Friday, November 7, 2025

இணைய யுகத்தில் பெண்ணியம்

 இணைய யுகத்தில் பெண்ணியம்

💥💥




பெண், பெண்மொழி,  பெண் அரசியல்

💥💥💥💥இந்திய சட்டப்பிரிவுகளில் மிகவும் தவறுதலாக பயன்படுத்தப்படுவது 498A 😭

  பெண்ணியம் அனைத்தும்  நேரடியாகவோ மறைமுகமாகவோ பெண்ணுடலுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. பெண்ணுடல் உற்பத்தியின் பெரும்சக்தியாக இருப்பதால் அது அதிகார மையத்திற்கு ஆதிகாலம் முதல் அச்சுறுத்தல் தருகிறது. வால்காவிலிருந்து கங்கை காவேரி வரை பல்வேறு மாற்றங்களை உள்வாங்கிக் கொண்ட பெண்ணுடல் இன்றைய கணினி யுகத்தில் கைபேசி ஆன்லைன் வர்த்தக உலகத்தில் எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது ?, இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? என்பதைக் கவனிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். 

 பெண்ணியம், பெண் உரிமை குறித்தப் புரிதல் இன்றைய இளைய தலைமுறைக்கு சரியான வகையில் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. 

 பெண்ணியம் பெண் உரிமை என்று பேசிக்கொண்டு அதனால் தங்களுக்கு கிடைத்திருக்கும் அனைத்து சுதந்திரங்களையும் அனுபவிக்கும் இன்றைய பெண்கள் ஒரு விஷயத்தில் மட்டும் முழுக்கவும் ஆண்மைய சிந்தனைக் கொண்டவர்களாவே இருக்கிறார்கள். வீட்டு வேலையிலிருந்து குழந்தை பராமரிப்பு வரை இருபாலாருக்கும் சம உரிமையும் பங்களிப்பும் பொறுப்பும் இருக்கிறது என்பதைப் பெண்ணியம் வலியுறுத்துகிறது, அதை இன்றைய பெண்கள் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால், பொருளாதாரம் என்று வருகிறபோது மட்டும், “சம்பாதிப்பது புருஷ லட்சணம், குடும்பச்செலவு ஆணின் பொறுப்பு, என்னையும் என் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியது – (இந்த இடத்தில் பொருளாதார ரீதியாக கவனித்துக் கொள்வது என்று வாசிக்க வேண்டும்) ஆணின் கடமை என்ற கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். 

 அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் அவனுடைய வாரிசு. இந்த இடத்திலும் அவன் சொத்துகளின் வாரிசு என்று வாசிக்க வேண்டும்!  

 ஈன்று புறம்தருதல் மட்டும்தான் அவள் கடன் என்று நினைக்கிறார்கள். ‘வினையே ஆடவர்க்குயிரே’ என்ற அதே 2000 ஆண்டு பழமையான ஆண்மைய சிந்தனையை வாழ்க்கையின் பொது அறமாக முன் வைக்கிறார்கள். இவர்கள்  பொருளாதர சுதந்திரம் கொண்ட பெண்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.  

 கூட்டிக் கழித்துப் பார்த்தால், இன்றைய பெண்கள் தங்களுக்கும் தங்கள் செயல்பாடுகளுக்கும் எதெல்லாம் உதவியாக ஆதரவாக இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு பெண்ணீய விடுதலையைப் பேசுகிறார்கள். குடும்பம், வாழ்வியல்  விழுமியம் , ஆண் பெண் உறவின் நம்பிக்கை இதெல்லாமே இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு தங்களுக்கு பாதிப்பு வரும்போது சம உரிமை சம பங்களிப்பு என்பதை புறம்தள்ளிவிட்டு பழைய மரபான ஆண்மைய கருத்துருவாக்கங்களை  பயன்படுத்துகிறார்கள். இரட்டை மன நிலையில் வாழ்கிறார்கள். இதில் விழி பிதுங்கி நிற்கிறது இன்றைய ஆண் பெண் உறவு.

 பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப் பட்ட சட்டங்களில் மிக முக்கியமானது சட்டப்பிரிவு 498A. குடும்ப வன்முறையிலிருந்து பெண்ணைப் பாதுகாக்கும் மிகச்சிறந்த சட்டப்பாதுகாப்பு இச்சட்டம். ஒவ்வொரு இந்தியப் பெண்ணுக்கு இது வரப்பிரசாதம். ஆனால் நடைமுறையில் இச்சட்டம் மிகவும் தவறுதலாக பெண்களாலேயே பயன்படுத்தப்படுகிறது என்கிறது உச்ச நீதிமன்றம்  . இந்திய சட்டப்பிரிவுகளில் மிகவும் தவறுதலாக பயன்படுத்தப்படுவது 498A என்பது உண்மையில் கவலை அளிக்கிறது.

 திருமணம் என்பதும் ஆண் பெண் உறவு என்பதும் காதல் நம்பிக்கை பரஸ்பர புரிதல் என்ற விழுமியங்களை இழந்துக் கொண்டிருக்கிறது.  

 நாமிருவர் நமக்கிருவர் என்பது கடந்தக் காலமாகி நாமிருவர் நமக்கு ஒருவர் என்ற மினி குடும்பங்களின் வாழ்க்கை நிலையில் பல வகையான சிக்கல்கள் ஏற்படுகின்றன. கணவனின் பெற்றோரைக் கவனிக்க வேண்டியது ஒரு மனைவியின் கடமை என்று போதிக்கப்பட்ட நம் குடும்ப அமைப்பில் ஒரே பெண்ணைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கி நல்ல வேலையில் இருக்கும் மனைவியின் பெற்றோர்களைக் கவனிக்க வேண்டியதும் ஆதரவு தர வேண்டியதும் கணவனின் கடமையும்தான் என்பது சொல்லப்படவில்லை. அப்படியே ஓர் ஆண் தன் மனைவியின் பெற்றோரைக் கவனித்துக் கொண்டாலும் அது அவன் கடமையாக கருதப்படுவதில்லை. “எதோ கருணையின்பாற்பட்டு ஆண் செய்வதாக’  நம் சமூகம் நினைக்கிறது. இதன் அடிப்படை உளவியல் சிக்கல்கள் காலப்போக்கில் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் மன உளைச்சலைக் கொடுக்கின்றது. இதன் விளைவாகவே ஒரு பாதுகாப்பின்மை என்ற உளவியல் சிக்கலுக்குள்ளாகி பெண்ணின் பெற்றோர்கள் அப்பெண்ணின் வாழ்க்கையில் அதிகமாகத் தலையிடுகிறார்கள். மகள் எப்போதும் தங்கள் மகளாகவே இருக்க வேண்டும் என்ற ஆசை பேராசை அல்ல. ஆனால் அதற்காக அவள் ஒருவனின் மனைவியாகவோ மருமகளாகவோ ஏன் அவள் குழந்தைகளுக்கு தாயாகவோ இருப்பதை மறந்துவிடுகிறார்கள். பேசித் தீர்க்க வேண்டிய சில்லறை விஷயங்கள் கூட போலீஸ் கோர்ட் என்று வருவதற்கு காரணமாகிவிடுகிறார்கள். 

 ஆண் பெண் உறவு, கணவன் மனைவி உறவு என்பது அவர்கள் இருவரின் அந்தரங்கம். அவர்களின் வாழ்க்கை, அவர்களின் காதல் காமம் அனைத்தும் அவர்கள் மட்டுமே அறிந்தவை. உணர்ந்தவை. ஆனால் மூன்றாவது மனிதர்கள் தலையிடும்போது ஈகோ தலை தூக்குகிறது. யார் யாரைக் கடித்துக் குதறுவது? என்ற வன்மத்துடன் அலைகிறார்கள். 

 யாருடைய தலையீடும் இல்லாமல் ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கை குறித்த முடிவுகளை ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு எடுக்க வேண்டும். அம்மாதிரியான முடிவுகள் மட்டும்தான் அப்பெண்ணின் எதிர்கால வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். மற்றவை எல்லாம் கண நேர ஈகோதான்.   நீர்க்குமிழி போல!  

 ஆண் பெண் உறவில் திருமணம் தாண்டிய பாலியல் உறவு என்பது கிரிமினல் குற்றமல்ல ( Adultery is no longer a criminal offence in India) என்று 2018ல் உச்ச நீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் அறிவித்தப்போது ஆணாதிக்க சமூகத்திற்கு விழுந்த அடி என்று என்னைப் போன்றவர்கள் கொண்டாடினோம். ஆனால் நடைமுறையில் இது ஏற்படுத்தி இருக்கும் தலைகுனிவுகள் மனித வாழ்வின் விழுமியங்களைச் சிதைத்து சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரின் எதிர்காலத்தை மட்டுமல்ல அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது.

 திருமணம் தாண்டிய பாலியல் உறவை திருமண உறவில் இருந்துக் கொண்டே ஆணோ பெண்ணோ நியாயப்படுத்திவிட முடியாது. இன்றைக்கு

ஆன்லைன் டேட்டிங்க் இணைய தளங்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதற்கான தளங்களாக இல்லை. டிண்டர், பம்புல், ஹின்ஞ், , அஸ்லி, க்வாக் க்வாக் ( Tinder, Bumble, Hinge, Aisle, QuackQuack) தளங்களில் நுழைந்தப் பெண்கள் மிக எளிதாக ஆணின் பாலியல் இச்சைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அதன் விளைவுகள் அவர்களின் எதிர்காலத்தைக் கேள்வி குறியாக்கிவிடுகின்றன. இது என்னவோ இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டும் நடப்பதாக நினைப்பதற்கில்லை. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்திருப்பதில் இந்தியாவிலேயே காஞ்சிபுரம் மாவட்டம்தான் முதலிடத்தில் இருப்பதாக அஸ்லி மடிசன் (Ashley Madison) ஆன்லைன் டேட்டிங் தளம்  இந்த ஆண்டு (2025) தரவுகளின் படி புள்ளிவிவரம் தருகிறது. ! 

 பெண்ணுடல் பெண் உரிமை. அது விற்பனைக்கானதல்ல. விளம்பரங்களிலோ கண நேர ஆசை வார்த்தைகளிலோ மயங்கிவிடும் அளவுக்கு பெண் பலகீனமானவளாக, தன் சுயமிழந்தவளாக இருக்க கூடாது. 

 பெண்ணியம் என்பது பெண் உரிமை மட்டுமல்ல, அது பாலியல் சமத்துவம். இதை ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய ஆணும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

 என்னைக் கைதியாக்கியதில்

 நீயும் கைதியானதை 

 அறியாமலேயே

 காத்திருக்கிறாய் சிறைவாசலில்.

 உள்ளே  நானும்  வெளியே நீயுமாய்

 ஒரே வீட்டில் பூட்டப்பட்டிருக்கிறோம்.

 என் உரிமைப்போரின்

 விடுதலைப் பரிசாக

 அன்பே …

 உனக்கும் கொடுப்பேன்

 கட்டுகள் அறுத்து

 பறப்பதன் சுகத்தை.!.

******

 புதியமாதவி,

 நன்றி : இந்து தமிழ் திசை.26/10/2025

நன்றி : Brindha Srinivasan


No comments:

Post a Comment