Thursday, May 28, 2026

புதல்வியர்

 உன் புதல்வியை

என் புதல்வி - என்றாய் .

அத்தருணம்

சிலிர்த்துப் போனது

உன் மழை அறியாத

யோனிக்காடு.

கார் மேகத்தின் தீண்டாத முத்தம்.

பற்றி எரியும் மின்னல் விருட்சம்.

நிலத்தில் விழும்போது

என் பாடலைப் பாடியதோ

உன் விதைகள்?

புணர்ச்சியின் உச்சம்

உன் வேர்களின் மொழியில்

பெருமூச்சாகி

உயிரில் கலந்ததோ ?

மலைத்தேனின் ருசி

அரண்மனையின் பசி தீர்த்ததோ?

அந்தப்புரம் அறியாத

குடிசையின் வாசனை.

உப்பு நீரைக் குடித்தாலும்

இனிக்கும் இளநீர்.

நிராகரிப்பின் ஆறாத காயங்கள்.

புதல்வியர் வாசிக்கும்

தந்தையின் சுயசரிதையில்

கிழிந்துப் போன சத்தியசோதனை.

பாறைகளை உருட்டிக் கொண்டு

பாய்ந்தோடும் காட்டாறு.

கபிலனின் காட்டுப்பூக்கள்

வாசத்தில்

நினைவுகளைப் பறிக்கிறது.

புதல்வியர் விழிப்பதற்குள்

கருவறைத் திறக்கிறேன்.

சூடிய பூக்களில்

உயிர்த்துளியின் மிச்சம்.