Monday, October 29, 2018

வாலியின் சினிமா அரசியல்

mgr-vaali.jpg (720×480)


திரையிசையில் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக
3 தலைமுறைக்குப் பாடல் எழுதியவராக
வலம் வந்த வாலியைப் பற்றிய பதிவுகள் பத்திரிகை
செய்திகள் எதுவுமே வாலியின் அரசியல்
பற்றிப் பேசுவதில்லை.
பட்டுக்கோட்டைக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த
வெளிப்படையான அரசியல் நமக்குத் தெரியும்.
ஆனால் வாலிக்கு அப்படியான வெளிப்படையான
அரசியல் இல்லை என்பதாலேயே அவருக்கு அரசியல்
இல்லை என்ற முடிவுக்கு என்னால் வரமுடிவதில்லை.
திராவிட அரசியலை எதிர்த்த கண்ணதாசனின்
புறக்கணிப்பு காலத்தில் வாலியின் வரவு..
கண்ணதாசன் பாடல்களுக்கும் வாலியின் பாடல்களுக்கும்
கூட  ஆரம்ப காலத்தில் பெரிதும் வேறுபாடுகள் கிடையாது.
இன்றும் கூட வாலியின் பாடல்களை கண்ணதாசன் எழுதிய
பாடல்களாக மயக்கம் ஏற்படுவதுண்டு.
கண்ணதாசனைப் புறக்கணிக்க வாலியைத் தூக்கிவிட்ட
 அரசியல் இன்னும் வெளிப்படையாக பேசப்படவில்லை.
வாலி கண்ணதாசனைப் புகழ்ந்து கொண்டே
கண்ணதாசனைப் போல பாட்டெழுதிக்கொண்டிருந்தார்.
இதன் இன்னொரு சினிமா அரசியல் கூட்டணி
கண்ணதாசனின் திமுக எதிர்ப்பு = எம் ஜி ஆர் + வாலி  
இந்த சமன்பாடு மிகவும் கச்சிதமாக பொருந்தியது.
இந்தக் கூட்டணி அரசியலை கூட்டிக் கழித்துப் பாருங்கள்..
திரை விலகும்.
எம் ஜி ஆரும் வாலியும் ஒருவருக்கொருவர் ஆண்டவராகி
சினிமா கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தக்
காட்சிகள் விரியும்.
வாலி எம் ஜி ஆரைக் கொண்டாடி எம் ஜி ஆருக்காகவே
பொருத்தமான பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.
வாலியின் பாடல்களில் எம் ஜி ஆரின் அரசியல்
கொடிக்கட்டி பறந்த து. அதே கவிஞர் வாலி
திமுக அதிகார வட்ட்த்திற்கு வெண்சாமரம் வீசவும்
தயங்கியதில்லை! திமுக தலைவர் கலைஞர் அவர்களை
வாலி அளவுக்கு வைரமுத்து கூட புகழ்ந்திருப்பாரா
என்பதையும் கவனித்துப் பாருங்கள்.
வாலி  தமிழினத் தலைவர் ஈழப்போராளி
பிரபாகரன் பற்றி கூட கவிதை எழுதி இருக்கிறார்!.
காற்றடிக்கும் பக்கமெல்லாம் பறக்கும் சக்திப்
படைத்தக் கவிஞர் வாலி என்றும் சொல்லலாம்!


அது எப்படி… எல்லோரையும் தன் கவிதைக்குள் கொண்டுவர
முடிந்திருக்கிறது ஒரு கவிஞனால்…என்பது
எனக்கு எப்போதுமே வியப்பளிக்கிறது.
அடிக்கடி என் தோழி என்னிடம் ஒரு கேள்வியை வைப்பாள்..
அதாவது ஒரே மனிதர்.. ஒரே நேரத்தில் எப்படி

இருவேறு கருத்துகளை எழுதுபவருக்கு லைக் போட்டு
இருவருக்கும் பதிவுக்கு ஏற்றமாதிரி பின்னூட்டமிட்டு
எப்படி .. எப்படி.. என்பார்.
அது தான் வாலியின் ஃபார்முலா.. .
வாலி விட்டுச் சென்ற அரசியல் இதுதான்.

எழுதுபவனுக்கு வெளிப்படையான அரசியல் இருக்கக்கூடாது.
அதிகார மையங்களை எப்போதுமே பகைத்துக் கொள்ளக்கூடாது.
மொழி வசீகரமானது.
அதை வளைக்கத் தெரிந்தால் மட்டும் போதும்.
மொழி அவ்வளவுதான்.
இந்த அரசியலைத்தான் வாலி என்ற வெற்றி பெற்ற
கவிஞர் விட்டுச் சென்றார்.
கவிஞர் வாலி காசுக்குத் தானே சினிமா பாடல்கள்
எழுதினார்.. வெளிப்படையான வியாபாரம் அது
என்று எதிர்வினை ஆற்றுவது சுலபம்..
அப்படியானால் காசுக்கு பாட்டெழுதியவர்களை
மொழிப்படுக்கையின் என்னவென்று சொல்ல
வேண்டும்..? மொழியை விற்றவர்கள் என்றா..
மொழியின் வசீகரம் இருந்த ஒரே  காரணத்தால்
அதை விற்பதும் நாய் விற்ற காசு குரைக்காது
என்பதால் கொண்டாடுவதும் ..


வாலியின் இந்த வெற்றி ரகசியம்
இன்று அப்படியே தொடர்கிறது.
இன்றைய வாலிகளுக்கு ராமச்சந்திரர்கள்
கிடைக்கவில்லை!
அதனால் யார் யாரோ ராமச்சந்திர பீடங்களாக
மாற முயற்சி செய்கிறார்களோ என்னவோ..


1 comment: