தாவர மண்டலத்தின் அரசியல்
காலனி ஆட்சி கால த்தில் மிகவும் முக்கியமானது.
தாவர மண்டலத்தின் அரசியல்
காலனி ஆட்சி கால த்தில் மிகவும் முக்கியமானது.
தமிழ் சினிமாக்களின் முதலிரவு காட்சிகள்மிகவும் பிரபலமானவை. அதுவும் அந்தக் காலத்தில் கண்ணதாசன் பாடலோடு பூவால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலைச் சுற்றி அவர்கள்
பாடுவதும் அதை ரசித்துப் பார்த்த ஒரு தலைமுறை இருந்தது என்பதும்
உண்மைதானே…
ஆனால் சற்றொப்ப 2500 ஆண்டுகளுக்கு முன்
இதே காட்சியை சங்க இலக்கியத்தில் அன்றைய புலவன் எப்படி காட்சிப்படுத்தி இருக்கிறான் என்று வாசிக்கும்போது..ஏற்படும் வியப்பு ..
ஆஹா.. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் ரசித்து ரசித்துகொண்டாடி இருக்கிறான்யா நம்ம ஆட்கள்!
“ஆட்டுக்கறி பிரியாணி சாப்பாடு.. போட்டிருக்கிறார்கள் . ( திருமணத்தில்
சைவ உணவு விருந்து வழக்கம் பிற்காலத்தில் தான் வந்திருக்கிறது) மணமகள் புத்தாடை அணிந்திருக்கிறாள்.
வாராயோ தோழி வாராயோ என்று மணல் பரப்பிய மணப்பந்தலுக்கு வாகை மகளிர் அழைத்துவருகிறார்கள்.
அன்று திங்கள் உரோகிணியைக் கூடும் முழு நிலா நாள்.
மணமகன் அவளுக்கு வாகைத்தளிர் அருகம்புல் மல்லிகை மொட்டு மூன்றும்
சேர்த்து நூலில் கட்டிய மாலையை (தாலியாக) அணிவிக்கிறான். (அட டா.. இன்னிக்கும் தாலிக்கட்டும்
போது அதில் பூ கண்ணியைத் தொங்கவிடுவது இதனால் தானா! இதையே பின்பற்றி இருக்கலாம். தங்கம்
விலையைக் கட்டுப்படுத்தி இருக்கலாம்!!)
இதோடு நிறுத்திவிடவில்லை புலவன்..
அந்த இரவு காட்சிக்கு வருகிறான்.
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற'' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி
பரூஉப் பகை
ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர்
ஆய்மலர் வேய்ந்த
இரும் பல்
கூந்தல் இருள் மறை ஒளித்தே.
(அகம் 136)
யாரும் கரித்துக்கொட்ட முடியாத கற்பினை
உடையவளே! என் உயிரோடு ஒன்றுபட்டுக் கிடப்பவளே! துவளாத புத்தாடையால் உடம்பு
முழுவதையும் நீ போர்த்திக்கொண்டிருப்பதால் உடல் புழுங்கி உன் நெற்றியில் வியர்வை
கொட்டுகிறது. உடல் காற்றாடட்டும், உன் இடையைத் திற” என்று சொல்லிக்கொண்டு அவள் ஆடையைக் களைந்தேன். அப்போது அவள்
உறையிலிருந்து எடுத்த வாள் போல மின்னினாள். தன்னை மறைத்துக்கொள்ளத் தெரியவில்லை. ‘ஒய்’ என்று நாணினாள். என்னை வணங்கினாள். பருத்து மூடிப் பகையுடன்
கிடந்த ஆம்பல் மலரானது தன் சிவந்த தன் இதழ்களைத் திறந்து, வண்டு தேனை உண்ணும் மலராக விரிவது போல, தன்னை வேய்ந்திருந்த கூந்தலுக்குள் அவள்
தன்னை ஒளித்துக்கொண்டாள்…”
என்ன ஒரு காட்சி..
அவள் நாணத்தை “ஒய்’ என்று நாணினாள்
என்று சொல்கிறானே.. இதுதான்யா அவன் காட்சிப்படுத்தியதின் உச்சம்.
நம் காமிராவுக்குள் இதெல்லாம் அகப்படமுடியாதுதான்!!!
#sangamLit_puthiyamaadhavi
நாற்பதுகளைத் தவறவிட்டவர்கள் அறுபதுகளில் நிம்மதி இழக்கிறார்கள். என்னைப் போல.
ஒவ்வொரு பெண்ணுக்கும் நாற்பது முதல் 50 வரை முக்கியமான பருவம். அதை என்ன காரணம் கொண்டும் யாருக்கும் தியாகம் செய்து விடாதீர்கள். கொஞ்சம் தன்னலத்துடன் இருங்கள், ஆம்.. அதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது.
இங்கே குடும்பம் என்பதும் உடன்பிறப்புகள் உறவுகள் என்பதும் எம் தந்தையர் காலத்தின் வாழ்வியல் விழுமியங்களக் கைவிட்டு வெகுதூரம் வந்துவிட்ட து. பாசம், அரவணைப்பு, எல்லோரையும் சேர்த்திழுத்துக்கொண்டு பயணிக்க நினைத்த விழுமியங்கள் எல்லாமே அர்த்தமிழந்துவிட்டன. திரும்பிப்பார்க்கும் போது நம்மை இன்று அவமதிக்கும் அவர்கள் புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கடமை பாசம் என்பதெல்லாம் ரொம்பவும் கேலிக்கூத்தாகிவிட்டது,, ......
நாற்பதுகளில் விழித்துக்கொள்ளுங்கள். உங்களை , நீங்கள் திருமணம் ஆனவர் என்றால் உங்கள் பிள்ளைகள் உங்கள் கணவர் இந்த முதல் வட்ட த்திற்கு மட்டும் அதிக நேரம் ஒதுக்குங்கள் .
உங்கள் பணம் மட்டுமல்ல,
உங்கள் நேரம் விலைமதிப்பில்லாதது.
உங்கள் உழைப்பு விலை மதிப்பில்லாதது. அதை யாரும் சுரண்டுவதற்கு நீங்களே காரணமாக இருக்காதீர்கள்.
பாசம் கடமை என்ற பெயரில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்!
உங்கள் சுயம் காயப்படாமல் காலமெல்லாம் நீங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதை உங்கள் நாற்பதுகள் தான் தீர்மானிக்கின்றன.
நாற்பதுகளைத் தவறவிட்டு என்னைப் போலவும் என் எழுத்துகளைப் போலவும் அனாதையாகிவிடாதீர்கள்.
என் பிள்ளைகளுக்கும் இதையே என் அனுபவப் பாடமாக விட்டுச் செல்கிறேன். எல்லாம் மாறுகிறது. நாமும் மாற வேண்டும்.
கீதாஞ்சலியை முதலில் தமிழாக்கத்திலும்
அதன் பின் ஆங்கிலத்திலும் வாசித்திருக்கிறேன். கண்ணதாசனின் புஷ்பாஞ்சலி
வாசித்தப்பிறகு கீதாஞ்சலி வாசித்தேன். அத்துடன் தேவாரம் திருவாசகம்
ஆண்டாள் பாடல்கள் ,
மீரா பாடல்கள், சூஃபி பாடல்கள் வாசித்த
பிரமையில் ஆழ்ந்திருக்கும் வாசிப்பு மனம்
கீதாஞ்சலியை ஓர் அதிசயமாக கொண்டாடவில்லை என்பதுதான் உண்மை.
இதை வெளியில் சொல்வதற்கு அச்சப்பட்ட காலமுண்டு. !
ஆனால் தாகூரின் கீதாஞ்சலிக்கு தான்
நோபல் பரிசு கிடைத்துள்ளது. மேற்கத்திய
படைப்புலகத்திற்கு கீதாஞ்சலி கவிதைகள்
இந்திய படைப்புலகம் குறித்து மாபெரும் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும்.
இது குறித்த கட்டுரை ஒன்றை இம்மாதம் புதிய கோடாங்கி இதழில் சா.து. அரிமாவளவன் “பாரதியும்
தாகூரும் ஒப்பாய்வு’ என்று எழுதி இருக்கிறார்.
தாகூரின் கவிதைகளை அயர்லாந்து நாட்டுக்கவி W B Yates செழுமைப்படுத்த
உதவினார் என்ற குறிப்புள்ளது. அவரே இக்கவிதைகளுக்கு முன்னுரையும் வழங்கினார்.
நோபல் பரிசின் கதவுகளைத் தட்டுவது தாகூரின் கீதாஞ்சலிக்கு எளிதானது.
நம் மகாகவி பாரதிக்கு..?
நம் பாரதி வங்கத்தின்
தாகூரை அறிந்திருந்தார். தாகூர் பாரதியை அறிந்திருந்ததாகத் தெரியவில்லை!
பாரதிக்கு நோபல் பரிசு கனவாகவே இருந்த து.
தனக்கு கிடைக்கவில்லையே என்று மட்டுமல்ல, தமிழுக்கு நோபல் பரிசு
கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் பாரதிக்கு இருந்திருக்கிறது.
“பாரதி நெல்லையில் தங்கியிருந்தப்போது இரவிந்தீர நாத் தாகூர்
மதுரை வந்திருக்கிறார் என்று அறிகிறார் பாரதி. மதுரைக்குப் போய் தாகூரை சந்திக்க விரும்புகிறார்.
எதற்கு?
“நான் தாகூரோடு பேசி
வென்று அவர் பெற்ற நோபல் பரிசைத் தமிழுக்குப் பெற்றுத்தர வேண்டும்…. நாம் சென்று தாகூரிடம்
ஒன்று சொல்வோம். நீர் வங்க க்கவிஞர், நான் தமிழ்க்கவி. விக்டோரியா மண்டபத்தில் கூட்டம்
கூட்டுவோம். உமது நோபல் பரிசை அவை முன் வையும். இருவரும் பாடுவோம், எனது பாட்டையே சீரியதென
மெச்சுவார்கள். உமது கையாலேயே அப்பரிசை எடுத்து தர வேண்டும் என்போம்”
பாரதி…..
உனக்கு ஓர் அயர்லாந்து கவிஞன் கிடைக்கவில்லை. உன்னை எடுத்துச்
செல்ல
வக்கத்துப்போனது எம் வாழ்க்கை!
“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
நான் தந்தை பெரியாரைக் கொண்டாடுபவள்.
பெண்ணியம் பேருந்தில் பயணிப்பதில்லையோ??!
குமரி முனையில் பெருந்தலைவர் காமராசருக்கு
மணிமண்டபம்/நினைவு மண்டபம் இருக்கிறது.
கிரீடத்தின் ஒளிவீச்சு
கண் கூசுகிறது.
விளக்கை அணைத்து விடு.
தொந்தரவு செய்யும்
என் தலையைத் துண்டித்து
மேசைமேல் வை.
முடிந்தால்
ஒரு கருப்புத் துணியால் மூடி வை.
கேள்விகள் அற்ற இருள்வெளி
உன் ராஜாங்கத்தின் வெற்றிமுரசு.
இப்போதும்
கழட்டி விடாதே உன் கிரீடத்தை.
மேசையிலிருக்கும் தலைக்கு
உன் கிரீடம் பொருந்தாது.
உண்மைதான்.
பொருத்தங்கள் பார்த்தா
புணர்கின்றன கிரீடங்கள்!
துண்டிக்கப்பட்ட தலைக்கும் கூட
ஆசைகள் வரலாம்.
அப்போது உன் கிரீடத்திற்கு
ஆபத்தும் வரலாம்.
ஜாக்கிரதை.
துடிக்கின்ற முண்டத்தைப் பார்.
துடிப்பு அடங்கி விடுவதற்குள்
அருகில் வா.
கிரீடத்தின் கூர்மையான பற்களால்
முண்டத்தின் காயத்தைக்
குத்திக்கிழித்து
ரத்தம் குடி
பசி தீரவில்லையா
முண்டத்தின் மேலாடையைக்
கிழித்து
தொங்கவிடு.
சீழ் வடியும் தொடை
நடுங்கிக் கொண்டிருக்கிறது.
அடுப்பில் சூடேற்று.
குடித்தக் குருதியைக்
கொப்பளித்து கொப்பளித்து
நெருப்பேற்று.
சீழ்ப் பிடித்த புண்களைக்
கொத்திக் கொத்தி
அழகுப்படுத்து.
அதிலிருந்து மலரும் புழுக்களை
படுக்கையில் சிந்தி விடாதே.
ஒவ்வொன்றும் தனித்தனி ருசி.
நாள்பட நாள்பட
புண்களின் ருசி அதிகரிக்கும்.
மறந்துவிடாதே
விடிவதற்குள் தலையை முண்டத்துடன் சேர்க்க.
இல்லையென்றால்
நீ வந்துப் போன அடையாளத்தை
துடைப்பது யார்?
ஹே..சென்னி மல்லிகார்ஜுனா
நான் நீ உயிர்
பிறவி துன்பம் பிரபஞ்சம்.
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்குச் சொந்தமே.
சிவ பார்வதி, ராமன் சீதை திருமண உறவுகளுக்கு எதிராக தாந்திரீகம் நிறுத்தி இருக்கும் உறவு கிருஷ்ணன் – ராதை.
ராதை ஏற்கனவெ திருமணமானவள்.
கிருஷ்ணனைவிட வயதில் மூத்தவள்.
அவளை இரவில் மட்டுமே அவன் சந்திக்கிறான் என்கிறது கீத கோவிந்தம்.
அவளோ வனம்.
அடர்வனம்.
மதுராவை நோக்கிய பயணத்தில்
அவன் கடந்து சென்ற வனம் அவள்.
அவளை அவனோ
அவனை அவளோ
கட்டுப்படுத்தவில்லை!
அதுதான் அவர்கள் உறவின் தனித்துவம்.
கிருஷ்ணன் அதிகாரத்திற்கு வருவதற்கு முன் கிருஷ்ணன் என்ற மனிதனை நேசித்தவள் ராதை. அவன் புல்லாங்குழல் காற்றுக்கு இசையைக் கொடுத்தவள் ராதை.
கிருஷ்ணனின் வாழ்க்கையில் ராதை மட்டும்தான் இசையாகவும் நடனமாகவும் இருக்கிறாள்.
அவள் அவனோடு மதுரா செல்லவில்லை.
அவள் அவளாகவே இருக்கிறாள்.
அவன் பயணத்தில் எதுவுமே வனமாகிவிடமுடியவில்லை.
வனத்தை எந்தக் கிருஷ்ணனும் ஆளமுடியாது..
மனித உறவுகளின் ஆழத்தையும்
அதில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஆசைகளையும்
யுகங்களின் காதலையும்
கட்டுக்கடங்காத காமத்தையும்
புனைவுகளின் ஊடாக மனிதன்
கட த்திக்கொண்டே இருக்கிறான் தோழி
நேற்று கிருஷ்ணனுடன் ராதை
இன்று அவனுடன் யட்சி.
கடலுக்குள் மூழ்கிவிட்ட து
அவன் அரியணையின் மதுரா.
மணலடியில் புதைந்துவிட்டது
அவன் புல்லாங்குழல்.
வெண்சங்குகளைத் தேடுகின்றன
அலைகள்.
போதும்... அரியணைகளுக்கு
தண்டனை கொடுத்தது போதும்.
அந்த இரவுகள் இன்னும்
மிச்சமிருக்கின்றன.
மறந்துவிடாதே.
உன் வனத்தின் இலைகளை
கடலில் மிதக்கவிடு ..தோழி.
அவன் மீண்டும் வருவான்.
ஆலிலைக் கண்ணன் அல்லவா..
அவன்..!
உங்கள் தொகுதி உங்கள் வேட்பாளர்
பலருக்கும் மறந்திருக்கும்.. ஒரு விருது அறிவிக்கப்பட்ட து.
ஆனால் அந்த விருதாளருக்கு அந்த விருது அவர்
எழுத்துகளுக்கான அடையாளமாக மட்டுமே இருந் த து.