Thursday, May 25, 2017

இருத்தலும் இயங்கியலும்


கவிஞர் காமராசனின் மறைவை ஒட்டி இதை எழுத
வேண்டியதாகிவிட்டது
கறுப்புமலர்கள் கவிதை தொகுப்பு மூலம் 
கல்லூரி காலங்களில் எங்கள் வாசிப்பு தளத்தில்
 உயிர்ப்புடன் வாழ்ந்த கவிஞர் காமராசனின்
மறைவை ஒட்டிய சில முகநூல் பதிவுகள்…
விடாமல் இயங்கிக்கொண்டிருக்க சொல்லி 
பயமுறுத்துகின்றன.
தன் இருத்தலை எப்போதும் வெளிக்காட்டிக்கொண்டிருக்க 
 வேண்டியது அவசியமானது மட்டுமல்ல,
 கடந்தகால வெளிச்சத்தை நிகழ்காலத்திலும்
எடுத்துச் செல்லும் வித்தை என்றெல்லாம் பேசுகின்றன.
இருத்தல் என்பதை இயங்கிக்கொண்டிருத்தல் என்ற பொருளில்
அவர்கள் புயன்படுத்துகிறார்கள் என்பதை அப்பதிவுகள் மூலம்
அறிய முடிகிறது. 
எனக்கு இப்போது இயங்கிக்கொண்டிருத்தல்
என்றால் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
இயங்குதல் என்றால் 
தினமும் முகநூலில் ஆஜர் போடுவது,
இணையத்தில் குட்மார்னிங்க்  சொல்வது, 
வாட்ஸ் அப்பில் வாய்ஸுடன் இருப்பது 
பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருப்பது…
இதெல்லாம் இயங்கிக்கொண்டிருப்பதற்கான இலட்சணங்கள்.
(இதெல்லாம் இல்லாமலும் ஒரு காலத்தில் 
நாம் இயங்கிக்கொண்டிருந்தை
எவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட்டோம்?)
இதயமில்லாமல் கூட மனிதன் வாழ்ந்துவிட முடியும்
 ‘ஆனால்
கைபேசி இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு
நம்மைத் தள்ளியது யார்?
இப்படியாக எப்போதும் நம்மைப் பதட்டத்தோடு வைத்திருப்பதில்
யாருக்கு இலாபம்?
அண்மையில் வாசித்த கவிதை ஒன்றில் – 
கவிஞர் தேவேந்திர பூபதி கவிதை – ஒரு வரி..
” பெண்கவிஞர்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள்”
என்றுசொல்லி இருப்பார். 
எப்போதும்மே பதட்டத்தில் இருக்கும்
இச்சமூகத்தில் பெண்கவிஞர்கள் பதட்டப்படாமலிருக்க முடியுமா?

இந்தப் பதட்டம் எதுவுமின்றி…
எங்கோ ஒரு மூலையில் மரம் நட்டுக்கொண்டிருப்பவன்
நம் அகராதியில் செத்துப் போனவன்.
கடுங்குளிரிலும் வெயிலிலும் மழையிலும் எப்போது வேண்டுமானலும் துப்பாக்கிகள் வெடிக்கலாம் என்ற சூழலில்
காவல் காத்துக்கொண்டிருக்கும் சிப்பாய் கூட
நம் பட்டியலில் செத்துப் போனவன்.
இவை எதுவும் அறியாமல் பூரணமான வாழ்க்கையை
வாழ்ந்து நம்மையும் வாழ்வித்த நம் பாட்டன் முப்பாட்டன்
எல்லாம் … ?
விட்டேத்தியாக வயதும் அனுபவமும்
கொடுத்த படிப்பினையில் ஒருவன் வாழ்ந்து கொண்டிருப்பதை
இச்சமூகம் இயக்கமின்றி இருப்பவனாக கருதுகிறதா?
எழுத்து இயக்கம் கலை அரசியல் புகழ் இத்தியாதி 
அனைத்தையும் வேண்டுமளவுக்கு அனுபவித்தப் பிறகும்
 அதை விட்டுவிட முடியாமல் இருப்பவனை … 
கடந்த காலத்தில் புகழ் நிகழ் காலத்தில் காணாமல்
போய்விடுமோ என்ற அச்சத்தில் இருப்பவனைக் கண்டு
பரிதாபப்படாமல் 
அதுவே அவன் இயங்கிக்கொண்டிருப்பதற்க்கான 
சாமுத்ரீக இலட்சணம் என்று வரையறுத்துவிட்டோமா?
இதிலெல்லாம் இருந்து இதிலெல்லாம் 
ஒரு புண்ணாக்குமில்லைனு
 மனநிலைக்குப் போகும் மனிதனைக் கொண்டாடவும்
அவன் மௌனம் கூட இயங்குநிலையின் இன்னொரு கட்டம்
 என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு இல்லையா..?

இன்னிக்கு இதை எழுதுகிறேன்.
நாளை எதையும் எழுதாமல் இருக்கலாம்.
நாளை மறுநாளும் என் இயங்கியலை நான் தான்
தீர்மானிக்க வேண்டுமே தவிர …
எதற்காகவும் பதட்டமோ அச்சமோ இல்லை.
செத்தப் பிறகு யாரும் வந்தால் என்ன.. ?
வராவிட்டால் என்ன!
நமக்கென்ன தெரியவா போகிறது..?!

அதற்காகவா இத்தனை பதட்டமும் 

2 comments:

  1. இயங்குதல் இயங்குதல் இன்மை
    என்பதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை
    தன் சுயம் பேணுதல் போல
    உடல் நலமும் பேணுதல் அவசியம் என
    நினைக்கிறேன்

    இவரையும் சபா நாயகர் காளிமுத்து
    அவர்களையும் மதுரையில்
    நாங்கள் இரட்டையர்கள்
    என்றே குறிப்பிடுவோம்

    பின்னவர் தன் கடைசிக் காலம் வரை
    எப்போதும் அரசியல் ஈடுபாட்டுடன்
    இயங்குதளத்தில்தான் இருந்தார்

    அவர் இவருக்கு முன்னமேயே
    போய்ச் சேர்ந்து விட்டார்

    ReplyDelete
  2. அருமையான பதிவு
    நன்றி

    ReplyDelete