Monday, May 22, 2017

தோழியின் காதல்

tamil-sangam-literature.jpg (149×173)
சங்க இலக்கியத்தில் தலைவன் தலைவியின்
பெயர் குறிப்பிடப்பட்டிருக்காது.
தலைவனோ தலைவியோ அரசனோ அரசியோ அல்ல.
அதிகாரத்தின் வாசனையைப் பேசும் காதல் அல்ல
சங்க இலக்கியம்.
இப்படியாக நிறைய நிறைய வண்டி வண்டியாக சங்க
இலக்கிய தலைவன் தலைவி சிறப்பு குறித்து கற்பித்திருகிறார்கள்.
கொண்டாடி இருக்கிறோம் நாமும்.
அப்போதும் சரி… இத்துணை ஆண்டுகள் கழித்தும் சரி..
எப்போதும் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான்
இந்த சங்க இலக்கியத்தில் புரியாதப் புதிராக இருக்கிறது.
அதாவது, 
காதலுக்குத் துணை புரியும் தோழிக்கோ தோழனுக்கோ
காதலே இருந்திருக்காதா..?

தோழியின் காதலைப் பற்றி எவ்விடத்தும்
இலைமறை காயாகக் கூட சின்னதாக ஒரு குறிப்பு கூட
இல்லையே..! ஏன் ?

தோழி தானே செவிலி மகளே என்று தொல்காப்பியம்
ஓர் அடையாளம் காட்டுகிறதே..
இச்சமூக அமைப்பைக் கூர்ந்து நோக்கும் போது
என்னவோ நெருடலாக இருக்கிறதே..
காதலில் கூட 
இன்னாரின் காதலைத்தான்  கொண்டாடலாம்,
இன்னாரின் காதலைத்தான் பாடலாம்,
இன்னாரின் காதலைத்தான் ஏற்றுக்கொள்ளலாம்
என்று ஏதாவது எழுதாதச்  சட்டம் இருந்திருக்குமோ?

காதலைப் பற்றி இவ்வளவு தெளிவாகப் பேசும் 
தலைவியின் தோழியோ அல்லது தலைவனின் தோழனோ
 தங்கள் காதல் கதையைப் பேசி
இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்!

காதலைப்பற்றிப் பேச தோழி, தோழன் என்ற பாத்திரங்கள்
சங்க இலக்கியத்தில் ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டன்
என்று சமாதானப் படுத்திக் கொண்டாலும் இந்த உத்தியை
இவ்வளவு கறாராக சங்க இலக்கியம் விதிவிலக்கின்றி
கொண்டொழுக என்ன காரணம்? 

Sunday, May 21, 2017

பெரியாரும் மகாபாரதமும்


தந்தை பெரியார் ஒரு சமூகவியல் கருத்தை முன்வைக்கிறார். அக்கருத்து
மீள்வாசிப்பில் சிந்தனைக்குரியதாக விரிகிறது. (பெரியார் சிந்தனைகள் தொகுப்பு)
"கால தேச வர்த்தமானங்களுக்கு ஒத்த முறையில்
 எந்த ஒரு சமூகத்திலும் சில பழக்க வழக்கங்கள் , சடங்குகள்  நடைபெறுகின்றன, இவற்றைத் தவறு என்று
சொல்ல முடியாது.
 இஸ்லாமியர்களின் உறவுமுறை திருமணங்களை
  முன்வைத்து இக்கருத்தை விவரிக்கிறார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் ஐவரைத் திருமணம்
செய்து கொண்ட திரெளபதி கதையையும் மறக்காமல்
 குறிப்பிடுகிறார். இப்படி எல்லாம்
சமூகத்தில் சில பழக்க வழக்கங்கள் இருந்தன
என்று தெளிவுபடுத்துகிறார்.

இக்கருத்தை விரித்தெடுத்தால் புராணக்கதைகள் குறித்தும்
 சடங்குகள் குறித்தும் நாம் முற்றான எதிர்நிலை எடுத்திருக்க
 வேண்டிய அவசியமில்லை என்பது புரியவரும்.
 காலந்தோறும் சடங்குகள் மாறிக்கொண்டுதான் வருகின்றன.
இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் பேரணி நடத்துவதும் உண்ணாநோம்பிருப்பதும்
தமிழ் / தமிழர் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் " தமிழ் வாழ்க" என்ன்று மூழங்குவதும் கூட
இன்றைய காலக்கட்டத்தின் சடங்கு அல்லாமல் வேறு என்ன!

 சடங்குகளையும் வழிபாடுகளையும் மிகவும் கடுமையாக
 விமர்சனம் செய்த  தந்தை பெரியாருக்கும்
சிலை எடுத்ததும் மாலை போடுவதும் கூட வழிபாடாகி
சடங்காகி விட்டது என்று
பெரியாரியக்க  சிந்தனையாளர் அய்யா ஆனைமுத்து போன்றவர்கள் கவலைப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

மகாபாரதக் கதையை திரெளபதி மொழியில் சொல்லும்
கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் "பருவம்" நாவல்
பெரியார் சொன்ன சமூகவியல் கருத்தினை
முன்வைத்து எழுதப்பட்டிருப்பதையும் இத்தருணத்தில் எண்ணிப்பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக பருவம் நாவல் எழுதுவதற்கான முன் தயாரிப்புகள் மற்றும் ஆய்வுகள் குறித்து பைரப்பா எழுதி இருக்கும் ஆசிரியரை மிகவும்
முக்கியமானது.
(http://old.thinnai.com/?p=60801171)

Friday, May 19, 2017

ரஜினி < மோடிஜி < எம்ஜியார்


site_197_Tamil_483319.JPG (700×483)
ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் வரப்போகிறார்

ஊடகங்களின் சின்னத்திரை எங்கும் ரஜினிமயம்.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின்

விருப்பமும். .. ரஜினியும் மோடியும் ஒத்துப்போகும் இந்துத்துவ புள்ளி,

ரஜினியும் எம்ஜியாரும் இணையும் திரையுலகப் புகழ்… இப்படியான

பார்வையை முன்வைத்து ரஜினியின் அரசியல் வாழ்க்கையைக்

கொண்டாட அவருடைய ரசிகர் கூட்டம் தயாராக இருக்கலாம்.

ஆனால் ரஜினியும் மோடியும் வளர்ந்த விதமும் வளர்க்கப்பட்ட

விதமும் ஒன்றல்ல. மோடி கடுமையான பயிற்சிகள் கொண்ட

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் பின்ணனியில் வளர்க்கப்பட்டவர்.

அதுவும் இமயமலைக்கு தியானம் செய்ய கிளம்புவதும் ஒன்றல்ல.

எம்ஜியாரின் திரையுலக வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும்

ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒன்றில் ஒன்றாக கரைந்து வளர்ந்தது

வளர்க்கப்பட்டது. அன்றைய அரசியல் சூழலும் இன்றைய அரசியல் சூழலும்

ஒன்றல்ல. அதைவிட முக்கியமானது அன்றைய அரசியல் பின்னணி கொண்ட

எம்ஜியார் ரசிகர்களுக்கும் இன்றைய ரஜினி ரசிகர்களுக்கும் இருக்கும்

வேறுபாடு.  இதெல்லாம் ஆய்வுக்குரியவை.

இருந்தாலும் ரஜினி, நீங்கள்

 அரசியலுக்கு வரவேண்டும், அது நடந்துவிட்டால்

அதன் பின் அரசியல் அதிகாரத்திற்கு ஆசைப்படும்

தமிழ்ச் சினிமாவின்  கதாநாயகர்களின் கனவுகள்

ஒரு முடிவுக்கு வந்துவிடும்.!! (அப்பாடா..)

அதற்காகவேனும்… ரஜினி.. நீங்கள் அரசியலுக்கு வாருங்கள்.


Saturday, May 13, 2017

டாக்டர்னா பெருமை., நர்ஸ்னா ???

Image result for nurse day

உலகத்தின் எந்த ஓரு மூலைக்குப் போனாலும்
அங்கே ஒரு நாயர் டீ கடை இருக்கும் என்று சொல்லுவார்கள்.
அதைப் போல தான் எந்த ஒரு மருத்துவமனைக்குப் போனாலும்
 நம்ம நாட்டவன் நம்ம சேச்சி அங்கே செவிலியராக இருப்பார்கள்.
கேரளத்தின் தேசியத்தொழில் செவிலியர் வேலைதான்
 என்று சொல்லும் அளவுக்கு ...
இங்கே மும்பையில் கூட அவர்கள் இல்லாத
ஒரு மருத்துவமனை கூட கிடையாது.
அதற்காக இங்கே வேலைப்பார்க்கும் செவிலியர் அனைவரும்
இங்கே மகாராஷ்டிராவில் நர்ஸ் தொழில் படிப்பு
படித்தவர்களா என்று கேட்டால் அதுவுமில்லை
என்பது ஆச்சரியம். நம்ம நாட்டவன் அங்கே படிச்சிட்டு வந்து
இங்கே இருக்கும் ஆகச்சிறந்த ஆஸ்பத்திரியிலும் புகுந்து
தன் திறமையைக் காட்டி உன்னதமான ஓரிடத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது
 பெருமையாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் நர்ஸ் வேலை என்று சொன்னால் ரொம்பவும் கஷ்டப்பட்டவர்களும் சாதி வர்க்க நிலையில்
விளிம்பு நிலையில் வாழும் மக்களும் அதிலும் குறிப்பாக
 கிறிஸ்தவ மெஷினரி தொடர்பில் படித்தவர்களும்
மட்டுமே இத்தொழில் இருக்கிறார்கள்.
இன்றுவரை செவிலியர் தின வாழ்த்துகள் சொல்லியும்
 நைட்டிங்கேல் பற்றி விலாவரியாகப் புகழ்ந்து நாம்
எழுதிவிடலாம். ஆனால் நம் வீட்டிலிருந்து டாக்டர்கள்
 வந்திருக்கிறார்கள் என்று சொல்வதில் அடையும்
 பெருமிதத்தை என் வீட்டிலிருந்து ஒரு நர்ஸ் வந்திருக்கிறார்
என்று சொல்வதில் நாம் பெறுவதில்லை என்பது தான் உண்மை
. நான் உட்பட இதில் அடக்கம்.
என் குடும்பத்திலும் யாரும் இதுவரை இத்தொழில்
படிப்புக்கு வரவில்லை என்று நினைத்துப் பார்க்கும் போது
 எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது.
ஏன்..?
 எங்கள் குடியிருப்பில் வாழும் ஒரு கேரள பெண்மணி,
சாதி வர்க்க ரீதியாக உயர்மட்ட நிலையிலிருக்கும்
குடும்பத்தைச் சார்ந்தவர்,.. அவரும் நர்ஸாக இருந்தவர்.
தன் மூன்று பெண்மக்களையும் நர்ஸ் தொழிலுக்கே அனுப்பினார்.
நர்ஸ் தொழிலில் முதுகலை படித்த அவருடைய பெண்கள்
 மும்பையின் புகழ்மிக்க இந்துஜா மருத்துவமனை,
வொர்க்காட் மருத்துவமனை, மூன்றாமவர் துபாயில் என்று
இத்தொழிலில் ஆளுமைமிக்கவர்களாக தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது
இந்தியாவில் நுரையீரல் அறுவைச்சிகிச்சை மாதிரியான
அறுவைச்சிகிச்சை மற்ற நகரங்களில் நடக்கும் போது டாக்டர்களுடன் அவர்களும் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
எனக்கும் கூட மருத்துவமனைக்குப் போனால்
நம்ம சேச்சிகளைப் பார்த்தால் ஒரு நிம்மதியாக
இருக்கும்... பொறுப்பாக தன் வேலையைச் செய்வார்கள்
என்ற நம்பிக்கை வரும்.
ஆபரேஷன் தியேட்டரில் சேரநன்னாட்டிளம் பெண்களும்
 ஆண்களும்... அவர்களைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கும்...
டாக்டர் தொழிலைப் பெருமையாக நினைக்கும் தமிழர்களாகிய நாம் டாக்டர்களுக்கு இடக்கரமாக வலக்கரமாக இருக்கும் இத்தொழிலை
ஏன் பெருமைக்குரியதாக நினைக்கவில்லை?
தமிழர்களாகிய நமக்குள் இருக்கும் சாதி உளவியல் ,
மற்றும் ஆணாதிக்க மனநிலையில் பார்க்கும்
 பெண் உறவு சார்ந்த  பார்வைகள்...
இதெல்லாம் தான் காரணமா?

*
சேச்சிகளுக்கு நன்றி.

Friday, May 12, 2017

மோடியின் பூகோள அரசியல் பயணம்



இந்திய பூகோள அரசியலும் தமிழரின் ஏமாற்றமும்.
பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தை முன்வைத்து...
இந்திய இலங்கை உறவை தமிழராகிய நாம் பார்ப்பதற்கும்
 இந்திய நடுவண் அரசு பார்ப்பதற்குமான இடைவெளி
அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகிறது.

இதற்கான முக்கியமான காரணமாக இருப்பது பூகோள அரசியல்.
மாற்ற முடியாத இந்த பூகோள அரசியல் இந்திய அரசின் 
வெளியுறவுக்கொள்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. 
எதை வேண்டுமானாலும் ஒரு
தேசமும் அதன் வல்லாதிக்க அரசும் மாற்றிக்கொள்ள முடியும்.
 ஆனால் அண்டைநாடுகளையோ அல்லது தேசத்தின் 
கடல் எல்லையையோ மாற்றிக்கொள்ளவே முடியாது. 
அதனால் தான்
(International affairs , nations tend to act based on self interest.
Calculation of power and national interests.
Foreign policy text books characterized this behaviour as geopolitical realism)
 பூகோள அரசியல் இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 
இதை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டு ஆட்சி செய்தவர்கள்
சோழவம்சத்தினர். அதிலும் குறிப்பாக இராஜ இராஜ சோழனும் 
இராசேந்திர சோழனும்.
அண்மைக் காலங்களில் இந்தியப் பிரதமரின் 
 வெளிநாட்டுப் பயணங்களைக் கூர்ந்து கவனிக்கும் போது
 அப்பயணங்கள் வெறும் செல்ஃபி சுற்றுலா பயணங்கள் அல்ல 
என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். 
மோடியின் இலங்கைப் பயணத்தையும்அந்த வரிசையில் 
முக்கியமானதாக கருத வேண்டும்.
இதற்கான தரவுகள் வெளிப்படையாக பேசப்படவில்லை
 என்றாலும் இந்திய உதவியுடன்
 SIX phase coastal surveillance radar project at seychellas மற்றும் 
மொரீசியஸ் பயணம் தற்போது இலங்கைப் பயணம் ...
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்
 இந்திய வெளியுறவு கொள்கையில் இந்து மகாசமுத்திரத்தில்
 தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய
கட்டாயமும் காலமும் வந்துவிட்டதை உணர்த்துகிறது.
**
வழக்கம் போல மோடி நிறைய காமெடி செய்யவும் தவறவில்லை.
திருவள்ளுவரை முனிவர் என்றார். ஒகே.
 திருக்குறள் சொன்னார்.அதுவும் ஓகே.
 மருத்துவமனை, கல்வி வளர்ச்சியில் உதவி, மலையக மக்களுக்கு
 10,000 வீடு கட்டித்தரும் திட்டம்.. எல்லாம் கேட்க நன்றாகவே
இருந்தது. தன் பேச்சின் ஹைலைட்டாக ஏர் இந்தியா
 விமானச்சேவை வாரணாசியிலிருவ்து கொழும்புக்கு 
என்று சொன்னார் பாருங்கள்.  காசிக்குப் போனால்  புண்ணியம் தானே!
எப்படியோ இலங்கை வாழ் புத்த மதத்தினரும் இந்துக்களும் இந்த விமானச்சேவையைப் பயன்படுத்தி போகிற இடத்துக்குப் புண்ணியம்
தேடிக்கொள்ளும் பாக்கியத்தை அருளினார்.
நாமெல்லாம் எதிர்ப்பார்த்தது போல அங்குப் போய் 
தமிழக மீனவர்களைப் பற்றியோ கச்சத்தீவு பற்றியோ
அவர் எதுவும் பேசிய மாதிரி தெரியல. 
ஒருவேளை ரகசியமா எதாவது பேசியிருக்கலாம்னு 
இப்போதைக்கு மன ஆறுதல் அடைவது தான் நமக்கும் நல்லது.


Wednesday, May 10, 2017

எழுத்துகளுடன் இறுதிவரை

என் எழுத்துகள் குறித்து நான் பெருமை கொள்ள
வேண்டிய தருணமிது. 
என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும்
என் எழுத்துகளை 
நானே ஆரத்தழுவி முத்தமிடுகிறேன்.
என் கண்கள் குளமாகின்றன.
 இதுமட்டும் ஏன் என்று தெரியவில்லை!
என்னைக் கள்ள மவுனத்தில் கடந்து சென்றவர்களையும்
அவர்களின் சகாயத்தை தங்களின் 
ஆதாயங்கள் பொருட்டு
விட்டு விலகிவிட முடியாத சில நண்பர்களையும் 
நான் அறிவேன்.
அவர்கள் மீது பரிதாபப்படுவது அன்றி 
என்னால் வேறு என்ன செய்யமுடியும்?
என் எழுத்துகள் மீது
 அவர்கள் நடத்தும் தீண்டாமையில்
நான் கூனிக்குறுகிப் போவேன் 
என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
என் எழுத்துகளை வெளியிடக் கூடாது 
என்று சிற்றிதழ்களுக்கு வாய்மொழியாகத்
 தடை விதித்திருப்பதாக தெரிகிறது. 
அவர்களுக்கு என் நன்றி. 
என் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும்
 பதிப்பகங்கள் கூட திடீரென மவுனம் சாதிக்கின்றன. 
என் பொருட்டு அவர்கள் பதிப்பு தொழில்
நட்டமடைந்துவிடக் கூடாது என்பதால் 
நானே அவர்களிடமிருந்து விலகிக்
கொள்கிறேன். 
என் புத்தகங்களை சென்னையில் வெளியிடவே முடியாது.
அப்படியே வெளியிட்டாலும் 
புத்தக வெளியீட்டு பிரபலங்கள் வரமாட்டார்கள்.
வந்து நாலு வார்த்தை ஏசி விட்டாவது போகலாம்..
ம்கூம்..  என் பெயருக்கு அப்படி ஒரு ராசி…! 
இப்படியான பெருமைகளை எனக்கு கொடுத்து
தீண்டாமைக்குள்ளான என் எழுத்துகளை 
ஒவ்வொன்றாக கோர்த்துக் கொண்டிருக்கிறேன். 

காந்தியம், கம்யூனிசம், பெரியாரியம், தலித்தியம்,
அம்பேத்கரியம் , தமிழ்த் தேசியம், இந்திய தேசியம்…
 என்று இன்று பரவலாக நாம் அறிந்த இசங்களை 
என் வாசிப்புனூடாக புரிதலினூடாக 
விமர்சித்தப்போதெல்லாம் எதிர்கொள்ளாத
அனுபவமிது. 
இதுவும் ஒருவகையான கருத்தியல்
அதிகாரப் பாசிசம் தான்.
அவர்களுக்குத் தெரியவில்லை…. 
வர்களின் நிராகரிப்புகளே
என் எழுத்துகளுக்கான
 ஆகச்சிறந்த அடையாளம் என்பது!



புத்தம் சரணம் கச்சாமி






புத்தம்  சரணம் கச்சாமி

நினைச்சது நடக்கனுமா
இதோ இந்தக் கலர் கலர் ரிப்பனை வாங்கி
கோவில் வாசலில் கட்டுங்கோ…
புத்தம் சரணம் கச்சாமி



இறந்தவர் சொர்க்கலோகம் போக                                                             
எளிய வழி.. கட்டணத்திற்குட்பட்டது.
இறந்தவரின் சாம்பலை பணம் கட்டி
கோவிலில் வைத்திருக்க வேண்டும்.
சித்தார்த்தன் காவலில்
அவர்கள் பத்திரமாக புண்ணியம்
தேடிக்கொள்ளமுடியும்.
புத்தம் சரணம் கச்சாமி.

பெளத்தம் மதமல்ல, 
அது புத்தன் போதித்த வாழ்க்கை முறை.  ..
ஆனால்  நடைமுறையில் பெளத்தம்  அப்படி இல்லை.
ரோகிணி நதி நீர்ப்பங்கீடு காரணமாக எழுந்த
சச்சரவில் சாக்கிய குழுவின் கட்டளைக்குட்பட்டு
தன் நாட்டைவிட்டு வெளியேறியவனை
நரை திரை மூப்பு இறப்பு காரணமாக
 ஓரிரவில் தன் காதல் மனைவியிடம்
கூட சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனவனாக இன்றுவரை
எழுதியும் பேசியும் கற்பித்தும் வரும் இந்திய மண்ணில்
சித்தார்த்தா… நீ அசோக சக்கரத்தின் பல்லிடுக்குகளில்
குற்றுயிராய் மாட்டிக்கொண்டு …
சித்தார்த்தா… நீ பிறந்த பவுர்ணமி இரவில்
கடற்கரையில் தனித்து நிற்கிறேன்.
புத்தன் சிரிக்கிறான்.
ரகசியங்கள் உடைகின்றன.
எங்கள் அறிவியல் கூடத்திலிருந்து
அணுகுண்டுகள் வெடிக்கின்றன.
இப்போது நீ விஷ்ணுவின் அவதாரமாகிவிட்டதாக
அவர்கள் சொல்கிறார்கள்.

புத்தம் சரணம் கச்சாமி



Sunday, May 7, 2017

ஜீரோ மைல்.. இந்தியாவின் மையப்புள்ளி



இந்திய மண்ணின் மையப்புள்ளியில் கால் பதித்து நிற்கிறேன்..
 என்னைச் சுற்றி மொழிகளும் இனங்களும் நாடுகளும் 
புலிகளும் மான்களும் பூக்களும் காடுகளும் மலைகளும்.
என்னைச் சுற்றும் வளையங்கள் ஒவ்வொன்றாக விரிகின்றன 
.மையப்புள்ளியிலிருந்து கோடுகளை. வரைகிறார்கள் அவர்கள்
உங்கள் தொலைவுகளை நானே தீர்மானிக்கிறேன்.
என் பெருவிரல் அசைவுகள் உங்கள் நாடு நகரங்களை
 மாற்றிவிடும் வல்லமை கொண்டவை.
உங்கள் எல்லைகளின் நீள அகலங்களை நான் தீர்மானித்துவிட்டேன்.
கனவில் என்னைத் தீண்டிய கடலின் அலைகள்
முத்தமிட முடியாத தொலைவில் என் குடிசை.
எட்டுத்திசைகளும் எனக்குள் அடக்கம்.
ஓம் நமசிவாய.

ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்குட்பட்ட இந்திய மண்ணின் 
நிலபரப்பளவை கணக்கிட்டப்போது Great Trigonometrical Survey,
 பிரிவினைக்கு முந்திய இந்தியாவின் மையப்புள்ளியாக நாக்பூரில் இருக்கும் இவ்விடத்தைக் கணக்கிட்டார்கள். இந்த மையப்புள்ளியிலிருந்து இந்திய பெருநகரங்களின் தூரத்தைக் கணக்கிட்டார்கள். 1802 ல் ஆரம்பித்த இந்த
சர்வே 1871 முடிவடைந்தது. இந்த சர்வே தான் இமயத்தின் எவரெஸ்ட், கே 2, கஞ்சன்சங்கா சிகரங்களின் உயரத்தை ( கடல்மட்டத்திலிருந்து ) கணக்கிட்டது.
நிலப்பரப்பை அளந்த இந்த சர்வே இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆரம்பமாகவும் ஆவணமாகவும் இன்றுவரை திகழ்கிறது.


Friday, May 5, 2017

தடோபா வனத்தில் இரு தினங்கள்


புலி வருகிறது புலி வருகிறது... this is calling sound
என்று எங்கள் ஜீப்பில் வந்த கைடு சொன்னவுடன் காமிராக்கண்களைத்
 திறந்து வைத்து காத்துக்கொ ண்டிருந்தோம். 
முதல் நாள் பகல் 2 முதல் மாலை ஆறரை வரை 
திறந்த ஜீப்பில் மேடும் பள்ளமுமாக இருக்கும்
 தடோபா காட்டு வழியில் பயணம்.. 
ஆனால் மாலை 6 மணிவரை புலிகள் வரவே இல்லை.

புள்ளிமான்களும் கவரிமான்களும் துள்ளிக்குதித்து ஓடின.
 குரங்குகள் சாலையை மறித்துக்கொண்டு எதற்காகவோ 
தர்ணா போராட்டம் நடத்தின. பெரிய ஆந்தை ஒன்று மரக்கிளையில்
 உட்கார்ந்து இரவுக்காக காத்திருந்தது. காட்டெருமை
கம்பீரமாக நடந்து வந்தது. மயிலொன்று சிறகை விரித்து ஆடிகொண்டிருந்தது.
பெயர் தெரியாத பறவைகளும் விலங்குகளும் எங்களைக்
 கண்டு கொள்ளாமல் அசட்டை செய்தன. குளக்கரையில் இரு முதலைகள்
 தலையை மட்டும் கரையில் வைத்துக்கொண்டு யோகா 
செய்து கொண்டிருந்தன. 
கொற்றவை அந்த வனத்தில் அப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாள்.
அரசர்களின் வேட்டைக்கு உதவும் விளக்குத் தூண்கள்
எண்ணெயின்றி ஒரு ஆவணமாக ஆங்காங்கே
அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தன.

this is calling sound
மீண்டும் நாங்கள் உஷாரானோம். எப்படியும் புலியைப் பார்த்துவிடுவது
 என்ற வேகத்தில் ஜீப் .. ஆளுயர மூங்கில் செடியின் 
காய்ந்தப்போன புதர்களுக்கு நடுவில் புலி ஒன்று படுத்திருக்கிறது 
என்றார் கைடு. எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.
சற்று நேரத்தில் கம்பீரமாக எழுந்து நடந்து சென்றது அந்தப் புலி. 
ஆனாலும் தன் முகத்தை மட்டும் அது காட்டவே இல்லை. 
ஆண்புலி இது என்றார் கைடு.
என்ன ஒரு திமிர் அதற்கு...ம்ம்ம்.
.
7 மணிக்கெல்லாம் சஃபாரி முடிந்து டைகர் ரிசோர்ட்டுக்கு
 வந்து விட்டோம். காட்டிலிருந்து பார்க்கும் போது ஆகாசத்திற்கு
 என்னவோ தனி அழகே வந்துவிடுகிறது., வனத்தின்
யட்சிகளைப் பற்றி எப்போதும் என்னுடன் உரையாடும்
தோழி மீரா நிசப்தமான அந்த வெளியில் என்னுடன்
அமர்ந்து ... நிலவுடனும் நட்சத்திரங்களுடனும் ஏதோ
யட்சிகளின் மொழியில் பேசிக்கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் காட்டுக்குள்
 ஜீப்புடன் இன்னொரு ஷபாரி.
பயணம். 10 நிமிட பயணத்திலேயே புலிகளின் நடமாட்டத்தைக் 
கண்டுப்பிடித்துவிட்டார் கைடு. இரண்டாவது ஜீப்பில் நாங்கள்
 உட்கார்ந்திருந்தோம். அடர்ந்த புதருக்கு அருகில்

இரு குட்டிப்புலிகள் படுத்திருந்தன. சோம்பல் முறித்துக்கொண்டிருந்தப் போது
ஜியாகிரபி சேனல் திரை விரிந்தது . 
இது ஆண்புலியின் அழைப்பு என்றார் கைடு.
காத்திருப்போம் கட்டாயம் இந்த வழியாகத்தான் பெண்புலி
 போயாக வேண்டும் என்றார். அவர் ஊகம் சரியாகவே இருந்தது. 
ஆண்புலியின் அழைப்பு விட்டு விட்டு ஒலிக்க ஆரம்பித்தது. 
சாலையைக் கடந்து ஆண்புலி காத்திருக்கும் அடுத்தப் பகுதிக்குப்
போனது பெண்புலி. என்னவோ வேறு வழியில்லாமல் போவது போல ...


ஆம்.. ஆண்புலி அழைத்தவுடன் செல்லவில்லை என்றால் 
அதுவே அப்பெண்புலியின் குட்டிகளுக்கு உயிராபத்தாக 
முடிந்துவிடும் அபாயம் உண்டு. !
ஆண்புலிக்கு உடலுறவுக்கென்று நேரம் காலமே கிடையாதாம். 
கருமுட்டைக்கும் கருத்தரிப்புக்கும் கூட குறைந்தது 
சில நாட்கள் புணர்ச்சி தேவைப்படுகிறது புலிகளுக்கு! 
கருத்தரிப்புக்குப் பின்னரும் குட்டிகளைப் பிரசவித்தப் பிறகும்
 பெண்புலி ஆண்புலியுடனான உறவை இரு ஆண்டுகள் 
விலக்கி வைக்கிறது. ஆனால்  புணர்ச்சிக்குப் பின் 
கருத்தரிக்கவில்லை என்றாலோ அல்லது குட்டிகள் இறந்துவிட்டாலோ
பெண்புலி மூன்று அல்லது நான்கு மாதத்திற்குள்
 உடலுறவுக்குத் தயாராகிவிடுகிறது.
பெண்புலியின் இந்த பாலியல் சூட்சமத்தை அறிந்து கொண்ட 
ஆண்புலி தன் உடலிச்சையைத் தீர்த்துக் கொள்ள 
இதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது.
அதாவது குட்டிகள் இருந்தால் தானே இந்தப் பெண்புலி
 தான் கூப்பிட்ட உடனேயே வருவதில்லை என்ற நினைப்பில் (கோபத்தில்) பெண்புலியின் குட்டிகளைக் கொன்றுவிடுகிறது ஆண்புலி. 
ஒவ்வொரு பெண்புலிக்கும் தன் குட்டிகளை ஆண்புலியிடமிருந்து காப்பாற்றி
வேட்டை அனுபவங்களையும் பயிற்சிகளையும் கற்பித்து
 தன் குட்டிகளை ஆளாக்குவதற்கே இரண்டு ஆண்டுகள் ஆகிவிடுகிறது. 

ஒவ்வொரு ஆண்புலிக்கும் குறைந்தது மூன்று பெண்புலிகளாவது
 தன் உடலிச்சையைத் தீர்த்துக்கொள்ள தேவைப்படுகிறது !
. (அதாவது காட்டில் வாழும் ஒவ்வொரு ஆண்புலிக்கும்
என்று வாசிக்கவும். )
200க்கும் அதிகமான விலங்கினங்கள், 75 வகையான பட்டாம் பூச்சிகள், வண்டுகள்
கோடையிலும் வற்றாத அந்தாரி நதியும் ஏரியும் குளங்களும் தடோபா காடுகளின் தாய்மடியாக.
புலிகளின் நடமாட்டத்தை காட்டில் வாழும் பிற விலங்கினங்களுக்கு
 முன்னறிவிப்பு செய்வதில் குரங்குகள் தான் முதலிடம் வகிக்கின்றன. அடுத்து மான்கள். மான்கள் தன் கூட்டத்திலிருக்கும் பிற மான்களுக்கு புலி வருகிறது புலி வருகிறது என்று காலிங் சவுண்ட் கொடுக்கின்றன. ஆண்புலி பெண்புலியை அழைக்கும் ஓசை, பெண்புலி தன் குட்டிகளைப் பாதுகாப்பாக இருங்கள், இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லும் ஓசை, பெண்புலிக்காக ஆண்புலிகள் சண்டையிடும் ஓசை,
சிறுத்தைகளின் பாய்ச்சலும் உறுமலும், தன் கூட்டத்திற்கு தலைவராக மான்கள் ஒருவருக்கொருவர் குஷ்தி சண்டைப்போடும் காட்சி.. காட்டு நாய்களின் உறுமல், கூட்டமாக தன் குட்டிகளுடன் நடக்கும் காட்டுப்பன்னிகளின் சப்தம், வண்டுகளின் ரீங்காரம், ...
காட்டில் எல்லா ஓசைகளுக்கும் அர்த்தமுண்டு.
தேக்கு மரங்களி ன் ஊடாக வளர்ந்திருக்கும் 
வெள்ளை சிற்பங்களான கோஸ்ட் மரங்களின் 
மவுனத்திற்கும் கூட அர்த்தமுண்டு.

Monday, April 24, 2017

தமிழ் இலெமுரியா

Image result for தமிழ் இலெமுரியா இதழ்

தமிழ் இலெமுரியா விடைபெறுகிறது..
இனி இதழ் வரப்போவதில்லை
மும்பையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த மாத இதழ்
 தமிழ் இலெமுரியா. இதழாசிரியர் சு.குமணராசனின் வரிகளை
 வாசிக்கும் போது தொண்டைக்குழி வறண்டு போனது.
 விழிகள் நிறைந்து மனம் கனத்து
அடுத்த வரிகளுக்கு நகர முடியாமல் .. என்னை...
கடந்த பிப்ரவரி திங்களில் குமணராசனைப் பற்றிப் பேசும் 
வாய்ப்பு கிடைத்தப்போது
சொன்ன வரிகள் இப்போது நினைவுக்கு வருகிறது.

நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு மும்பை இதழ்
நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு பதிப்பகம்
நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு நூலகம்
நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு அறக்கட்டளை
நாங்கள் கனவு கண்டோம்
நாளையும் நாங்கள் கனவு காணுவோம்
கனவு எங்கள் பிறப்புரிமை
எங்கள் கனவுகள் வாழ
வாழ்த்துகிறோம் உங்களை
தமிழ் இலெமுரியா மாத இதழ், தமிழ் இலெமுரியா பதிப்பகம்,
 தமிழ் இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் இலெமுரியா சீர்வரிசை சண்முகராசனார் நூலகம்.... என்ற வரிசையில்
மும்பையில் எங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருந்தவர் 
திரு குமணராசன் அவர்கள்.
அந்தப் பயணத்தில் 9 வருடங்களாக தொடர்ந்து மாத இதழாக வெளிவந்துக்கொண்டிருந்த தமிழ் இலெமுரியா மாத இதழ் 10 வது ஆண்டு சிறப்பிதழுடன் விடை பெறுவதாக
அவர் எழுதி இருக்கிறார். அதிலிருந்து சில  துளிகள் :
*ஒவ்வொரு இதழும் கொண்டு வர ஆகும் செலவு சற்றொப்ப 2 இலட்சம் ரூபாய்.
*12 அயல் நாடுகளுக்கு இதழ் அனுப்பப்பட்டாலும் இன்றுவரை ஒரு டாலர் கூட பணம் வரவில்லை. பாராட்டுரைகள் மட்டுமே வந்தன.
*தமிழக அரசு நூலகங்களுக்கு இதழை வாங்க ஆணையிடப்பட்டது என்றாலும் 2014-15, 16, 17 ஆண்டுகளுக்கான நிலுவை மட்டும் ரூ 850,000/
*கடந்த 9 ஆண்டுகளாக தமிழ் இலெமுரியா இதழ் கொண்டு வர தன் சுய சம்பாத்தியத்திலிருந்து
செலவு செய்த தொகை சற்றொப்ப ஒரு கோடியே பத்து இலட்சம்.
 *அண்மைக் காலத்தில் உறுப்பினர் கட்டணத்தை ஓராண்டுக்கு மேலாக செலுத்திய
வாசகர்கள் எஞ்சியுள்ள பணத்தை திரும்பப் பெற விரும்புவோர் எம் அலுவலகத்தைத்
தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
*தற்போது கொடுப்பதற்கும் இழப்பதற்கும் எதுவுமில்லை என்ற நிலையில் இதழைத் தொடர்ந்து
வெளிக்கொணர முயல்வது அறிவுடைமையாகாது. இயலாது என்பதே இயல்பாகும்.
* சேய்தனை இழந்த ஓர் தாயின் மனநிலையில் யாம் விடை பெறுகிறோம்.....

நாங்களும் தாயை இழந்த சேய் போல... இத்தருணத்தில்.
திரு குமணராசன் அவர்களே எழுதியிருப்பது போல அவருக்குப்
 பரிவு காட்டாவோ கருணை காட்டாவோ நானும் விரும்பவில்லை
தமிழ் இலெமுரியாவுக்கு விடை கொடுக்கும் இத்தருணத்தில்.. சில வரிகள்..
" சினிமா துளிகளோ கவர்ச்சிப் படங்களோ
ஜோசியர் நட்சத்திர பலன்களோ எல்லாவற்றுக்கும் மேலாக
 விளம்பரங்களோ இல்லாமல் இதழ் பணி தொடர்வது
 சாத்தியமில்லை. அதுவும் அப்படியான ஒரு இதழை
 தொடர்ந்து தொய்வின்றி 9 ஆண்டுகள்
மாதச் சம்பளத்திலிருந்து எடுத்து செலவு செய்து
 தனி ஒரு நபராக கொண்டு வந்திருப்பது 
என்பதே இமாலய சாதனை தான். 
. இந்த ஒன்பது ஆண்டுகள் மும்பை வரலாற்றில் 
ஆகச்சிறந்த ஏடாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுதான்
தற்காலிகமாக தமிழ் இலெமுரியா இளைப்பாறுகிறது .
ஒரு கதவை மூடினால் ஓராயிரம் கதவுகள் திறக்கும்.
வானம் நம் வசப்படும்."

#தமிழ்_இலெமுரியா
http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=1286

Friday, April 21, 2017

எட்டப்பனுக்கெல்லாம் சூடு போட்ட கட்டப்பா..

Image result for பாகுபலி சத்தியராஜ்

அப்படிப்போடு ராசா
நீ வருத்தம் தெரிவிச்சப் பாருய்யா
அது உன் பெருந்தன்மை மட்டுமல்ல.
உன் பொருட்டு உன் சக தொழிலாளி நஷ்டமடையக்கூடாதுனு
நீ உண்மையாகவே கவலைப்பட்டுக் காட்டிய மனித நேயமய்யா..

நீ வருத்தப்பட்டதைக் கூட மன்னிப்பு கேட்டதா சொன்னவர்களுக்கு
சூடு சுரணை வர்ற மாதிரி நீ கடைசியா சொன்னப்பாருய்யா ராசா..
அதுதான் சத்தியமான வார்த்தை
. போதும்ய்யா.. அதுபோதும்.
இன்னும் தமிழ்நாட்டில் கலைஞன் உயிருடனும் உயிர்ப்புடனும்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் காட்ட.

"இனிவரும் காலங்களிலும் தமிழ் ஈழ மக்களின் பிரச்சனையாக இருந்தாலும் சரி விவசாயிகளின் பிரச்சனையாக இருந்தாலும் சரி தமிழக மக்களின் அனைத்து நியாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதைத் தெள்ளத் தெளிவாக கூறிக்கொள்கிறேன்."
இப்படி நான் கூறுவதால் இந்த சத்தியராஜை வைத்து படம் எடுத்தால்
எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவு செய்து இந்த சாதாரண சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் , என்னால் நஷ்டமடைய வேண்டாம்
என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனேன்றால்
இரு நடிகனாக இறப்பதை விட எந்த விதமான மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும் இறப்பதும் தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி.."
நன்றி சத்தியராஜ்.
"பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் ஒரு மிகச்சிறிய தொழிலாளி
தான் நான். என் ஒருவனது செயலின் பொருட்டு சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும் பணமும் விரயம்
ஆவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது, கர்நாடக மாநிலத்தில் பாகுபலி இரண்டாம் பாகத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது'
உண்மைதான் சத்தியராஜ். கர்நாடக மாநிலத்தில் உங்களுக்கு
சொந்தமான எந்த தொலைக்காட்சியும் இல்லை. வணிக வளாகங்கள்
இல்லை, கட்டிடங்கள் இல்லை, தோட்டம் இல்லை, இந்த
மன்னிப்பு முழுக்க முழுக்க உங்கள் பொருட்டு ஒட்டு மொத்த
திரைப்படக்குழுவுக்கும் நஷ்டமோ பிரச்சனையோ ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையின் காரணமாகவே
வந்திருப்பதை உணர்ந்து கொள்கிறோம்.
சூப்பர் சத்தியராஜ். 
நாங்கள் வாழும் காலத்தில் வாழும் தமிழ் நடிகன் நீ என்பதில்
பெருமை அடையும் தருணம் இது.. 
விடை தெரியாத இன்னொரு கேள்வி...
9 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் பேசிய பேச்சுக்கான எதிர்வினை
இது என்றால்... இந்த 9 ஆண்டுகளில் உங்களின் எத்தனையோ
 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. கன்னட ரசிகர்களும்
பார்த்திருக்கிறார்கள். ஏன் பாகுபலி 1 கூட வந்தபோது
நடக்காத எதிர்வினை ஏன் இப்போது..?
தமிழ் கலை இலக்கிய உலகில் இனி
 எவனும் இனி வாய் திறந்து மொழி இனம்
குறித்துப் பேசிவிடக்கூடாது என்று யாரோ நினைக்கிறார்கள்..!

Monday, April 17, 2017

கல்லறைகளின் அரசியல்



ஜோதிடர்கள் சுபஹோரைகள் கூடிய சுபதினத்தை
 குறித்துக் கொடுக்கிறார்கள். அந்தநாளில் தான் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்
பெண்கள். பிரசவவார்டில் சிசரியன் குழந்தைகள் பிறக்கும்போதே
சுக்கிரதிசையுடன் வளர்பிறையில் பிறக்கின்றன.
பெற்றோர் மட்டுமல்ல, மருத்துவர்களும் செவிலியரும் கூட
மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறார்கள்.
ஜனனம் மட்டுமல்ல, மரணத்தையும் சிலருக்காக  சிலர்
தீர்மானிக்கிறார்கள். எந்த மாதம் எந்தநாளில் எப்போது
மூச்சுக்குழாயை இழுத்து மரணத்தை அறிவிக்கலாம் என்பதையும்
ஏற்கனவே தீர்மானித்துவிடுகிறார்கள்
எரிக்கலாமா புதைக்கலாமா
யமுனையிலா கங்கையிலா வற்றிப்போன காவிரியிலா
எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது.
கல்லறைக்கான பளிங்குகற்களைக் கூட வாங்கிவைத்துவிடுகிறார்கள்.
இரங்கற்பா முதல் டிவி நிகழ்ச்சிவரை எல்லாம் தொகுக்கப்பட்டு
வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன..
கல்லறைகளின் தலைநகரில் 
புதர்கள் சூழ்ந்து ஆள் அரவமின்றி கிசான்கட்.
கல்லறைகளுக்கும் அரசியல் இருக்கிறது.
பூத உடல்கள் அரசியல் நடத்துகின்றன.
 எரியாதப் பிணங்களை ஆற்றில் தள்ளி
சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கும்
தொண்ணூறு சுடுகாடுகள்
கங்கைக்கரையில் விழித்திருக்கின்றன.
டிசம்பர் 6ல் புத்தனைக் கொலை செய்கிறார்கள்.
சுடலைப்பொடிப் பூசியவன் தோள்மேல் கங்காளத்தின் கண்கள்
கொலைவெறியுடன் கூத்தாடுகின்றன.
கிழக்குமுகமாக அமர்ந்து 12 நாட்கள்  தினமும்  1000 தடவை
மந்திரம் சொல்ல ஆரம்பித்துவிட்டான் குருபகவான். .
உடல் உயிர் அரசியல்

Thursday, April 13, 2017

அம்பேத்கரின் அவளுக்கு என் நன்றி






அறிவாயுதம் ஏந்திய அண்ணல் அம்பேத்கருக்கு
ஆத்மார்த்த தோழியாய் ஒருத்தி இருந்தாள்.
1920 களில் இலண்டனில் மதிய உணவுக்கு வழியின்றி
 இலண்டன் மியுசியத்தில் தன் பகல் பொழுதை அவர் கழித்த
 அந்த நாட்களில் அவளைச் சந்தித்தார்.
 அவள் பெயர் பிரான்சிஸ் பிட்ஜெரால்ட் (Francis Fritzgerald)
ஹவுஸ் ஆஃப் காமன் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக
வேலை செய்து கொண்டிருந்தார்.
கணவரை இழந்த அப்பெண்மணிக்கு இரு குழந்தைகள்.
இலண்டன் மியுஸியம் வாசலில் அவர்கள் சந்திப்பு.
அதன் பின் அப்பெண் தன் கடைசி நாட்கள் வரை
அண்ணலை நேசித்தார்.
1923ல் அம்பேத்கர் இந்தியா திரும்பியது முதல் 1943 வரை
 அப்பெண் அம்பேத்கருக்கு எழுதிய 91 கடிதங்கள் .
. அவைப் புத்தகமாக வெளிவருவதில் ஏகப்பட்ட சிக்கல்களும்
குழப்பங்களும். ஆனால் என்னைப் போன்றவர்கள்
குழப்பவாதிகளின் காரணங்களைச் செவிமடுக்க விரும்பவில்லை.

மை டார்லிங் பீம்... என்று ஆரம்பிக்கும் ப்ஃனியின்கடிதங்கள் ..
என் டார்லிங் பீம்...
உன் புகைப்படம் என்னருகில் என் மேசைமீது
ஆனால் எந்தப் பதிலும் சொல்லாமல்
என் முத்தத்தை எனக்குத் திருப்பித் தராமல்..."
அம்பேத்கருக்கு வேண்டிய புத்தகங்களை கப்பலில் அனுப்பி வைத்துக்கொண்டே இருந்த அறிவார்ந்த தோழியாய்..
நட்பின் உன்னதமாய்.. ஆத்மார்த்தமான காதலியாய்
(platonic relationship.) எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இன்றி வாழ்ந்து மறைந்திருக்கிறாள்.

இந்துவாகப் பிறந்த நான் ஓர் இந்துவாக இறந்துப்போக மாட்டேன்
என்று அண்ணல் அறிவித்தப்பின் அம்பேத்கரை தேசவிரோதியாக சித்தரித்தார்கள். ஜனவரி 1937ல் அவர் இங்கிலாந்தில் ஒரு விதவையை இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார் என்ற வதந்தியைப் பரப்பினார்கள்! ஆனால் அம்பேத்கர் அப்பெண்ணைத் திருமணம்
செய்து கொள்ளவில்லை. பிரான்சிஸ் எழுதிய கடிதங்களைப் பற்றி அவருடைய வாழ்க்கை வரலாற்றை மராத்தியில் எழுதிய
 கெர்மோடெவிடம் (C B Khairmode) அம்பேத்கர் சொன்ன
வரிகள் தான்  இப்பதிவை எழுதுவதற்கு எனக்குத் துணிவு தந்தது.
.
"நம் மக்களின் ஒழுக்கவியல் கோட்பாடுகள் ரொம்பவும்
 விசித்திரமானவை" என்று சொன்ன
அம்பேத்கர்
 "பிரான்சிஸ் பற்றிப் பேசினால் .. எனக்கு ஆட்சேபனை இல்லை.
இதனால் மக்கள் என்னைப் பற்றி தவறாக நினைக்க கூடும்
என்ற கவலையும் இல்லை"
என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

அறிவாயுதம் ஏந்தி எதிர்நீச்சல் போட்ட ஒரு போராளிக்கு
நட்பும் காதலும் அவன் இளைப்பாறும் நிழலாக
அவனை உயிர்ப்புடம் இயக்கும் ஜீவனாக
யுகம் யுகமாக  தொடர்கிறது.
அத்தொடர் பயணத்தில் பிரான்சிஸ் ஜெரால்ட் 
என்னளவில் ஓர் அற்புதமான பெண்.
அம்பேத்கருக்கு வாய்த்த அறிவான ஸ்நேகிதி.
அண்ணலின் பிறந்தநாளில் அந்த நட்புக்கு தலைவணங்கி..
அவள் வாழ்ந்த திசைநோக்கி கண்ணீருடன் கை கூப்பி..
(venkat shyam ஓவியம். event TOI LIT festival 2016 @Bandra)

Wednesday, April 12, 2017

இன்று அதிமுக ; நாளை திமுக.



இன்று அதிமுக நாளை திமுக
திராவிட அரசியலுக்கு ஓரு சோதனைக்காலம்
மாநில சுயாட்சி என்ற கூட்டாட்சி அரசியலை இந்திய மண்ணில்
டில்லியின் செங்கோட்டை நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு
பேசியவர்கள் நாம். திராவிட அரசியலின் மாநிலசுயாட்சி  கொள்கை
இந்திய மண்ணின் மாநில கட்சிகளுக்கான அடிப்படை உரிமை.
இந்திய கூட்டாட்சி முறையின் இன்னொரு விரிவாக்கம்.
ஒரே கட்சி  ஒரே தேசம் ஒற்றை ஆட்சி என்பது இந்திய மண்ணையும்
மனிதர்களையும் வரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும்
அறியாத அரசியல் கட்சிகளின் அதிகார வெறி.
இந்த அதிகார வெறிக்கு இன்று தமிழகம் பலியாடு ஆகிவிட்டது.
ஜெ வின் மரணமும் கலைஞரின் செயல்படா நிலையும்
இன்றைய தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கும் வெற்றிடத்தை
 காற்றாக வந்து நிரப்பிவிட துடிக்கிறது பிஜேபி.
அதற்கு சாதகமாக இருக்கும் எவரையும் தன் வசப்படுத்திக்கொள்ள
துணிகிறது. எப்படியும் பெரும்பான்மை எம் எல் ஏக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் போதும் , அடுத்து தங்கள் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும்
 (ஆட்சியைப் பிடிக்குமா?) என்ற அபரிதமான நம்பிக்கையில்
ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணை போகிறது திமுகவும்.
இன்றைக்கு ஒரு பெரும்பான்மையான கட்சியின் ஆட்சியை
ஊழல் என்றும் வருமானவரி என்றும் காரணம்காட்டி
கவிழ்த்துவிட்டால் நாளை இதே ஆட்சி கவிழ்ப்புக்கு
 திமுக மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்பதையும்
சேர்த்தே யோசிக்க வேண்டும்.
 இப்படியான ஜனநாயகப் படுகொலையைச்
செய்துவிட்டு ஆட்சிக்கு வருவதை விட
மக்கள் மன்றத்தில் பயணித்து முறையாக
தேர்தலைச் சந்தித்து தங்களால் மீண்டும்
ஆட்சியை அமைக்க முடியும் என்ற
திமுக காட்ட முடியும். திமுக வால் அது முடியும்.
அதற்கான தொண்டர் படையும்
உழைப்பும் ஆள்பலமும் பணபலமும் சகலமும்
திமுகவிடம் இன்னும் குறையாமல் இருக்கிறது.
அதிமுக ஆட்சியை இன்று கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்துவிடலாம்.
ஆனால் அதே ஊழல் வருமானவரியை காரணம் காட்டி திமுகவின் அரசியலையும் பிஜேபி ஒழித்துக்கட்டும்.
அதற்கு வழிவிடப்போகிறார்களா
அல்லது தலைநிமிர்ந்து பிஜேபிக்கு அரசியல் பாடம் நடத்தும்
துணிவுடன்  நிகழ்கால வெற்றிடத்தை அர்த்தமுள்ளதாக
 மாற்றப் போகிறார்களா..?
இன்று அதிமுக. நாளை திமுக.

பிகு: துரைமுருகன் அண்ணாச்சி மற்றும் தமிழிசை அக்கா இருவரும்
உளறுவது போல இருந்தாலும் அவை உளறல்கள் மட்டுமல்ல.
உடையும் ரகசியக் கசிவுகள்.

Monday, April 10, 2017

இது டிரெய்லர் தான்

Image result for modi cartoon
"ரொம்ப டேஞ்சரானா ஆளுப்பா மோடிஜி."
ஆர் கே நகரில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டால்..
அவ்வளவுதான் ஓபிஎஸ் க்கு மட்டுமா அரோகரா.
எல்லோருக்கும் தான்.
எல்லோரும் மொட்டை அடிச்சி முக்காடு போட்டுக்க
வேண்டியதுதான்.
ஜெ தீபா வெற்றி பெற்றுவிட்டால்
புதுசா இன்னொரு கட்சி  முளைக்கும்..
அரசியல் விளையாட்டு ரொம்பவும் தமாஷா போயிடும். .
ஓபிஏஸ் அணி வெற்றி பெற்றுவிட்டால்
நாங்க தான்  அ அ திமுக - அதாவது
அசல் அதிமுகனு அழிச்சாட்டம்  பண்ணி
உண்டு இல்லைனு இரட்டை இலையை பிச்சி எடுத்திடுவாங்க
. ஸ்டாலின் தலைமையில் திமுக வெற்றி பெற்றுவிட்டால்..
அதிமுக வின் பெரும்பான்மையை தங்களின் இந்த
 ஒற்றை வெற்றியை வைத்து கேலிக்கூத்தாக்கி
இப்பவே ஆட்சியைக் கலைக்கவும் தேர்தல் நடத்தவும்
 என்னவெல்லாம் செய்யமுடியுமே
அதை எல்லாம் டில்லியில் ஷிப்ட் முறையில் போயி வந்து
வந்து போயி  மே மாத வெயிலில் அனைவரையும்
மண்டைக்காய வைத்திருப்பார்கள்.
 ஒருவேளை நம்ம கரகாட்டம் கங்கை அமரன் வெற்றி
பெற்றுவிட்டால் ... அய்யய்யோ
கற்பனை இப்படி எல்லாம் கொஞ்சம் ஓவரா போகக்கூடாதுனு
சொல்றீங்களா..
என்னவொ ... இவர்கள் அனைவருக்கும் வைத்தாரு பாருங்க
மோடிஜி ஒரு ஆப்பு.. பூ னு ஊதித்தள்ளின மாதிரி இருக்கே..
ரொம்ப டேஞ்சரானா ஆளுப்பா மோடிஜி.
இது சும்மா ஒரு டிரெய்லர்தான் !

Thursday, April 6, 2017

GST ஜீ பூம்பா ..


ஒரு தேசம் ஒற்றை வரி
காஷ்மீரும் கன்யாகுமரியும் ஒன்றாகிவிட்டது.. ஆஹா..
தமிழ்நாடும் பீஹாருன் ஒன்றாகிவிட்டது..
GST .. ஜீ பூம்பா.. GST .. ஒரு மந்திரச்சொல்.. 
ஜீ பூம்பா. GST .. GST .. GST ..
இதுதான் தற்போது நம் நாடாளுமன்றத்திலும் மேல்சபையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்
GST .. ஜூலை 1 முதல் அமுலுக்கு வரப்போகும் GST ..
பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிடும் என்றும் 
இடைத்தரகர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் 
ஆகையினால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் 
அன்றாட பொருட்கள் கிடைக்கும் என்றும் மோதி அரசு அலங்காரமான அறிவிப்புகளுடன் தேசம் முழுமைக்குமான ஒற்றை வரி முறையை 
உரக்கப் பேசுகிறது.
ஆனால் இந்தியச் சட்டப்படி இந்தியாவிலிருக்கும் 
அனைத்து மாநிலங்களும் ஒரே வரி விகிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்
 என்ற கட்டாயமில்லை.
அத்துடன் அரசு வசூலிக்கும் வரிகள் மூன்று வகையாக இருக்கின்றன
நடுவன் அரசு வரி
மாநில அரசு வரி
நடுவண் அரசும் மாநில அரசும் சேர்ந்து வசூலிக்கும் வரி.
இந்த மூன்று முறைகளை எப்படி ஒற்றை வரி முறையில்
 கொண்டுவர இருக்கிறார்கள் என்பதைப் பற்றி இதுவரை 
எந்த ஒரு செயல்திட்டமும் அரசு வெளியிடவில்லை.

பொருட்களின் கொள்முதல் விலையை
வியாபாரிகள் அவர்கள் இலாபத்திற்கு ஏற்ப தீர்மானிக்கும் வசதியை வழங்கி இருப்பதால் பொருட்களுக்கான வரி விகிதம் மட்டுமே 
பொருட்களின் விலையை மலிவாக்கும் என்பதும்
 பொதுமக்கள் பலனடைவார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
இவை எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியமான கருத்து... 
பரந்த இந்திய தேசத்தின் பூகோள ரீதியான நிலப்பரப்பை
 நடுவண் அரசு கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டிருப்பது தெரிகிறது.
 அதுவும் குஜராத்தில் முதல்வராக இருந்த மோதி.
 குஜராத்தின் வரி விதிப்பு ஏன் மற்ற மாநிலங்களின் வரி விதிப்பிலிருந்து வேறுபட்டிருக்கிறது என்பதை நன்கு அறிந்தவர்.
அதற்கான அனைத்து காரணங்களும் நிர்வாக ரீதியாகவும் 
அறிந்தவர் தான். இப்போது அவரே சொல்கிறார்... 
குஜராத்தும் அசாமும் ஒன்றுதான்.
மகாராஷ்டிராவும் தமிழ்நாடும் ஒன்றுதான் என்று!
அவர் டில்லியிலிருந்து எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும். 
அதை நாம் நம்பியே ஆகவேண்டும்.
(The GST is bound to lead to serious difficulties, and could possibly fail, because it seeks to treat unequal states equally)

இப்படியான ஒற்றை வரிவிதிப்பின் மூலம் மாநில அரசுக்கு ஏற்படும் வரி இழப்பு/ வருவாய் இழப்பை மாநில அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது? மாநில அரசுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்குமா என்ன? அதை யார் தீர்மானிப்பார்கள்? வறட்சி நிவாரணத்திற்கே ஆயிரம் ரூபாய்க் கேட்டால் வெறும் ஐம்பது ரூபாயை எடுத்து வீசுகிற மத்திய அரசு மாநில அரசின் வருவாய் இழப்பை எம்மாதிரி அணுகும்?!!
Image result for gst cartoon

இதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை.. என்னவோ நடக்குது நடக்கட்டும்.
தற்போது நமக்கும் நம் அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் மாபெரும் பிரச்சனை
ஆர் கே நகர் தேர்தல் மட்டுமே.. அதுவல்லவா நம் அனைவரின் வாழ்க்கையையும் மாற்றப்போகிறது!