம் – திருப்பரங்குன்றம்)


 இதுமட்டுமல்ல, காந்திக்கும் காமராசருக்கும் நடுவில் கூட மனஸ்தாபங்களுக்கு காரணமாக ராஜாஜியே இருந்திருக்கிறார். காந்தியார் தமிழ் நாடு வந்திருந்தப்போது ராஜாஜி கூடவே இருந்ததும் தமிழ் நாடு காங்கிரசு தலைவராக இருந்த காமராஜர் காந்தியிடம் எதையும் உரையாட முடியாத சூழலும் ஏற்பட்டிக்கிறது . காந்தியும் காமராசரைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் சிலர் ‘க்ளிக்: அரசியல் நட த்துகிறார்கள் என்று காமராஜரை மறைமுகமாக குறிப்பிட்டதைக் கண்டித்து காமராஜர் காங்கிரசிலிருந்து பதவி விலக தயாராகும் அளவுக்குப் போனார் என்பதுதான் உண்மை. ஆனால் காந்தி ஒரு மழுப்பலான அறிக்கையை தன் ஹரிஜன் பத்திரிகையில் வெளியிட்டு காமராஜரை சமாதானப்படுத்தினார். 


 1937ல் இந்தி திணிப்பு.. காங்கிரசு கட்சியின் விருப்பத்திற்கு மாறாகவே தன் விருப்பத்தின் படி இதைச் செய்த அதே ராஜாஜி அவர்கள்தான் 1957ல்

‘ஒருபோதும் இந்தி வேண்டாம்’ என்று எழுதினார்.



ராஜாஜி தன் மொழிக்கொள்கையில் பல்டி அடித்தார் என்று எந்த ஊடகமும் எந்தப் பத்திரிகையாளரும் இதுவரை எழுதியதாகத் தெரியவில்லை.

இதுதான் ராஜாஜி அவர்களின் பத்திரிகை ஊடக பலம்.

அன்று மட்டுமல்ல இன்றும் 

“கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது “ இதனால்தான்.

Wednesday, October 19, 2022

கடலுக்கு நடுவில் ஒரு சூஃபி கவிதை

 கடலுக்கு நடுவில் ஒரு சூஃபி கவிதை




நேற்றுதான் அக்கவிதையின் தரிசனம்

என்ன ஒரு வாழ்க்கை இது!

பிறந்ததும் வளர்ந்ததும் இந்த மண்ணில்தான்.

வாழ்க்கையில் எத்தனையோ முறை

அந்தக் கடலை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே

பயணித்திருக்கிறேன்.

போகவேண்டும்..

எப்படியும் அந்தக் கவிதை அருகில்

அந்தக் கடலின் மொழியை

கரும்பாறைகளுடன் சேர்ந்து நானும்

வாசிக்க வேண்டும்..

அப்பாவிடம் கேட்கவே பயம்!

அப்பா அழைத்துச் செல்லவில்லை.

சங்கரிடம் கேட்கும்போதெல்லாம்

“IAM NOT INTERESTED”

நேற்றும் சங்கர் சொன்னது அதே வரிகள்தான்.

மும்பையை சுற்றிப்பார்க்க வரும்

உறவுகளும் தோழர்களும்

மகாலட்சுமிக்குப் போகும்போது கூட

சாலையோரத்தில் அழைக்கும் 

அக்கடலின் அழகைக் கண்டு கொள்வதில்லை.

தனியாக போயிருக்கலாமே..!

ஆம் போயிருக்கலாம்.

வெளி நாடுகளுக்குத் தனியாக பறக்கிறேன். 

ஆனால் உள்ளூரில் அது வாய்ப்பதில்லை.

ஏன்?

எனக்கும் தெரியவில்லையே…!


இத்தனை ஆண்டுகள் ஆசையும்

அந்த சூஃபிக்கவிதையை வாசிக்கவே முடியாதா

என்ற ஏக்கமும் தீர்ந்தது.

 நேற்றுதான் முதல்முறையாக

மும்பை ஹாஜி அலி தர்க்காவுக்கு போனேன்.


அந்தக் கடலின் மொழி.. 

இப்போதும் மாறவில்லை.

ஆனால் அது காயப்பட்டிருக்கிறது.

அதன் கம்பீரமும் நளினமும்

எந்திரமயமான வளர்ச்சி திட்டங்களால்

சிதைக்கப்படுகின்றன.

கவிதையின் மெளனமான அழுகையை

கேட்டிருக்கின்றீர்களா..?

நேற்று நான் கேட்டேன்.

எனக்கும் அழுகைதான் வந்த து.

ஆனால் அழுகின்றவருடன் சேர்ந்து அழுவதைவிட

அவர் கைகளைப்பிடித்துக் கொண்டு

மெளனத்தில் கரைவது உசிதம். 


சூஃபியின் மொழியுடன் நானும்.

எங்கள் இருவருக்கும் சாட்சியாக

எம் கடலும் கரும்பாறைகளும்.

கிளம்பி வரும்போது திரும்பிப் பார்க்கவில்லை



மக்ஃபியும் மெளலான ரூபியும்

வாழும் சூஃபிகளின் உலகத்தைக்

கடந்து வரும்போது

கால்களும் வலிக்கின்றன.

மெதுவாக  நடக்கிறேன்.

அலைகளும் பாறைகளும்

அங்கேயே இருக்கின்றன.

நான் மட்டும்?


“ உலகம் ஒரு கல்லறை. 

மரணம் 

அக்கல்லறையின் கதவுகளைத் திறக்கிறது.

சிறகுகள் இருப்பவர்கள் 

அதிலிருந்து பறந்து எழுகிறார்கள் .”

எப்போதோ எங்கேயொ வாசித்த சூஃபி கவிதையுடன்

நான் 

மீண்டும் ஜனக்கடலுக்குள் .

Sunday, October 16, 2022

காணாமல் போன கண்ணதாசனின் "சேரமான் காதலி"

 


கண்ணதாசனின் ‘சேரமான் காதலி’
காணாமல் போனது ஏன்?
கண்ணதாசனுக்கு சாகித்திய அகதெமி விருது
சேரமான் காதலி நாவலுக்காக.!
(இப்படியான சாகித்திய அகதெமி செய்த சேட்டைகள் நிறைய உண்டு)
அவ்வளவுதான்.
அதைப் பற்றி யாருமே பேசமாட்டார்கள்.
பிறகென்ன…?
 
யாருக்குத்தான் பிடிக்கும்!
 
 
உண்மையில் சேரனே அப்படி செய்திருந்தாலும்
அதைப் போயி கண்ணதாசன் எழுதி இருக்கலாமா!???
அதுதானே…
 
கதைப்படி மூன்றாம் சேரமான் பெருமாள் 
முடிசூட்டிக் கொள்ளும்போது
கண்ணதாசன் ஒரு கற்பனை காதலியை உருவாக்கினார்.
அவள் யூதப்பெண் யூஜியானா.
பதவியேற்கும்போது அவள் கர்ப்பவதி.
அரசன் பதவிக்கு அது ஆபத்து என்று நம்பூதிரிகள் நினைக்கிறார்கள்.
எனவே அவளை இஸ்ரேலுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
ஆனால் அதன் பின் சேரமானுக்கு இன்னொரு காதல் வருகிறது.
(வரக்கூடாதா என்ன?)
அரபுக்கப்பலில் வந்து இறங்கும் சலீமாவுடன் காதல்.
இப்போ சலீமா கதைப்பாத்திரம் உண்மையான வரலாறு.
சலீமாவை மணக்க அரசன் இசுலாமியராக வேண்டும்.
சலீமாவை அரசன் திருமணம் செய்து கொண்டால்??
இது யூதக்காதலியை விட ஆபத்தானது என்று
நம்பூதிரிகள் நினைக்கிறார்கள்.
உள் நாட்டு கலகம் வருகிறது.
பாண்டியர்கள் எதிர்க்கிறார்கள்.
அரசனைக் சலீமாவிடமிருந்து விடுவிக்க
யூதக்காதலியை மீண்டும் வரவழைக்கிறார்கள்.
கதையில் திருப்புமுனை…
யூதக்காதலி அரபுக்காதலியை விரட்டிவிடவில்லை.
அரசனின் இரு காதலியரும் தோழியர் ஆகிவிடுகிறார்கள்.
 
கதையின் முடிவில் 
சேரமான் தன் அரசை தன் உடன் பிறந்த சகோதரிகள், தம்பி மற்றும் உறவினர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு 
 சலீமாவுடன் கப்பல் ஏறி அரபு நாட்டுக்கு போவதாக முடியும்.
 
அதாவது சேரமானின் காதலி சலீமா..
சலீமாவுக்காக தன் அரியணையை விட்டுவிட்டார் சேரமான்.
கதையில் குலசேகர ஆழ்வாரின் கதை உண்டு.
வைணவம் உண்டு.
கதையில் கண்ணதாசனின் மெய்யியல் 
அதீத புனைவுகள் உண்டு.
 
சேரமான் காதலியில் சேரனின் காதல் வெற்றி பெறுகிறது.
ஆனால்.. என்ன இருந்து என்ன…!
கண்ணதாசனைக் கொண்டாடுபவர்களுக்கும்
கதையின் முடிவு உவப்பானதாக இல்லையோ.
ஆகையினால்,
கண்ணதாசனின் சேரமான் காதலி
காணாமல் போய்விட்டாள். 
 
17 அக்டோபர் , கண்ணதாசன் நினைவு நாள்.
காணாமல் போன
அவருடைய “சேரமான் காதலி”யையும் வாழ்த்துவோம்.
காதல் வாழ்க
சேரமானின் காதல் வாழ்க.
சேரனின் காதலியர் வாழ்க.

Friday, September 16, 2022

கிழவனின் கைத்தடி.

கவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி – உண்மை இதழ்

பெரியாரியம் இலக்கியமாவதில் இருக்கும்
அடிப்படை சிக்கல்களைப் பேசுவதில்லை நாம்.
நம்மையும் அறியாமல் அதை எல்லாம் எழுத்தில்
கொண்டுவருவது இலக்கியமாக முடியாது என்ற
கருத்து நமக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது.
அதனால்தான் இலக்கிய அந்தஸ்த்தை தீர்மானிக்கும்
வானளாவிய அதிகாரம் எப்போதும் வலதுசாரிகள்
கூடாரத்தில் இருக்கிறது..
அதையும் மீறி பெரியாரியத்தின் சமூக அரசியலை
எழுத்தில் கொண்டுவரும்போது மிக எளிதாக
அதையும் “உரக்கப்பேசும்” கவிதைகள் எப்படி
கவிதைகளாக முடியும் ? என்ற விமர்சனங்கள்
வரும், வந்திருக்கின்றன.
மொழியை வசப்படுத்தும் பயிற்சியில் நாம்
அவர்களைத் தாண்டி பயணிக்கும்போது
அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்
“கள்ள மவுனம்”
இது முந்தைய அடியைவிட அபாயமானது,
பெரும் மன உளைச்சலைத் தரக்கூடியதுதான்.
இந்த “கள்ள மவுனம்” அந்தப் பக்கம் மட்டுமல்ல,
இந்தப் பக்கமும் இருக்கும். இருக்கிறது.
காரணம்.. பெரியார் தான்!
ஜால்ரா போடுவதில்லை.
திராவிட அரசியலை விமர்சிக்க தயங்குவதில்லை.
கூட்டத்தோடு ‘கோவிந்தா’ போடுவதில்லை.
இப்படி எல்லாம் இருந்தால்
கள்ளமவுனம்
வாழும்போதே நமக்கான கல்லறையாக
நாமே தோண்டிக்கொண்ட புதைகுழியாக
இருக்கிறது.
என்ன செய்ய முடியும்..?
சரவணா..
இந்த ஒரு நாளில் மட்டும்
தந்தை பெரியாரைக் கொண்டாடுவதை தவிர.!
புதைகுழியில் சிக்குண்ட
எம் போன்றவர்கள் பலருண்டு.
கிழவனின் கைத்தடியைப் பிடித்துக்கொண்டு
புதைகுழியில் மிதக்கிறேன்.
 
#பெரியாரிய_இலக்கியம்
 
#பெரியாரின்கைத்தடி
 
(செப் 17, 2022. )

 

 

Friday, August 26, 2022

இலக்கியப்புண்

 இலக்கியப்புண்

---------------------------------

இலக்கியப்புண் சீழ்ப்பிடித்து

நாற்றம் எடுக்கிறது.

அதிலிருந்து எட்டிப்பார்க்கின்றன

இலக்கியப்பீடங்களின் 

முட்டைகள் பொறித்த 

அதிகாரக்குஞ்சுகள்.


செம்மொழியின் கொரொனா தொற்று

கைகழுவி கழுவி 

துடைத்துக் கொள்கிறேன்.

முகக்கவசம் மாட்டிக்கொள்கிறேன்.

மூச்சு முட்டுகிறது.

சுவாசிக்க முடியவில்லை.


கனவிலிருந்து விழிக்கும்போது

எம் குடிசைகளில்

அச்சமின்றி விளையாடிக் கொண்டிருக்கும்

குழந்தைகளிடம்

கவிதையின் சாயல்.

கொரொனாவாவது மயிராவது!

முகக்கவசத்தை எடுத்து தூர வீசிவிட்டு

அச்சமின்றி சுவாசிக்கிறேன்.

ஹஹா…

காற்று உனக்கானது மட்டுமல்ல..


ரத்தம் வடியும் காயத்தில்

என் ஆத்தாக்கிழவி

காளியாத்தா

எச்சில் துப்பி

தெருப்புழுதியை எடுத்துப் பூசுகிறாள்.

பீடங்கள் சரிகின்றன.

டண் டணக்கா..

டணக்க்கு டக்கா.

டண் டணக்க்கா..

இனி என்ன…!?

இலக்கியச் சிறைவெளி உடைகிறது.

ஆடுவோமே பள்ளிப்பாடுவோமே

டண்டணக்கா

ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே

ஆன்ந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று

ஆடுவோமே நாம் பாடுவோமே1


டண் டணக்கா

டணக்கு டக்கா.

டண் டணக்கா..

ஹேஹே 

டண் டணக்கா..

காளியாத்தா தாம்பூலம் சிவக்கிறது.

டண் டணக்கா..

Sunday, August 21, 2022

அபத்தமான கேள்விகள்! திருமா ரசித்தாரா?

 
 

    அபத்தமான கேள்விகளை தொல். திருமா ரசித்தாரா?
அவர் உடல்மொழி சொல்வதென்ன?
எதற்காக நடிகை மீனாவும் ஜெயலலிதாவும் தலைப்பு செய்தியானது?!!!
எப்போதுமே நேர்காணல்களில் வெளிப்படையான மொழியின் அர்த்தங்களைவிட முக்கியமானது அதை வெளிப்படுத்துபவரின் உடல்மொழி.
பல தருணங்களில் அந்த உடல்மொழி, மொழியால் வெளிப்படுத்த முடியாத அர்த்தங்களையும் வெளிப்படுத்தும்..
 
தொல். திருமா அவர்களின் உடல்மொழியிலும் அது வெளிப்பட்டது.
அவர் தன் இரு கை விரல்களையும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார். நிதானமாக சிந்தனையுடன் தன் மொழியை வெளிப்படுத்த தன்னை தயார் செய்து கொள்ளும் உடல்மொழியின் வெளிப்பாடு அது!
 
    அடுத்து தன் நேர்காணலில் இருவருக்கும் நடுவில் இருக்கும் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் தன்னை நோக்கிப் பார்த்து சிரிப்பதாக தொல்.திருமா சொல்கிறார். மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான உத்திகளில் ஒன்றுதான் அந்த உடல்மொழி. அந்த உடல்மொழியைக் கூட எதிரில் இருப்பவர் அபத்தமாக அணுகுவது ! .. பார்ப்பவருக்கு எரிச்சல் தருகிறது.
 
    சில தலைவர்களின் மனைவியர் +60 அல்லது +70ல் மரணித்துவிடுகிறார்கள். மரணம் இயற்கையானது. ஆனால் இதே இந்த ஆசாமிகள் தனித்திருக்கும் அந்தப் பெரியவரின் 'இல்லாள்" பற்றிய நினைவுகளைக் கொண்டாடுவார்கள். 
சில நேரங்களில் "ஏகபத்னி விரதம்" கொண்டவர் ரேஞ்சுக்கு போய்விடும் இவர்களின்  கொண்டாட்ட  மன நிலை. அப்போதெல்லாம்  நினைக்கமாட்டார்கள் வயதானக் காலத்தில் கவனிக்க துணை இல்லாத ஃபார்முலாவை! அதாவது துணைதான் கூடவே இருக்கும்னு அட்வைஸ் சொல்கிற இச்சமூகத்தின் பொதுப்புத்தி இப்படித்தான் இருக்கிறது.
இதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான். பெண்கள் விஷயத்தில் வேற மாதிரி யோசிப்பார்கள். 
    இவர்களுக்கு எப்போதுமே  தங்களை பரபரப்பாக விற்பனை செய்து கொள்ள பெண்கள் தேவைப்படுகிறார்கள்! சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆளுமை தனி மனித உணர்வு அதன் விளைவுகள் இப்படி எதைப் பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை.
 
    அண்மையில்தான் நடிகை மீனாவின் கணவர் மறைவு. அவரைப் பற்றிய ஊடகச்செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில் “ நடிகை மீனாவை காதலித்தாரா, திருமா? என்று தலைப்பு செய்தியாக போட்டு “திருமணம் பற்றி மனம் திறக்கும் திருமா !” என்று விளம்பரப்படுத்தி இருப்பது கேவலமாக இருக்கிறது. மீனா மற்றும் ஜெயலலிதா என்ற இரு பெண்களைப் பேசி பரபரப்பாக்கி தன்னை விற்றுக்கொள்ளும் இவர்களை என்ன செய்யலாம்?!

 

Friday, August 19, 2022

மும்பை கோவிந்தா VS ஸ்பெயின் கேஸ்டல்ஸ்

  Janmashtami 2022: Govindas form a human pyramid to break the Dahi Handi in  Mumbai's Dadar, watch video - The Economic Times Video | ET Now

கிருஷ்ணனும் ராமனும் இந்திய தேசத்தின் அரசியல்
அடையாளமாக்கப்பட்டிருக்கிறார்கள்!
இதற்கான காரணங்கள் தத்துவ விசாரணைகள் உண்டு.
கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு நடக்கும்  

தயிர்ப்பானை உடைக்கும்
விளையாட்டு மண்ணின் அரசியல் வளர்த்தெடுக்கப்பட்ட  சூழலில்
அரசியலாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

நான் சிறுமியாக இருந்தப்போது
மிக உயரமான கம்பத்தின் உச்சியில் தயிர்ப்பானை  கட்டப்பட்டிருக்கும்.
அதை உடைப்பதுதான் விளையாட்டு. 

லோக்கல் வீர்ர்கள் தங்கள் வீரத்தைக் காட்டுவார்கள்.

 கம்பம் எண்ணெய் தைத்து வளவளப்பாக இருக்கும்.ஏறுவது அவ்வளவு எளிதல்ல.கூட்டம் அலைமோதும். குறிப்பாக இளம்பெண்களும் குழந்தைகளும். மழைக்கொட்டினாலும் நனைந்துக்கொண்டே அதைப் பார்த்த நாட்களும் அதற்காக வீட்டில் தண்டனை அனுபவித்த நாட்களும் மறக்கவில்லை,

இப்போது அதே விளையாட்டு என்னைச் சுற்றி ஒரு 

மாபெரும் மனிதப் பிரமிடாக நடக்கிறது.
கோவிந்தா க்கோவிந்தா….

கோவிந்தாக்கள் லாரிகளில் ஏறி வருகிறார்கள். எங்கெல்லாம் தயிர்ப்பானைகள் உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறதோ அதை எல்லாம் மனிதப் பிரமிடுகளாகி உடைக்கிறார்கள்.
க்கோவிந்தா க்கோவிந்தா

கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
மழைக்கொட்டுகிறது.
தயிர்ப்பானையின் உயரம் பொதுவாக 20 அடி இருக்கும்.

30, 40 என்று உசரம் கூடிக்கொண்டே போனது.

நேற்று கின்னஸ் ரெகார்ட்.

50 அடி உசரத்தில் மனிதப்பிரமிடு. மும்பை தானா பகுதி கோவிந்தாக்களின் சாகசம். இது ஸ்பெயின் சீன தேசத்து மனிதப்பிரமிடுகளை விட உசரமானது!
கோவிந்தா க்கோவிந்தா..

ஸ்பெயில் வடகிழக்குப் பகுதியான கேஸ்ட்டோலினா மக்களின் விளையாட்டு மனிதப்பிரமிடு.
கேஸ்ட்டோலோன் நாட்டுப்புற பாடல்கள் புல்லாங்குழலிசைக்க இந்த மனிதப்பிரமிடுகள் உருவாகும் காட்சியைப் பார்க்க கூட்டம் கூடுகிறது. இந்த விளையாட்டுக்கான கேஸ்டல்ஸ் க்ளப்புகள் உண்டு. பயிற்சி எடுப்பார்கள். சற்றொப்ப இதே பின்புலத்தில் தான் மும்பையின் கோவிந்தாக்களும்! பயிற்சி இல்லாமல் திடீரென ஒருவர் தோள்களில் ஒருவர் ஏறி பத்தடுக்கு மனிதப்பிரமிடாக மாற முடியாது.
கோவிந்தா..க்கோவிந்தா..

குஜராத் மராட்டிய மா நில அரசியல் களத்தில் மராட்டிய மா நிலத்தில் சிவசேனா மக்களின் அரசியலாக வளர்த்தெடுக்கப்பட்ட போது இந்த தஹியண்டி ஜன்மாஷ்டமியும் மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கான வீரமாக மேடைகளில் ஒலிவாங்கிகள் முழக்கமிடுகின்றன. அதனால் தான் இந்த மேடைகள் பெரும்பாலும் சிவசேனாவின் அடையாளங்களாக இருக்கும்! தஹி அண்டி கூட்டத்திற்கு அருகில் எப்போதும் ஆம்புலன்ஸ் நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப 100 கோவிந்தாக்கள் காயத்துடன் மருத்துவமனையில் கைகால் இடுப்பு எலும்பு முறிவுடன் ! நமக்கு இதுப் புதிதல்ல. அவர்களுக்கும் இது புதிதல்ல.
தயிர்ப்பானையில் இப்போதெல்லாம் இலட்சகணக்கில் பணமுடிப்புகள் இருக்கின்றன.தயிர்ப்பானைகள் காஸ்ட்லியாகி விடுகின்றன. இதில் தஹி அண்டியை உடைக்கமுடியாவிட்டாலும் கூட பங்கெடுத்துக்கொள்ளும் கோவிந்தாக்களுக்கு ஊக்கப்பரிசுண்டு. இப்படியாக க்கோவிந்தாக்கள்..
நேற்றைய கோவிந்தா .. கின்னஸ் ரெகார்ட்
கோவிந்தா க்கோவிந்தா..

சரவணா….
சர்க்கார் (அமிதாப்பச்சன் நடித்தப்படம் ) திரைப்பட த்தில் அபிஷேக்பச்சன் ஓடிக்கொண்டிருக்கும் போது கொள்ளைக்கூட்டம் துரத்தும்போதும் அடிதடி காட்சிகளின் போது பின்னணி இசையாக
க்கோவிந்தா க்கோவிந்த்தாஒலித்துக்கொண்டே இருக்கும் .
இரண்டு நாட்களாக அதே பின்னணி இசை என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது!
க்கோவிந்தா க்க்க்கோவிந்தா..

#mumbai_govinda

 

Saturday, August 13, 2022

ஆகஸ்டு 15 ..ஏன்?


 ஆகஸ்டு 14 இரவு 12 மணி, 1947 

அன்று நடந்தக் காட்சிகளைக் கண்டவர்கள் இன்று நம்மிடம் இல்லை! அப்படி யாராவது ஒன்றிரண்டுபேர் இருந்தால் அவர்களிடம் அந்த முக்கியமான தருணத்தைக் கேளுங்கள்.. அவர்கள் நினைவுகள் மறப்பதற்குள்.

இந்த ஆகஸ்டு 15.. யார் தீர்மானித்தார்கள்?

எப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்போகிறீர்கள் ? என்ற கேள்விக்கு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் கொடுப்போம் என்று பதில் சொல்ல நினைத்த மவுண்ட்பேட்டன் தன்னையும் அறியாமல் சொன்ன நாள்தான் ஆகஸ்டு 15. 

அவருக்குள் அந்த நாள் அத்தருணத்தில் ஏன் ? என்றால் எதுவுமே எதேச்சையாகக்கூட வருவதில்லை. ஒவ்வொன்றுக்கு அடிமனதில் எதோ ஒரு காரணம் இருக்கிறது. மவுண்ட்பேட்டன் அறிவித்த ஆகஸ்டு 15ம் அப்படியான  ஒன்றுதான். அன்றுதான் ஜப்பான் இங்கிலாந்திடம் சரணடைந்த நாள். அதை மவுண்ட்பேட்டன் சர்ச்சிலின் அறையில் அவருடன் உட்கார்ந்து வானொலியில் கேட்ட நாள்.இப்படியாக ஆகஸ்டு 15 இந்திய தேச வரலாற்றில் தன்னை எழுதிக்கொண்டது.

ஆனால் அன்று நாள் கிரஹம் சரியில்லை என்றும் இரண்டு நாள் கடந்து சுதந்திரம் வந்திருந்தால் இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றும் ஜோதிடர்கள் சொன்னதாக சொல்கிறார்கள்.!

சங்கு ஒலித்து இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட்டதாம்.

சுதந்திரப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட து. 

அந்த அரங்கில் அந்தக் கூட்டத்தில் தேசப்பிதா காந்தி இல்லை. அவர் கல்கத்தாவில் இருந்தார். நமக்கு அந்த ரத்தக்கறை படிந்த வரலாறும் தெரியும்.

(இப்புகைப்படம் அந்த நாளில் ஒரு தருணம்.. நன்றி indian express)


Wednesday, August 10, 2022

அணையாத அடுப்பு !! அதிலென்ன பெருமை??

 

 
அணையாத அடுப்பு.. அணையாத தருமம் என்றால்
அந்த தர்மத்தில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?!!!
 
கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு,
மே மாதம் 23-ம் தேதி வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு
சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக
இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. 
இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் 
பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய
இந்த அணையா அடுப்பு.
 
இந்த தர்மம் தொடர வேண்டுமென்றால் பசியுள்ள
 சாமானியர்களின் வரிசையும் தொடர வேண்டும்! 
பசியுள்ளவன் இந்த அடுப்புகளைத் தேடி
வரவேண்டும்! இல்லை என்றால் எப்படி இந்த அடுப்புகள் 
எரிந்து கொண்டே தங்கள் தர்மத்தைக் காப்பாற்றிக்கொள்ள 
முடியும்!!!! சொல்லுங்கள்.
 
பிரிட்டிஷ் காலத்தில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தை 
எதிர்கொள்ளவே அவர் இந்த அடுப்பை ஏற்றினார்.
பசி போக்கினார் என்பது ஒரு வரலாறு, 
அது கடந்த கால வரலாறாக இருந்திருக்க வேண்டும்
ஆனால்..
உதவிகள் தர்ம சிந்தனையாக உருமாறும்போது
ஒரு தர்மசாலை உருவாகிறது, ஒரு சிலர் தர்மகர்த்தாக்களாகிறார்கள்.பல்லாயிரம் பேர்
அவர்களின் தர்மசாலை முன் வரிசையில் நிற்கிறார்கள்!
காலமெல்லாம் இப்படி ஒரு கூட்டத்தை பசியுடன் 
அலையவிட்டு தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் 
பெருமைப் பட்டுக்கொள்ள என்னதான்
இருக்கிறது!!!
 
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இப்போதும் 
இலவசங்களை அரசியல் கட்சிகள் தங்கள் சாதனைகளாகப் பட்டியலிடுகின்றன. இதன் சூட்சமத்தில் இருக்கும் 
சமத்துவமற்ற சமூகத்தை நாம் காண்பதில்லை.
 
அரசியல் இலவசங்கள் 
அடுத்தமுறை ஆட்சியைப் பிடிக்க உதவும்.
ஆன்மீகம் பேசும் தர்மங்கள் 
சொர்க்கலோகத்தில் இடம் கொடுக்கும் !
எல்லாமே கொடுக்கல் வாங்கல் தான்.
 
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.”
சரவணா…
நம் முப்பாட்டன் முடமோசியார் இதை எல்லாம்
யோசிச்சிருக்கான்ய்யா..

 

Wednesday, August 3, 2022

5 G அரசியல்

 


 

சரவணா...
எதாவது புரியுதா..
எல்லாம் ஜியோ மயம் என்பதைத்தவிர
எனக்கு எதுவும் புரியல.
திரு ராஜா அவர்கள் தனியா நின்னுட்டு
எதோ சொல்லவருவது மட்டும்
புரியுது.

சரவணா,
இந்த அலைக்கற்றை விவகாரத்தில் சொல்லப்படும் தொகை

 எல்லாம் ரொம்ப பெரிசா .. அதுக்கு எத்தனை பூஜ்யம் போடனும்னு 

எப்பவும் எண்ண வேண்டியதா இருக்கு. 

அந்த எண்கள் என்னைப் போன்ற சாமானியர்களை மருட்டுகிறது. 

நாங்க வழக்கம்போல ஜூட்!


என்னவோ 5G அலைக்கற்றை ஒருவழியா முடிஞ்சிட்டுனு அதில் வழக்கம்போல எதிர்பார்த்த து போல JIO தான் வந்திருக்கு.
இது எதுவுமே எங்களுக்கு பெரிசா தெரியல.
ஆனா..
இது எல்லாமே அரசியல்.
இதில் இப்போதும் 2G  - ராஜா அவர்கள்  மட்டும்தான் எதோ 

சொல்லவருகிறார்.

 இது தனிப்பட்ட ராஜா அவர்களின் பிரச்சனை மாதிரி..
2G காலத்திலும் சரி,
5 G காலத்திலும் சரி,
இது அரசியல் மட்டும்தான்.
இது தனிப்பட்ட ஒரு ராஜாவின் பிரச்சனை இல்ல.

என்னவோ தோணிச்சு..


திரு ராஜா அவர்கள் தனியா நின்னுட்டு
எதோ சொல்லவருகிறார்.
அது பொதுஜன அரசியலுக்கானதல்ல
ஆதலால் மக்கள் ஒதுங்கி நிற்கிறார்கள்.
ஆனால் அரசியல் கட்சிகளோ
அல்லது அரசியல் விமர்சகர்களோ
ஊடகங்களோ ...
வாய்திறக்கவே இல்லை.
அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்திகளிலிருந்து
அறிந்து கொள்ள எதுவுமில்லை.

#2G_5G_POLITICS
 

Monday, August 1, 2022

கலை " திருட்டு"

 



அவளைச் சொந்தம் கொண்டாடிய கணவன்
அவள் ஓவியங்களையும் சொந்தம் கொண்டாடினான்!
உறவின் பெயரால் நடந்த “கலை திருட்டு”
&
அவள் ஓவியங்களுக்கு அவன் சொந்தம் கொண்டாடினான்.
 அவளை வெளியில் செல்லவிடாமல் அடைத்து வைத்திருந்தான்.
ஒரு நாளில் 16 மணி நேரம் அவள் தூரிகைகளுடன் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டாள். அவள் அவன் மனைவி.
ஆரம்பத்தில் பசி தீர்க்கவும்
குழந்தைக்காகவும் அவள் ஓவியங்களை அவன் விற்பனை 
செய்வதாக நினைத்தாள். அதன்பின் அவன் அவள் ஓவியங்களை வரைந்தவனாகபேட்டி கொடுத்தான்.
 உண்மை அறிந்தவுடன் எதிர்த்த அவள் மிரட்டப் படுகிறாள். 
10 ஆண்டுகள் மணவாழ்க்கை இப்படியாக கடந்துவிடுகிறது!
 
1965ல் அவனை விட்டு வெளியில் வந்து விவாகரத்து 
பெற்ற பிறகும் அவளுக்கு அவனை எதிர்க்கும் துணிச்சல் 
வரவில்லை. காரணம் அவன் புகழ்பெற்ற கலைஞனாக 
அமெரிக்க கலை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறான். 
உண்மையை அவள் சொன்னாலும் எடுபடுமா 
என்ற அச்சத்தில் இன்னும் சில வருடங்கள் கழிகிறது 
அவள் வாழ்க்கை.
1970ல் அவள் அவனை வெளிப்படையாக எதிர்த்து 
பொதுவெளியில் சவாலிடுகிறாள்
. “ மக்கள் முன் வரைந்து காட்டுவோம், 
அவர்கள் தீர்மானிக்கட்டும் இதுவரை வரைந்த 
கைகள் யாருடையவை என்று”
அவன் வரவே இல்லை.
 
1986 ல் ஹோனலுலு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
 53 நிமிடங்களில் நீதிபதி முன்னால் அவள் தூரிகை எடுத்து வரைந்து முடிக்கிறாள். அவனோ தோள்பட்டை காயம், 
அதனால் சரியாக வரைய முடியவில்லை என்று சொல்கிறான்.
 நீதிமன்றம் அவள் தூரிகையை அடையாளம் கண்டு கொண்டு 
அவளுக்கு அவன் 4 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கிறது.
அபாராத தொகை குறைக்கப்படுகிறது… அவளோ .
. “எனக்கு பணம் அல்ல முக்கியம், என் தூரிகையின் உரிமை, 
அடையாளம் முக்கியம்” என்று
அவன் தொட முடியாத தூரத்தை தொடுகிறாள்.
 
அவள் ஓவியங்கள் காட்டும் “பெரிய விழிகள்” பிரபலமானவை.
சான்பிரான்சிஸ்கோவில் “KEANE EYES GALLERY “ அவள் ஓவியங்களைப்பார்க்கலாம். 
 
இதில் வால்டரின் அறிவுத்திருட்டை காலம் கடந்துதான் மார்க்ரேட் நிரூபித்தாள். அதற்குள் பணம் புகழ் அனைத்தும் அவள் உழைப்பில்
வால்டர் அனுபவித்துவிட்டான். 
 
2014 ல் அவள் கதைதான் “BIG EYES” என்ற திரைப்படமாக
வெளிவந்தது. 
 
காலம்தோறும் “அறிவு திருட்டு” உண்டு. 
அதை அம்பலப்படுத்துவது அத்துனை எளிதல்ல. 
அதற்கும் அதை நாம் சொன்னால் நாலு பேர் கேட்கிற 
உயரத்தில் இருக்க வேண்டும். இல்லை என்றால்
 “ஏழை சொல் அம்பலம் ஏறாது”
 காரணம் அறிவு திருட்டு நடத்தியவர்களின் 
ஆள்பலம், அதிகார பலம்
அச்சுறுத்தலாகவே தொடர்கிறது.

 
(மார்க்ரெட் வரைந்த ஓவியம்; நன்றி art in action)

Sunday, July 31, 2022

சதுரங்க வரலாறும் அரசியலும்

 

விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல
அவை கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை
அப்படியே பிரதிபலிக்கின்றன.
திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஒரிடத்தில்
அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் 
கட்டமைத்த த்தில் பெரும்பாங்காற்றி இருக்கின்றன.
அதில் செஸ்.. சதுரங்க ஆட்டம்..
அப்ப்பா.. யோசிக்கும்போது சதுரங்க ஆட்டத்தின் காய்களும்
கட்டங்களும் ஒரு வரலாறாக விரிகின்றன.
 
இதைப் பற்றிய ஒரு புத்தகம் 
"சதுரங்கம் விளையாடுவது எப்படி? "
ரொம்பவும் சுவாராசியமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. அப்புத்தகத்திலிருந்து,
·
* இந்த சதுரங்க ஆட்டம் அரசகுடும்பத்தினருக்கான ஆட்டம். 
அரண்மனை விளையாட்டு. இதை பொதுமக்கள் ஆடுவதற்கு
 அனுமதி இல்லை என்று அரசு அதிகாரம் 
 ஆணைப்பிறப்பித்திருந்த வரலாறும் உண்டு.
 
· * புராணங்களில் இதிகாசங்களில் கிறித்தவ இசுலாமிய இந்து மதக் 
கதைகளில் ,கடவுள்கள் ஆடிய ஆட்டம் இது. 
அதாவது அவ்வளவு சர்வ வல்லமை மிக்கவர்களின் 
ஆட்டம் சதுரங்கம்.
· 
*இது எங்கிருந்து புறப்பட்டது ? இதிலும் உலக நாகரிகத் தொட்டில்கள் அனைத்தும் இந்த விளையாட்டுக்கு சொந்தம் கொண்டாடுகின்றன.
 
· *கி.மு. 6000 க்கு முன் மொசபடோமியாவில் விளையாடப்பட்டது என்று ஆதாரம் காட்டுகிறார் டாக்டர் ஸ்பீசர்.
 
*· கி.மு. 5550ல் இராக்கின் வடபகுதியில் விளையாடப்பட்டது சதுரங்கம் என இன்னொரு தகவலும் உண்டு.
· *கி.மு. 1200ல் எகிப்து அரசன் ‘அங்க் ஆமன்’ கல்லறையில் சதுரங்க காய்களும் பலகையும் சேர்த்தே புதைக்கப்பட்டிருக்கின்றன. மரணித்த மன்னன் சதுரங்க ஆடுவான் என்ற நம்பிக்கையில்.
·* கி.மு. 2500 ல் சிந்துவெளியில் சதுரங்கம் ஆடினார்கள் என்று சொல்கிறது அகழ்வாராய்ச்சி.
·
* டிராய் போரின்போது ஹெலனை மீட்க கிரேக்கத்தை எதிர்த்த படைவிரர்கள் பத்து ஆண்டுகள் சோர்வடையாமல் இருக்க சதுரங்கம் ஆடி, போர் உணர்வை தக்க வைத்துக்கொண்டிருந்தார்கள் என்பதும் ஒரு தொன்மக்கதை
· 
அதிகாரம் அரசனுக்குரியது , அவனை வழி நட்த்தும் மந்திரிகள் தளபதிகள் என்றிருந்த வரலாற்றில் அரசி எப்போது வருகிறாள்? இங்கிலாந்தின் அரசியல் உலக அரசியலாக மாறுகிறது.
இங்கிலாந்தின் அரசி மேரியின் அதிகாரம் சதுரங்க ஆட்டத்தின் விதிகளை மாற்றியதில் பெரும் பங்காற்றியதாக சொல்கிறார் இப்புத்தக ஆசிரியர். அத்தோடு இத்தாலியின் கேதரினா சபோர்சாவின் அதிகாரமும் ஒரு காரணமாகி அரண்மனை ஆட்ட த்தில் ராணியின் சக்தியை விரிவுப்படுத்தி 
மந்திரிகளை ஓவர்டேக் செய்திருக்கிறது.
(அடடா.. இது கிட்சன் கேபினட் அதிகாரத்தில் இடம்பெற்ற 
வரலாறு. இன்றும் கிட்சன் கேபினெட் சர்வ வல்லமை மிக்கதுதான்!)
 
· இதை எப்படி எல்லாம் விளையாண்டிருக்கிறார்கள் என்று 
இப்புத்தகம் விவரிக்கிறது. அதில் ரொம்பவும் ரசனைக்குரியதும் 
அதிகாரத்தின் உச்சமும் முகலாய அரண்மனையில்
 விளையாண்ட சதுரங்க ஆட்டம்தான். அரண்மனையில் 
தரையே சதுரங்க கட்டமாகி உயிருள்ள மனிதர்கள் 
அந்தந்த அலங்காரத்துடன் கட்டங்களில் நிறுத்தப்படுவார்கள். 
அரசனும் அரசியும் ஆடுவார்களாம். அவர்கள் சொல்கிறபடி 
உயிருள்ள சதுரங்க காயக்ள் நகர்ந்து கொள்ளும். 
அடடா.. அதிகாரத்தின் சாறெடுத்து அருந்திப்பார்த்திருக்கிறார்கள் அரண்மனைவாசிகள். 
அதிகாரத்திற்கு எப்போதுமே உயிருள்ள குடிமக்கள்
 அரசின் விருப்பப்படி நகர வேண்டும் . 
இல்லைஎன்றால் அவுட் தான்! 
இது அரண்மனையை விட்டு இந்த விளையாட்டு 
விடைபெற்ற பிறகும் புதிய மக்களாட்சிக்கும் 
பொருந்துவதாகவே இருக்கிறது பாருங்கள்.
 
· 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்
 வெள்ளையர்கள் ஒரு பக்கமும் இந்திய விடுதலை 
தளபதிகள் ஒருபக்கமுமாக வைக்கப்பட்டு வெள்ளையர் ஆட்சி 
ஆடிக் களித்திருக்கிறது.
 
· கேரளாவின் சதுரங்கம் இன்னொரு காட்சியாக விரிகிறது. 
அதில் ராஜாவாக ஸ்ரீராமன். ராணியாக சீதாப்பிராட்டி, 
யானையாக விநாயகர்,குதிரையாக கல்கி, 
ரதமாக கோபுரம், சிப்பாய்களாக அனுமன் படை..
இந்த ஆட்டத்தில் எதிரணியில் ராஜா இராவணன்.. 
மற்றதெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளுங்கள்..
இப்படியாக ஒரு சதுரங்க ஆட்ட இராமாயணம்
 ஆடி இருக்கிறார்கள்.
(இது விளையாட்டு என்ற வகையில் எப்போதாவது
 இராவணன் வெற்றி பெற்றால் என்ன செய்திருப்பார்கள்? 
இப்படி எல்லாம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை!)
 
· பொதுவுடமை தோழர்கள் தங்கள் சதுரங்க ஆட்டத்தில்
 எதிரணியில் முதலாளித்துவத்தை நிறுத்தி அடித்தார்களாம். 
 (இதுவும் நிஜத்தில் அடிக்க முடியாமல் விளையாட்டில் 
விளையாட்டாக அடிக்கும் மன நிறைவை தந்திருக்குமோ!)
 
· ஆனால் பாருங்கள் எப்போதுமே ஆட்டத்தை முதலில்
 ஆரம்பிக்கும் அதிகாரம் வெள்ளைக்காய்களுக்குத்தான்! 
( இதை யாரும் மாற்றவே முடியாதுங்கோ)
 
· இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. 
கவிதைகள் மலர்ந்திருக்கின்றன. 
(இது எனக்கு ரொம்பவும் விருப்பமான வரலாறாக இருக்கிறது)
 
· இந்த ஆட்டம் அரண்மனை அதிகாரத்தைக் கட்டமைத்திருப்பதில் பெரும்பங்காற்றி இருக்கிறது. காலம் தோறும் தங்கள் அதிகாரத்தை கூர்மைப்படுத்திக்கொள்ளவும் நிலை நிறுத்திக்கொள்ளவும்
 சிறுசிறு மாற்றங்களுடன் .. தொடர்கிறது சதுரங்க ஆட்டம்.
 
· சதுரங்க ஆட்டம் புத்திசாலிகளுக்கானது என்பதும்
 அதனூடாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் கருத்தியலும் 
இப்புத்தகம் பேசாத இன்னொரு வரலாறு.
 
· இப்புத்தகத்தில் சங்க இலக்கிய குறிப்புகள் இல்லை. 
ஆகையினால் தமிழர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது. 
அதற்காக இந்து தமிழ்த்திசையின் பக்கத்திலிருந்து 
உங்களுக்காக (cut & paste !)
இதோ…:
சங்க இலக்கியமான நற்றிணையில் ‘வங்கா வரிப்பாரைச் சிறுபாடு முணையின்...’ என்று ஒரு பாடலடி வருகிறது. இதில் குறிப்பிடப்படுவது பாறையில் வரிக்கோடுகளை வரைந்து விளையாடும் விளையாட்டு என்றும் அதுவே பின்னாளில் ஆடுபுலி ஆட்டமாக மாறியிருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். அதுபோல கலித்தொகையில் ‘வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறள!’ என வருகிறது.
அது சூதாட்ட வல்லாட்டப் பலகையைக் குறிப்பிடுவதாக உள்ளது. மேலும், அகநானூற்றில் ‘நரை மூதாளர் அதிர் தலை இறக்கி, கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு’ என, முதியவர்கள் சிலர் பொது இடத்தில் சூதாடுவதைக் குறிப்பிடுகிறது. விளையாடுவதற்காகப் பலகையில் (கல்/மரம்/தரை) வரையப்படும் சதுரமான கட்டங்களைக் ‘கட்டரங்கு’ எனப் பெருங்கதை கூறுகிறது.
வல்லாட்டம் ஆடுவதற்கான வல்லுக்காய்கள், தமிழக அகழாய்வுகளில் கீழடி, ஆதிச்சநல்லூர், போளுவாம்பட்டி, வெம்பக்கோட்டை, சிவகளை, அரிக்கமேடு, மரக்காணம் முதலான இடங்களில் தொடர்ந்து கிடைத்துவருகின்றன. இவை பெரும்பாலும் சுடுமண்ணாலும், தந்தத்தாலும் செய்யப்பட்டவை.
சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை அவரவர்க்கு ஏற்றவாறு வல்லுக்காய்களைப் பயன்படுத்தி விளையாடிவந்துள்ளனர். தமிழகத்தில் கிடைத்த வல்லுக்காய்களை ஒத்த வடிவம் கொண்ட காய்கள், சிந்துவெளி அகழாய்வுகளிலும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிந்துவெளியில் காய்கள் மட்டும் கிடைக்கும் நிலையில், இன்னும் அது தொடர்ச்சியாக வாழும் மரபாகவே இவ்விதமான ஆட்டம் தமிழகத்தில் தொடர்வதைக் கருத வேண்டியுள்ளது.
 
ஆக,
 இப்போது தமிழர் நாகரிகம் இதில் பெருமைப்பட்டுக்கொள்ளும் 
ஒரு கருத்தியல் … தலை நிமிர்ந்து சொல்லிக்கொள்ளலாம்.
 தமிழ் மண்ணில் இந்த விளையாட்டு எப்போதுமே 
அரசர்களுக்கானதாக மட்டும் இருந்திருக்கவில்லை. !
 ஆஹா.. இங்கிருந்து இன்னொரு சதுரங்க அரசியல் 
வரலாற்றை எழுத ஆரம்பிக்கலாம்.! 
அப்படி யாராவது பதிவு போட்டாலும் 
அதற்கு நான் பொறுப்பல்ல! பொறுப்பு துறத்தல்.
 
இப்புத்தக ஆசிரியர் நவராஜ் செல்லையா 
விளையாட்டுகள் உடற்பயிற்சிகள் குறித்து 
பல புத்தகங்கள் எழுதியவர். அவர் புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்பட்டிருக்கின்றன. 
இலவசமாக பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம்.
 
புத்தகம் : சதுரங்கம் விளையாடுவது எப்படி?
ஆசிரியர் : டாக்டர் எஸ், நவராஜ் செல்லையா
வெளியீடு : எஸ். எஸ். ப ப்ளிகேஷன் சென்னை.
96 பக்கம், விலை ரூ 35/
 
#சதுரங்கம்
#chess_ history_politics