Tuesday, October 9, 2018

சமூக அரசியல் புதினத்தின் இரு முகங்கள்.. சாவுச்சோறு VS shoes of the dead





அரசியல் சமூகப்பிரச்சனைகளை முன்வைத்து எழுதப்படும் படைப்புகள்
அப்பிரதேசத்தின் மக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கும்.
அவ்வகையில் சமூக அரசியல் கருப்பொருளான இரு புதினங்களை
ஒரே வாரத்தில் வாசித்தேன். இக்கதைகளின் கருப்பொருள் கற்பனையோ
பொழுதுப்போக்கோ அல்ல. சமகால் சமூக அரசியல் பின்புலமும்
கருப்பொருளும் கொண்டு எழுதப்பட்டவை. 
முதலாவது புத்தகம் கோட்டா நீலிமா
ஆங்கிலத்தில் எழுதிய shoes of the dead. மிகச்சிறந்த அரசியல் நாவல்
என்று பெயர் பெற்ற நாவல். அவருடைய நாவல்
பெருகிவரும் விவசாயிகளின் தற்கொலையைப் பற்றி பேசுகிறது.
இன்னொரு புத்தகம் எழுத்தாளர் இமயம் தமிழில் எழுதிய சாவுச்சோறு.
தலலத்திய கதைக்களத்தில் இன்றைய சாதி சமூகத்தை முன்வைத்து
எழுதப்பட்டிருக்கிறது.
தமிழில் எழுதப்பட்ட இமயம் அவர்களின் சாவுச்சோறு ..
முதலில் பார்ப்போம்.
9 சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் சாவு சோறு
கதைத் தொகுப்பில் முதல் கதையான " சாவு சோறு"
கதையில் கையாளப்பட்டிருக்கும் சாதியப்பிரச்சனையும்
அச்சமூகப்பிரச்சனையை இமையம் கையாண்டிருக்கும் விதமும்
கதையின் பாத்திரப்படைப்புகளும் களமும் உரையாடல்களும்
படைப்புலகில் மிகச்சிறந்த இடத்தில் இருக்கின்றன.

சாதி சார்ந்த சமூகப்பிரச்சனையின் சகல பரிமாணங்களையும்
உள்ளடக்கி இருக்கிறது சாவுசோறு. நாவலுக்கான கதை, என்றாலும்
கூட சிறுகதை வடிவில் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது.
தருமபுரி சம்பவம், இளவரசன் திவ்யா காதல் திருமணமும்
கொலை செய்யப்பட்ட இளவரசன், இந்நிகழ்வுக்குக்கு முன்னும்
பின்னும் இருக்கும் சாதி அரசியல் என்ற ஓர் உண்மை சம்பவத்தின்
இன்னொரு பிரதிபலிப்பு தான் சாவுசோறு.

மகள் அம்சவல்லி ஒரு விடீயோ போட்டோபிடிப்பவனுடன்
ஓடிப்போய்விடுகிறாள். தாய் பூங்கோதை தன் மகள் அம்சவல்லியைத்
தேடி ஊரிலும் ஊரின் சுற்றுப்புறங்களிலும் இருக்கும் ஒவ்வொரு
பள்ளிக்கூடமாக ஏறி இறங்குகிறாள்.
"எட்டுப்பவுணு நக, இருவதாயிரம் பணம், அப்புறம் அவ படிச்ச
இந்தச் சீட்டுவோ, இது இருந்தா இதெக் காட்டி ஒரு எடத்தில வேல
செஞ்சி பொழச்சிக்குவா இல்லே?" என்று அலைகிறாள் தாய்.

அவள் தேடலுடன் நடக்கும் உரையாடலில் தான் கதை முழுக்கவும்
சொல்லப்படுகிறது., உயிரோட்டமாக.

மகள் ஓடிப்போனதற்காக தாயைத் தண்டிக்கிறது சாதி சமூகம்.
"நீ நல்லவ இல்லே. அதான் நீ பெத்தது மாடு திங்கற பயகூட
பன்னி திங்குற பயகூட ஓடிப்போச்சி " என்று அம்சவல்லியின்
தாய் அவளுடைய கணவன், புதல்வர்கள் மற்றும் சுயசாதிக்காரர்களால்
தண்டிக்கப்படுகிறாள்.
அம்சவல்லியைக் காதலித்து ஓடிப்போனவனின் தாயோ மிகவும்
கொடூரமான வழியில் தண்டிக்கப்படுகிறாள். "ஊரே திரண்டு போயி
கோழியின் கழுத்தை அறுத்த மாதிரி அவள் முலையை அறுத்தது.
அந்த அவமானம் தாங்காமல் அவள் தூக்கில் தொங்குகிறாள்.

ஓடிப்போன மகளுக்கு இதே தண்டனைதான் கிடைக்கும் என்று
சொல்கிறாள் பூங்கோதை. ஏற்கனவே இம்மாதிரி தண்டனை அவர்கள்
ஊரில் வழங்கப்பட்டிருக்கிறது. முலய அறுப்பானுகனு தெரிஞ்சும்
ஒருத்தி ஓடிப்போயிட்டாளே என்று தாய்மனம் அங்கலாய்க்கிறது.

"முலதான் பொட்டச்சிக்கு மூஞ்சி "க்கு என்று சொல்லும்
பூங்கோதையின் வார்த்தைகள் தொன்மையானவை.
முலை பிடுங்கி எறிந்து மதுரையை எரித்த கண்ணகியின்
கதை வெறும் கற்பனை அல்ல, அது ஒரு குறியீடு.
அநீதிக்கு எதிராக , ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட
ஒரு குறியீடு இன்றைய சாதி சமூகத்தில் பெண்ணைக்
கீழ்நிலைப்படுத்த ஓர் அடையாளமாக இழிவு படுத்தப்படுகிறது.
அநீதிக்கு எதிராக பெண்களால் கையாளப்பட்ட போராயுதமாக
இருந்த முலை , சாதி சமூகத்தினரால் பெண்ணை அடிமைப்படுத்தும்
ஆயுதமாக்கப்பட்டிருக்கிறது.

ஒரே சாதிக்காரனைக் காதலித்து ஓடிப்போயிருந்தால் இரண்டொரு
மாதங்களில் சமாதானமாகப் போயிவிடும். மேம்பட்ட சாதிக்காரன் கூட
ஓடிப்போயிருந்தா கூட சரினு ஏற்றுக்கொள்ளும். ஆனா கீழ்ச்சாதிக்காரனுடன்
ஓடிப்போனதுதான் பிரச்சனை என்று இன்றைய சாதிப்பிரச்சனையின்
சரியான முகத்தை வெளிப்படையாக பேசுகிறார்.
அதுவும் இக்கதை முழுக்கவும் ஓடிப்போன பெண்ணின் தாயான
பூங்கோதையின் உரையாடலாக அமைந்துள்ளது. அதாவது
கீழ்ச்சாதி பெண்ணின் உரையாடலால அல்ல. தங்கள் சுயசாதிப்
பெருமை ஒரு கீழ்ச்சாதிப்பையனுடம் ஓடிப்போய்விட்டதால்
சரிந்துவிட்டதாக கருதும் பிற்படுத்தப்பட்ட சூத்திர சாதியின்
பெண்ணிடமிருந்து வருகிறது. இதன்மூலம் சூத்திரசாதியின்
சாதிப்பெருமையை அதே சாதி சார்ந்த பெண்ணின் மூலம்
உடைத்து விடுவதில் இமையம் வெற்றி பெற்றுவிடுகிறார்.
சாதிப்பெருமை பேசும் சூத்திரசாதி ஆண்கள், தங்கள் இனத்துப்
பெண்களான திவ்யாக்களையும் திவ்யாக்களின் அம்மாக்களையும்
பேசவிடவில்லை என்பதையும் அவர்களின் காதலையும்
விருப்பத்தையும அடக்கி ஆள்வதில், அவர்களை அடிமைப்படுத்தி
வைத்திருப்பதில் அவர்களின் சுயசாதிப்பெருமை இருக்கிறது
என்ற அவலத்தையும் காட்டிவிடுகிறார்.

கதைப்போக்கில் வந்துப்போகும் கதைப்பாத்திரங்களும் மிகுந்தக்
கவனத்துடன் படைக்கப்பட்டுள்ளன.
முதல் பள்ளிக்கூடத்தில் வாட்ச்மேன் பூங்கோதையை விரட்டிவிடுவதும்
இன்னொரு பள்ளியில் பெருக்கும் துப்பரவு வேலைச் செய்யும் கமலா
பூங்கோதையிடம் கதை கேட்பதையும் ஆறுதலாக இருப்பதையும்
கூட பெண்ணின் துயரத்தை அறியும் பெண்மனதின் உளவியலுடன்
இணைக்கிறார் கதையாசிரியர்.

கிராமங்கள் எங்கும் இன்று சிறுதெய்வ வழிபாட்டில் இடம்பெறும்
பெண் தெய்வங்களின் கதைகள் பெரும்பாலும் நம் சமூகத்தின்
சாதிப்படுகொலைகள் மீது எழுப்பப்பட்டிருக்கும் வழிபாட்டு பிம்பங்கள் தான்.
இக்கதையிலும் பூங்கோதை தன் கிராமத்தில் வழிபாட்டுக்குரிய
மானங்காத்த சாமியின் கதையைச் சொல்கிறாள். தன் மகளும்
அப்படி தங்கள் சாதி மானத்தைக் காப்பாற்றி இருந்தால்
கும்பிட்டுவிட்டு போயிருப்பேனே என்று அழுகிறாள்.
நத்தம் காலனி கலவரத்திற்கான காரணத்தை ஆராயும்போது
அப்பகுதியில் கொண்டாடப்படும் கொடைக்காரி அம்மனின்
சமூக வரலாற்று பின்னணி நினைவுக்கு வருகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்ககாலத்து பெருமையை
உலக அரங்க்கில் சொல்லும் தமிழன், திருக்குறளை உலகப்பொதுமறையாக
கொடுத்ததால் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு என்று கொண்டாடும் தமிழன், தமிழ்நாட்டில்
தம்தம் இனப்பெருமையாக நினைப்பதும் கொண்டாடுவதும்
அவ்ரவர் சாதிப்பெருமையாக மட்டுமே இருக்கிறது.
அதனால் எல்லோரும் தங்களை "ஆண்ட சாதியாக"
ஆய்வு செய்து நிறுவுவதில் கவனம் செலுத்துகிறார்கள்.
சாதிப்பெருமையைக் காக்க, தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும்
ஆணோ பெண்ணோ அவரவர் சாதி மானங்காத்த தெய்வமாகி
வழிபாட்டுக்குரியவராகிவிடுகிறார்கள். அப்படி தன்னை மாய்த்துக்
கொள்ள தெரியாமல் எதிர்த்து போராட வருபவர்கள் வாயில்
மலமும் மூத்திரமும் திணித்து தங்கள் சாதிப்பெருமையை
நிலைநாட்டிக்கொள்கிறது சூத்திர இடைப்பட்ட சாதிகள்.

திருவள்ளுவரின் திருக்குறளை உலகப் பொதுமறையாக
வான்புகழ் கொண்டு வாழ்த்தும் தமிழ்கூறு நல்லுலகம்
தன் தமிழ் மண்ணில் மட்டும் தத்தம் சுயசாதிப்பெருமையை
மட்டுமே தமிழனின் பெருமையாக இன்றுவரை கட்டிக்காத்துவருகிறது.
தமிழன் உரிமை, ஈழப்போராட்டம் என்றெல்லாம் வரும்போது
சங்ககாலப் பெருமையை தங்கள் அடையாளமாகக் காட்டும்
தமிழ்ச்சமூகம், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களின் இறையாண்மை,
உரிமை, என்று வரும்போது அவரவர் சுயசாதிப் பெருமையை,
ஆண்ட சாதிப்பெருமையை தமிழ்ச்சமூகத்தின், தமிழ் கலாச்சாரத்தின்
அடையாளமாக முன்வைக்கும் அவலம் தொடர்கிறது.

பூங்கோதை தன் மகள் அம்சவல்லியைக் கண்டுபிடித்தாளா?
அம்சவல்லியின் முலை அறுபட்டதா?
தெரியவில்லை. தாய் மனதின் ஏக்கம், பெருமூச்சு, அதன் ஊடாக
பேசப்படும் சாதி சமூகம், அதுவே தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாக
இருக்கும் அவலம், தலித் சாதிப் பெண்ணின் உரையாடலில்
கதையை நகர்த்தாமல், சூத்திரசாதியின் தாய் உரையாடலில்
கதையை நகர்த்தி, பெண்ணியப்பார்வையையும் பூடகமாக
சேர்த்தே கொண்டு வந்திருக்கும் எழுத்தாளர் இமையத்தின்
படைப்பு , படைப்பின் உன்னத நிலையை எட்டுகிறது.



,.எழுத்தாளர் நீலிமாவும் மராத்திய மாநிலத்தின்
 மிதியாலா மாவட்டத்தையே
தன் கதைக்கான களமாக தேர்வு செய்திருக்கிறார்.
இறந்தவர்களின் செருப்பு - shoes of the dead எழுதிய கோட்டா நீலிமா
சண்டே அப்சர்வர் இதழின் அரசியல் ப்ரிவுக்கு ஆசிரியர் என்ற
கூடுதல் தகுதியும் கவனிக்கப்பட வேண்டியது.

இப்புதினத்தை எழுதி இருக்கும் நீலிமா ,
"ஒருவன் தன்னையே சாகடித்துக் கொள்கிறான் என்றால்
இதன் பொருள் அத்தனிமனிதனின் இறப்பல்ல, அவனுக்குள்
இருக்கும் விவசாயி தன்னை சாகடித்துக்கொள்கிறான்
என்றுதான் பொருள்" என்று சொல்கிறார்.
"ஜனநாயகத்தில் அதிகாரம் வாரிசுடமை ஆகிவிட்டதை
மாற்றுவது தான் என் நோக்கம் " என்று வெளிப்படையாக
பதிவு செய்துள்ளார். அரசியல் தலைவர்களின் வாரிசுகள்
அதிகாரத்தை வாரிசுடமையாகப் பெறுவது போல
ஏழைகளின் வாரிசுகள் ஏழ்மையைத்தான் வாரிசுடமையாக
பெறுகிறார்கள். க்டன்சுமையில் தற்கொலை செய்து கொள்ளும்
விவசாயி தன் மனைவி மக்களுக்கு அக்கடன்சுமையை வாரிசுடமை
ஆக்கிவிட்டு செல்கிறான். ஓர் அரசியல்வாதியின் மகனுக்கு
தன் தந்தையின் மரணத்தைக் கடந்து செல்வது எளிதாக
இருக்கிறது. கடன்சுமையில் தற்கொலை செய்து கொள்ளும்
விவசாயி மகனுக்கு அதுவே ரொம்பவும் சங்கடமானதாக
அமைந்துவிடுகிறது.
இப்பிரச்சனையைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கும் கதையில்

விவசாயிகளின் பிரச்சனையை நீலிமாவின் கதை
எப்படி அணுகி இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய சமூக அரசியல் பிரச்சனை என்பது
விவசாயிகளின் தற்கொலை தானே தவிர தற்கொலைக்குப்
பின்னர் நடக்கும் விசாரணையோ, அக்குடும்பத்திற்கு
மறுக்கப்படும் நிவாரணமோ அல்ல. கதை பிரச்சனையின்
முதல் நிலையில் கைவைக்காமல் மிகவும் சாதுர்யமாக
இரண்டாவது படிநிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.

கதையின் போக்கில் பாதிக்கப்பட்டிருக்கும் கங்கிரி
பாத்ரா ஓர் அஹிம்சைவாதியின் குணாதிசயத்துடன் படைக்கப்
பட்டிருப்பது மட்டுமின்றி அவனுடைய அஹிம்சைவாதமே
ஓர் ஆயுதமாகவும் கந்துவட்டிக்காரன் முதல் அரசியல்வாதி
வரை அதனால் திருந்துவதாகக் காட்டப்பட்டிருப்பதும்
கதைக்கருவை பலகீனப்படுத்திவிடுகிறது.
விவசாயிகளின் போராட்டங்களுக்கான தீர்வு இம்மாதிரி வந்துவிடும்
என்றா? அஹிம்சை வழியில் நடந்தால் அரசியல்வாதியும் திருந்திவிடுவான்
என்றா? இம்மாதிரி கற்பனைகள் எழுத்தாளன் பேச வரும் கதையின்
வலுவை நீர்த்துப் போகவே உதவுகிறது!
விவசாயிகளின் பிரச்சனை குறித்து அறிந்தவரும் தெளிவான கருத்துகளை
தன் செவ்விகளில் முன்வைத்திருப்பவருமான நீலிமா எதற்காக இக்கற்பனா
வாதத்திற்குள் கதையைக் கொண்டு சென்றார் என்பது பெரிய கேள்விக்குறி.

வெறும் கள ஆய்வுகளை வைத்துக்கொண்டு நாவல் எழுதி விடமுடியாதுதான்.
கள ஆய்வுகள் நாவலின் களம், களம் பற்றிய வர்ணனை, அக்களத்தில் நிலவும்
பிரச்சனை இவற்றைப் பற்றிய கட்டுமானத்திற்கு உதவியாக இருக்கலாம்.
ஆனால் அதுவே ஒரு படைப்பின் ஜீவனாக இருந்துவிட முடியாது. கதை
மாந்தர்கள் உயிர்ப்புடன் வாழ கள ஆய்வு மட்டும் போதுமானதல்ல.
கங்கிரி பாத்திரப்படைப்பு இக்கதைக் கருவுக்கோ
சமகால அரசியல் பிரச்சனைக்கோ எவ்விதத்திலும் வலுசேர்க்கவில்லை.

நீலிமா விவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை
விவசாயிகளின் வாழ்வியலிலிருந்து விலகி ஒரு பார்வையாளராக
ஓர் ஆய்வாளராக பார்க்கிறார். அப்பார்வை ஒரு மூன்றாம் மனுஷியின்
பார்வை. அதனால் தான் விவசாயி கதை மாந்தரின் உணர்வுகளுக்குள்
வாழ்வதும் அதை அனுபவிப்பதும் அவருக்கு சாத்தியப்படவில்லை.
ஆனால் பெண் கதை மாந்தர்களைக் கொண்டே சாவுசோறு கதையை
எழுதி இருக்கும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு
அப்பெண்கள் அனுபவிக்கும் சாதிக்கொடுமையும், அவர்கள் பிரச்சனையும்
அழுகையும் பெருமூச்சும் அவருக்குள் இருந்து எழுதிச் செல்கின்றன.
படைப்பு ஓர் உன்னதமாகிவிடுகிறது இதனால் தான்.
ஆனாலும் நீலிமாவின் நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால்
எட்டி இருக்கும் பரந்துப்பட்ட வாசக தளத்தை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச்சிறந்த இக்கதை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஒரே காரணத்தினால்
தமிழ்நாட்டுக்குள் மட்டுமே ..வாசிப்புக்குரியதாகி..
அதுவும் தலித்திய சிறுகதைகள் என்ற அடையாளத்திற்குள்
முடங்கிப்போய்விடுகிறது!
பூங்கோதைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவர்கள் அல்லர்.
விவசாயிகளின் தற்கொலையும் மராட்டிய மா நிலத்திற்கு 
மட்டும் உரியதல்ல. 
சாவுச்சோறு.. தொண்டைக்குழியில்  .. குரல்வலையை
அமுக்கி .. வாசகனைப் புரட்டிப் போடுகிறது.

No comments:

Post a Comment