Monday, October 15, 2018

ஈராக் பெண்ணும் காஷ்மீர் பெண்ணும்..

இந்தப் பூமியில் நானே கடைசிப் பெண்ணாக இருக்க வேண்டும்..
- ஈராக் பெண்.
சொல்லாத என் கதையைச் சுமந்து நிற்கிறேன்..
காஷ்மீர் பெண்..

THE LAST GIRL புத்தகத்தில் தன் சுயசரிதையைச் சொல்லி
இருக்கும் NADIA MURAD இப்படித்தான் எழுதி இருக்கிறார்.
அண்மையில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதால் இவரின்
சுயசரிதை இன்னும் அதிகமானக் கவனிப்பைப் பெற்றிருக்கிறது.
வடக்கு ஈராக் , கூச்சு மலைப்பகுதியில் 
வாழ்ந்தவர்கள் யாழிடி என்ற சிறுபான்மையினர்.
விவசாயம் கால் நடை வளர்ப்பு அவர்களின் தொழில்.
அவர்களுக்கு என்று தெய்வ நம்பிக்கைகள் உண்டு.
ஆனால் இசுலாமிய மதவாதிகள் அந்த மக்களை
இசுலாமுக்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஆகஸ்ட்ய் 15, 2014ல் இசுலாமிய படை அவர்களின்
கிராமத்தில் ஊடுருவி அவர்களை வதம் செய்கிறது.
அவள் கண் முன்னாலேயே அவளுடைய சகோதரர்கள் 6 பேர்
கொல்லப்படுகிறார்கள். அவளுக்கு அப்போது வயது 21.
அவள் அம்மாவையும் அம்மாவின் வயதொத்த பெண்களையும்
அவர்கள் இழுத்துச் செல்கிறார்கள். அனைவருக்கும்
ஒரே புதைகுழி .. ISIS அவள் வயது ஒத்த பெண்களை
பாலியல் வன்கொடுமை செய்து கை மாற்றுகிறார்கள்.
தன் உடலின் ,மீது திணிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை
வெறும் காமத்தின் வெறி என்று மட்டும் சொல்லமுடியாது..
அவள் உடலை அவர்கள் தங்கள் நுகர்ப்பொருளாக்கி
விற்பனைப் பண்டமாக்கி அவளை அடிமையாக்குவதன்
மூலம் தங்கள் போரின் வெற்றியை நிலை நாட்டிக்கொள்வதை
அவள் உணர்ந்து கொள்கிறாள்.
மத வாதம், இன வாதம் , தேசியவாதம்…
இவை அனைத்திலும் பெண் உடலை எதிரியாக
நினைத்து அடிமைப்படுத்துவதன் மூலம் எதிரியின்
மன வலிமையை உடைத்து விட முடியும்
என்று காலம் காலமாய் போர்க்களத்தில்
பெண்ணுடல் சிதைக்கப்படுவதை … 
இந்த பெண் வரலாற்றில் தானே கடைசிப் பெண்ணாக
இருக்க வேண்டும் என்று அவள் பெருமூச்சுடன்
சொல்லும் போது…
இதிகாச குருஷேத்திர களம் முதல்..
நாம் வாழும் காலத்தில் நடந்த முள்ளிவாய்க்கால்
ஈழம் வரை … சிதைந்த பெண்ணுடல்கள்
நம் கண்முன்னால் வந்து கொண்டே இருக்கின்றன…
நடியாவின் சில வரிகள்..:
“Still, most of the escaped sabaya were tight-lipped about their time with ISIS, as I had been at first, and I understood why. It was their tragedy and their right not to tell anyone.” 
We are homeless. 
Living at checkpoints until we live at refugee camps.” 
“I want to be the last girl in the world with a story like mine.”
விருதுகள் கொடுக்கப்படுவதற்கும் அரசியல் உண்டு.
கொடுக்காமல் இருப்பதற்கும் கூட அரசியல் உண்டு.
இந்த நோபல் பரிசுகள் அதிலும் குறிப்பாக 
இசுலாமிய நாடுகளுக்கு எதிராகவும்
இசுலாமியர்களை தீவிரவாதிகளாகவும்
சித்தரிக்க விரும்பும் இன்னொரு அரசியலின்
முகம்.. இதற்கும் வல்லரசுகளின் சாயம் உண்டு
என்ற புரிதலுடனேயே நான் நடியாவின் சுயசரிதையை
வாசித்தேன். காரணம்.. நடியாவின் விருதுகளுக்கும்
கவனிப்புக்கும் அரசியல் இருக்கலாம்.
ஆனால் நடியாவின் அனுபவம்..?
அவள் கடந்து வந்தப் பாதை..?
அவள் வலியும் வேதனையும் நாம் வாழும் காலத்தில்
நம் பாரத தேசத்தின் இன்னொரு முகத்தையும்
எனக்கு நினைவூட்டுகிறது.
எரியும் பனிப்பிரதேசத்தின் காஷ்மீர் பெண்களின்
அந்தக் குரல்..


அதிலும் குறிப்பாக KUNAN POSHPORA வில்
எங்கள் சீருடைகள் நடத்திய .. அந்த மிருகத்தனமான
இரவைப் பற்றி யாரோ எழுதிய கவிதை..
எப்போதோ வாசித்த வரிகள்..
தன்னை எனக்குள் மொழியாக்கம் செய்து கொண்ட வரிகள்..
மீண்டும் தன்னை வாசித்துக் கொண்டன..
இதோ அந்த வரிகளுடன்..
என் ஊமையாகிப்போன உடல்
இறுகிப்போன ரத்தச் கறைகள்
கொடுமையான அந்த நாட்களை
சகிக்க முடியாத அந்த இரவுகளை
சகித்துக்கொண்டது..
மவுனம் என் தொண்டைக்குழிக்குள்
அழமுடியாத அவஸ்தையில்..
நிரப்பப்படும் படிவங்கள்
வறண்டுப்போன ஆழமான கிணற்றில்
விழுந்துக்கொண்டிருக்கின்றன சொட்டுச் சொட்டாக.
ஆழமான பெருமூச்சுடன் கனத்த இதயம்
அந்தப் பொய்கள் ஏச்சுகள்
தாங்க முடியாத இணைப்புகளாய்
என் உறுதியைக் கட்டுப்படுத்த முடியாமல்
அலைகின்றன.
அந்தப் புத்தகங்கள்
எங்கள் மலைகள் ஏரிகள்
பள்ளத்தாக்குகள் பற்றிப் பேசுவதில்லை.
புழுதிப்படர்ந்த பாலைவனத்து ஆகாயத்தின் கீழ்
பசுஞ்சோலைகள் இல்லை. கானல் நீரும் இல்லை.
இருந்தாலும் ஆறுதலான ஒரு சொல்
இதமாக இருந்திருக்கும்.
அதுவும் கூட 
எங்களை விட்டு தொலை தூரத்தில்.
உங்களுக்குத் தெரியுமா..
சிப்பி சுமக்கும் வலியின் சோகம்.
ஆனால் நீங்கள் கவலைப்படுவதெல்லாம்
சிப்பி தரப்போகும் முத்துகளைப் பற்றித்தானே.
அந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக போராட
என் இலையுதிர் தேகத்திலிருந்து
ஒற்றை இலையைக் கூட 
விட்டுவரவில்லை நான்.
இப்படியாகத்தான் நிரந்தரமாக
எவரும் அறியமுடியாதப்படி
அழித்துக்கொண்டுவிட்டேன் என்னை.
யாரும் இதுவரை கேட்காத கதை
நான் பகிராத என் கதை
இதோ.. சொல்லாத என் கதையை
நான் சுமந்து நிற்கிறேன்…

1 comment: