Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Sunday, May 21, 2023

பூக்காலம் தமிழில் இல்லை.

                     பூக்காலம் தமிழில் இல்லை.

இல்லவே இல்லை.
சரவணா..
இங்கே இருப்பதெல்லாம்
கற்பு கற்பு கற்பு.
அப்புறம் கற்பு போயிட்டா
செத்து தொலை.
கற்பு எப்போதாவது
கட்டிய புருஷனின் டார்ச்சர் தாங்காமல்
கழண்டுவிடும்னு
நமக்கு யோசிக்கவே முடியாது..
அய்யய்யோ..
இப்படி யோசிப்பதே பாவம்.
நம்ம்மோட சினிமா கற்பு இருக்கே
அது நிஜக் கற்பை விட வெயிட்டானது.
அதைக் கையை வச்சே, நீ தொலைஞ்சே போ.
அப்படி எல்லாம் நீ கதைக்கு கூட
காட்டிட்டு அப்புறம் தியேட்டரில
படத்தை ஒடவிட முடியுமா என்ன!
அடடா...
இன்னொரு ரொம்ப முக்கியமான மேட்டரு.
கதையில கற்பு போனது யாருக்கு
எதுக்கு என்ன சூழல்
இதெல்லாம் நமக்குத் தேவையில்ல.
நம்ம அதில நோண்டி கண்டுப்பிடிச்சிடுவோம்
இவன் யாரு வீட்டு கதையை காட்டறான்!
அவுக சாதி என்னனு..
ஆமாடே..
சாதி ரொம்ப முக்கியம்..
அதக் கண்டுப்பிடிக்கிறதில நம்ம ஆட்களுக்கு
இருக்கிற கில்லாடித்தனம்
எவனுக்கும் கிடையாதுங்கறேன்.
அப்புறம் என்ன...
ஒரே ரணகளம்தான்.
அந்தச் சாதி பொம்பள எல்லாம்
இப்புடித்தான் போனானு
புரிஞ்சுப்பான்..
இப்படியாக நாம இருக்கிறதால
நம்ம பூக்காலம் கதையில
அந்தக் கிழவிக்கு எப்போதொ எதோ
ஒரு சூழலிலே இன்னொரு ஆணோட
ஏற்பட்ட அந்த உடலுறவும் ஸ் நேகமும்
கதையில ஒரு சஸ்பென்சாகி
க்ளைமாக்ஸில அது அந்தப் பாட்டி இல்ல,
அதே பேர்ல அந்த வீட்டில இருந்தப் பாட்டியோட
உறவுக்காரி
அல்லது பொண்ணு
அல்லது வேலைக்காரி..
யாரோ...ஒருத்தி,,
அப்படின்னு கதை க்ளைமாக்ஸ் வந்துடும்.
தேவைப்பட்டா கதையில கிழவியை
சாகடிச்சிடனும்ம்,
அப்போ தான் நாங்க எல்லோரும்
விக்கிவிக்கி அழுது
எங்கப் பாவத்தை எல்லாம்
கண்ணீரில் கழுவி..
பரலோகம் போகலாம்.
எப்படியோ..
தமிழில் பூக்காலம் இல்லை
இல்லவே இல்லை.
சரவணா
எங்க கிழவிக்கு கற்பு முக்கியம்டே.
பிகு: நேற்று பார்த்த பூக்காலம் மலையாளப்படம்.
கிழவிக்கு கற்பு போயிட்டதால
கிழவன் படற அவஸ்தை இருக்கட்டும்.
தமிழ் மனசு எப்புடி எல்லாம் அவஸ்தைப் படுது
பாருங்க..
May be an image of 6 people, people smiling and text
All reactions:
Balakrishnan R, Rajesh Sankarapillai and 5 others

Wednesday, February 1, 2023

CONDOM ... கெட்டவார்த்தை அல்ல.

 condom கெட்டவார்த்தையல்ல!



இதைப் பொதுவெளியில் பேச வேண்டுமா?
இப்போதும் இப்படியான எண்ணம் உங்களில் பலருக்கு
ஏற்படலாம். ஆனால் ஏன் பேசக்கூடாது?
ஒவ்வொரு நாளும் 42,700 கருக்கலைப்புகள் நடக்கின்றன.
அதில் 10 பெண்கள் மரணிக்கிறார்கள்.
காரணம் ஆண் மனதில் இருக்கும் சில தேவையற்ற
மீசை முறுக்குதலும் இதிலெல்லாம்தான் தங்கள் “ஆண்மை”
இருப்பதாக அவர்கள் நினைப்பதும்தான்.
சரி, நினைத்துவிட்டுப்போகட்டும்
ஆனால், இதனால் பாதிக்கப்படுவது பெண்களாக
இருக்கும்போது..!!!
பெண்ணுடல் கருக்கலைப்பை அனுபவிக்கிறது.
உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அவள் சிதைக்கப்படுகிறாள்.
ஆண் பெண் உறவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்
திருமண உறவிலும் கருக்கலைப்பை சந்திக்காத
பெண்கள் வெகுசிலர். ஆணின் புரிதலற்ற
சில வறட்டுத்தன ங்களைச் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது.
கதை ஆணுறை பயன்படுத்துவது பற்றியது.
ஆணுறை பயன்படுத்தும் ஆண் அசிங்கமானவன்,
அது வெளியில் சொல்லக்கூடியதல்ல,
ஆணின் பெருமைக்கு அது இழுக்கு..
இத்தியாதி கருத்துகள் இப்போதும் இருக்கின்றன.
இச்சூழலில் மத்தியபிரதேசத்தில்
ஒரு குடும்பத்தின் இளைய மருமகள்
'காண்டம் 'தொழிற்சாலையில் வேலை செய்கிறாள்.
அதை வெளியில் சொல்ல தயக்கம்.
குடை தயாரிக்கும் கம்பேனியில்
வேலைப்பார்ப்பதாக பொய் சொல்ல வேண்டி இருக்கிறது.
அந்த வீட்டில் மூத்த மருமகள் கருக்கலைப்பை
அனுபவிக்கிறாள். காரணம் அவள் கணவனுக்கு
“ஆணுறை” என்பதே “கெட்டவார்த்தை”
மாணவர்களுக்கு பாடம் நட்த்தும்போது
ஆணுடல், பெண்ணுடல் சார்ந்த இப்பகுதியை
ஆசிரியர்கள் பாடமாக கற்பிக்கவும் விரும்புவதில்லை.
சிறுகுடல் பெருங்குடல் ஜீரணம் மட்டும் போதும்.
அதில் 10 மார்க் கேள்வி இடம்பெறும்.
அதை மட்டும் படித்தால் போதும் என்று
சொல்லிவிடுகிறார்கள்.
இதெல்லாம்தான் இப்போதும் தொடர்கிறது.
ஆண் பெண் உடல், அது குறித்த தெளிவைக் கற்பித்தால்
இருக்கிற ஒழுக்கம் எதுவும் கெட்டுப்போகாது.
பெண்களின் நாப்கின் கேர்ஃப்ரியை இப்போதும்
கடைக்காரர் வெளியில் தெரிந்துவிடக்கூடாது
என்று செய்தித்தாளில் பொதிந்துதான் தருகிறார்.
ஆணுறையை மெடிக்கல் ஸ்டோரில் வாங்குவதற்குள்
ஆணுக்கும் வேர்த்து விறுவிறுத்து
நாக்கு வறண்டுப் போய்விடுகிறது.! ஏன்???
நம் சமூகம் ஆண் பெண் உறவில் பொய்யாகவும்
தேவையற்ற பயங்களுடனும்…
திரைப்படம்
JANHIT MEIN JAARI. (பொதுநலன் கருதி )

Friday, July 29, 2022

ராக்கெட் அரசியல்

 

மாதவனிடம் சூர்யா மன்னிப்பு கேட்கும் காட்சி..
மனசில் நிற்கிறது.
மாதவனாக VIKAS ENGINE ISRO SCIENTIST நம்பி நாராயணன்.
சூர்யாவாக இந்தியச் சமூகம்.
ராக்கெட் ரகசியங்கள் இப்போதும் வெளியில் பேசப்படுவதில்லை.
 பேசப்படும் அனைத்தும் இன்னொரு பக்கத்தை வாசிப்பதில்லை.
இருந்தாலும் கூர்ந்து கவனித்தால் 
அண்மைக் காலங்களில் நடந்து முடிந்த சர்வதேச 
அரசியல் நிகழ்வுகளை பார்க்கும் பார்வைக்கு மாறாக
இந்தியக் காவல்துறை, சிபிஐ , ISRO
எல்லாருமே தேசத்துரோகி அளவுக்கு காட்டப்படுகிறார்கள்.!!!
உண்மையில் இது ரொம்பவும் அச்சமூட்டுகிறது.
அதையும்விட இதில் இருக்கும் நுண் அரசியல்
கவனிக்கத்தக்கது. 
 
நம்பி நாராயணன் வழக்கில் யார் குற்றவாளி என்பதும்
அது நடந்தக் காலக்கட்டமும் அவ்வளவு எளிதில்
திரைப்பட காட்சிகளின் ஊடாக மறந்துவிடுகிற மாதிரி
இல்லை!
அப்துல்கலாம் எழுதிய புத்தகங்களில் 
நம்பி நாராயணன் இல்லை.
இது வழக்கம்போல பிரச்சனைகளிலிருந்து
 தப்பித்துக்கொள்ளும் கலாமின் இயல்பாக இருக்கலாம். 
இருக்கட்டும்.
 
VIKAS ENGINE பெயர் VIKRAM SARABAI என்பதை இத்திரைப்படம் மறைக்கவில்லை. அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
 
விக்ரம் சாராபாய் திடீர் மரணத்தை
31 டிசம்பர் 1971 பத்திரிகை செய்தி கூறுகிறது. பலர் அதையும்
 விமான விபத்து என்று நம்பினார்கள். அவர் உடல் எவ்விதமான பரிசோதனைக்குட்படுத்தப்படவில்லை .அவர் உடல் 
அவர் பயணித்த அதே விமானத்தில் கொண்டுவரப்பட்ட 
அதிசயத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை. பிரபல பத்திரிகை
டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதிய பிறகும் இதெல்லாம் சாமானியர்களுக்கானதல்ல என்பதாலும் அரசியலுக்கு 
உதவாது என்பதாலும் கைவிடப்பட்டிருக்கின்றன. !
ஒரு சாமானியனாக நாம் கவனிக்க வேண்டியது
 இந்திய பிரதமர் பண்டித் நேருஜியின் 
நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பர்களாக 
இருந்தவர்கள் ஹோமிபாபாவும் விக்ரம் சாராபாயும். 
இருவரும் ராக்கெட் மற்றும் அணு ஆராய்ச்சியுடன் தொடர்புடையவர்கள்.இருவரின் மரணமும் மர்மங்கள் 
நிறைந்தவையாக இருக்கின்றன.
இனி, இந்தப் புள்ளியிலிருந்து நம்பி நாராயணன் வழக்கில்
 நம்பி நாராயணன் நிரபாராதி என்றால்
யார் குற்றவாளி?
அல்லது அந்த சர்வதேச குற்றவாளி கூட்டத்திற்கு 
துணைபோன கறுப்பு ஆடு எங்கே?
 
சரவணா..
இப்படியான கேள்விகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு
நம்பி நாராயணன் ராக்கெட்டை நாமும் ரசிக்கலாம்.
சூர்யாவுடன் சேர்ந்து மன்னிப்பும் கேட்கலாம்.
அதனாலென்ன?
அதிகாரம் எந்த ரூபத்தில் வந்தாலும் 
பாதிக்கப்பட்டவர் பக்கமிருப்பது தான் தார்மீகம்,


 

Tuesday, April 5, 2022

யார் இந்த பிரவின் தாம்பே..? kaun Pravin Tambe?

 


யார் இந்த பிரவின் தாம்பே (PRAVIN TAMBE)
கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிரவின் தாம்பே ஒரு லெக் ஸ்பின்னர்.
முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட் எடுத்த பெளலர்.
 பிரவின் வாழ்க்கையில் கிரிக்கெட்?!!

கிரிக்கெட் பிரவின் வாழ்க்கையில் கனவாக மட்டுமில்லை.
எல்லாமாகவும் இருக்கிறது.
பத்திரிகை ஸ்போர்ட்ஸ் பக்கங்கள் ஏன் பிரவீனை
 கொண்டாடவில்லை?
அந்த முதல் ஓவர் கிரிக்கெட் பந்து கையில் கிடைப்பதற்கு 
 பிரவின் கடந்து வந்தப் பாதை .. அவ்வளவு எளிதானதல்ல.
பிரபல பத்திரிகை ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர்கள்
பிரவினை “கல்லி ப்ளையர் – தெரு சந்தில் விளையாடும் கிரிக்கெட்டர்"
என்றுதானே விமர்சித்தார்கள்? ஏன்?
 
கிரிக்கெட் ஓர் அரசியல்.
கிரிக்கெட் ஆசை எல்லோருக்கும் நிறைவேறிவிடுவதில்லை.
கிரிக்கெட் கனவுகளில் தன்னைத் தொலைத்தவர்கள்
சினிமா கனவுகளில் தன்னைத் தொலைத்தவர்களை விட அதிகம்.
இங்கே திறமை மட்டும் போதாது,
அந்த திறமையைக் காட்டும் வாய்ப்புகள்..?
அந்த திறமையை அடையாளம் காணும் மனிதர்கள் அரிது.
அந்த மாதிரி அரிதினினும் அரிதானவை
எப்போதாவது நடந்துவிடுகின்றன.
அபூர்வமானவைகள், விதிவிலக்குகள் என்றாலும்
விதியைக் கடந்துவர இம்மாதிரி ஆபூர்வமானவைதான்
கைகொடுக்கின்றன.
பிரவின் தாம்பே யார் என்பதை ஒரு சில காட்சிகளில்
சூசகமாக காட்டி இருக்கிறது இத்திரைப்படம்.
அந்த ஒரு புள்ளியிலிருந்து கோலம் பூர்த்தியடைகிறது.
அதுதான் கிரிக்கெட் அரசியல்.

Wednesday, November 10, 2021

மன்னாதி மன்னனும் சங்க இலக்கியமும்

 


மன்னாதி மன்னனும் சங்க இலக்கியமும்.


எம் ஜி ஆர் நடித்த புகழ்பெற்ற திரைப்படம் மன்னாதிமன்னன்.
பத்மினியும் அஞ்சலிதேவியும் அவருடன்.
ஒரு முக்கோணக்காதல் கதை.
இப்படம் கண்ணதாசனின் ஆட்டனத்தி- ஆதிமந்தி காவியத்தின்
இன்னொரு பதிப்பு. இதையே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
“சேரதாண்டவம்”
என்ற பெயரில் நாடகமாக எழுதி இருக்கிறார்.



தானுமொரு ஆடுகளமகளே என்று ஆதிமந்தி தோழியிடம்
சொல்லும் சங்கப்பாடல் வரிகள்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே
இதையும் தாண்டி ஆதிமந்தி போல நானும்
அலைவேனோ என்று வெள்ளிவீதியார்
பாடலில் பெண்ணொருத்தி தன் துயர் உரைக்கிறாள்.
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
அலந்தனென் உழல்வென்கொல்லோபொலந்தார்
ஆனால் மன்னர் ஆட்சி தமிழகத்தில் ஆட்டனத்தி
சேர இளவரசனாகவும் ஆதிமந்தி சோழ இளவரசியாகவும்
அரண்மணை காதலாகிறது.
அதையே சிலப்பதிகாரம் வஞ்சிகாண்டமும்
"மன்னன் கரிகாலன் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கன்னவில் தோளாயோ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇ..
எப்போதுமே நம் தமிழ்ச்சமூகத்திற்கு குடிசைகளின்
காதல்கதைகளை விட அரண்மனை காதல் கதைகள் காவிய ரசனைக்குரியதாகின்றன.
அதிலொரு மயக்கம்..
அந்த மயக்கத்தை எம் ஜி ஆர் தன் காதல் காட்சி
பாடல்களில் எப்போதும் பயன்படுத்திக் கொள்வார்,
பெரும்பாலும் அவர் ஒரு காட்சியாலாவது
அரச உடையில் வந்து காதலிப்பார்.
ரிக்சாகாரன் படத்தில் வாத்தியார் ஏன்
அரசகோலத்தில் வந்து காதல் செய்கிறார்
அவருக்கு தேவதைகள் பூச்சொரிகிறார்கள்
என்றெல்லாம் நமக்கு கவலை இல்லை!
அவர் கதைகளை விரும்பி பார்த்த அன்றைய
உழைக்கும் மக்களுக்கு அதுவும் ஒரு போதையாக இருந்தது.
எம் ஜி ஆர் எப்போதுமே அதிகமாக
குடிசையில் காதல் செய்யமாட்டார்!
அரச உடையலங்காரம் அவருக்கு கச்சிதமாகப்
பொருந்தி இருக்கும். நம் பாடலாசிரியர்கள்
அரண்மனை காதலை மெருகூட்டி
பார்வையாளருக்கு போதையூட்டுவதில்
பெரும் தமிழ்த்தொண்டாற்றி இருப்பார்கள்.
இப்படியாக ஆட்டனத்தி ஆதிமந்தி மருதி காதல்கதை..
ஆட்டனத்தியாக எம் ஜி ஆர்,
ஆதிமந்தியாக அஞ்சலிதேவி,
மருதியாக பத்மினி..
என்று மன்னாதி மன்னனாகி
தமிழ்ச்சமூகத்தில் எம் ஜி ஆர் மன்னாதி மன்னன் ஆனார்.
தாயே .. காவிரித் தாயே ..
பொன்னிப் பெருந்தாயே
புகழ் வளர்த்த காவிரியே
தென்னவனைக் கொண்டு சேர்த்த இடம் கூறாயோ
தாயே ..... காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
என்று அஞ்சலிதேவி அதாவது ஆதிமந்தி காவிரிக்கரையோரமாக
தலைவிரிக்கோலத்தில் பாடல் காட்சி..
அப்போது பட்டிமன்றங்கள் வளரவில்லை என்பதால்
காதலில் சிறந்தவள் ஆதிமந்தியா மருதியா?
என்று யாரும் ஆரம்பிக்கவில்லை!
ஆடிப்பெருக்கு மருதியின் நினைவாக என்று சொல்லும்
இன்னொரு கிளைக்கதை எல்லாம் உண்டு.
எது எப்படியோ..
இந்த சங்க இலக்கிய காதல் கதை, கண்ணதாசன் பாரதிதாசன்
என்று கவியுலகம் மட்டும் கொண்டாடவில்லை.
எம் ஜி ஆருக்கும் ரொம்பவும் நெருக்கமான
காதல்கதையாகி அவர் தன்னையே ஆட்டனத்தியாக
பொருத்திக்கொண்டு வலம் வந்தார்., பெரும்பாலும்
எல்லா படங்களிலும்!
எம் ஜி ஆர் ஆட்டனத்தி என்றால்
யார் ஆதிமந்தி ?
யார் மருதி?
இப்படியான கேள்விகள் எனக்கும் வந்தது உண்டு.
அட போங்கய்யா.. எப்படிப் பார்த்தாலும்
எம் ஜி ஆர் தான் ஆட்டனத்தி.
எம் ஜி ஆர் தான் மன்னாதி மன்னன்.

Sunday, November 7, 2021

ஜெய்பீம் அட்டைக்கத்தி அல்ல.


 நம் எல்லோருக்கும் ஏன்

ஜெய்பீம் திரைப்படம் பிடித்திருக்கிறது?
எல்லோரும் ஏன் கொண்டாடுகிறோம்?
தமிழ்ச்சமூகத்தின் அகம் எப்போது
இவ்வளவு ஈரமுடையதாக மாறியது!
காரணம்.. இந்த திரைப்படம் நம் யாருடைய
அடிவயிற்றிலும் கைவைக்கவில்லை.
சமூகத்தின் மையத்தைவிட்டு விலகிய
பிரச்சனைகளைப் பேசுவது நமக்கு
எப்போதும் எளிதாகவே இருக்கிறது.

ஆம்.
இருளர் சமூகம் நம் சமூகத்தின் ஒரு பகுதி தான்
என்றாலும் நம்மோடு கலந்திருக்கவில்லை.
காக்கி உடை அணிந்த காவல்துறையின்
அட்டூழியங்களை வெளிப்படையாக காட்டுவதும்
நம் யாருக்கும் எவ்விதமான உறுத்தலையும்
தரப்போவதில்லை!
காவல்துறையின் வெறித்தனமான செயல்களுக்கு
யார் காரணம்? ஜெய்பீம் படத்தில் குற்றம் சுமத்தப்
பட்டிருக்கும் போலீஸ்கார்ர்கள் தங்களுக்கு
“மேலிடத்து பிரஷ்சர் இருந்ததால் இப்படி நடந்து
கொண்டதாக சொல்வது புனைவு அல்ல. அதுதான்
காவல்துறையின் அகம். அதை இயக்கும் அதிகார
வர்க்கம் யார்? இருளர்களுக்காக போராடிய போது
ஆட்சியில் இருந்தவர்கள் யார்? அவர்களைக் காட்டினால்
அது அடிவயிற்றில் தீ வைத்த மாதிரி இருக்கும். அதை
தவிர்ப்பதுதான் சினிமாவை தயாரித்தவர்களின்
புத்திசாலித்தனம்!
அடுத்து நாம் மிகவும் கொண்டாடிய திரைப்படம்
சர்தார் உத்தம்.
வரலாற்றில் இரத்தக்கறை படிந்த காட்சிகள்..
இங்கே குற்றவாளிகள் அன்றைக்கு இந்தியாவை
ஆட்சி செய்த வெள்ளையர்கள். எனவே நமக்கு
எந்தவித உறுத்தலும் இல்லாமல் “அச்சச்சோ..”
என்று உச்சுக்கொட்டி, பொலபொலனு கண்ணீர்
விட்டு படம் பார்த்துவிட்டு கனத்த மனசுடன்
வெளிவந்துவிட முடிகிறது. சம்பவம் உண்மைதான்
என்றாலும் இதுவும் நம் மனசாட்சியைத் தொடாமல்
சமகாலத்தை மறக்கடிக்க செய்கிறது.
காதல், முக்கோணக் காதல், ஒருதலைக்காதல் என்று
காதல் படங்கள் காலம் மாறி ஷங்கர் காலத்தில் ஊழல்
கறுப்புபணம் திரைப்படமாகியது. அதுவும் மாறி
விவசாயம், போதைப்பொருள், பெண்களுக்கு நிகழும்
பாலியல் அத்துமீறல்கள், கொடுமைகள் என்று நம்
திரைக்கதைகள் திரும்பியது.
இன்று இந்த மாற்றங்களின் இன்னொரு முகமாக..
ஜெய்பீம் ..
ஜெய்பீம் என்றால் புதுப்புது விளக்கங்கள்
இப்போது வருகின்றன. அசலின் உருவத்தையும்
உள்ளடக்கத்தையும் இவர்கள் மாற்றிவிடுவார்களோ
என்று அச்சமாக இருக்கிறது!
இதே ஜெய்பீம்..
சாதிய சுடுகாடு பற்றி பேசிவிடமுடியாது.
சாதியப் படிநிலைகளைப் பற்றி பேசிவிடமுடியாது.
ஜெய்பீம்.. சமகாலத்தில் நடந்த சாதி ஆணவக்கொலைகள்
பற்றி பேசிவிட முடியாது!
ஜெய்பீம்.. சமூகம் குடியிருக்கும் ஊரும் சேரியும்
இன்னும் ஒன்றாகவில்லை என்பதை பேசிவிட
முடியாது.
தலித்துகளின் குடிசைகள் எரிந்ததை ஜெய்பீம்
காட்சியாக்கிவிட முடியாது!
2002ல் குஜராத்தில் முதல்வராக இருந்த மோதிஜியிடம்
“நீங்கள் இசுலாமியர்கள் தாக்கப்பட்டது குறித்து
வருத்தப்படுகின்றீர்களா ? “
(ராய்ட்டர் செய்தி நிறுவனம் ஜூலை 2013)
என்று கேட்டபோது அவர் சொன்னார்
“ நம் வாகனம் சாலையில் வேகமாகப் போகும்போது
குறுக்கே நாயோ எலியோ ஏதேனும் வந்து விழுந்து
செத்தால் அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? “
என்று திருவாய் மலர்ந்தார். இந்த அதிகாரத்தின் ஒரு
துளியைக் கூட ஜெய்பீம் காட்சிப்படுத்திவிட முடியாது.
மையத்தை விட்டு விலகி நிற்பதும்
எல்லா வன்முறைகளுக்கு காரணம் போலீஸ்தான்
என்று கையை நீட்டுவதும் நமக்கு எளிது.
ஜெய்பீம் திரைப்படமும் சர்தார் உத்தம் திரைப்படமும்
அதனால் தான் நம் அனைவருக்கும் மிகவும்
பிடித்திருக்கிறது. நாம் கொண்டாடுகிறோம்.
இப்போதைக்கு இதாவது சாத்தியப்பட்டிருக்கிறதே
மெல்ல மெல்ல தான் கொண்டுவரமுடியும்
என்று நினைப்பீர்கள்.
நானும் இப்போதைக்கு அப்படி நினைத்து கொள்வது
எனக்கும் தற்காலிக மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆனால் இதுவல்ல.. ஜெய்பீம்.
இதுவும் தான் ஜெய்பீம்.
ஆனால் ஜெய்பீம் என்பதை
மையத்திலிருந்து விலக்கி விடாதீர்கள்..
அது சாதிப்படி நிலையில் இறுகிப்போயிருக்கும்
நம் சமூகத்தை உடைக்கும் பேராயுதம். போராயுதம்.
அதை உங்களுக்கு வசதியாக
அட்டைக்கத்தி ஆக்கிவிடாதீர்கள்.
ஜெய்பீம் அட்டைக்கத்தி அல்ல,
ஜெய்பீம்.
ஜெய்பீம்
ஜெய்பீம்.

#ஜெய்பீம்

#jaiBhim