Monday, April 17, 2017

கல்லறைகளின் அரசியல்



ஜோதிடர்கள் சுபஹோரைகள் கூடிய சுபதினத்தை
 குறித்துக் கொடுக்கிறார்கள். அந்தநாளில் தான் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்
பெண்கள். பிரசவவார்டில் சிசரியன் குழந்தைகள் பிறக்கும்போதே
சுக்கிரதிசையுடன் வளர்பிறையில் பிறக்கின்றன.
பெற்றோர் மட்டுமல்ல, மருத்துவர்களும் செவிலியரும் கூட
மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறார்கள்.
ஜனனம் மட்டுமல்ல, மரணத்தையும் சிலருக்காக  சிலர்
தீர்மானிக்கிறார்கள். எந்த மாதம் எந்தநாளில் எப்போது
மூச்சுக்குழாயை இழுத்து மரணத்தை அறிவிக்கலாம் என்பதையும்
ஏற்கனவே தீர்மானித்துவிடுகிறார்கள்
எரிக்கலாமா புதைக்கலாமா
யமுனையிலா கங்கையிலா வற்றிப்போன காவிரியிலா
எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது.
கல்லறைக்கான பளிங்குகற்களைக் கூட வாங்கிவைத்துவிடுகிறார்கள்.
இரங்கற்பா முதல் டிவி நிகழ்ச்சிவரை எல்லாம் தொகுக்கப்பட்டு
வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன..
கல்லறைகளின் தலைநகரில் 
புதர்கள் சூழ்ந்து ஆள் அரவமின்றி கிசான்கட்.
கல்லறைகளுக்கும் அரசியல் இருக்கிறது.
பூத உடல்கள் அரசியல் நடத்துகின்றன.
 எரியாதப் பிணங்களை ஆற்றில் தள்ளி
சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கும்
தொண்ணூறு சுடுகாடுகள்
கங்கைக்கரையில் விழித்திருக்கின்றன.
டிசம்பர் 6ல் புத்தனைக் கொலை செய்கிறார்கள்.
சுடலைப்பொடிப் பூசியவன் தோள்மேல் கங்காளத்தின் கண்கள்
கொலைவெறியுடன் கூத்தாடுகின்றன.
கிழக்குமுகமாக அமர்ந்து 12 நாட்கள்  தினமும்  1000 தடவை
மந்திரம் சொல்ல ஆரம்பித்துவிட்டான் குருபகவான். .
உடல் உயிர் அரசியல்

No comments:

Post a Comment