எழுத்து எனக்குத் தவமல்ல.
என் உயிர்மூச்சும் அல்ல.
எழுத்து என் சகமனிதனுடன் நான் கொண்டிருக்கும் உறவு.
சில நேரங்களில் அது என் சுயபரிசோதனை.
என் கனவுகளின் இன்னொரு மொழி.
நான்குத் தலைமுறைகளாக மும்பையில் வசிக்கும் தமிழ்க்குடும்பம்.
என்றாலும் என் கல்லூரி வாழ்க்கை தமிழ்நாட்டில் தான்.
திராவிட இயக்கத்தின் அதிலும் குறிப்பாக அறிஞர் அண்ணா காலத்திய
பம்பாய் அரசியலில் முக்கியமான பங்கு வகித்தவர் என் தந்தையார்
பி.எஸ்.வள்ளிநாயகம் அவர்கள். திராவிட இயக்கத்தின் இதழ்களுக்கு நடுவில்
நான் வளர்ந்தேன் என்பது தான் உண்மை.
அப்போதுதான் கண்ணதாசனின் வனவாசத்தை எங்கள் வீட்டுக்கு வந்த ஒருவர்
பரிசளித்தார். எல்லோரும் மகாத்மா காந்தியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் அன்னை கஸ்தூரிபா என்ற புத்தகமும் எனக்கு வாசிக்க கிடைத்தது. இவை அனைத்தையும் விட இன்னொரு முக்கியமான சம்பவம்
நான் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் முதுகலைப் படிக்கும்போது
தற்கால இலக்கியம் என்ற பாடப்பிரிவில் அறிஞர் அண்ணாவின் பார்வதிபாய் பி.ஏ. என்ற நாவலும் பாடமாக இருந்தது. விடுமுறைக்கு வழக்கம் போல
மும்பை சென்ற நான் பார்வதிபாய் பி.ஏ நாவலைப் பற்றி என் தந்தையாரிடம்
உரையாடினேன். மு.,வ, நீலபத்மநாபன், ஜானகிராமன் , நெருடா , கு.பா.ரா,
புதுமைப்பித்தன். ஏன் ஜெயகாந்தன் வரை நான் கொண்டாடிக்கொண்டிருந்தக் காலக்கட்டம். எனக்கு பார்வதிபாய் நாவலை இன்னின்ன காரணத்தால் ரசிக்க முடியவில்லை. இட்ஸ் நாட் அப்டு மை லெவல், மை ஸ்டேன்டர்ட் என்று சொன்னேன். என் தந்தைக்கு வந்தக் கோபம், இப்போதும் எனக்கு நினைவுக்கு
வருகிறது. அந்தக்காட்சி. "அவர் வாயிலிருந்து சொற்கள் வெடித்தன.
அண்ணாவை விமர்சிக்கின்ற அளவுக்கு நீ பெரிய ஆளா ஆயிட்டியா?"
என்று கத்தினார். நான் வயடைத்துப்போய்விட்டேன். அதன் பின் முதுகலையில்
நான் வாங்கிய தங்கமெடல் கூட என் தந்தையார் உள்ளத்தை மாற்றவில்லை.
அத்துடன் எனக்கும் என் தந்தைக்கும் நடுவிலிருந்த பொதுவெளி அடைப்பட்டுவிட்டது. அண்ணாவின் மறைவுக்குப் பின் அவருக்கு அப்போதைய அரசியல் மீது ஒவ்வாமை ஏற்பட்டது. விலகியே இருந்தார்.
அக்காலக்கட்டங்களில் வளர்ந்து நிற்கும் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்காக அவர் கவலைப்பட்டதை விட தான் உழைத்த அரசியல்
கட்சியின் நிலைப்பாடு குறித்தும் எதிர்காலம் குறித்தும் அதிகமாகவே கவலைப்பட்டார். என்னிலையிலிருந்து இறங்கி நான் அவருடன் பேசி
இருக்கலாம். ஆனால் ஏனோ என்னால் அப்போது அது சாத்தியப்படவில்லை.
மும்பையில் என் இல்லம் தோழர்களின் இல்லமாகவே இருந்தது.
தோழர்களுக்கு இடையூறாக இருந்ததாலேயே எங்கள் வாழ்க்கை
விடுதிகளில் தொடர்ந்தது.
எதிரணியினர் பேரம் பேசினர். அவர் எதற்கும் அசையாமல் கடைசிவரை
தன் கொள்கைகளுடன் வாழ்ந்து மறைந்தார்.
மதுரை பல்கலை கழகத்தில் கனகசபாபதி, நடராஜன், நவநீதகிருஷ்ணன், சு.வேங்கட்ராமன், ராமசாமி, இவர்கள் எல்லாம் என் பேராசிரியர்கள்..பல்கலை கழகத்தில் வியாழவட்டம் எங்கள் இலக்கிய விமர்சனத்தை கூர்மைப்படுத்திய காலக்கட்டம். கல்லூரி நூலகமே கதி என்று இருந்தக்காலம்., புத்தகங்களே என் வாழ்க்கை
என்றிருந்த நாட்கள் அதன் பின் வரவே இல்லை. வாழ்க்கையின் நெருக்கடிகள் என்னை அரபிக்கடலோரம் கொண்டு தள்ளியது.
மும்பையில் பன்னாட்டு வங்கியில் வேலை, அதன் பின் திருமணம்,
குழந்தைகள், சொந்தவீடு வாங்க ஓடிய ஓட்டம்... வாழ்க்கை என்னை
அலைக்கழித்தது. நானே ஒரு தீவாகிப்போனேன். என்னைச் சுற்றி எப்போதும்
மும்பையின் ஜனக்கூட்டம். அதுவும் தினமும் நான் பயணம் செய்த
மின்சாரவண்டியில் நிரம்பி வழியும் ஜனத்திரளுக்கு நடுவில் என் மூச்சுத் திணறும். ஆனாலும் என்னவொ நான் தனியாக நிற்பதாகவே தோன்றும்.
வேலைப்பளு ஆபிஸிலும் வீட்டிலும் அழுத்தும். அப்போதெல்லாம்
எப்போதோ வாசித்த ஏதாவது ஒரு கவிதை எனக்குள் ஓடும்.
அக்காலக்கட்டங்களில் நிறைய ஆங்கிலப்புத்தகங்களை வாசித்தேன்.
மும்பையில் சாலையோரங்களில் உலகத்தின் அத்தனைப் புத்தகங்களும்
கிடைக்கும். மும்பை ஃபோர்ட் ஏரியாவில் வேலை. அரைமணிநேரம்
லஞ்ச் டைம். அதில் 10 நிமிடங்களில் சாப்பிட்டுவிட்டு 20 நிமிடங்களில்
அந்தச் சாலைகளில் புத்தகங்களைத் தேடும் அவசரம்.
கமலாதாஸிலிருந்து லிம்பாளே வரை அங்குதான் எனக்குப்பரிச்சயமானார்கள்.
நான் அந்தச் சாலையோர புத்தகவியாபாரிகளிடம் சில ஒப்பந்தங்களே
செய்துகொண்டேன். அதாவது புத்தகங்களை வாங்கிக்கொண்டு வாசித்துவிட்டு
பக்கங்கள் கசங்காமல் திருப்பிக்கொடுத்தால் வாங்கிய விலையில் 30 முதல்
40 விழுக்காடு வரை தள்ளுபடி செய்துவிட்டு அந்தப் புத்தகவியாபாரியே வாங்கிக்கொள்வார். நமக்குத் திருப்பிக்கொடுக்க விரும்பாத புத்தகங்கள்
என்றால் நாமே வைத்துக்கொள்ளலாம். இப்படி எல்லாம் புத்தகங்கள்
வாசித்துக்கொண்டிருந்தது தான் அச்சூழலில் என் சுயமிழக்காமல் என்னை வாழவைத்துக்கொண்டிருந்ததாக நினைக்கின்றேன்.
.
அக்காலக்கட்டத்தில் மும்பையிலிருந்து தரமான மாத இதழாக
சீர்வரிசை என்ற இதழ் வெளிவந்தது. அந்த இதழில் நூல்விமர்சனப்
பகுதிக்கு தமிழகத்திலிருந்து நிறைய புத்தகங்கள் வந்தன.
நான் அந்தப் புத்தகங்களை வாசித்து விமர்சனம் எழுதும் வாய்ப்பு அப்போது
கிடைத்தது. அப்படித்தான் தமிழ்நாட்டின் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது
என்பதையே நான் முழுமையாக தெரிந்து கொண்டேன் எனலாம்.
சீரிவரிசை இதழில் தொடர்ந்து வெளிவந்தக் கவிதைகளை தொகுத்துப்
புத்தகமாக வெளியிட்டதில் சீர்வரிசையின் பங்கு முக்கியமானது.
இதன் பின், பாபர் மசூதி இடிப்பு அதன் தொடர்ச்சியாக நடந்த
மும்பை குண்டுவெடிப்புகள்... அந்தக் குண்டுவெடிப்புகளின்
சாட்சியாக கையறுநிலையில் நான் நின்றேன். என்னை மிகவும்
பாதித்த இந்தக் காலக்கட்டத்தில் நான் என் வலி தாங்கமால்
கதறினேன், அழுதேன், கூச்சலிட்டேன், சண்டைப்போட்டேன்,
வாதம் செய்தேன்... தாராவியில் நான்கு தலைமுறையாக வாழ்ந்தக் குடும்பம்
என் குடும்பம், இசுலாமியர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் நாங்கள்.
அந்தக் கலவரமும் அதன் பின் தொடர்ந்த நடந்த குண்டுவெடிப்புகளும்
எங்கள் வாழ்வை அலைக்கழித்தன. மதமும் கடவுள் வழிபாடும்
தனிமனிதர் சம்பந்தப்பட்டவை. அதை அரசியலாக்கும் போது
அது சாதாரணமனிதர்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதைக்
கண்கூடாகப் பார்த்தேன். அதுவே என்னை அன்றாட அரசியலை
நிராகரிக்க முடியாத ஒரு நிலையை உருவாக்கியது.
பெரியாரைக் கொண்டாடியப்போது
ஏற்றுக்கொண்டவர்கள் அம்பேத்கரைக் கொண்டாடிய போது
தங்கள் புறக்கணிப்புகளாலும் கள்ளமவுனத்தாலும் தங்களின் சாதிய
முகத்தை எனக்குக் காட்டினார்கள்.
இந்த அனுபவங்களின் ஊடாகவே சாதியத்தின் முகத்தை மிக அருகில்
பார்த்தேன் எனலாம். சாதிகள் இல்லை என்று நாங்கள் வளர்க்கப்பட்டதும்
கற்பிக்கப்பட்டதும் எவ்வளவு கற்பிதமானது என்பதைப் புரிந்துக்கொண்டபோது
ஏற்பட்ட காயமும் வலியும் ஆற்றிக்கொள்ளமுடியாதவை.
இந்திய தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவை என்பதை முன்வைத்து
நடக்கும் campaign for electoral reforms in India- CERI அமைப்பு எம். சி இராஜ்
அவர்கள் தலைமையில் வங்காள தேசத்தில் டாக்கா நகரில் துவங்கியது.
அக்கருத்தரங்கில் மும்பை பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்துக் கொண்டேன்.
இப்போதும் அது குறித்த களப்பணிகள், வொர்க்ஷாப் என்று மராத்திய
மாநிலத்தில் பயணித்துக்கொண்டு இருக்கின்றேன்.
நுனி நாக்கின் ஆங்கிலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளமாக
இருக்கும் இலக்கிய வட்டங்கள் மும்பையில் மிகவும் பிரபலமானவை.
Lead India movement , times of india , kalakOdda , times of india நடத்தும்
இலக்கியத் திருவிழா ஆகிய நிகழ்களில் கலந்து கொண்டிருக்கிறேன்
ஆனால் times of Indiaன் lead india movement ன் கவிதை வாசிப்புகளில்
கலந்துகொள்ளும் தருணங்களில் எல்லாம், இந்தப் பிரபலத்துடன் நானும்
மேடையில் இருந்தேன், கவிதை வாசித்தேன்
என்று சொல்லிக்கொள்வதை தவிர
இந்நிகழ்வுகளின் பங்களிப்புகள் எனக்கு ஒத்துவரவில்லை என்றுதான்
சொல்லவேண்டும். ஏனோ தெரியவில்லை நான் அப்போதெல்லாம்
அவர்களில் ஒருத்தியாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
ஜெய்பீம்காம்ரேட்
என்ற ஆவணப்படத்தை நேஷனல் ஃப்லிம் பெஷ்டிவலில் பார்த்தப்போது
மும்பையில் தங்களுக்கு ரொம்பவும் அருகில் இம்மாதிரி சம்பவங்கள்
நடக்கின்றன என்பதை ஆச்சரியத்துடன் பார்த்த சீமான் சீமாட்டிகளை
நான் பார்த்தேன். அதனால் தான் இக்கூட்டங்களில் இருக்கும் போதெல்லாம் அவர்களில் ஒருத்தியாகிவிடக் கூடாது என்கிற உள்ளுணர்வோடு இருக்கின்றேனோ என்று தோன்றுகிறது.
கவிஞர் அன்பாதவன் , புதுக்கோட்டை நா.முத்துநிலவன் ஆகியோர் மூலம் தமிழகத்திலிருந்து வெளிவரும் வெளிவரும் சிற்றிதழ்களில்
தொடர்பு ஏற்பட்டது. கணையாழி முதல் கல்வெட்டுப்பேசுகிறது வரை
சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்தேன். சிறுகதை, கவிதைகள் என்று
எழுதியதை புத்தகமாகக் கொண்டுவருவதில் மும்பை எழுத்தாள்ர் மன்றமும்
தமிழ்நாட்டில் நண்பர்களும் இன்றுவரை உதவியாக இருக்கிறார்கள்.
கவிதாசரணின் நட்பும் தொடர்பும் என் விமர்சனங்களுக்கு உரம் சேர்த்தன.
தமிழ்நாட்டின் இலக்கியச் சூழலை
நான் தூர இருந்துப் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் இல்லாமல் வாழ்க்கை
என்னை மும்பைவாசியாக்கிவிட்டதற்க்காக வருத்தப்பட்ட நாட்கள்
எவ்வளவு அபத்தமானவை என்பது எனக்குப் புரிகிறது,
மணிப்பூரின் பெண்களின் போராட்டம் தமிழ்நாட்டு பெண்ணியத்தைப்
பாதிக்காதது குறித்து கூட நான் விமர்சனப்படுத்தவில்லை. ஆனால்
வாச்சாத்தி பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமை கூட கண்டுக்கொள்ளப்படாமல் கடந்து செல்லப்பட்டிருப்பதை
என்னமாதிரியான பெண்ணியமாக எடுத்துக் கொள்வது என்று
எனக்குத் தெரியவில்லை.
மும்பை வாழ்க்கை என் உலகத்தை
விசாலமாக்கி இருக்கிறது. பல்வேறு மொழிக்கவிஞர்கள் எழுத்தாளர்களுடன்
பழகும் வாய்ப்பையும் கொடுத்திருக்கிறது. அர்ஜூன் டாங்களே முதல்
தோழி கவிதாமகாஜன் வரை என் நட்பு வட்டம் விரிவடைந்திருக்கிறது.
உலகின் எந்த ஒரு மாற்றமும் இந்தப் பெருநகர வாழ்க்கையை
உடனே பாதிக்கும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
உலகமயமாதலின் வாசலாக இருக்கும் மும்பை பெருநகரம்
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஏற்படுத்தி இருக்கும்
மாற்றங்களை அவலங்களை மாறிவரும் வாழ்வின் மதிப்பீடுகளை
அதன் பாதிப்புகளை நான் பார்க்கிறேன். அனுபவிக்கின்றேன்.
அதை எனக்குத் தெரிந்த வகையில் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
எப்போதும் என்னை சுயவிமர்சனம் செய்து கொள்ள தயாராக
இருக்கின்றேன்.
"காலியானப் பாட்டில்" " அறிமுகம்" என்ற சிறுகதைகள் எல்லாம்
அப்படியான சுயவிமர்சனத்திலிருந்து வந்தவை தான்.
பன்னாட்டு வங்கி வேலையும் இப்பெருநகர வாழ்க்கையும் இச்சூழலில் வாழும் பெண்களைப் பற்றிய புரிதலை
அவர்களின் ஏக்கங்களை இயலாமையை என் கதைப்பாத்திரங்களாக்கியது.
மும்பையின் வாழ்விடங்களைப் பற்றி நாஞ்சில் நாடன் எழுதியிருப்பது
கற்பனை அல்ல. இடம் என்ற கருப்பொருள் இங்கே மனிதர்களின்
வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் உணர்வுகளையும் சமூகத்தின் ஒழுக்கநியதிகளையும் கடைப்பிடிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன.
மும்பையில் நண்பர் ராஜாவாய்ஸ் அவர்கள் தமிழ்ப்போஸ்ட்
என்ற வாரப்பத்திரிகையை ஆரம்பித்தார். அந்த ஆசிரியர் குழுவில்
நானும் இடம்பெற்றேன். தனியறை சிறுகதைகளை அந்த இதழில்தான்
தொடர்ந்து 26 வாரங்கள் எழுதினேன்
உண்மைகளை வெளிக்கொண்டுவருவதில் முக்கியப்பங்காற்ற வேண்டிய ஊடகங்கள் இன்றைக்கு என்ன செய்துக்கொண்டிருக்கின்றன என்பதை
சமூக அக்கறையுடன் கவனித்து வருகின்றேன். ஒவ்வொரு செய்திகளுக்குப் பின்னாலும் இன்னொரு செய்தியும் சொல்லப்படாமல் மறைக்கப்படுகின்றது. paid news இன் செய்தி அதிர்வலை வட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
அதனால் தான் பொதுஜன அபிப்பிராயங்களுடன் ஒத்துப்போவதோ
அல்லது கொண்டாடுவதோ சாத்தியமில்லை. இந்தச் சூழலே பல்வேறு அரசியல் நிகழ்வுகளையும் அது குறித்த கட்டுரைகளையும் எழுத
வேண்டிய இக்கட்டான சூழலை என் போன்றவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. அண்மையில் எழுதிய சச்சினின் பாரதரத்னாவை நிராகரிக்கும் ஓர் இந்திய அன்னை என்ற கட்டுரை எல்லாம் இவ்வகைப்பட்டதுதான்.
ஜனரஞ்சகமான இதழ்கள் மேலும் குறிப்பிட்ட தமிழ்நாட்டின் சில இதழ்களில்
எழுதினால் மட்டுமே அதிகமான வாசகர்களைச் சென்றடைய முடியும்
என்றும் எழுத்தாளர் என்ற முத்திரைக் கிடைக்கும் என்றும் இப்போதும்
என் நட்பு வட்டத்தில் சிலர் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
முன்னது உண்மை ஆனால் அடுத்து அவர்கள் சொல்வது ?
இதை என் எழுத்துகள் உடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அவர்கள் என் மீது கொண்டிருக்கும் அக்கறைக்கு நன்றி சொல்வது தவிர
இது குறித்து எனக்கு மெனக்கெட நேரமில்லை. எழுதியதை என்னளவில்
கணினி மூலமாக எடுத்துச் செல்வது எனக்கு எளிதாகவும் வசதியாகவும்
சமரசமின்றி என் கருத்துகளுடன் என் எழுத்துப் பயணத்தைத் தொடர
ஏதுவாகவும் இருக்கிறது. அதனாலேயே அதிகமாக இணைய இதழ்களில்
எழுத ஆரம்பித்தேன். எனக்கான உலகம் இப்படித்தான் விசாலமாகிக்கொண்டே
இருக்கின்றது.
பொதுவாக எழுத்தாளர்கள் எழுதி முடித்தப்பின் அவர்களுக்கும் அவர்கள்
கதை மாந்தர்களுக்குமான தொடர்பு அற்றுப்போய்விடுவதாகவும்
அதன் பின் மூன்றாவது மனிதராக நின்று பார்ப்பதாகவும் பலர் சொல்லியிருப்பதை வாசித்திருக்கின்றேன். ஏனொ நான் அப்படி இல்லை,
என் கதைமாந்தர்கள் எப்போதும் என்னுடன் வாழ்ந்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள். எழுதி வெளிவந்தப்பின்னரும் அவர்களுடனான
என் தொடர்பு அறுபடுவதே இல்லை. அதன்பின்னரும் அவர்கள் என்னுடன்
உரையாடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் .. பண்பாட்டு முகமூடி அணிந்து
நான் அவர்களின் கதைகளில் விளையாடி இருக்கும் சித்துவிளையாட்டுகளைக்
கண்டு என்னை அவர்கள் விழித்திருக்கும் போதும் தங்கள் மவுனமொழியில் விமர்சனம் செய்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
எழுதியது துளி. எழுதாமல் இருப்பது கடல்போல என்
னுடன் என் முன்.
நான் நிற்பதோ பத்திரமாக கடற்கரையில்.
என்ன செய்வது சொல்லுங்கள்,
என் கால்களை நனைக்கும் அலைகளின் ஈரத்துடன் நானும் என் எழுத்தும்.
பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி,
நடுக்கடலுக்குப் போக வேண்டும்.. ஆழ்கடலில் எரிமலைகள் இருக்கின்றதாமே
அதை என் எழுத்துக்கள் சந்திக்கும் நாள் வருமா, தெரியாது.
இதுவரை எழுதியது எல்லாம் அந்த ஒரு பயணத்திற்கான ஒத்திகைதான்.
#புதியமாதவி
#puthiyamaadhavi
No comments:
Post a Comment