Wednesday, September 1, 2021

முண்டம் துடிக்கிறது.

 


கிரீடத்தின் ஒளிவீச்சு

கண் கூசுகிறது.

விளக்கை அணைத்து விடு.

தொந்தரவு செய்யும்

என் தலையைத் துண்டித்து

மேசைமேல் வை.

முடிந்தால்

ஒரு கருப்புத் துணியால் மூடி வை.


கேள்விகள் அற்ற இருள்வெளி

உன் ராஜாங்கத்தின் வெற்றிமுரசு.

இப்போதும்

கழட்டி விடாதே உன் கிரீடத்தை.

மேசையிலிருக்கும் தலைக்கு

உன் கிரீடம் பொருந்தாது.

உண்மைதான்.

பொருத்தங்கள் பார்த்தா

புணர்கின்றன கிரீடங்கள்!


துண்டிக்கப்பட்ட தலைக்கும் கூட

ஆசைகள் வரலாம்.

அப்போது உன் கிரீடத்திற்கு

ஆபத்தும் வரலாம்.

ஜாக்கிரதை.


துடிக்கின்ற முண்டத்தைப் பார்.

துடிப்பு அடங்கி விடுவதற்குள்

அருகில் வா.


கிரீடத்தின் கூர்மையான பற்களால்

முண்டத்தின்  காயத்தைக்

குத்திக்கிழித்து

ரத்தம் குடி

 பசி தீரவில்லையா

முண்டத்தின் மேலாடையைக்

 கிழித்து

தொங்கவிடு.

சீழ் வடியும் தொடை

நடுங்கிக் கொண்டிருக்கிறது.

அடுப்பில் சூடேற்று.

குடித்தக் குருதியைக்

கொப்பளித்து கொப்பளித்து

நெருப்பேற்று.

சீழ்ப் பிடித்த புண்களைக்

கொத்திக் கொத்தி

அழகுப்படுத்து.

அதிலிருந்து மலரும் புழுக்களை

படுக்கையில் சிந்தி விடாதே.

ஒவ்வொன்றும் தனித்தனி ருசி.

நாள்பட நாள்பட

புண்களின் ருசி அதிகரிக்கும்.


மறந்துவிடாதே

விடிவதற்குள் தலையை முண்டத்துடன் சேர்க்க.

இல்லையென்றால்

நீ வந்துப் போன அடையாளத்தை

துடைப்பது யார்?


ஹே..சென்னி மல்லிகார்ஜுனா

நான் நீ உயிர்

பிறவி துன்பம் பிரபஞ்சம்.

No comments:

Post a Comment