“சிவகாமியின் சபதம் வாசித்தப்பின்
நாங்களே சிவகாமிகளானோம்..!”
கல்கியின் வாசகர் வட்டம் பிரமிப்பு ஏற்படுத்தும்.
இன்று கல்கியை என்னால் மீள்வாசிப்பு செய்யமுடியவில்லை
என்பதும் உண்மை. ஆனால் கல்கி என்ற சமுத்திரத்தைக்
கடந்து வந்ததில் பெருமை கொண்ட தலைமுறை
எங்கள் தலைமுறை. கல்கியின் எழுத்துகளுக்கு
பல தரப்பட்ட வாசகர்கள் இருந்தார்கள்.
பள்ளிக்கூட நாட்களில் கல்கியின் பொன்னியின் செல்வன்
வாசித்த என் போன்றவர்கள் முதல் கல்கி இதழில்
தொடராக வந்ததை வாசித்த குடும்பப்பெண்கள் வரை..
இப்படியாக இந்த வாசகர் வட்டம் விரிந்துக் கொண்டே
உரை நடை இலக்கியம் வந்தப் பிறகு காவிய இலக்கியத்தின்
பிம்பத்தை தன் உரை நடை இலக்கியமான நாவல்களில்
கையாண்டு வெற்றி பெற்றவர் கல்கி என்றே சொல்லலாம்.
சிவகாமி சபதமும் போரெடுத்து வந்து தன்னை மீட்டுச் செல்லும்படி
அவள் கூறுவதும்.. போரும் காதலும்.. ஏதோ ஒருவகையில்
இராமயணம் வாசித்தவர்களுக்கு கல்கி வழங்கிய விருந்து.
கதைக்குள் கதை, கதைகளுக்குள் உபகதைகள் என்று
விரிந்து கொண்டே போன மகாபாரத இதிகாசத்தின்
உத்தியைத்தான் கல்கி தன் பொன்னியின் செல்வனின்
கையாண்டு வெற்றி பெற்றார்.
நரசிம்ம பல்லவர், மாமல்லன், காஞ்சிப் பேரரசு, வதாபி சாளுக்கிய
அரசன், புலிகேசி.. பல்லவர்களுக்கு சாளுக்கியர்களுக்குமான போர்..
இவை எல்லாம் அசலான சரித்திர நிகழ்வுகளும் சரித்திரத்தில்
இடம் பெற்ற கதாப்பாத்திரங்களும்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல பல்லவர்கள் உருவாக்கிய
மாமல்லபுரம் கோவில்கள்.. சிற்பங்கள்.
சிவகாமியின் சபதம் நாவலை வாசித்துவிட்டு
அந்த மயக்கத்தில் எங்கள் மாணவர் பருவத்தில்
மாமல்ல புரத்திற்கு சுற்றுலா சென்ற போது
“இதோ இந்த இடத்தில் தான் சிவகாமி.. நின்றிருப்பாள்..
இதோ.. சிவகாமி.. இப்படித்தான் ஆடி இருப்பாள்..
மாமல்லன் அவளை இந்த இடத்தில் சந்தித்திருப்பானா,
மாட்டானா.. என்றெல்லாம் பேசிக்கொண்டதும்
நாங்களே சிவகாமிகளாகி மாமல்ல புரத்தை வலம் வந்ததும்
கதையல்ல.
சிவகாமியின் சபதம் எழுதிய கல்கியின் வெற்றி தான்
எங்கள் மாமல்லபுரத்தின் ரசனையாக விரிந்தது.
சிவகாமி என்ற கதாபாத்திரமும் அவள் மாமல்லனைக்
காதலித்ததாக எழுதியிருப்பதும் புனைவு என்று
அதன் பின் அறிந்துக் கொண்டாலும்..
இன்றும் மாமல்லபுரத்தில் சிவகாமியே
ஆடிக்கொண்டிருக்கிறாள்!
கல்கி எழுதிய பார்த்திபன் கனவும் பொதுஜன வாசிப்பில்
பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய புதினம்.
திரைப்படமாகவும் வெளிவந்து வெற்றி பெற்றது.
அக்கதையின் கரு தமிழர்களுக்கு அவர்களின்
கடந்துப் போன பொற்காலத்தை மீட்டெடுக்கும்
கனவுக்கு உயிர்க்கொடுத்தது.
பலர் அக்காலத்தில் தங்கள் மகவுக்கு
தங்கள் கனவுகளை மீட்டெடுக்கப் பிறந்தவன் என்பதன்
குறியீடாக “பார்த்திபன்” என்று பெயர் வைத்தார்கள்.
இப்படியாகத்தான் கல்கியும் அவர் கதைகளும்
ஒரு தலைமுறையின் வாழ்க்கையில்
இடம் பிடித்திருந்தன.
No comments:
Post a Comment