பாலைவனத்தின் வண்ணங்கள் எப்போதும் கண்ணைக் கவர்கின்றன. பளிச்சென தெரியும் நிறங்கள். மிக நுணுக்கமான கைவேலைப்பாடுகள்.
வேறு தொழில் எதுவும் இல்லை. துணியில் கை வேலைப்பாடுகளும் இயற்கை வண்ணக்கலவையில் “டை’ தயாரித்து துணிகளை அலங்கரிப்பதும்
துணிகளில் அவர்களே தயாரிக்கும் வண்ண கலரை (பெயிண்ட்) வைத்து வரைவதும்… இதில் துணிகளில் கை வேலைப்பாடு செய்பவர்கள் அனைவரும்
பெரும்பாலும் அவர்கள் வீட்டுப்பெண்களாகவே இருக்கிறார்கள். ஆண்கள் அத்துணிகளுக்கான கச்சா துணிகளை வாங்கிவருவது, பெண்களின் தயாரிப்புகளை ஒன்றுசேர்த்து சந்தையில் விற்பனக்கு கொண்டுவருவது..
இன்னும் சில இடங்களில் அவர்களின் பிரிண்ட்ட் துணிகளை ரெடிமேட் ஆடைகளைத் தைக்கும் பணியில் ஆண்கள்.
இப்படியாக பாலைவனத்தின் வாழ்க்கை. இரவு 8 மணிக்கெல்லாம் ஊரடங்கிவிடுகிறது. தெருவிளக்குகள் இல்லை. நட்சத்திரங்களின் வெளிச்சமே போதுமானதாக இருக்கிறது! பள்ளிக்கூடம், மருத்துவமனை இத்தியாதியான அடிப்படை வசதிகள் அருகில் இல்லை.
(சற்று தொலைவில் இருக்கலாம்)
சிந்து வெளி நாகரிகத்தின் கூறுகள்..
மிக அருகில் கூப்பிடு தொலைவில் அண்டை நாடான பாகிஸ்தான்..
கச் பாலைவனத்தில் டிசம்பர் ஜனவரி மாதங்களில் அந்த நீர் வற்றி உப்பாகி வெள்ளைப்படிகம் போல கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளைமணல் போல காட்சியளிக்கிறது. டிசம்பர் ஜனவரி
முழு நிலவு நாட்களில் நிலவொளியில் உப்பு நீலம் படிந்த வைரம்போல ஜொலிக்கும் அழகு… அதைப் பார்க்க மட்டுமே பயணிகள் வருகிறார்கள்.
பயணிகள் தங்குவதற்கான கூடார வசதிகளும் மண்வீடுகளும்..
அங்கே இம்மாதிரியான கைவேலைப்பாடு செய்வதில் புகழ்ப்பெற்ற ராம்ஜி தேவ்ராஜ் இல்லத்திற்குப் போனேன். நான் தங்கியிருந்த இடத்துக்கு
அருகில் தான் அவர்கள் வீடு.
மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகள்.. ஊசியும் நூலுமாய்.. வீட்டுவாசலில் குடும்ப பெண்கள் ஒன்றாக உட்கார்ந்து எதையாவது செய்து கொண்டே
இருக்கிறார்கள். பெரிய முற்றம். ராம்ஜியும் அவருடன் பிறந்த 6 சகோதரர்களும் தனித்தனி மண்குடிசை. குடிசையில் மண்ணாலான திண்ணையை கட்டில் போல பயனபடுத்துகிறார்கள். வீடு வட்ட வடிவமாக
இருக்கிறது. வீட்டில் தனியாக அறைகள் வேறு எதுவும் கிடையாது!
சகோதரர்கள் தனித்தனி வீட்டில் குடித்தனம். ஆனால் பெண்கள் சேர்ந்து கைத்தொழிலை செய்கிறார்கள்.
சிறிய சன்னல்கள்.. அந்த வீட்டுப்பெண்கள் பெண் சிறுமிகள்.. புகைப்படம் எடுப்பதை விரும்புவதில்லை காரணம் சமூக வலைத்தளங்களில் பெண்களின் முகம் … தெரியக்கூடாது. முக்காடு விலக்கி அவளை
அடுத்த ஆண் பார்ப்பதை அவர்கள் விரும்புவதில்லை.
ஆனாலும் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
அதை நான் அவர்கள் விரும்பியபடியே சமூக வலைத்தளத்தில் போடமாட்டேன். என்னளவில் எனக்கு அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
என்றாலும் அவர்களை நான் மதிக்கிறேன். ராம்ஜியின் அம்மா மட்டும் புகைப்படம் போட அனுமதி தந்தார்.
ராம்ஜியின் மனைவிக்கு இந்திய அரசு விருது கொடுத்து பாராட்டி இருக்கிறது. ராம்ஜிக்கு 4 பெண் குழந்தைகள். ராம்ஜி மும்பை பெங்களூர் டில்லி கல்கத்தா மற்றும் அமெரிக்க நாடுகளுக்குப் போய் வந்திருக்கிறார்.
ஆனால் இனிமேலாவது உங்கள் மகள்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னேன். உலகத்தைப் பார்க்கட்டும் உங்கள் புதல்வியர்.
புதிது புதிதாக இன்றைய பெண்களின் தேவையை அவர்கள் அறியட்டும்.
அதற்கேற்ப ஆடைகள் தயாரிக்கட்டும் ..அதற்காகவாவது அழைத்துச் செல்லுங்கள் ராம்ஜி என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். மும்பை
வந்தால் அழைத்து வாருங்கள் என்றும் சொன்னேன். எல்லாவற்றுக்கும் ஒரு புன்னகை, ஒரு தலையாட்டால்…
ராம்ஜியின் முற்றத்தில் பரப்பி இருந்த பெட் ஷீட, குஷன் உறை..
எல்லாவற்றிலும் பெரிய ப்ராண்டுகளின் ஸ்டீக்கர் வைத்து தைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது FAB INDIA காட்டன் துணிகள் இங்கிருந்து வருகின்றன.
World trade centre நட்சத்திர ஹோட்டல்களில் விற்பனைக்கு இருக்கும் ரெடிமேட் காட்டன் ஆடைகள்..ராம்ஜி வீட்டு பெண்களின் கைவண்ணம்.
இனி, FAB INDIA பார்க்கும் போதெல்லாம் ராம்ஜியும் ராம்ஜி வீட்டுப்பெண்களும் தான் எனக்கு கண்முன்னே வருவார்கள்.
ராம்ஜியிடம் இந்த நிறுவன ங்கள் என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று நான் கேட்கவில்லை. ஆனால் தெரியும்…. குளிரிலும் வெயிலிலும்
பாலைவனத்தின் பெருமூச்சு….
No comments:
Post a Comment