Saturday, January 9, 2021

இந்தியா ப்ரிட்ஜ்.. (India Bridge @ kutch)



இந்திய மகள் பாகிஸ்தானில் மருமகளாக..
அந்த பாகிஸ்தானி மகள் நம் வீட்டு மருமகளாக...
எல்லைக்கோடுகளைத் தாண்டி தொடரும் உறவுகள்..
.. இரவும் பகலும் படைவீரர்களின் காவல்..
"ஜெய் ஹிந்த்"
புகைப்படம் எடுக்காதீர்கள்.
புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை..
இம்மாதிரியான அறிவிப்புகளை பல இடங்களில்
கண்டும் வாசித்தும் கடந்து செல்வது யாருக்கும்
புதிதல்ல. இதை நானும் செய்கிறேன்.
நீங்களும் செய்திருப்பீர்கள்!
அதுவும் கைபேசியில் காமிரா வந்தப் பிறகு
இதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாமல் இருக்கிறது.
ஆனால்… அந்த இட த்தில் மட்டும் அவர்கள் சொன்னவுடன்
உடனடியாக எங்கள் காமிராக்களும்
கைபேசிகளும் முடங்கின.
அத்தருணத்தில் அவர்களின் அந்த ஒற்றைச் சொல்
மந்திரம் போல எங்களை ஆட்டுவித்தது..
இரவும் பகல் கோடை வெயில் பனி..
எதுவுமற்ற பாலை வனம் பரந்து விரிந்திருக்கிறது.
அவர்கள் காவல் இருக்கிறார்கள்.
அந்த இடம் தான் “இந்தியா பிரிட்ஜ் .. “ கச் - குஜராத் பாலைவனம் .
முன் அனுமதிப் பெற்ற ரசீதைக் காட்டிவிட்டு
அவர்கள் அனுமதி தந்தவுடன் மெல்ல எங்கள் வாகனம்
அந்தப் பாலத்தில் ஊர்கிறது. இந்தப் பாலத்தை தான்
எத்தனை எத்தனை சினிமா காட்சிகளில் செட் போட்டு
படமாக்கி இருக்கிறார்கள்! என்ற நினைவுகளும்
வந்து சென்றது. அந்தப் பாலத்தைக் கடந்து..
கொஞ்ச தூரம் பயணித்தால் எல்லைக்கோடு..
எல்லைக்கோடுகளின் முள்கம்பிகள்.. நீண்டு இருக்கும்.
நான் போயிருந்தப்போது கோவிட்19 காரணமாக
அதிக தூரம் பயணிப்பதற்கு அனுமதி இல்லை.
கொஞ்ச தூரம் பயணித்துவிட்டு திரும்பும்போது
அவர்களைப் பார்த்து எங்களையும் அறியாமல்
கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னோம்.
கட்ச் பகுதியின் அந்த இடம் பாகிஸ்தான் கராச்சிக்கும்
பாகிஸ்தான் ஹைதராபாத் பகுதிக்கும் மிகவும் அருகில்.
. இப்போதும் கட்ச் பகுதி இந்திய கிராமத்து மக்கள்
பாகிஸ்தான் கட்ச் அருகில் இருக்கும் கிராமத்தில்
பெண் எடுப்பதும் கொடுப்பதும் தொடர்கிறது.
நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
எல்லைக்கோடுகளின் ஒப்பந்தங்களைத் தாண்டிய
திருமண உறவுகள். நம் அரசியல் விரிசல்களுக்கு
அப்பால் திவீரவாதம் போர் சண்டை ஒப்பந்தங்கள்
இவை அனைத்துக்கும் அப்பால்…
இதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதுவும் இரு நாடுகளின் ஒப்புதல்களோடு!
எல்லைக்கோடுகளை
நாம் கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதும்
அவர்கள் எப்படி ஊடுருவினார்கள் என்பதும்
நம் செயற்கோகோள்களின் தோல்வி என்று
அலசி ஆராய்வதும்..
எதுவுமே அர்த்தமில்லாமல் போய்விடுகிறது..
இந்தப் பூகோள எல்லையைத் தொட்டு தரிசிக்கும்போது.
இந்தியா ப்ரிட்ஜ்..
அதைக் காத்து நிற்கும் நம் படைவீரர்கள்..
அவர்களின் ஒவ்வொரு சொல்லும் மந்திரம்..

ஜெய் ஹிந்த். 



No comments:

Post a Comment