Friday, October 19, 2018

போய் வருகிறேன்.. வல்லரசே




போய்வருகிறேன்..
உன் பூக்களின் அழகும்
உன் தெருக்களின் கம்பீரமும்
என் காமிராவுக்கு தீனிப்போட்டன.
என் கவிதைகளுக்கல்ல.
போய்வருகிறேன்.
வணக்கமும் விசாரிப்புகளும்
உன் நுனி நாக்கின் மொழிகள்.
என் இதயத்தின் அடி ஆழத்தில்
அது எதிரொலிக்கவே இல்லை
போய்வருகிறேன்.
குழந்தைகள் கிரிக்கெட் ஆடாத 
உன் அகன்ற தெருக்களில்
அழகான நாய்களின் ஊர்வலங்கள்.
குரைக்காத நாய்கள்
காக்கைகள் கரையாத தோட்டவெளி
மவுனத்தில் உறைந்த வீடுகள்
நிறைந்த மாய உலகத்தில்
என் பச்சைக்கிளிக்காக மட்டுமே
பறந்து வருகிறேன்..
ஆனாலும் உன் பச்சை மரங்களும்
படர்ந்த புல்வெளியும்
என் விரல் நுனியைக் கூட
ஈரப்படுத்தவில்லை.
நெருப்பு மூட்டி குளிர்க்காயும் இரவுகளில்
நட்சத்திரங்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றன.
வரிசையாக ஓடிக்கொண்டிருக்கும் கார்கள்
எங்குப் பார்த்தாலும் விமானங்கள்
எப்போதும் இரவு 9 மணிக்கு
நகரைக் கண்காணிக்க வட்டமிடும் ஹெலிகாப்டர்..
பறந்து கொண்டிருக்கும் உன் றக்கைகளில்
எரிந்துக் கொண்டிருக்கிறது
எண்ணெய்க்காக நீ எரித்த
தேசங்களின் வரைபடங்கள்.
எரிமலைப் பிரதேசத்தில் மகாசமுத்திரங்கள் சூழ
உன் ராஜாங்கம் நடப்பதை
நீயும் மறக்கவில்லை.
நானும் மறக்கவில்லை.
உன்னுடன் கை குலுக்கும்
ஒவ்வொரு தருணமும்
என் கைகளில் ஒட்டிக் கொள்கிறது
என் கடற்கரைகளில்
நீ கொட்டும் கழிவுகளின் மிச்சம்.
இருவருமே கைகளில் தடவிக்கொள்கிறோம்
கிருமி நாசினியை.
நீ சிரிக்கிறாய்.
ஹலோ சொல்கிறாய்.
நானும் தான்.
போய்வருகிறேன் என்று சொல்கிறேன்.
மீண்டும் சிரிக்கிறாய்.
உன் நக்கல் சிரிப்பு எனக்கும் புரிகிறது.
பூக்களை மட்டுமே அறிந்த உன்னிடம்.,
பூக்களில் இருக்கும் முட்களையும்
வேர்களில் ஒட்டி இருக்கும் மண்ணையும்
மண்ணின் வாசத்தையும்
மழையின் வசந்தத்தையும்
வெயிலின் நடனத்தையும்
கொண்டாடும் நான் 
எப்படி புரியவைப்பேன்..
விடை பெறும் தருணங்களில்
“போய் வருகிறேன் ” என்று சொல்லும்
எங்கள் மரபின் வேர்களை.

(அமெரிக்காவிலிருந்து கிளம்புவதற்கு முந்திய நாள்
விடிகாலையில்..)

1 comment:

  1. வேர்களில் ஒட்டி இருக்கும் மண்ணையும்
    மண்ணின் வாசத்தையும்
    மழையின் வசந்தத்தையும்
    வெயிலின் நடனத்தையும்
    கொண்டாடும் நான்
    எப்படி புரியவைப்பேன்..
    அருமை
    அருமை

    ReplyDelete