Thursday, June 30, 2022

சைபுன்னிஷா - சிவாஜி காதல்


 

அவள் முகலாய சாம்ராஜ்யத்தின் இளவரசி.
அவள் காதலித்த அவனோ இந்துத்துவ சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி.
இன்றுவரை இசுலாம் – இந்து எதிர் நிலைகளில்
நிறுத்தப்பட்டிருக்கும் அரசியலில் உயிருடன் வாழ்ந்து
கொண்டிருப்பவர் அவர்கள் இருவரும்.
அந்த முகலாய அரசன் ஒளரங்கசீப்.
அந்த இந்து அரசன் சக்கரவர்த்தி சிவாஜி.
 
ஆம்…
சக்கரவர்த்தி சிவாஜியின் வீரத்தை சாதாரண மனிதனைத் 
தாண்டிய ஒரு செயலாக விரல்கள் துண்டிக்கப்பட்ட 
அவள் தளபதி பேசுகிறான். அவன் அவளுக்கு உறவு முறையும் கூட.
அவளுக்கு “அந்த வீரன் எப்படி இருப்பான்? என்ற 
கற்பனை விரிகிறது.
அவனைப் பார்க்க அவள் மனம் ஏங்குகிறது.. 
அவளையும் அறியாமல் அவள் நினைவுக்கிடங்குகளில் அவன் சிம்மாசனமிடுகிறான். ஆட்சி செய்கிறான்.
எப்படியும் அவனைச் சந்திக்கவேண்டும்..
சிவாஜியை சிறைப்பிடித்து வருகிறார்கள். 
முக்காடு அணிந்து முகம் மறைத்திருக்கும் 
அவள் கண்கள் அவனைத் தின்று தின்று காதலின்
பசியாற்றிக்கொள்கின்றன. 
அப்போதும் அச்சப்படாமல் வீரத்துடன் 
தலை நிமிர்ந்து பேசிய அவன் உடல்மொழி 
அவள் இரவுகளைத் தொந்தரவு செய்கின்றது. 
அவளுக்குத் தெரியும்.. தன் தந்தையும்
 இசுலாமிய அரசனுமான ஒளரங்கசீப் 
 என்ன காரணம் கொண்டும் தன் காதலை 
ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது. 
 
ஆனால்.. காதல் என்பது காலம் காலமாக 
 நிறைவேறாத
நிறைவேற்ற முடியாத கனவுகளுக்குள் 
தன்னைச் சிறை வைத்துக்கொண்டு 
சித்திரவதையை அனுபவிக்கிறது என்பதும்.

 

 
 
இது ஒருதலைக்காதல் தான்.
அவள் கொண்ட காதல்.. அவனுக்கும் தெரியவருகிறது.
அவளுக்குத் தெரிந்தவர்கள் “ அவள் அறிவையும் 
போர் ஆற்றலையும் அவனிடம் சொல்லிப்பார்க்கிறார்கள். தேச ஒற்றுமைகளுக்காக இந்து தேசத்து இளவரசிகளைத்
 திருமணம் செய்து கொண்ட அக்பரின் கதைகள் 
கதைகள் அல்லவே. அதையும் அறிந்தவன் மட்டுமல்ல அவனும்.
 சிவாஜியும் எட்டு பெண்களைத் திருமணம் செய்து 
கொண்டவர்தானே. காரணம் தன்னைச் சுற்றி இருக்கும் 
சிற்றரசுகளோடு இணக்கமான உறவைப் பேண
 பெண்ணும் திருமணமும் கூர்மையான ஆயுதங்களாக
 இருந்தக் காலம் தானே..
இசுலாம் தழுவினால் தன் தந்தை மனம் மாறலாம் 
என்று காதல் பித்தில்
அவள் நினைத்திருக்கலாம்..
தெரியவில்லை.
 
ஆனால்.. திருமணம் என்ற உறவில் 
தொடர முடியாத தன் ஒருதலைக் காதலைக் 
கடைசிவரை வாழ்ந்து முடித்தவள் அவள்.
அவனே என் மணவாளன், 
அவன் அன்றி இந்த இப்பிறவியில் 
எவனுடனும் ‘நிக்காக்” இல்லை 
என்று வாழ்ந்து முடிந்துப்போனாள்.
தன் கடைசிக்காலங்களில் தன் பங்கு சொத்தை 
தன் தந்தையிடம் பெற்று அவள் கட்டிய மசூதியில்
 அவள் காதலை அடக்கம் செய்தார்கள்.
 
அவள் தான் காதலித்த அவனுடைய மகன் சம்பாஜியின்
 மனைவி மற்றும் மகனை முகலாயர்கள் சிறைப்பிடித்து 
அழைத்துவந்தப் போது தன் காதலனின்
வாரிசை , மகன் வழிப் பெயரன் சாகுவை (shahu) 
தன் அருகில் வைத்துக்கொண்டு அவனுக்கு 
ஆசிரியை ஆனாள். மொழிகள் கற்றுக்கொடுத்தாள். 
வாள் வீச்சும் குதிரை ஏற்றமும் போர் முறைகளும் 
அவளே கற்பித்தாள். அவள் மனசுக்குள் இருந்தக் 
காதலை இப்படியாக அவனுடைய வாரிசு உருவில் 
கண்டு அவள் வாழ்ந்து முடிந்துப்போனாள்..
 
இது கதையல்ல. இது வரலாறு பேசாத உண்மைக்காதல்..
இதில் சம்பந்தப்பட்ட இரு ஆண்களும் ஒளரங்கசீப் – சிவாஜி –
மத அரசியலின் அடையாளமாக அரசியல் செய்பவர்களுக்கு
இப்போதும் தேவைப்படுவதால்…..
இப்போதும் கூட அவள் தன் காதலை
வெளிப்படுத்திவிட முடியாமல்..
தடை செய்யப்பட்டிருக்கிறது.!!!!
 
அவள் பெயர் .. சைபுன்னிஷா
( Zebunnissa – Zeb-un-nisha)
அவள் சூஃபி கவிஞர் என்பதும் கூடுதல் தகவல். 
புனைபெயர் மக்ஃபி
இப்போது அவள் காதலின் இன்னொரு
பக்கத்தை இத்தகவல் உங்களுக்குப் புரியவைக்கும்..
 
“ஓ மக்ஃபி..
காதலின் பாதையில் நீ தனித்தேதான்
பயணித்தாக வேண்டும்.
உனக்குப் பொருத்தமானவர்கள் யாருமில்லை,
அது கடவுளாக இருந்தாலும்..!”
இந்த வரிகள் அவள் கவிதையிலிருந்து..
அவளிடம் என்ன சொல்லட்டும்
ஆம் ... சைபுன்னிஷா..
எப்போதுமே அறிவானப் பெண்களுக்கு
காதலர்கள் கூட வருவதில்லை. !

No comments:

Post a Comment