Monday, August 30, 2021

ராதையின் கண்ணன்

 ராதையின் நெஞ்சமே

கண்ணனுக்குச் சொந்தமே.



சிவ பார்வதி, ராமன் சீதை திருமண உறவுகளுக்கு எதிராக தாந்திரீகம் நிறுத்தி இருக்கும் உறவு கிருஷ்ணன் – ராதை.

ராதை ஏற்கனவெ திருமணமானவள்.

கிருஷ்ணனைவிட வயதில் மூத்தவள்.

அவளை இரவில் மட்டுமே அவன் சந்திக்கிறான் என்கிறது கீத கோவிந்தம்.


அவளோ வனம்.

அடர்வனம்.

மதுராவை நோக்கிய பயணத்தில் 

அவன் கடந்து சென்ற வனம் அவள்.

அவளை அவனோ

அவனை அவளோ

கட்டுப்படுத்தவில்லை!

அதுதான் அவர்கள் உறவின் தனித்துவம்.

கிருஷ்ணன் அதிகாரத்திற்கு வருவதற்கு முன் கிருஷ்ணன் என்ற மனிதனை நேசித்தவள் ராதை. அவன் புல்லாங்குழல் காற்றுக்கு இசையைக் கொடுத்தவள் ராதை. 

கிருஷ்ணனின் வாழ்க்கையில் ராதை மட்டும்தான் இசையாகவும் நடனமாகவும் இருக்கிறாள்.

அவள் அவனோடு மதுரா செல்லவில்லை.

அவள் அவளாகவே இருக்கிறாள்.

அவன் பயணத்தில் எதுவுமே வனமாகிவிடமுடியவில்லை.

வனத்தை எந்தக் கிருஷ்ணனும்  ஆளமுடியாது..


மனித உறவுகளின் ஆழத்தையும்

அதில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும்

ஆசைகளையும்

யுகங்களின் காதலையும்

கட்டுக்கடங்காத காமத்தையும்

புனைவுகளின் ஊடாக மனிதன்

கட த்திக்கொண்டே இருக்கிறான் தோழி 

நேற்று கிருஷ்ணனுடன் ராதை 

இன்று அவனுடன் யட்சி.


கடலுக்குள் மூழ்கிவிட்ட து

அவன்  அரியணையின் மதுரா.

மணலடியில் புதைந்துவிட்டது

அவன் புல்லாங்குழல்.

வெண்சங்குகளைத் தேடுகின்றன

அலைகள். 

போதும்... அரியணைகளுக்கு

தண்டனை கொடுத்தது போதும்.

அந்த இரவுகள் இன்னும்

மிச்சமிருக்கின்றன.

மறந்துவிடாதே.

உன் வனத்தின் இலைகளை

கடலில் மிதக்கவிடு ..தோழி.

அவன் மீண்டும் வருவான்.

ஆலிலைக் கண்ணன் அல்லவா..

அவன்..!

No comments:

Post a Comment