Thursday, October 7, 2021

Behind the Mother Goddess

 அவர்களை விலக்கிய அவள் தேசம்

---------------------------------------------------------------------
அடியே..
மறந்துப்போனவள் நீ
கோபுரங்களின் உயரங்களில்
தொலைந்துப் போனவள் நீ.
உன்னை மறக்கவும் முடியாமல்
தொலைக்கவும் முடியாமல்
அவர்கள் நாடோடிகளாக
திரிகிறார்கள்.
உன் நினைவுகளை அவர்கள்
வரைந்து வரைந்து
காலம் காலமாய்க் கடத்திக்கொண்டு
அலைகிறார்கள்.
நீ ராஜமாதாவான போது
உன் தேசம் உன் புத்திரர்களை
நாடுகடத்தியதை
அறியவில்லையோ நீ?
உன் அரண்மனையில் நுழைய
அனுமதி மறுக்கப்பட்ட போது
பிள்ளைகள் முகம்பார்க்க
துடிக்கவில்லையோ நீ?
தாயே…
ஆதித்தாயே..
உனக்கு இப்படியும் ஒரு முகமுண்டா?
அவன் வரைகிறான்.
அவள் வண்ணங்களைக் குழைத்து
உன்னை அலங்கரிக்கிறாள்.
உன் நினைவுகளைச்
சுமந்தலையும் எங்களை
உன் ஒன்பதாவது இரவு முடியும்போது
சந்திக்க வருவாயா..
உன் ஆதிமுகம் காட்ட
காத்திருக்கிறது
உன் பக்தர்கள் அறியாத
கலைக்கோவில்.
***
@அவள்களின் தேசம்@2

---
அவர்களை விலக்கிய அவள் தேசத்தின் கதை இது.:
தாய் தெய்வத்திற்குப் பின்னால் ..
Mata Ni Pachedi..
ஒரு கலையுலக வரலாறு.

தாய் தெய்வத்தை தன் வாழ்க்கையின் நம்பிக்கையில்
குழைத்து வைத்திருந்த இனக்குழு மக்களைப்
பேர ரசுகள் விலக்கி வைத்தக் காலத்தில்
இதுவும் நடந்திருக்கிறது.
பெண்தெய்வங்கள் பெருங்கோவிலில்
ஆண்மையக் கடவுளரின் மனைவியாராக்கப்பட்ட
காலத்தில் அவள் வாரிசுகளுக்கு பெருங்கோவில்களில்
நுழைந்து அவளை வணங்கும் வழிபாட்டு உரிமை
மறுக்கப்படுகிறது. அவர்களை அரசும் அதிகாரமும்
விலக்கி வைக்கின்றன. அவர்கள் வாழ்விடம்
பறிக்கப்படுகிறது. ஆனாலும்
அவளின் நினைவுகள் அவர்களோடு இன்னும்
மங்காமல் தலைமுறைகளாக கடத்தப் பட்டிருக்கின்றன
கலைவடிவமாக. . அவர்கள் துணிகளில்
இப்போதும் தங்களின் “தாய் தெய்வத்தை” மட்டுமே
வரைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

கறுப்பு, சிவப்பு, வெண்மை இந்த மூன்றும் தான்
அவர்கள் வண்ணங்களில் இன்றும் இடம்பெறுகின்றன.
கறுப்பு இருளின் அடையாளம்.
அதை துருப்பிடித்த இரும்புத்தூளை படிகாரத்துடன் கலந்து
(alum – படிகாரம்) குழைத்தெடுக்கிறார்கள்.
சிவப்பு நிறம்.. வளமையின் குறியீடு,
மண்ணின் குறியீடு, குருதியின் நிறம்..
சிவப்பு நிறத்தை புளியங்கொட்டையைப் பொடியாக்கி
படிகாரத்துடன் கலந்து உருவாக்குகிறார்கள்.
வண்ணங்களற்ற பகுதி வெண்மையாய்
அவர்கள் மொழியில் புனித த்தின் குறியீடாய்
பிரபஞ்சமாய் விரிகிறது.
அவர்களின் தாய்தெய்வம்
முதலையில் ஏறி வருகிறாள்.
ஆடுகள் அவளைச் சுமக்கின்றன.
எருமையும் சிங்கமும் அவள்
ஏறிவரும் வாகனமாய் எப்போதும்
இருக்கின்றன.
படகில் அவள் பயணிக்கிறாள்.
அவளுக்குப் பல பெயர்கள் உண்டு.
பெயர்களுக்கு பல கதைகள் உண்டு.
அவர்கள் தாய் தெய்வத்தை
வரைந்து வரைந்து வாழ்கிறார்கள்.
அவள்மட்டும் ஏன்
மெளனமாகிவிட்டாள்?

#Mata_ni_Pachedi
#behind_themothergoddess

No comments:

Post a Comment