மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
புல்லாங்குழலின் மவுனம் என்னைச் சுற்றி"
பெண்களை விலக்கிய கிருஷ்ணனை
கற்பனை செய்ய முடியவில்லை!
பளிங்குகற்களால் கட்டப்பட்டிருக்கிறது
சுவாமி நாராயணமந்திர். புஜ், குஜராத்.
பொதுமக்கள் தங்குவதற்கு வசதி. மிகவும் குறைந்த
வாடகையில் அனைத்து வசதிகளும். வாடகைக் கொடுக்கமுடியாத யாத்திரீகர்களும் தங்கிச் செல்லும் வசதி.
பளிங்குச்சிலைகள், தூண்கள்.. நுணுக்கமான வேலைப்பாடு.
இதை ரசித்துக்கொண்டே விடியலில் பாதங்களில்
சில்லென்று குளிர் ஏற பளிங்குகற்களின்
வசீகரத்தில் நுழைகிறேன்.
உள்ளே கிருஷ்ணன்.. அலங்காரத்தில் ஜொலிக்கிறான்.
ஒரு சில்வர் கம்பி போட்டு தடுத்துவைத்திருக்கிறார்கள்.
அதைத் தாண்டி மக்கள் அவனருகில் சென்று பார்க்கும் தூரம்.
நானும் அருகில் செல்கிறேன்.
ஒருவர் ஓடிவந்து பெண்கள் இந்தக் கம்பி வளையத்தைத்
தாண்டி உள்ளே வர அனுமதி இல்லை என்று சொல்கிறார்.
அப்போதுதான் கவனிக்கிறேன். கிருஷ்ணனின் கோபியர்
அனைவரும் கம்பி வளையத்தைத் தாண்ட முடியாமல்
தரையில் உட்கார்ந்து கண்களை மூடி அவனோடு
பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஏனோ .. அதன் பின் அந்தப் பளிங்குகற்களின் அழகும் கம்பீரமும்
நீர்க்குமிழியைப் போல உடைந்துப் போகிறது.
அவனைத் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து
வெளியில் வருகிறேன்….
படிக்கட்டுகளில் இறங்கிவரும்போது
அவன் என் துப்பட்டாவைப் பிடித்து இழுக்கிறான்.
அவனும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்
கொள்கிறோம்.
பெண்களை விலக்கிய கிருஷ்ணனை
என்னால் கற்பனை செய்ய முடியவில்லை!...
கோவிலின் வெளியே சிவனின் சிலை.
அவன் தலையில் கங்கை பொங்கிப் பிரவகித்து கொட்டுகிறாள்.
அவன் கைகளிரண்டையும் உயரே தூக்கி ஆகாயத்தைப்
பார்த்து “ஓ”வென உரக்க குரல் கொடுக்கிறான்.
பூமியின் அதிர்வுகளை … என் பாதங்கள் உணர்கின்றன.
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
புல்லாங்குழலின் மவுனம்.. என்னைச் சுற்றி.
ஆண்டாளின் குரல்:
.குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
அருமையான பதிவு,
ReplyDeleteஅழகிய நினைவூட்டல்