Wednesday, October 3, 2018

மகாத்மா இல்லாத கஸ்தூரிபா



மகாத்மாஇல்லாத கஸ்தூரி பா..புகைப்படம்..



முகனூலில் காந்தி சரளாதேவி பற்றிய என் பதிவு
அதிகமாக பகிரப்பட்டது, பின்னூட்டங்களும் இருந்தன.
ஆனால்.. ஆனால்..
யாரும் கேட்கவில்லை பாதிக்கப்பட்ட அவளைப் பற்றி!

 அந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் எழுதியவர்களோ 
பகிர்ந்தவர்களோ லைக் போட்டவர்களோ யாராவது 
காந்தி- சரளாதேவி உறவை காந்தியின்
மனைவி கஸ்தூரிபாய் எப்படி எடுத்துக் கொண்டார் ? என்று
ஒரு கேள்வியைக் கூட முன்வைக்கவில்லை!
அது ஏன்?
காந்தி என்ற மகாத்மா பிம்பத்தில் கஸ்தூரி என்ற தனித்துவமிக்க
ஆளுமை கொண்ட ஒரு பெண் மறக்கப்படுகிறாள்..
வரலாற்றிலும் சரி.. வாழ்க்கையிலும் சரி..
இந்தக் கடந்துப் போதல் எவ்வளவு எளிதாக இருக்கிறது
எல்லோருக்குமே! 
காந்தியின் மனைவி தான் கஸ்தூரி பா.
ஆனால் கஸ்தூரி பா என்ற பெண்
காந்தியின் மனைவி மட்டுமல்ல...
ஒரு மகாத்மாவின் இருத்தலுக்காக அவள் இழந்தது அதிகம்.
ஒரு மகாத்மாவின் புனிதங்களுக்காக அவள் மவுனித்த
தருணங்கள் சத்தியசோதனையை விட வலிமையானவை.
சரளாதேவியுடனான தன் நட்பு/உறவைக் காந்தி குறிப்பிடும்
இடங்களில் எல்லாம் சரளாதேவியின் இளமையும்அறிவும்
 அழகும் போற்றப்பட்டது மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது.
ஆனால் கஸ்தூரி பா... காந்தியை விட 1 வயது மூத்தவர் என்பதும்
சரளாதேவியுடன் ஒப்பிடும்போது இச்சமூகம் 
ஏற்றுக்கொண்டிருக்கும் அழகு அறிவு அளவுகோல்களில் 
கஸ்தூரி பா கீழிறக்கம் செய்யப்படுவதும் 
தானாகவே வந்து விடுகிறது... 
இந்த முக்கோணத்தில் நேரடியாக..பாதிக்கப்பட்டவர் கஸ்தூரி பா
தான்.அவர் இத்தருணங்களைஎப்படி கடந்து வந்திருப்பார்?
எவ்வளவு வலி மிகுந்த தருணங்களாக 
அந்த நாட்கள் இருந்திருக்கும்? 
மகாத்மாவின் முகம்,மகாத்மாவின் பேச்சு,
மகாத்மாவின் எழுத்து ...இதைஎல்லாம் ஊடறுக்கும்
கஸ்தூரி பாவின் அந்த ஒற்றைப் பார்வையை...
இந்த உலகமேஇன்றும் கொண்டாடும் மகாத்மா..
எப்படி எதிர் கொண்டிருப்பார்?
கஸ்தூரிகளின் மவுனம் தான் இன்றும் 
கஸ்தூரிகளுக்கு ஆகச்சிறந்த ஆயுதமாக இருக்கிறதா..
மகாத்மாக்களைவிட 
எனக்கு கஸ்தூரிகள் எப்போதுமே...பிரமிப்பூட்டுகிறார்கள்.

No comments:

Post a Comment