Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Sunday, May 7, 2023

GOD save the KING

 "GOD save the KING"



1953 எலிசபெத் மகாராணியின் முடிசூட்டுதல் நிகழ்வுக்குப் பின்
70 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே நிகழ்வு
அரங்கேறி இருக்கிறது.
இன்றைய பிரிட்டனின் பொருளாதர சரிவு நிலையில்
முடிசூடல் நிகழ்வுக்கான 3 நாட்கள் செலவு
100 மில்லியன் பவுண்ட்ஸ்.
இச்செலவு என்னவொ வரிகட்டுகிற குடிமக்கள்
தலையில் சுமத்தப்படும்சுமைதான். பாவம்தான் அவர்கள்.
அதெல்லாம் விட்டுத்தள்ளுங்க…
அரசர்கள் முடிசூடுவது எப்படி இருக்கும்னு
பார்க்க பார்க்க...பிரமிப்பில் ..
இப்போ போயி..
குடிமக்கள் அதுஇதுனு.. பேசப்பிடாது.
நெகட்டிவ்வா யோசிக்காதே!
நாமும் “ அரசரை கடவுள் காக்கட்டும்”
என்று சொல்லிட்டு போயிடலாம் சரவணா…
அந்தக் கிரீடம் இருக்கே…
அதிலிருந்த வைரம் வைடூரியம் இப்படியான
விலை உயர்ந்த நவரத்தினங்கள்…
செம வெயிட்டா இருந்திருக்கும்தானே!
சார்லஸ் தலைக்கு கனமானதுதான்.
அப்புறம் நம்ம நாட்டு கோகினூர் வைரத்தை இம்முறை
வெளியில் காட்டவே இல்லையாமே!
நாம வல்லரசு ஆயிட்டோம்டே.
பயம்… நம்மள பார்த்து பயம்.
நாமும் அடிக்கடி “ இது எங்க நாட்டு கோகினூர் வைரம்”
அப்படின்னு கத்திட்டே இருக்கோமா..
நம்ம ஊரு கத்தல் கோஷம் பற்றி எல்லாம்
அவுங்க ஸீரியசா யோசிச்சிட்டாங்கனு நினைக்கிறேன்.
பயந்துப்போயி..
கோகினூர் வைரத்தை வெளியிலே எடுக்கலியாம்..
(ஹய்…சும்மா காலரைத் தூக்கி விட்டுக்கோ சரவணா!)
அப்புறம் இந்தச் செங்கோல் இரண்டு கையிலும்
கொடுத்தாச்சு..
பள பளனு மின்னுது..
ராஜ முத்திரைப் பதித்த கணையாழி போட்டாச்சு.
இரண்டு கையிலும் ராஜ வம்ச கடயம் மாட்டியாச்சு.
தங்கத்தால் நெய்த அங்கியை மாட்டியாச்சு..
வைரங்கள் ரத்தின்ங்கள் பதித்த வாள்கள்
கையில குடுத்தாச்சு..
இப்போ என்ன நம்ம ராஜா வாளெடுத்து
குதிரை மேலேறி சண்டைக்கு போகப்போறாரா என்ன?
இதெல்லாம் கிடையாதுனாலும்
மரபுனு ஒன்னு இருக்குடே..
ராஜா ன்னா வாள் இல்லாமலா..
கிரீடம் இல்லாமலா
செங்கோல் இல்லாமலா..
முத்திரை கணையாழி இல்லாமலா!
இதெல்லாம் புரியுது…
எதுக்கு டே ஒரு தங்க ஸ்பூண்..
கொடுத்திருக்காங்கனு தெரியல.
“ராஜ கரண்டி “
இதெல்லாம்தான் பிரமாண்டங்கள்
அரசப்பரம்பரை அரச வாழ்க்கை!
அதை இப்போதும் காண கொடுத்து வச்சிருக்கு..!
(இதை எல்லாம் பார்த்திட்டு நம்ம ஆட்களும்
ஆரம்பிச்சிடக் கூடாது.. அப்புறம் கடவுளே
நம்மைக் காப்பாற்ற முடியாமா ஓடிப்போயிடுவாரு)
ஆனா..
இங்கிலாந்து அரச முடிசூட்டலில் ஓர் அதிசயம்
ஒரு திருப்புமுனை
நம்ம ஆளு..
இந்திய வம்சாவளி ,( இந்து சமய நம்பிக்கை கொண்ட)
இந்து பிரதமர் ரிஷி சோனாக்
பைபிள் வாசித்தார்..
So let’s celebrate this weekend with pride in who we are
and what we stand for. Let’s look to the future with hope
and optimism. And let’s make new memories,
so we can tell our grandchildren of the day we came together to sing:
‘God Save The King’.

Sunday, August 21, 2022

அபத்தமான கேள்விகள்! திருமா ரசித்தாரா?

 
 

    அபத்தமான கேள்விகளை தொல். திருமா ரசித்தாரா?
அவர் உடல்மொழி சொல்வதென்ன?
எதற்காக நடிகை மீனாவும் ஜெயலலிதாவும் தலைப்பு செய்தியானது?!!!
எப்போதுமே நேர்காணல்களில் வெளிப்படையான மொழியின் அர்த்தங்களைவிட முக்கியமானது அதை வெளிப்படுத்துபவரின் உடல்மொழி.
பல தருணங்களில் அந்த உடல்மொழி, மொழியால் வெளிப்படுத்த முடியாத அர்த்தங்களையும் வெளிப்படுத்தும்..
 
தொல். திருமா அவர்களின் உடல்மொழியிலும் அது வெளிப்பட்டது.
அவர் தன் இரு கை விரல்களையும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார். நிதானமாக சிந்தனையுடன் தன் மொழியை வெளிப்படுத்த தன்னை தயார் செய்து கொள்ளும் உடல்மொழியின் வெளிப்பாடு அது!
 
    அடுத்து தன் நேர்காணலில் இருவருக்கும் நடுவில் இருக்கும் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் தன்னை நோக்கிப் பார்த்து சிரிப்பதாக தொல்.திருமா சொல்கிறார். மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான உத்திகளில் ஒன்றுதான் அந்த உடல்மொழி. அந்த உடல்மொழியைக் கூட எதிரில் இருப்பவர் அபத்தமாக அணுகுவது ! .. பார்ப்பவருக்கு எரிச்சல் தருகிறது.
 
    சில தலைவர்களின் மனைவியர் +60 அல்லது +70ல் மரணித்துவிடுகிறார்கள். மரணம் இயற்கையானது. ஆனால் இதே இந்த ஆசாமிகள் தனித்திருக்கும் அந்தப் பெரியவரின் 'இல்லாள்" பற்றிய நினைவுகளைக் கொண்டாடுவார்கள். 
சில நேரங்களில் "ஏகபத்னி விரதம்" கொண்டவர் ரேஞ்சுக்கு போய்விடும் இவர்களின்  கொண்டாட்ட  மன நிலை. அப்போதெல்லாம்  நினைக்கமாட்டார்கள் வயதானக் காலத்தில் கவனிக்க துணை இல்லாத ஃபார்முலாவை! அதாவது துணைதான் கூடவே இருக்கும்னு அட்வைஸ் சொல்கிற இச்சமூகத்தின் பொதுப்புத்தி இப்படித்தான் இருக்கிறது.
இதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான். பெண்கள் விஷயத்தில் வேற மாதிரி யோசிப்பார்கள். 
    இவர்களுக்கு எப்போதுமே  தங்களை பரபரப்பாக விற்பனை செய்து கொள்ள பெண்கள் தேவைப்படுகிறார்கள்! சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆளுமை தனி மனித உணர்வு அதன் விளைவுகள் இப்படி எதைப் பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை.
 
    அண்மையில்தான் நடிகை மீனாவின் கணவர் மறைவு. அவரைப் பற்றிய ஊடகச்செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில் “ நடிகை மீனாவை காதலித்தாரா, திருமா? என்று தலைப்பு செய்தியாக போட்டு “திருமணம் பற்றி மனம் திறக்கும் திருமா !” என்று விளம்பரப்படுத்தி இருப்பது கேவலமாக இருக்கிறது. மீனா மற்றும் ஜெயலலிதா என்ற இரு பெண்களைப் பேசி பரபரப்பாக்கி தன்னை விற்றுக்கொள்ளும் இவர்களை என்ன செய்யலாம்?!

 

Friday, August 19, 2022

மும்பை கோவிந்தா VS ஸ்பெயின் கேஸ்டல்ஸ்

  Janmashtami 2022: Govindas form a human pyramid to break the Dahi Handi in  Mumbai's Dadar, watch video - The Economic Times Video | ET Now

கிருஷ்ணனும் ராமனும் இந்திய தேசத்தின் அரசியல்
அடையாளமாக்கப்பட்டிருக்கிறார்கள்!
இதற்கான காரணங்கள் தத்துவ விசாரணைகள் உண்டு.
கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு நடக்கும்  

தயிர்ப்பானை உடைக்கும்
விளையாட்டு மண்ணின் அரசியல் வளர்த்தெடுக்கப்பட்ட  சூழலில்
அரசியலாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

நான் சிறுமியாக இருந்தப்போது
மிக உயரமான கம்பத்தின் உச்சியில் தயிர்ப்பானை  கட்டப்பட்டிருக்கும்.
அதை உடைப்பதுதான் விளையாட்டு. 

லோக்கல் வீர்ர்கள் தங்கள் வீரத்தைக் காட்டுவார்கள்.

 கம்பம் எண்ணெய் தைத்து வளவளப்பாக இருக்கும்.ஏறுவது அவ்வளவு எளிதல்ல.கூட்டம் அலைமோதும். குறிப்பாக இளம்பெண்களும் குழந்தைகளும். மழைக்கொட்டினாலும் நனைந்துக்கொண்டே அதைப் பார்த்த நாட்களும் அதற்காக வீட்டில் தண்டனை அனுபவித்த நாட்களும் மறக்கவில்லை,

இப்போது அதே விளையாட்டு என்னைச் சுற்றி ஒரு 

மாபெரும் மனிதப் பிரமிடாக நடக்கிறது.
கோவிந்தா க்கோவிந்தா….

கோவிந்தாக்கள் லாரிகளில் ஏறி வருகிறார்கள். எங்கெல்லாம் தயிர்ப்பானைகள் உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறதோ அதை எல்லாம் மனிதப் பிரமிடுகளாகி உடைக்கிறார்கள்.
க்கோவிந்தா க்கோவிந்தா

கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
மழைக்கொட்டுகிறது.
தயிர்ப்பானையின் உயரம் பொதுவாக 20 அடி இருக்கும்.

30, 40 என்று உசரம் கூடிக்கொண்டே போனது.

நேற்று கின்னஸ் ரெகார்ட்.

50 அடி உசரத்தில் மனிதப்பிரமிடு. மும்பை தானா பகுதி கோவிந்தாக்களின் சாகசம். இது ஸ்பெயின் சீன தேசத்து மனிதப்பிரமிடுகளை விட உசரமானது!
கோவிந்தா க்கோவிந்தா..

ஸ்பெயில் வடகிழக்குப் பகுதியான கேஸ்ட்டோலினா மக்களின் விளையாட்டு மனிதப்பிரமிடு.
கேஸ்ட்டோலோன் நாட்டுப்புற பாடல்கள் புல்லாங்குழலிசைக்க இந்த மனிதப்பிரமிடுகள் உருவாகும் காட்சியைப் பார்க்க கூட்டம் கூடுகிறது. இந்த விளையாட்டுக்கான கேஸ்டல்ஸ் க்ளப்புகள் உண்டு. பயிற்சி எடுப்பார்கள். சற்றொப்ப இதே பின்புலத்தில் தான் மும்பையின் கோவிந்தாக்களும்! பயிற்சி இல்லாமல் திடீரென ஒருவர் தோள்களில் ஒருவர் ஏறி பத்தடுக்கு மனிதப்பிரமிடாக மாற முடியாது.
கோவிந்தா..க்கோவிந்தா..

குஜராத் மராட்டிய மா நில அரசியல் களத்தில் மராட்டிய மா நிலத்தில் சிவசேனா மக்களின் அரசியலாக வளர்த்தெடுக்கப்பட்ட போது இந்த தஹியண்டி ஜன்மாஷ்டமியும் மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கான வீரமாக மேடைகளில் ஒலிவாங்கிகள் முழக்கமிடுகின்றன. அதனால் தான் இந்த மேடைகள் பெரும்பாலும் சிவசேனாவின் அடையாளங்களாக இருக்கும்! தஹி அண்டி கூட்டத்திற்கு அருகில் எப்போதும் ஆம்புலன்ஸ் நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப 100 கோவிந்தாக்கள் காயத்துடன் மருத்துவமனையில் கைகால் இடுப்பு எலும்பு முறிவுடன் ! நமக்கு இதுப் புதிதல்ல. அவர்களுக்கும் இது புதிதல்ல.
தயிர்ப்பானையில் இப்போதெல்லாம் இலட்சகணக்கில் பணமுடிப்புகள் இருக்கின்றன.தயிர்ப்பானைகள் காஸ்ட்லியாகி விடுகின்றன. இதில் தஹி அண்டியை உடைக்கமுடியாவிட்டாலும் கூட பங்கெடுத்துக்கொள்ளும் கோவிந்தாக்களுக்கு ஊக்கப்பரிசுண்டு. இப்படியாக க்கோவிந்தாக்கள்..
நேற்றைய கோவிந்தா .. கின்னஸ் ரெகார்ட்
கோவிந்தா க்கோவிந்தா..

சரவணா….
சர்க்கார் (அமிதாப்பச்சன் நடித்தப்படம் ) திரைப்பட த்தில் அபிஷேக்பச்சன் ஓடிக்கொண்டிருக்கும் போது கொள்ளைக்கூட்டம் துரத்தும்போதும் அடிதடி காட்சிகளின் போது பின்னணி இசையாக
க்கோவிந்தா க்கோவிந்த்தாஒலித்துக்கொண்டே இருக்கும் .
இரண்டு நாட்களாக அதே பின்னணி இசை என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது!
க்கோவிந்தா க்க்க்கோவிந்தா..

#mumbai_govinda

 

Saturday, October 9, 2021

REAL HERO ..ஜாக்கி ஜான் vs ஷாருக்கான்

 

REAL HERO ..
கதை ஒரே கதை.
காட்சிகளிலும் மாற்றமில்லை.
ஆனால் இந்தியச் சமூகம் மட்டும்
ஏன் கதையின் போக்கில் தடுமாறி
தரமிழந்து வெளிப்பட்டிருக்கிறது?
பொதுஜன உளவியல் இந்தியச் சமூகத்தில்
குற்றங்களையும் அதிலும் குறிப்பாக பிரபலங்கள் சம்பந்தப்படும் குற்றங்களை
ஜீரணிக்க முடியாமல் பாசம், குடும்பம் என்ற
போர்வையில் அதையும் தாண்டி தனிமனித உரிமை
என்ற அளவுக்கு குற்றங்களை மடைமாற்றம் செய்கிறது.
இது திரைக்கதை அல்ல. திரைப்படமும் அல்ல.
இரண்டிலும் சம்பந்தப்பட்டவர்கள் புகழ்ப்பெற்ற
திரைப்பட கதா நாயகர்கள். ஒருவர் ஜாக்கி ஜான்.
இன்னொருவர் இந்திய திரைப்பட நாயகர் ஷாருக்கான்.
ஜாக்கியின் மகன் ஜெய்ஸி ஜானும்
ஹாருக்கானின் மகன் ஆர்யாகானும்
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திலும்
போதைப்பொருள் கட த்தல்கார ர்களுடன் இருக்கும்
தொடர்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
மகன் 2014 ல் பீஜிங்க்கில் கைது செய்யப்பட்ட போது
ஜாக்கி ஜான் “போதைப்பொருள் கட்டுப்பாடு தூதுவராக”
(Narcotics control ambassador)சீனாவின் காவல்துறையில்
நியமிக்கப்பட்டிருந்தக் காலம்.
கைது செய்யப்பட்ட மகனுக்காக அவர்
தந்தையுள்ளம் கண்ணீர் விட்டிருக்கும்.
ஆனால் தன் மகனின் செயலை அவர் நியாயப்படுத்தவில்லை!
மகனுக்காக காவல்துறையிடம் கெஞ்சவில்லை.
தன் பணம் தன் செல்வாக்கு தன் அதிகாரம்
எதையும் மகனைக் காப்பாற்ற அவர் பயன்படுத்தவில்லை.
மாறாக அவர் பொதுஜனத்திடம்
“மன்னிப்பு” கேட்டார்.
ஒரு தந்தையாக தான் தவறு செய்துவிட்டேனோ ,
அவனை இராணுவப்பள்ளியில் சேர்த்திருந்தால்
ஒழுங்காக வளர்ந்திருப்பானோ “
என்று எண்ணி எண்ணி வருத்தப்பட்டார்.

தன் திரைப்படங்களின் மூலம் அவர் சம்பாதித்த
சொத்தின் மதிப்பு (போர்பஸ் அறிக்கை) 350 மில்லியன் டாலர்
. தன் சொத்துகளை தன் மகனுக்கு அவர்
எழுதிவைக்கவில்லை. அவை அவர் வாழ் நாளுக்குப்
பின் சமூகத்திற்கு, சமூகச்சேவைகளுக்கு என்று
எழுதி வைத்திருக்கிறார். இதைப் பற்றி கேட்டபோது
மகன் ஜெய்ஸி அவனுக்கு அவன்
சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
அப்பனின் பணத்தை , கஷ்டப்பட்ட சம்பாதித்த
என் சொத்துகளை அவன் வீணடிக்கமுடியாது.
(Jaycee will make his own money, if he is not capable
then the Railroad Tigers star will be wasting Jackie’s hard earned money)



இதே காட்சி மீண்டும் மும்பையில் அரங்கேறுகிறது.
ஆர்யாகான் கைது செய்யப்படுகிறார்.
ஷாருக்கான் தன் மகனுக்கும் போதைப்பொருளுக்கும்
தொடர்பே இல்லை என்று சொல்கிறார்.
அய்யோ என் பிள்ளையை விட்டுவிடுங்கள் ,
அய்யோ என் பிள்ளையைக் கைது செய்யாதீர்கள்,
அய்யகோ என் பிள்ளையை நட்சத்திர ஹோட்டலில்
தங்க வையுங்கள், செலவை நான் பார்த்துக்கொள்கிறேன்..
என் மகன் ஆர்யாவுக்கு முழு சுதந்திரம்கொடுத்து
வளர்த்திருக்கிறேன்.
என் மகன், அவன் என் மகன், ஷாருகானின் மகன் ஆர்யாகான்… “
இப்படியாக காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
சல்மான் கான் ஓடோடி வருகிறார்,
ஷாருக்கானின் கண்ணீர்த்துடைத்து ஆர்யாகானுடன் நிற்கிறார்.
ரிதிக்ரோஷன் ஷாருக்கான் ஆர்யாகானுக்கு
ஆதரவாக டுவிட்டுகிறார். சரி விடுங்கள் இவர்கள் அனைவரும்
அவருடம் ஒன்றாக ஆடும் திரை நட்சத்திரங்கள்.
இந்த அறிவுஜீவி ஹார்வார்ட் யுனிவர்சிட்டி புகழ்
சசிதரூரும் தன் பங்கிற்கு டுவிட்டுகிறார்.

இந்தியப் பொதுஜன உளவியல் .. இதுதான்.
இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?!!
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்
என்று விட்டுவிட யாரும் தயாராக இல்லை.
இதில் ப்ரேக் நியுஸ் போட்டு தலை வெடிக்கிற
விவாதங்கள் நடத்தி தங்கள் பசியைத் தீர்த்துக்
கொள்கின்றன ஊடகங்கள்.
ஷாருக்கான்...ஒரு தந்தையாக
உங்கள் வருத்தம் புரிகிறது.
ஆனால்,
ஜாக்கி .. நீங்கள் தான் ,
உண்மையான ஹீரோ..
தலைவணங்குகிறேன் ஜாக்கிஜான்.


Tuesday, October 20, 2020

மன விகாரத்தின் மூத்திர நெடி





ஆணின் அது என்ன அதிகாரத்தின் குறியீடா..
இச்சமூகத்தின் இந்த மன நிலை..
கேவலமாக இருக்கிறது..
அருவெறுப்பா இருக்குடா…
விஜய் சேதுபதி மகளிடம் எதைக்
கண்டாயோ அது உன் மகளிடமும்
இருக்கிறது தானே.
எப்படிடா… நீ எல்லாம் தலை நிமிர்ந்து
உன் மகளை உன் மனைவியை
உன்னைப் பெற்றவளை
உன் அக்கா தங்கையைப் பார்ப்பாய்…?
அவர்கள் இனி தெருவில் இறங்கிப் போனால்
பார்க்கும் கண்கள் ..
“ஓ..இப்படி சொன்னானே அவனோட
அம்மா, அவனோட பொண்டாட்டி,
அவனோட பொண்ணுனு இந்த ஊரும்
உலகமும் பார்க்குமேடா..
அதில ரெண்டு மூணு பேரும் உன்னை மாதிரியும்
இருப்பாங்கடா.. பாவி..
நீ எல்லாம் இச்சமூகத்தின் பால்வினை வியாதி.
மனவிகாரத்தின் மூத்திர நெடி..
கப்புனு அடிக்குடா..
பாவி ..
உன்னைப் பெத்தவளை நினைச்சு
உன்னோட படுத்தவளை நினைச்சி
மனசு பதறுதுடா…
போங்கடா.. நீங்களும் உஙக .....ம்ம்
Parimelazhag

Monday, July 21, 2014

ஜெயந்தன் விருது - பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு





மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’  ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது.

புதியமாதவி எழுதி அண்மையில் (dec 2013) இருவாட்சி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான
விருது வழங்கப்பட உள்ளது.

2013-ம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவலும், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவலும் ஜெயந்தன் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாடக நூலுக்கான விருது திரு க. செல்வராஜ் அவர்களின் ‘நரிக்கொம்பு’ நூலுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த சிறுகதை நூல்களுக்கான விருதுகள், புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ நூலுக்கும், ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் என்கிற நூலுக்கும் வழங்கப்படுகிறது.
சிறந்த கவிதை     நூலுக்கான விருதுகள் இரா. வினோத் எழுதிய ‘தோட்டக் காட்டீ’ தொகுப்பிற்கும்,  ஜான் சுந்தர் எழுதிய ‘சொந்த ரயில் காரி’ தொகுப்பிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கவிதைக்கான சிறப்பு விருதிற்காக திலகபாமா வின் கவிதை தொகுப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 2ம் நாள், சனிக்கிழமை, மாலை சென்னை தி. நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது.  மாலை 4.00 மணிக்கு ஜெயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கமும், 5.30 மணிக்கு, ஜெயந்தன் எழுதி ஞாநியின் இயக்கத்தில் ‘மனுஷா மனுஷா’ நாடகமும் நடைபெறும்.  இரவு 7.00 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்