தாராவியும் நானும்
ஊரிலிருந்து ட்ரெயினில் வரும்போது பக்கத்திலிருப்பவர்
" பம்பாயில எங்க" என்று கேட்டால் தாராவிக்காரர்கள்
மகிம், சயான், மதுங்கா, செம்பூர் இப்படி எதாவது சொல்வோமே தவிர
மறந்தும் கூட எங்கள் தாராவி முகவரியைச் சொல்லமாட்டோம்.
இன்றும் இந்த நிலை முழுவதுமாக மறைந்து விடவில்லை!
இச்சூழலில்தான் தாராவியிலிருந்து முதன் முதலாக வங்கி வேலைக்கு அதுவும் பன்னாட்டு வங்கிக்கு வேலைக்குச் சென்ற முதல் பெண்ணாக நான்.. !
அப்போது 1980.
வி.கே. வாடியில் எங்கள் வீடு. என் அப்பாவின் தாத்தா காலம் முதல் தாராவிதான் எங்கள் வாழ்விடம்.
அப்பாவின் தாத்தா நரியமேஸ்திரி( நரசிம்ம மேஸ்திரி) அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குதிரை வண்டியில் பயணித்தவர். மகாத்மா புலேவின் தாக்கத்தில் தாராவி தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய திருநெல்வேலியிலிருந்து தான் அழைத்துவந்து தமிழ்க் குடும்பங்களின் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் நிறுவினார்.
இச்செய்தியை 'போல்டு இந்தியா' மும்பை பத்திரிகையில்
ஞாயிறு மலரில் தொடர் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த ஆசிரியர் வழக்குரைஞர் இராஜமாணிக்கம் சார் அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
அப்பாவின் அப்பா அதே பிசினஸ் தொடர்ந்தார். செல்வ செழிப்பான வாழ்க்கை. அப்போது முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப்போர் காலம் . இரண்டு முறை அவர் கப்பல் சேதமடைந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டது வாழ்க்கை.
முதல்மனைவி என் பாட்டியும் அம்மை வந்து இறந்தும் போனார். பாட்டியின் தங்கையைப் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் ..இந்த அதிர்ச்சியில் அவர் மரணம். பிள்ளைகள் வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்துவிட்டது.
என் அப்பா தன் பிழைப்புக்காக இலங்கை கொழும்பில் வேலை செய்தபோது தாத்தாவை அறிந்த ஒரு ஆங்கிலேயரை பேட்மிட்டன் மைதானத்தில் பந்து எடுத்து கொடுக்கும் வேலைப்பார்த்த சிறுவனாக இருந்த என் அப்பா சந்திக்கிறார்.
அந்த ஆங்கிலையர்தான் அப்பாவை இரவுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தவர்.
அப்பாவின் தம்பிக்கு இந்த வாய்ப்பு இல்லை. அதனால் அவர் அதிகம் படிக்கவில்லை.
அப்பாவும் அப்பாவின் தம்பியும் மீண்டும் தாராவியில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.
என் சித்தப்பா பி.எஸ். கோவிந்தசாமி அவர்கள் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்கத்தில் பல பொறுப்புகளில் இருந்தவர்.தன் அப்பா செய்த அதே தோல் பதனிடும் தொழிற்சாலை ( tannery business) நடத்தினார். குடியரசு கட்சி வேட்பாளராக தேர்தல் களம் கண்டவர். தோற்றுப் போனார். தன் 42 வயதில் மாரடைப்பில் இறந்தும் போனார்.
அப்பா பி.எஸ் வள்ளிநாயகம் வங்கி வேலையில் இருந்தார் . .
தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர். அறிஞர் அண்ணா மட்டுமே அப்பாவின் அரசியல் தலைவர். தன் சம்பாத்தியத்தில் பெரும் பங்கை எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி திமுக அரசியலுக்காக செலவு செய்தவர். ஆனால் அதைக் கொண்டு தனக்கோ தன் வாரிசுகளுக்கோ ஒரு சான்றிதழ் வாங்குவதற்கு கூட திமுக அரசின் கதவுகளைத் தட்டியது இல்லை. அவர் பிள்ளைகளான நாங்களும் இன்றுவரை அப்படித்தான் வாழ்கிறோம்.
எனக்கும் தாராவிக்குமான உறவு, பிணைப்பு என்பது மற்றவர்களைப் போல அல்ல. அது தாராவி யின் ஒவ்வொரு மாற்றங்களுடனும் பின்னிப் பிணைந்தது.
இன்றைய இளைய தலைமுறைக்கு இதைச் சொல்ல வேண்டிய ஒரு நேரம் வந்திருக்கிறது.
போராட்டமான என் வாழ்க்கை..
என் மகன் பிறந்து இரண்டு வயது வரை தாராவி சால்களில் ( ராமர் வாடி& வாழக்கட்ட வாடி) வாடகை வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை..
அனைத்துமே , இதற்கெல்லாம் தொடர்பே இல்லாமல் ஒரு பன்னாட்டு வங்கியில் (HSBC) வேலை பார்த்த அனுபவம்...
இப்போது பாண்டூப்பில் எங்கள் வீடு..
இதில் ஒவ்வொன்றும் எங்கள் உழைப்பு.
நானும் என் சங்கரும் எங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது அவரிடம் இருந்த ஒரே சொத்து ஒரு மர்ஃபி ரேடியோவும் அவர் வேலையும்.
என்னிடம் என் வேலையும் பத்துப் புடவைகளும்.
தாராவியில் முதன்முதலாக ஃப்ரிட்ஜ் நான்தான் ஆபிஸில் லோன் போட்டு வாங்கினேன். அப்போது அதில் ஐஸ் எடுக்கவும் பார்கவுமே பலர் வருவார்கள்.வாழ்க்கையின் பல கடினமான நாட்களை வெளியில் காட்டாமல் கடந்து வந்திருக்கிறேன்.
இப்போதும் புன்னகையுடன் வலிகளை மறைத்து மறந்து.. பயணிக்கிறேன்.
என் எழுத்து என் வாழ்க்கை என் தாராவியைக் களமாக கொண்டிருப்பதன் பின்னணி என்பது புதிய மாதவி என்ற தனி நபரின் கதை அல்ல. அது ஒரு காலத்தின் வரலாறு. அந்தக் காலத்தின் பிரதியாக நானும் என் எழுத்துகளும்.
( புகைப்படம் அப்பாவும் அண்ணாவும். மும்பை நிகழ்வு)
#புதியமாதவி
#தாராவி

No comments:
Post a Comment