Monday, July 10, 2017

சூல் நாவல் முன்வைக்கும் சமூக அரசியல்

சூல் நாவலின் கதை நிகழும்   காலம், களம் சார்ந்த அரசியல் பார்வை
---------------------------------------------------------------------------------------
30p9.jpg (400×505)
"நீர்ப்பாய்ச்சியின் நீர்மேலாண்மை அறிவைக் கொண்டாடுவது என்பது வேறு.
அந்த அறிவு அவனுக்கு தலைமுறை தலைமுறையாக வருகிறது என்று குலத்தொழிலாக்குவது ஆபத்து"
"சூல் கொண்ட கண்மாய் காணாமல் போனதற்கும் திராவிட அரசியலுக்கும்
என்ன தொடர்பு? "
"அதிகாரக் கட்டிலில் இருந்தவர்களின் அடையாளம்  மறைக்கப்பட்டும்
மறக்கப்பட்டும் இருப்பது வெறும் கற்பனை மட்டுமா?"
... சூல் நாவலை முன்வைத்து ...
....

நாவல்கள் கற்பனையானவை. நாவல்களின் கதைப் பாத்திரங்கள் கற்பனையானவை. எல்லாம் லாஜிக்கலா ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அந்த நாவலை எழுதுகிற எழுத்தாளனும்
அந்த நாவலில் எழுத்தாளன் காட்டும் மனிதர்களும் எழுதுபவனைப் பொறுத்தவரை கற்பனை அல்ல. அதனால் தான் வாசிக்கிறவனும் எழுதுகிறவனும் கற்பனை உலகில் ஒரே வேகத்தில் சஞ்சரிக்க முடிகிறது. கற்பனைகள் நிஜங்களாகவும் நிஜங்கள் கற்பனைகளாகவும்
நிகழும் ஒரு ரசவாத வித்தையை நிகழ்த்துவதில் தேர்ந்த எழுத்தாளன் வெற்றி பெறுகிறான்.
சில நாவல்களில் கதை நிகழும் களம் கதை மாந்தர்களையும் அக்கதை ஓட்டத்தையும் வாசகனுக்கு மிகவும் நெருக்கமாக்கி விடுகிறது. இன்னும் சில நாவல்களில் கதை நிகழும் களமும் கதை நிகழும் காலமும் ஒன்றுடன் ஒன்றிணைந்து கதை ஓட்டத்தில் பிரிக்கமுடியாத சரடாக பிணைக்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரி நாவல்களில் கதைக் களம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதும் கதையின் காலம் ஏன் கவனத்திற்குள்ளாகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
 கதைக்களமும் காலமும் கதையைத் தீர்மானிக்கின்றன.

இம்மாதிரி எழுதப்படும் நாவல்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும் நுண்ணிய அரசியல் என்ன? அதை எப்படி எடுத்துக்கொள்வது?என்ற புள்ளியில் குவிகிறது இப்பார்வை.

கடந்தகால மனிதர்களின் வாழ்வியலும் இயற்கையுடன் ஒட்டிய அவர்களின்
வாழ்க்கை, நம்பிக்கை , சடங்குகள் ஆகியவையும்  கதை ஓட்டத்தில் முக்கியமான  பங்களிப்பை வழங்கும் போது திறமையான எழுத்தாளன்  கடந்தகாலத்தைப் பொற்காலமாக்கிவிடுகிறான். சாதிய சமூகத்தில் அவன் படைத்துக்காட்டும்பொ ற்காலம் (?) சமூகநீதி என்ற ஆகச்சிறந்த சமூக அறத்தின் முன் புறக்கணிக்கப்பட்டிருப்பதை
வாசகன் வெளிப்படையாகத் தெரிந்து கொள்வதற்கும் அப்படியே தெரிந்து கொண்டாலும் அதை வெளிப்படுத்துவதற்கும் தயக்கம் காட்டுகி சூழல் நிலவுகிறது.
காரணம் .. குறிப்பிட்ட எழுத்தாளனின் அக்குறிப்பிட்ட படைப்பு பலராலும் கொண்டாடப்பட்டும் பல விருதுகள் பெற்றும் ஆகச்சிறந்த படைப்பு என்ற
அடையாளத்தை பெற்றபின் அப்படைப்பில் நுண்ணரசியலைக் காண்பது
சாதிய மனோபாவமாகி விடும் என்று அச்சம் கொள்கிறான் அதைக் கண்டுணரும் வாசகன். 
கல்யாண வீட்டிலிருந்து கருமாதி வரைக்கும் சாதிய சமூகமாகவே வாழும் சமூகத்தில் அவனுக்கு படைப்பாளன் முன்வைக்கும் சாதி அரசியலைப் பேசுவதற்கு மட்டும் தயக்கமாக இருக்கிறது!  இது என்ன மாதிரியான புரட்சிகரமான மனநிலை என்பதை விட இம்மாதிரியான ஒரு மனநிலைக்கு அவனைத் தள்ளிவிட்டதில் நம் தமிழ்ச் சமூகத்தின்
சாதிமுகம் அசைக்க முடியாத ஒரு  தூணாக நின்று கொண்டிருக்கிறது..

அண்மையில் வாசித்த சோ. தர்மனின் சூல் நாவல் மிகவும் உன்னதமான படைப்பு. ஆனால்
சூல் முன்வைக்கும் அரசியல் ?
சூல் முன்வைக்கும் சமூக நீதி?
சூல் முன்வைகும் சாதி சமூகம்?
சூல் முன்வைக்கும் சமூகப்படிநிலை?
இதெல்லாம் என்னவாக இருக்கிறது.?

நீர்ப்பாய்ச்சி என்ற கதாப்பாத்திரம் கதை ஓட்டத்தில்
 "சூல்" என்ற கருவுடன் மிகவும் நெருக்கமான கதைப்பாத்திரம்
. நீர்ப்பாய்ச்சி சாதி சமூகத்தில் பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவன்
என்பதும்  அவர்களின் நீர்மேலாண்மை குறித்தும் சிலாகித்து பக் 482ல் பேசப்படுகிறது.
"நம்ம ஜமீன்கள்ள உள்ள அத்தன கண்மாய்களையும் ஒங்க ஜாதிக ஆட்கள் கிட்டத்தான் ஒப்படைக்கனும்னு வெள்ளக்காரன் உத்தரவு. ஏம்னா வெள்ளாம செய்யறதுலயும், நீர்ப் பாய்ச்சுறதலயும் பள்ளர்கள மிஞ்ச இங்க ஆட்களே இல்லனு சொல்றான், சும்மா சொல்லல லண்டன்லருந்து இங்க வந்து பல வருஷன் ஆராய்ச்சி பண்ணி சொல்றான்.........
நீர்ப்பாய்சுற உரிமை பள்ளர்களுக்குத்தாம்னு பட்டயமே குடுத்திட்டான். அதனாலதான் ஒனக்கு இந்த உரிமையை ஜமீன் குடுக்குது.."
மேலும் பக் 480 ல் இதே கருத்து குப்பாண்டிசாமியின் சொற்களிலும் வெளிப்படுகிறது.
"அடேய் சாவிய ஒப்படைக்கிறது லேசுதாண்டா. ஆனா கண்மா வம்பாப் போகுமடா.வேற ஆருக்குடா அந்த நெளிவு சுளிவு தெரியும்? ........
மூச்சடக்கற சூட்சமம் ஒங்க பரம்பரைக்கு மட்டும் தான் தெரியும். அதப்படிக்க
எம்புட்டு பாடுபடணும்? ஊரு சீரழியப் போறது நிச்சயம்டா............கண்மா சீரழிஞ்சா இந்த ஊரே காலி, ஏம்னா ஊரெல்லாம் புள்ளத்தாச்சிய இருக்கணும், கண்மா எப்பவுமே நெற சூலியாகவே இருக்கணும். நெற சூலியும் தெய்வமும் வேற வேறல்ல.."
கதை ஓட்டத்தில் கண்மாயும் நீர்ப்பாய்ச்சியும் குப்பாண்டி சாமி எதிர்காலத்தை
குறித்து வைக்கும் கருத்துகளும் நிகழ்கால அரசியலுடன் சேர்த்து வாசிக்கப்படுகின்றன.
வாசகனுக்கு நீர்ப்பாய்ச்சி என்ற கதைப்பாத்திரத்தின் குணாதிசயங்களும்
நீர்மேலாண்மையும் பேசப்படும் போதும் கொண்டாடப்படும் போதும்
நீர்ப்பாய்ச்சி என்ற சாதி சமூகத்தின் குலதொழிலும் சேர்த்தே கொண்டாடப்படுகிறது.
நீர்ப்பாய்ச்சிகள் நீர்ப்பாய்ச்சிகளாக இல்லாமல் போய்விட்டதால் கண்மாய்கள்
காணாமல் போய்விட்டன.ஊரே காலியாகிவிட்டது.. என்ற இன்னொரு தளத்திற்கு கொண்டுவந்து நிறுத்துகிறது.
புதினம் முன்வைக்கும் இன்னொரு முகம் என்ன சொல்ல வருகிறது?
நீர்ப்பாய்ச்சியின் மகன் நீர்ப்பாய்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைத்தவிர
நீர்ப்பாய்ச்சியின் குலதொழிலைக் கொண்டாடுவதிலும் நீர்நிறைந்த கண்மாய்
சூல் கதையின் முகமாக இருப்பதும் நம் கவனத்திற்குரியதாகிறது.

நீர்ப்பாய்ச்சியின் மகனுக்கு நீர்மேலாண்மை அறிவு குலத்தொழிலாய் வாரிசு வழி அவன் அறிவு மேலாண்மை என்று ஏற்றுக்கொண்டால்
ஆடுமாடுகள் மேய்ப்பவன், துணிகள் வெளுப்பவன், சுடுகாட்டில் பிணம் எரிப்பவன், கழிவறை சுத்தம் செய்பவன், களை எடுப்பவன், இத்தியாதி .. எல்லா தொழிலும் கூட வாரிசு வழி குலத்தொழிலாகி அனுபவமே அறிவின் மேலாண்மையாக அந்தந்த தொழிலையும்
அத்தொழில் வாரிசு வழி வருவதையும் ஏற்றுக்கொள்வதுடன் கொண்டாடவும் வேன்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். !

இந்த  நாவல் முன்வைக்கும் வெளிப்படையான இன்னொரு அரசியல்
எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டிருக்கும் திராவிட இயக்கம்...
கதையின் பிற்பகுதியில் திராவிட இயக்கமும் திராவிட இயக்கத்தின்
சமூக  நீதி கருத்துகளும் பெண்ணிய விடுதலை கருத்துகளும் கிராமத்து
கதைப் பாத்திரங்களின் உரையாடல்களின் ஊடாக கேலிக்குரியதாக
சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பதும் தான்.
 கதை ஓட்டத்தில் இப்பகுதியின் காலக்கட்டம்
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு பிற்பட்ட காலக்கட்டம்.
அதாவது 1947க்குப் பின். இந்திய சுதந்திரத்திற்கு பின் நிகழும் சமூக
மாற்றங்கள். தேர்தல், நாவல் பக் 419, அத்தியாயம் 20ல் சுதந்திரதினக்
கொண்டாட்டமும் கொடி ஏற்றி மிட்டாய் வழங்குவதும் விவரிக்கப்படுகின்றன.

சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த சமூக மாற்றங்களையும்
அம்மாற்றங்களுக்கு காரணமாக இருந்தது அனைத்துமே திராவிட கட்சிகள் என்ற ஒரு பிம்பத்தை கதை மாந்தர்களின் உரையாடல்கள் தீர்மானிக்கின்றன. கவனிக்கவும்... இந்த உரையாடல்களில்
எங்கும் வெள்ளைக்காரன் ஆட்சியோ வெள்ளைக்காரன்
விட்டுச்சென்ற சமூக மாற்றங்களோ  ஆட்சியின்
மாற்றங்களோ பேசப்படவில்லை. மேலும் சுதந்திரத்திற்கு சற்று முன்பும் பின்னரும்  தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்கள்
 காங்கிரசுக்காரர்கள் தானே தவிர
திராவிட இயக்கம் அல்ல. கதைக்களமும் காலமும் இவ்வாறு இருக்க
கதை ஓட்டத்தில் சமூகத்தில் நிகழும் மாற்றங்களை திராவிட இயக்கத்துடனும் நாயக்கர் கட்சியுடனும் மட்டுமே
 தொடர்பு படுத்தி பேசுவது ஏன்?
அதிலும் அரசியல் ஆதாயம் பெறும் நபர்களாகவும் நாயக்கர் கட்சி ஆட்களைக்
காட்டுவது எதனால்? கதை 1967 க்குப் பின் நடப்பதல்ல. ஆனால் வாசிக்கும் வாசகன் சமகால அரசியலுடன் கதை நிகழ்வுகளை  இணைத்து வாசித்து " ஆஹா ஓஹோ" என்று புகழ்கிறான்.
திராவிட இயக்கமோ திராவிய இயக்கத்தின் பெரியாரோ நாவலாசிரியரின் கதைமாந்தர்கள் மொழியில் சொல்வதானால்  நாயக்கரோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நிலைநிறுத்துவது எம் நோக்கமல்ல.
ஆனால் எதற்காக எதை முன்வைத்து ஏன் விமர்சிக்கிறோம்
என்பதையும் கட்டாயம் கவனிக்க வேண்டி இருக்கிறது.

தமிழக திராவிட இயக்க வரலாற்ற்றில்
1930 முதல் தந்தை பெரியார் கர்ப்ப ஆட்சி என்ற கருத்து பற்றி பேசி வந்தார். 1930ல் கர்ப்ப ஆட்சி அல்லது கர்ப்பத்தடை என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். 1943ல் ஒரு திருமண நிகழ்வில் தான் தந்தை பெரியார்  "பிள்ளைப்பேறுக்கு ஆண் - பெண் சேர்க்கை என்பதுங்கூட நீக்கப்படலாம்.
நல்ல திரேகத்துடனும் புத்தி நுட்பமும் அழகும் திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை 'இன்செக்‌ஷன்' மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண்-பெண் சேர்க்கைக்கும் குழந்தை
பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும் " (திராவிட நாடு 21, 28-2-1943. இக்கருத்துகள் தொகுக்கப்பட்ட நூல் "இனிவரும் உலகம்" )
கதை ஓட்டத்தில் திராவிய இயக்கத்தாரின் இப்பெண்ணிய சிந்தனையை
 சூல் கதை மாந்தர்கள் எவ்வாறு அணுகினார்கள் என்பதையும் ஆசிரியர் விவரிக்கிறார். பலநூறு ஆண்டுகள் ஆண் ஆதிக்க சமூகத்தில் வாழ்ந்தவர்களுக்கு பெரியாரின் இப்பரப்புரைகள் அதிர்ச்சியாகவும்
அவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாகவும் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் குழந்தைப் பெறமுடியும் என்ற பெரியாரின் கருத்தை கதையின் வயதான கதைப்பாத்திரம் கேலியும் கிண்டலுமாக பேசுவதில் நியாயமும் இருக்கிறது.
முதியவரான சின்னையாவுக்கும் வாலிப பருவத்தின் சின்னாவுக்கு நடக்கும் உரையாடல்.
சின்னையாவை கோழிப்பண்ணையைப் பார்த்துக்கொள்ள சொல்லி கோழிப்பண்ணை வேலைக்கு
அழைக்கிறான் சின்னா. பக் 459
"தாயோளி.. என்னயப் போயி கோழி மேய்க்க வாராயனு கேக்கயே, ஒனக்கு கல்யாணம் முடிஞ்சு
இத்தனை வருஷமாச்சு ஒரு புள்ள பூச்சி இல்ல. உங்க தலைவரு கச்சி நாயக்கருக்கும் புள்ள கொல்லி இல்ல. நீங்க ரெண்டு பேரும் ஒங்க பொண்டாட்டி மாருகள கூட்டிட்டுப் போயி
ஊசிப் போடுங்க. புள்ளப் பொறக்கானு பாப்பம். தாயோளி ஆருகிட்ட வந்து கத விடுறங. சேவல்
இல்லாம பொட்டக் கோழி முட்ட இடுதாம். கிடாறி ஏறாம மாடுக கன்னுக்குட்டி போட்டு
பால் குடுக்குதாம். அப்புறமென்ன ஆம்பள இல்லாம பொம்பள புள்ளப் பெற வேண்டியதான? போங்க  போயி ரெண்டு பேரும் பொண்டாட்டிகளுக்கு ஊசி போடுங்க.."
2016ல் வெளிவந்த சூல் நாவலில் இந்த வரிகளை வாசிக்கும் போது
எதெல்லாம் முடியாது என்று அன்றைய மக்கள் நம்பி இருந்தார்களோ அவை அனைத்தும் இன்று ரொம்பவும் சாதாரண நிகழ்வாகி போய்விட்டன என்ற ஓர்மையுடன் அந்த வரிகளைக் கடந்து வர முடிகிறது. ஆண் பெண் உறவு இன்றி பிள்ளை பெறுவதை அன்றைய சமூகம் இப்படித்தான் எதிர்க்கொண்டிருக்கும் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் கதை ஓட்டத்தில் கச்சி நாயக்கரின் பொண்டாட்டியும் பேசு பொருளானதில் இருக்கும் அரசியலை எந்த வகையில் சேர்க்க முடியும்?

ஒரு தகவலுக்காக இச்செய்திகள் :
திருமணம் ஆன இரண்டாண்டுக்குப் பின் பெரியாருக்கு பெண் குழந்தை பிறந்ததையும் நாகம்மையார் அழகான பெண் குழந்தைக்குத் தாயானார் என்பதும்  ஆனால், அந்தக் குழந்தை ஐந்து மாதங்களில் இறந்துவிட்டது என்பதும் நினைவுக்கு வருகிறது.
&
சூல் நாவலின் : கதைக்களம் தமிழகம். அல்லது அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சி.
காலம் :  சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும்.
அக்காலத்தில் மேற்கண்ட மாநிலத்தை ஆட்சி செய்தவர்கள் :
1920  - 1937  வரை ஜஸ்டிஸ் பார்ட்டி
1937 - 1939 ராஜாஜி - காங்கிரசு கட்சி
1939 - 1946 - கவர்னர் ஆட்சி
1946 - மார்ச் 1967 வரை - காங்கிரசு கட்சி


2 comments:

  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

    ReplyDelete