தமிழ் சினிமாக்களின் முதலிரவு காட்சிகள்மிகவும் பிரபலமானவை. அதுவும் அந்தக் காலத்தில் கண்ணதாசன் பாடலோடு பூவால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலைச் சுற்றி அவர்கள்
பாடுவதும் அதை ரசித்துப் பார்த்த ஒரு தலைமுறை இருந்தது என்பதும்
உண்மைதானே…
ஆனால் சற்றொப்ப 2500 ஆண்டுகளுக்கு முன்
இதே காட்சியை சங்க இலக்கியத்தில் அன்றைய புலவன் எப்படி காட்சிப்படுத்தி இருக்கிறான் என்று வாசிக்கும்போது..ஏற்படும் வியப்பு ..
ஆஹா.. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் ரசித்து ரசித்துகொண்டாடி இருக்கிறான்யா நம்ம ஆட்கள்!
“ஆட்டுக்கறி பிரியாணி சாப்பாடு.. போட்டிருக்கிறார்கள் . ( திருமணத்தில்
சைவ உணவு விருந்து வழக்கம் பிற்காலத்தில் தான் வந்திருக்கிறது) மணமகள் புத்தாடை அணிந்திருக்கிறாள்.
வாராயோ தோழி வாராயோ என்று மணல் பரப்பிய மணப்பந்தலுக்கு வாகை மகளிர் அழைத்துவருகிறார்கள்.
அன்று திங்கள் உரோகிணியைக் கூடும் முழு நிலா நாள்.
மணமகன் அவளுக்கு வாகைத்தளிர் அருகம்புல் மல்லிகை மொட்டு மூன்றும்
சேர்த்து நூலில் கட்டிய மாலையை (தாலியாக) அணிவிக்கிறான். (அட டா.. இன்னிக்கும் தாலிக்கட்டும்
போது அதில் பூ கண்ணியைத் தொங்கவிடுவது இதனால் தானா! இதையே பின்பற்றி இருக்கலாம். தங்கம்
விலையைக் கட்டுப்படுத்தி இருக்கலாம்!!)
இதோடு நிறுத்திவிடவில்லை புலவன்..
அந்த இரவு காட்சிக்கு வருகிறான்.
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற'' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி
பரூஉப் பகை
ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர்
ஆய்மலர் வேய்ந்த
இரும் பல்
கூந்தல் இருள் மறை ஒளித்தே.
(அகம் 136)
யாரும் கரித்துக்கொட்ட முடியாத கற்பினை
உடையவளே! என் உயிரோடு ஒன்றுபட்டுக் கிடப்பவளே! துவளாத புத்தாடையால் உடம்பு
முழுவதையும் நீ போர்த்திக்கொண்டிருப்பதால் உடல் புழுங்கி உன் நெற்றியில் வியர்வை
கொட்டுகிறது. உடல் காற்றாடட்டும், உன் இடையைத் திற” என்று சொல்லிக்கொண்டு அவள் ஆடையைக் களைந்தேன். அப்போது அவள்
உறையிலிருந்து எடுத்த வாள் போல மின்னினாள். தன்னை மறைத்துக்கொள்ளத் தெரியவில்லை. ‘ஒய்’ என்று நாணினாள். என்னை வணங்கினாள். பருத்து மூடிப் பகையுடன்
கிடந்த ஆம்பல் மலரானது தன் சிவந்த தன் இதழ்களைத் திறந்து, வண்டு தேனை உண்ணும் மலராக விரிவது போல, தன்னை வேய்ந்திருந்த கூந்தலுக்குள் அவள்
தன்னை ஒளித்துக்கொண்டாள்…”
என்ன ஒரு காட்சி..
அவள் நாணத்தை “ஒய்’ என்று நாணினாள்
என்று சொல்கிறானே.. இதுதான்யா அவன் காட்சிப்படுத்தியதின் உச்சம்.
நம் காமிராவுக்குள் இதெல்லாம் அகப்படமுடியாதுதான்!!!
#sangamLit_puthiyamaadhavi
அடடா...
ReplyDelete