கீதாஞ்சலியை முதலில் தமிழாக்கத்திலும்
அதன் பின் ஆங்கிலத்திலும் வாசித்திருக்கிறேன். கண்ணதாசனின் புஷ்பாஞ்சலி
வாசித்தப்பிறகு கீதாஞ்சலி வாசித்தேன். அத்துடன் தேவாரம் திருவாசகம்
ஆண்டாள் பாடல்கள் ,
மீரா பாடல்கள், சூஃபி பாடல்கள் வாசித்த
பிரமையில் ஆழ்ந்திருக்கும் வாசிப்பு மனம்
கீதாஞ்சலியை ஓர் அதிசயமாக கொண்டாடவில்லை என்பதுதான் உண்மை.
இதை வெளியில் சொல்வதற்கு அச்சப்பட்ட காலமுண்டு. !
ஆனால் தாகூரின் கீதாஞ்சலிக்கு தான்
நோபல் பரிசு கிடைத்துள்ளது. மேற்கத்திய
படைப்புலகத்திற்கு கீதாஞ்சலி கவிதைகள்
இந்திய படைப்புலகம் குறித்து மாபெரும் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும்.
இது குறித்த கட்டுரை ஒன்றை இம்மாதம் புதிய கோடாங்கி இதழில் சா.து. அரிமாவளவன் “பாரதியும்
தாகூரும் ஒப்பாய்வு’ என்று எழுதி இருக்கிறார்.
தாகூரின் கவிதைகளை அயர்லாந்து நாட்டுக்கவி W B Yates செழுமைப்படுத்த
உதவினார் என்ற குறிப்புள்ளது. அவரே இக்கவிதைகளுக்கு முன்னுரையும் வழங்கினார்.
நோபல் பரிசின் கதவுகளைத் தட்டுவது தாகூரின் கீதாஞ்சலிக்கு எளிதானது.
நம் மகாகவி பாரதிக்கு..?
நம் பாரதி வங்கத்தின்
தாகூரை அறிந்திருந்தார். தாகூர் பாரதியை அறிந்திருந்ததாகத் தெரியவில்லை!
பாரதிக்கு நோபல் பரிசு கனவாகவே இருந்த து.
தனக்கு கிடைக்கவில்லையே என்று மட்டுமல்ல, தமிழுக்கு நோபல் பரிசு
கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் பாரதிக்கு இருந்திருக்கிறது.
“பாரதி நெல்லையில் தங்கியிருந்தப்போது இரவிந்தீர நாத் தாகூர்
மதுரை வந்திருக்கிறார் என்று அறிகிறார் பாரதி. மதுரைக்குப் போய் தாகூரை சந்திக்க விரும்புகிறார்.
எதற்கு?
“நான் தாகூரோடு பேசி
வென்று அவர் பெற்ற நோபல் பரிசைத் தமிழுக்குப் பெற்றுத்தர வேண்டும்…. நாம் சென்று தாகூரிடம்
ஒன்று சொல்வோம். நீர் வங்க க்கவிஞர், நான் தமிழ்க்கவி. விக்டோரியா மண்டபத்தில் கூட்டம்
கூட்டுவோம். உமது நோபல் பரிசை அவை முன் வையும். இருவரும் பாடுவோம், எனது பாட்டையே சீரியதென
மெச்சுவார்கள். உமது கையாலேயே அப்பரிசை எடுத்து தர வேண்டும் என்போம்”
பாரதி…..
உனக்கு ஓர் அயர்லாந்து கவிஞன் கிடைக்கவில்லை. உன்னை எடுத்துச்
செல்ல
வக்கத்துப்போனது எம் வாழ்க்கை!
“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
No comments:
Post a Comment