Wednesday, May 28, 2014

காணாமல் போன தண்ணீர் கூஜா








மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்வது எங்கள்

 வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிகழ்வு. எங்களில் பலருக்கு  

அந்த ஒரு சில நாட்களில்  வாழ்வதற்காகவே மற்ற நாட்கள் 

 எல்லாம் சாக்கடை ஓரத்தில்  கழிகிறது.  



எங்கள் வீடுகளில் அப்போதெல்லாம் தண்ணீர் கூஜா கட்டாயம்

இருக்கும். பெண்ணுக்குத் திருமணமாகிப் போகும் போது கொடுக்கும்

சீர்வரிசையில் இந்த தண்ணீர் கூஜாவும் இடம் பெறும் என்றால்

பார்த்துக் கொள்ளுங்கள் தண்ணீர் கூஜாவின் முக்கியத்துவத்தை!


அப்போதெல்லாம் ஜனதா டிரையினில் பயணிப்போம். 

ஜனதா டிரெயின்  காலையில் வி. டி ஸ்டேஷனிலிருந்து  

புறப்படும்.  மூட்டை முடிச்சுகள்,    டிரங்க்பெட்டி அத்துடன்  

ஹோல்டால் என்று சொல்லப்படும் படுக்கை

மறக்காமல் தண்ணீர் கூஜா வைத்திருப்போம். அத்துடன் தண்ணீர்

காலியானவுடன் டிரையின் நிற்கும் ஸ்டேஷன்களில் இறங்கி

தண்ணீர் கூஜாவை நிரப்பிக் கொள்வோம். டிரெயின் நிற்கும் போது

தண்ணீர் கூஜாவை நிரப்புவதும் ஓடி வந்து டிரையினில் ஏறுவதும்

சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும். 

அந்த தண்ணீரைக் குடித்த எங்கள் யாருக்கும் 

 ஊருக்குப் போனவுடன் எந்தவிதமான உடல் நலக்குறைவும்

ஏற்பட்டதில்லை.  1



10 நாட்களுக்கு முன் நீண்ட இடைவெளியில் சென்னைக்கு

டிரெயினில் பயணித்தேன்.  ரயில் நீர் பாட்டிலில் அடைத்து

விற்பனைக்கு  வந்துவிட்டது.   நான்  பயணங்களின் போது இறங்கி

தண்ணீர் நிரப்பிய குழாய்கள் உடைந்து போயிருந்தன.

சில இடங்களில் காணாமல் போடிருந்தன.  தண்ணீர்க் கூஜாவின் நினைவு

என்னை அலைக்கழித்தது. மீண்டும் மும்பைக்குத் திரும்பியவுடன்

என் தண்ணீர்க் கூஜாவைத் தேடிப் பார்த்தேன். அதைக் காணவில்லை.


என் தாய்வீட்டு சீதனமாக என் அம்மா ஆசையுடன் கொடுத்த அந்த


தண்ணீர்க் கூஜாவைக் காணவில்லை.



ஃபிரிட்ஜ் வாட்டர், மினரல் வாட்டர் , அத்துடன் பலவகையான பழரசங்கள்

எவ்வளவோ குடித்துப் பார்த்து விட்டேன், அடங்கவில்லை என்

தண்ணீர்த்தாகம்.  என் தண்ணீர்க்கூஜாவை இனி நான் பார்க்கவே முடியாதா?

பெற்ற தாயை  இழந்த தருணத்தில் அழுதக் கண்ணீர் மீண்டும்

என் விழி இமைகளை நனைக்கிறது.   என் தண்ணீர்க் கூஜாவை நான்

இழந்துவிட்டேன்.  எப்போது மரணம் சம்பவித்தது என் தண்ணீர்க் கூஜாவுக்கு?

யாரிடம் பறி கொடுத்தேன்  என் தாய் கொடுத்த தண்ணீர் கூஜாவை?

இதோ... என் தொண்டையை யாரோ அமுக்கி என்னைக் கொலை

செய்ய வருகிறார்கள்.  தண்ணீரைக் கூஜாவில் நிரப்பிக் கொண்டு

பயணங்களில் சாகசங்களுடன் வாழ்ந்த அந்தச் சிறுமியின் பயணம்

முடிந்து விட்டது.


இனி என்னால் கண்டு பிடிக்கவே முடியாது,

காணமல் போன என் தண்ணீர் கூஜாவை.


------







Thursday, May 22, 2014

ஸ்டாலினைத் தோற்கடித்தது எதிர்க்கட்சி அல்ல..





நடந்து முடிந்த தேர்தல் களத்தில் திமுக வின் படுதோல்வி திமுக என்ற அரசியல் கட்சியின் தோல்வி என்பதைவிட  ஸ்டாலினின் தோல்வியாகவே முன்வைக்கப்படுகிறது. இப்படியான ஒரு கருத்தைப் பரப்புவதன் மூலம் திமுக வுக்கும் அதன் வாரிசு அரசியலுக்கும்   கூட ஏதாவது சுயலாபங்கள் இருக்கலாம்! ஆனால் உண்மை அதுவல்ல.

அண்மைக்காலங்களில் திமுக வின் வாரிசு அரசியலை ஊழலை ஈழப்போராட்டத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியதும் எழுதியதும் நான். (கோவையின் டிசம்பர் 2013 பேசியது, திண்ணையில் வெளிவந்துக்கொண்டிருக்கும் என் கட்டுரை மற்றும் பல கட்டுரைகள்)  ஆனாலும் தனிப்பட்ட முறையில் இன்று ஸ்டாலின் மீது வைக்கப்படும் இக்குற்றச்சாட்டு எவ்வளவு போலியானது என்பதை எழுதுவதிலும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏனேனில் இந்தியாவின் வாரிசு அரசியலில் ஸ்டாலின் மட்டுமே திமுக வின் தலைவர் கருணாநிதியின் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக அரசியலில் அங்கீகாரம் பெற்றவரில்லை. கட்சியில் அதற்காக உழைத்தவர். படிப்படியாக முன்னுக்கு வந்தவர். 

வாரிசு அரசியலில் இந்தியாவில் ஸ்டாலின் மட்டுமே இந்த வகையில் விதிவிலக்கானவர் என்பதை என்றும் பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.
ஆனால் அதே வாரிசு அரசியல் வேறு ஏதோ ஒரு வகையில் திமுகவை கரையானைப் போல அரித்து
தின்றுவிட்ட நிலையில் பொறுப்புக்கு வந்தவர்
ஸ்டாலின். கலைஞரின் குடும்ப அரசியல் திமுகவில்  நுழையாமல் இருந்திருந்தால் ஸ்டாலின் உழைப்பும் காத்திருப்பும் இன்றைக்கு இப்படி வீணாகி இருக்காது!

ஸ்டாலின் தன் பள்ளிப்படிப்பு காலத்தில் (1960களில் என்று நினைக்கிறேன்) அறிஞர் அண்ணாவும் கலைஞரும் பேசும் கூட்டங்களில் மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருப்பாராம். தலைவர்களின்
பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்துக்கொண்டிருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மறுநாள் அவர் பதிவு செய்திருப்பது அப்படியே முரசொலியில் வெளிவந்துக் கொண்டிருந்தது.

அறிஞர் அண்ணாவின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை எம்ஜிஆரின் திரைப்படம் போட்டு  நிதி வசூலித்து ஸ்டாலின்  கொண்டாடிய காலம் முதல்  அவரை உன்னிப்பாக  கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

வாரிசு அரசியலில் எமர்ஜென்சி கொடுமையில் மிசா கைதியாக சிறைப்பட்ட ஒரே அரசியல் வாரிசும் ஸ்டாலின் மட்டும் தான். அப்போது அவருக்கு வயது 23, திருமணமாகி 5 மாதங்கள் தான் ஆகி இருந்தது. சிறையில் அவர் அனுபவித்தக் கொடுமைகளை இன்றைய முகநூல் இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. என் போன்றவர்களுக்கு அந்தச் சம்பவம் நன்றாக நினைவில் இருக்கிறது.
சிறையில் ஸ்டாலினைச் சந்திக்க பெற்றோரும் மனைவியும் வருகிறார்கள். சிறைக்காவலர்கள் ஸ்டாலினுக்கு முழுக்கைச்சட்டை கொடுத்து அணிந்துக் கொள்ள செய்கிறார்கள். சிறையில் அடிபட்ட காயங்கள் வெளியில் தெரியாமல் இருக்க மட்டுமல்ல, வெளியில் சொல்லவும் கூடாது என்று அவருக்கு சிறை அதிகாரி
ஆணை இடுகிறார். ஸ்டாலினும் அப்படியே நடந்து கொண்டார். 

ஸ்டாலினின் நிர்வாகத் திறமைகளை திமுக பயன்படுத்திக் கொண்டு எங்கேயோ போயிருக்க முடியும்! பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரைத் தேக்கிவைத்து பாசனம் செய்ய தவறியது திமுகவின் தலைமை. ஸ்டாலினின் உழைப்பையும் தியாகத்தையும்
முன்னிலைப் படுத்தாமல் அவரை வாரிசு அரசியலின் அடையாளமாக  மட்டுமே முன்னிறுத்தியவர்கள் திமுகவின் அரசியல் எதிரிகளோ அல்லது ஊடகமோ அல்ல. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அரசியல் விமர்சகர் சோ ராமசாமி கூட ஸ்டாலின் 20 வருடங்கள் தன்னை திமுக வில் இணைத்துக் கொண்டு படிப்படியாக முன்னுக்கு வந்தவர் என்பதை ஒத்துக் கொள்கிறார். எனவே வாரிசு அரசியல் என்ற தோள்களில் தொற்றிக்கொண்டு வந்தவர் அல்ல ஸ்டாலின். எதிர்க்கட்சியினரும் ஏற்றுக்கொண்ட இந்த உண்மையை கருணாநிதியின் குடும்பமும்  குடும்ப அரசியலும் ஏற்றுக் கொள்ள தவறியது. குடும்பத்தலைவர் என்ற முறையில் கருணாநிதியின்
நெஞ்சுக்கு நீதி செய்த அநீதி இது
ஸ்டாலின் என்ற தொண்டனுக்குச் செய்த துரோகம் இது!

ஸ்டாலின் மேயராகப் பதவி ஏற்ற போது நடந்தப் பாராட்டு விழாவில் அன்றைய காங்கிரஸ் தலைவர் மூப்பனார் "ஸ்டாலினை நான் இப்போது பாராட்ட மாட்டேன், மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்த பின்னர் தான் பாராட்டுவேன்" என்றார். அதுபோலவே 1996க்குப் பிறகுதான் மாநகராட்சி பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதி தேறியவர்களின் எண்ணிக்கை 55 % லிருந்து 78 % உயர்ந்தது என்பதும்
உண்மை. ஸ்டாலின் மேயராக இருந்தப் போது சரியாக காலை 9 மணிக்கு மாநகராட்சிக்கு வருவார், மாலை 6 மணிக்கும் வருவார், இரவு 9 மணி வரை இருந்து பணிகளைக் கவனிப்பார் " என்று மாநகராட்சி ஊழியர்கள் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்.

2ஜி யில் சம்பந்தப்பட்டவர்கள் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் 2ஜி பற்றி யாருக்குத் தெரியும்? என்று மமதையுடன்! ஆனால் தேர்தல் களத்தில் அவர்கள் நிற்கும் போதும் பிரச்சாரம் செய்யும் போதும்
2ஜி குறித்து மறந்துப் போனவர்கள் கூட அதை மறக்கவோ மன்னிக்கவோ முடியாமல் செய்ததில் 
எதிர்க்கட்சிக்கு எந்தப் பங்கும் இல்லை. தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வது என்பது இதுதானோ! 

மிசா  சிறைக்கைதியின் தியாகத்தை
2ஜியின்  சிறைவாசம் காவு வாங்கிவிட்டது.
இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாத வரை 
வெளிப்படையாக தெரியும் இந்தக் கட்டியை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாத வரை திமுக வை எவராலும் காப்பாற்ற முடியாது.
இதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது ஸ்டாலினும்
ஸ்டாலின் எதிர்காலமும்.

---

Monday, May 12, 2014

நாம்தியோ தாசலும் மல்லிகா அமர்ஷேக்கும்



இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் நாம்தியோ தாசல்.
மராத்திய கவிதைகளுக்கு உலக அரங்கில் மிக முக்கியமான இடத்தைக்
கொடுத்ததில் நாம்தியோ தாசலின் பங்கு மகத்தானது.

நாம்தியோ தாசலின் காதல் மனைவி மல்லிகா அமர்ஷேக்.
இருவரும் கவிஞர்கள் என்பது  நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய
புள்ளி.

இந்த இரு கவிஞர்களும் ஒருவரில் ஒருவர் அடங்க மறுக்கின்றார்கள்.
இருவருக்குமான அடையாளங்கள் தனித்து அவரவர் சுயத்துடன் நிற்கின்றன.
அதனால் தான் என்னால் நாம்தியோ தாசலும் அவர் மனைவி மல்லிகா அமர்ஷேக்கும் என்று எழுத முடியவில்லை. அண்மையில் புதுவிசைக்காக
இருவரின் கவிதைகளில் நான் விரும்பியதை மொழியாக்கம் செய்திருந்தேன்.
(புதுவிசை இதழ்  ஏபரல் -ஜூன் 2104) அதிலிருந்து இரு கவிதைகள்:



நாம்தியோ தாசல்:




அவள் போன அந்த நாளில்....
----------------------------------------------------

அவள் போன அந்த நாளில்
என் முகத்தில் கறுப்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டேன்.
கொடூரமான மூளைக்கோளாறு பிடித்தக் காற்றை
ஓங்கி அறைந்தேன்.
என் வாழ்க்கையின் சிறிய துண்டுகளைப் பொறுக்கி
எடுத்துக் கொண்டேன்.
உடைந்தக் கண்ணாடியின் முன்னால் நிர்வாணமாக நின்றேன்.
என்னை நானே பழிவாங்கிக்கொள்ள அனுமதித்தேன்.
"நீ பைத்தியமா?" என்று பாவப்பட்டு சூரியனைப் பார்த்து கேட்டேன்.
கனவுகளை ஓவியங்களாகத் தீட்டிய கலைஞர்கள் மீது
சாபங்களை அர்ச்சித்தேன்.
கிழக்கிலிருந்து மேற்காக நடந்தேன்.
வழியில் அகப்பட்ட கற்களைப் பொறுக்கி
என் மீதே வீசிக்கொண்டேன்.
மலைகள், பள்ளத்தாக்குகளின் ஊடாக
அளவான புன்னகையுடன் பறவையைப் போல ஓடும் தண்ணீர்
எந்தக் கடலைத் தேடி சந்திக்க அலைகிறது?
அல்லது கடல் மட்டத்தில் கசிந்து ஒழுகி மண்ணுக்குள் போய்விடுமோ?
நான் எனக்குச் சொந்தமானவன் தானா?
அவளுடைய இறந்த உடலை நெஞ்சோடு அணைத்து
இதயம்வெடிக்க கதறி அழ என்னால் முடியவில்லை.
அவள் போன அந்த நாளில்
என் முகத்தில் கறுப்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டேன்.

----------



மல்லிகா அமர்ஷேக் கவிதை:



பெருநகரம் 1
-------------------


அவள் பெண்
கருப்பையால் முழுமையான பெண்
நிறைவான மழைக்காலம்
குறைவில்லா குளிர்காலம்
ஓர் ஆகாயம்
ஓரு கடல்.


அவள் முலைகளிலும் தொடைகளிலும்
நீ
வாழ்க்கையின் அர்த்தங்களைத் தேடி 
அலைகிறாய்.
விடைத்தெரியாத உன் கேள்விகளுக்கு
அவளிடம்
விடைகாணத் துடிக்கிறாய்.

அவள் அமுதக்கலசமோ?
மாறிவிடும் தோற்றமோ?
மனைவி
காதலி
விலைமாது
இவர்களுக்குள்
என்ன வேறுபாடு கண்டாய்?
எண்ணிக்கையத் தவிர.


அந்த உடல்களுக்கு அப்பால்
உயிர்ப்புடனிருக்கும் 'அவள்களை'
நீ வேண்டுமென்றே
உதாசீனப்படுத்துகிறாய்.

உண்மையில்
உன் கேள்விகளுக்கெல்லாம்
படுக்கையறை மட்டுமே
பதிலாக முடியுமா?


உன் காமம் தணிந்த இரவில்
உன்னோடு உறங்கிய அவளை
அறிந்திருக்கவில்லை நீ.
.அவள் பெண்ணோ
ஊத்தைக் கண்ணோ
மாயப்பிசாசோ
இத்தருணத்தில்
கவிதைகளைப் பற்றிய
உன் பேச்சு
ஆச்சரியம்தான்.
ஆனால்
வருத்தமாகவும் இருக்கிறது
இன்னும் எத்தனைக் காலங்கள்
அர்த்தமில்லாத சொற்குவியலாய்
மரப்பாச்சி வாழ்க்கையில்
பொய்யான கீரிடத்தைச்
சுமந்து கொண்டு
திரியப் போகிறாய்?


உன் படகுகள்
பெண்ணின் தொடைகளைச் சுற்றிவந்து
பாய்மரத்தை விரிக்கின்றன
கருப்பை என்ற கைக்குட்டையை
பெண்கள் அசைக்கிறார்கள்
'பாவம் அவன் தீவை
அவன் கண்டடையட்டும்!'
என்கிறார்கள்.
மூன்றாவது கடற்கரையாக
அவர்கள் மாறுகிறார்களோ
இல்லை
அவர்கள் முலைக்காம்புகளில்
உன் படகு இளைப்பாறுகிறதோ..
சத்தமாகப் பாடுகின்றாய்.

அமெரிக்கா அமெரிக்கா
உரேக்கா யுரேக்கா..
இப்படியாக ஏதோ ஒரு பாடலை
கடலலைப் போன்ற அவள் கூந்தலில்
உன் சரீரம்
தொங்கிக்கொண்டிருக்கிறது.


அவள் கண் இமைகளில் ஈர உதடுகளில்
காய வைக்கிறாய்
உன் சுவையான அதிகப்படியான
தர்க்க நியாயங்களை.


மகிழ்ச்சி அலையின் உச்சக்கட்டத்தில்
நிறைவுகளின் விளிம்பில் நீ.


இப்போதும்
நான் சொல்லவரவில்லை
அவள் தேவதை என்று!
ஆனால்
அரைநிர்வாணமாகிப் போன
உன் ஆன்மாவுக்கு
அவள் மட்டுமே
ஆடையாக முடியும்!.

---------------------






Tuesday, May 6, 2014

தமிழ்ச்...சா..தீ கால்டுவெல்லுக்கு செய்த துரோகம்







நாளை - 07 மே - 2014 கால்டுவெல்லின் 200 வது ஆண்டுவிழா.
07-5-1814ல் அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் சமயப்பணி ஆற்ற
தமிழகம் வந்தார். எங்கள் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில்
தங்கினார். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் இருந்த மொழியறிஞர்
திராவிட மொழிகளுடன் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, ஜெர்மன், பிரஞ்சு
மொழிகளிலும் புலமைப் பெற்றவர். 18 மொழிகள் அறிந்த மொழியறிஞர்.

இந்திய சமூகத்தின் தலைவிதியை மொழி தளத்திலும் இன அடிப்படையிலும்
மாற்றியவரும் மிக அதிகமான பாதிப்புகளைக் கொடுத்தவரும் இவர் தான்.


கால்டுவெல் 1856இல் "திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப
மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravadian or
South Indian family of Languages) என்னும் தலைப்பில் தன் நூலை
வெளியிடுகிறார். உள்ளடக்கமும் தலைப்பும் ஒன்றுக்கொன்று
இணக்கமாய்ப் பொருந்தியிருந்த முதல் பதிப்பு அது. தலைப்பில் உள்ள "திராவிடம்” என்னும் சொல்லும், "திராவிட மொழிகள்” என்னும் கருத்தாக்கமும் கால்டுவெல்லின் கண்டுபிடிப்புகளல்ல. ஏற்கனவே புழக்கத்திற்கு வந்துவிட்ட சொற்கள் அவை. 1801க்கு முன்பே "திராவிட மொழிகள்” சிலவும் அவற்றைக் குறிக்கும் அப்பெயரும் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால் எல்லா மொழிகளும் சமஸ்கிருதத்திலுருந்து வந்தவை தான் என்றே நம்பினார்கள்.
அந்த  நம்பிக்கையை கருத்துருவாக்கத்தைக் குழிதோண்டி புதைத்தவர் கால்டுவெல்.

1856 - முதல் பதிப்பு

1875 - இரண்டாம் பதிப்பு (19 ஆண்டுகளுக்குப் பின்)

இரண்டாம் பதிப்பில் 19 ஆண்டுகளில் அவர் கண்டறிந்த மேலும் சில உண்மைகளையும் சிலர் கேள்விகளுக்குப் பதிலையும் அடிக்குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

1913 ல் மூன்றாம் பதிப்பு.

மூன்றாவது பதிப்பில் கால்டுவெல் புத்தகத்திலிருந்து தங்களுக்கு வேண்டாதவைகளை, நூலின் மையக்கருத்துக்குத் தேவையற்றவை என்று
சொல்லி சில பக்கங்களை நீக்குகிறார்கள். அதன் பின் நீக்கப்பட்ட அந்தப் பக்கங்கள் எவர் பார்வைக்கும் வந்து விடாமல் தமிழ்ச் சாதி சமூகம்
தன் ஆதிக்கச் சாதி முகத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறது..

அப்படி நீக்கப்பட்ட பக்கங்கள்:
நீக்கப்பட்ட பகுதிகள்:

1. The relative antiquity of Dravidan Literature என்னும் தலைப்பின் கீழ் வரும் 34 பக்கங்களுள்ள முழுப்பகுதியும்

2. பின்னிணைப்புகளில்,

II Remarks on the Philological portion of Mr,Gover’s “Folk songs of Southern India”
III, Sundara Pandya
IV, Are the Pariars (Pareiyas) of Sourthern India Dravidans?
V, Are the Neilghery (Nilagiri) Tudas Dravidans?
VI, Dravidian physical Type
VII. Ancient Religion of the Dravidians

இந்த 6 தலைப்புகளில் மொத்தம் 76 பக்கங்கள்.

3. அடிக்குறிப்புகளாகக் கொடுக்கப்பட்ட 507 வரிகள்.

4. நூலின் உட்பகுதிகளிலிருந்து அங்கங்கே பத்திகளாகவும் பக்கங்களாகவும் (குறிப்பாக Introduction பகுதியிலிருந்து).

மொத்தம் நீக்கப்பட்ட பகுதிகள் மூன்றாம் பதிப்பின் அச்சு வடிவத்தில் 160 பக்கங்கள் வரக்கூடியவை. இதில் வெறும் 48 பக்கங்கள் உள்ள இரண்டு பகுதிகளை நீக்கியதற்கான காரணங்களை மட்டும் தருகின்றனர். 1. "திராவிட இலக்கியங்களின் பழமை”ப் பகுதியை நீக்கக் காரணம்: "அது நூலின் மையக்கருத்துக்குத் தேவையில்லாதது. பழங்கால நூல்களுக்கு கால்டுவெல் கணித்த காலங்கள் பலவும் காலாவதியாகிவிட்டன (இது உண்மை).” 2. பின்னிணைப்பில் கோவருக்கு கால்டுவெல் தரும் பதிலை மட்டும் குறிப்பிட்டு அதை நீக்கியதற்கான காரணம்: "கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையற்ற அல்லது காணாமல் போய்விட்ட எழுத்தாளர்களின் கருத்துக்கு கால்டுவெல் பெரும் சிரமம் எடுத்துக் கொண்டு பல பக்கங்களில் கூறும் அவை வீண் சர்ச்சைக்குரிய விஷயங்கள்.”மீதமுள்ள 70 சதவீதப் பக்கங்களை நீக்கியதற்கு அவர்கள் வெளிப்படையாக ஒரு காரணமும் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, அப்பகுதிகளைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதைக் கூட வெகு சாமர்த்தியமாகத் தவிர்த்துவிடுகின்றனர்.

I have added an excurses on ‘Sundara Pandia’. and I have endeavoured to answer the question. “Are the Paraiyas and Tudas Dravidians?” and have adjoined some remarks “on the Dravidian Physical Type”. and “on the Religion of the ancient Dravidian Tribes,”

மூன்றாம் பதிப்புச் செய்தவர்களுக்கு இந்த வாக்கியம்தான் பிரச்சினையே. 
காரணம் பறையர் மற்றும் தோடா இன மக்களை கால்டுவெல் திராவிடர்கள்தான் என்றல்லவா சொல்லி இருக்கிறார்!
 தமிழ் ஆதிக்கச் சாதிக்கு இதுதான் ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது.
திராவிடர், திராவிடம் என்று தமிழ்நாட்டில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் சகல ஜாம்பவான்களும் இந்தக் கள்ளமவுனத்தின் காவலர்கள் தான்.


இதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற அய்யா கவிதாசரண்
கால்டுவெல் பதிப்பித்த இரண்டாம் பதிப்பையும் பின்னர்
பதிப்பிக்கப்பட்ட மூன்றாம் பதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்த
அதிர்ச்சி தரும் உண்மையை,  தமிழ்ச்சாதியின் சாதி அகம்பாவத்தை
வெளிக்கொணர்ந்தார். "அப்படியா?" என்று ரொம்பவும் அதிர்ச்சி அடைந்தது போல கேட்டுக்கொண்டார்களாம் பல்கலை கழக தமிழ்ப் பேராசிரியர்கள்

கவிதாசரண் அவர்கள் தான் குடியிருந்த வீட்டை அடமானம் வைத்து கால்டுவெல்லின் இரண்டாம் பதிப்பை முழுமையாக வெளியிட்டார்.
அந்தப் பதிப்பில் அவர் எழுதியிருக்கும் சில வரிகள்:

THESE EDITORS  HAD CARVED A TEXT BOOK OUT OF IT FOR THE CLASS ROOM
SCHOLARS, LOYAL TO THE SAGACITY OF THE INDIAN HYPOCRISY WITH CASTE BASED TRAITS. THE ELITE DRAVIDIANS HAVE ALL ALONG BEEN ACCEPTING IT AS THEIR BEST SUITED TREASURE, NOT KNOWING WHAT THEY ARE DOING OR STRIVING FOR.

OUR ENDEAVOUR OF BRINGING THIS EDITION TO ITS REVIVAL IS NOT ONLY TO ACCLAIM CALDWELL WTH NEW UNDERSTANDING FOR HE WAS MORE THAN HUNDRED YEARS AHEAD OF HIS TIME BY QUESTIONING THE INDIAN SOCIAL ORDER, BUT ALSO
TO RECLAIM THE FIRE TO GLOW FOR EVER IN THE AIR OF FREEDOM.

கால்டுவெல்,
எங்களை மன்னித்துவிடுங்கள்...
காந்திக்கு துப்பாக்கி குண்டுகளைப்
பரிசாகக் கொடுத்த
மதவாதிகளை விடக் கொடியவர்கள் நாங்கள்.
இன்றுவரை எல்லா மேடைகளிலும்
உங்கள் பக்கங்களை
வாசிக்கமாலேயே உரக்கப் பேசுவதற்காக
எங்களை மன்னித்த மாமனிதரே..
எங்கள் சாதித்தமிழன்
அறிந்தே செய்த இந்த தவறுகளுக்காகவும் சேர்த்தே
அவர்களை மன்னித்தருளும்.

ஆமென்.

Saturday, May 3, 2014

எல்லோரும் வணங்குவோம் அம்பானியை!








ரிலையன்ஸ் நமஹ!

இனி. எல்லோரும்
அம்பானியை வணங்குவோம்.
வாழ்க அம்பானி.


சர்வம் அம்பானி மயம்.
நீ சாப்பிடுகிற சாப்பாட்டிலிருந்து
உன் வீட்டில் எரிகிற லைட் வரை
அம்பானி,
உன் கைபேசி அம்பானி.
உன் திரைப்படம் அம்பானி
நீ பார்க்கும் தொலைக்காட்சி அம்பானி
நீ வாசிக்கும் நாளிதழ் அம்பானி
நீ நுழையும் தியேட்டர் அம்பானி
நீ போட்டிருக்கும் உடை அம்பானி

நாளை நீ சுவாசிக்கும் காற்றுக்கும் வேண்டும்
அம்பானியின் அனுமதி.

அம்பானி தான் இந்தியா.
இந்தியாவில் எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும்
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
உன்னையும் என்னையும் ஆண்டு கொண்டிருப்பது
அம்பானி.

செய்திகளின் ஊடாக சொல்ல வரும்
செய்திகள் சொல்லாத செய்தி சாராம்சம் இதுதான்:


தேர்தல் விறுவிறுபான செய்திகளைத் தின்று ஊடகங்கள்
கொழுத்துப் போயிருக்கின்றன.
ராகுல், பிரியங்கா, சோனியா , மோதி, மேடம் ஜெ, மயாவதி,
மம்தா திதீ, மோதி, லல்லு பிரசாத் , கெஜ்ரிவால் இதற்கிடையில்
திமுக குடும்பத்தின் கெட்டக்குமாரனாக சித்தரிக்கப்பட்டுவிட்ட
அழகிரி மனம் திறக்கிறார் என்ற இன்றைய தந்தி சேனல்
வரை... எங்குப் பார்த்தாலும் தேர்தல் மயம்.
இந்த நாடகத்தில் ஒரு துன்பியல் காட்சி போல நடந்து முடிந்துவிட்டது
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு.
அப்பாவி மக்களின் உயிர் உடமைகள் இழப்புக்கு நடுவில்
குளிர்க்காயும் அரசியல் கட்சிகள்.
சங்கர்லால் துப்பறியும் கதை ரேஞ்சுக்கு இதில் எங்களிடம்
துப்புக் கிடைத்துவிட்டது என்று பரபரப்பான செய்திகளைத் தந்துக்
கொண்டிருக்கும் காவல்துறை..
இந்தக் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் உரிமை மாநில அரசுக்கா
மத்திய அரசுக்கா என்ற நேர்ப்படப்பேசு....

இத்தனைக்கும் நடுவில் ஒப்பந்தம் ஆகிவிட்டது பாரத ஸ்டேட் வங்கியுடன்
அனில் அம்பானிக்கான குத்தகை உரிமை. இதைக் கவனிக்க எவருக்கும்
நேரமில்லை. எனக்குப் பல நேரங்களில் தோன்றுகிறது... இம்மாதிரியான
பரபரப்பான காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் போது அல்லது பரபரப்பான
காட்சிகளைத் திட்டமிட்டு ஓடவிட்டு அத்தருணத்தில் எல்லோரின் கவனமும்
அதில் இருக்க திரைமறைவில் இந்தியாவைக் குத்தகைக்கு விடும் ஏலவிற்பனை அரங்கேறிக் கொண்டிருக்கிறதோ என்று.
இந்த ஏலச்சந்தையில் எல்லா கட்சிகளும் கூட்டுக்கள்ளன்கள்!
ப்ரியங்காவை மகள் போல  என்று மோதி சொன்னதைக் கூட
பல்வேறு கோணங்களில் அனைத்துக் கட்சிகளும் ஆய்வு செய்துக் கொண்டிருக்கும் கூர்மையான தருணத்தில் இதைப் பற்றிய செய்தியை
எந்த ஒரு அரசியல் கட்சியோ கட்சியின் தலைவர்களோ
வலது இடது தோழர்களோ கண்டு கொள்ளாமல் இருப்பதை
என்னவென்று சொல்லட்டும்?

இந்திய வங்கிகளின் தலைமை வங்கியாக இருப்பது ரிசர்வ் பேங்க்.
ரிசர்வ் பேங்க் இல்லாத இடங்களில் அந்தப் பொறுப்பை ஏற்பது
பாரத ஸ்டேட் பேங்க். அரசு மயமான 26 வங்கிகளும் இந்தியாவின்
ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி கிளைகள் திறக்க அனுமதி இல்லை.
இந்திய ரூபாயின் மதிப்பைத் தீர்மானிப்பதும் ரிசர்வ் பேங்க்.

தங்கள் சேமிப்புகளுக்கு தனியார் வங்கிகளும் பன்னாட்டு வங்கிகளும்
அதிக வட்டி கொடுத்தாலும் எங்களைப் போன்ற பலர் பாரத ஸ்டேட் வங்கியில்
எங்கள் சேமிப்பை வைப்பதில் பெருமை அடைகின்றோம்.
எங்கள் கணக்கும் எங்கள் சேமிப்பும் பத்திரமாக இருக்கிறது என்பது
முதல் காரணம் என்றாலும் இதற்கெல்லாம் அப்பால் எங்கள் கடின
உழைப்பில் சேர்த்திருக்கும் சேமிப்பு பணம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு
ஏதோ ஒரு வகையில் அரசு வங்கிகளில் இருக்கும் போது பயன்படுகிறது
என்று நம்புகிறோம். ஆனால் அந்த நம்பிக்கை எல்லாம் வீணாகிவிட்டது.
நான் வங்கியில் வேலைப் பார்த்தவள். என்னால் இதை நம்ப முடியவில்லை,
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி அனில் அம்பானியின் குழும நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் பணப்பரிவர்த்தனை நிறுவனத்துடன் செய்திருக்கும் ஒப்பந்தம்!


அந்த ஒப்பந்தத்தின்படி, 
கடன் விண்ணப்பங்களை அளிப்பது, இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், ஓய்வூதியப் பலன்கள், வீட்டுக் கடன்கள், சொத்துகள் மீதான கடன்கள், வாகனக் கடன்கள், தங்க கடன்கள், சிறு தொழில்களுக்கான கடன்கள், கடன் அட்டைகள், விவசாயக் கடன் அட்டைகள், நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் போன்ற பாரத ஸ்டேட் வங்கியின் சேவைகள் ரிலையன்ஸ் பணப் பரிவர்த்தனை மூலம் நடைபெறும். 
மேலும் , கடன் பத்திரங்களை வாங்குவது மட்டுமல்ல, யாருக்கு கடன் கொடுக்கலாம் என்பதையும் இனி ரிலையன்ஸ் தீர்மானிக்கும்.
கொடுத்தக் கடனை எப்படி வாங்குவது என்பதையும் ரிலையன்ஸே
முடிவெடுக்கும். இப்படி வங்கியின் சேவைப்பணிகளில் கைவைப்பது போல
வங்கியின் முடிவெடுக்கும் அதிகாரத்திலும் ரிலையன்ஸின் கை
மட்டுமே இருக்கும்.

எதை எல்லாம் இதற்கு முன் பாரத ஸ்டேட் வங்கி செய்துக்கொண்டிருந்ததோ
அதை எல்லாம் ரிலையன்சும் செய்துக் கொண்டுதான் இருந்தது. குறிப்பாக
MUTUAL FUND, LIFE INSURANCE, GENERAL INSURANCE, TREASURY INSURANCE, PROJECT FINANCE, RETAIL LOANS ஆகிய தளங்களில் பாரத ஸ்டேட் வங்கியின் போட்டியாளர் ரிலையன்ஸ். ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரசு வங்கி
தனியார் நிறுவனத்துடன் தரமான போட்டியில் களத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்வதை விட்டுவிட்டு...

அம்பானி நமஹ
ரிலையன்ஸ் நமஹ

என்று தானே போட்டியிலிருந்து விலகியதுடன் அப்படியே தங்கத்தட்டில் வைத்து அம்பானி கையில் கொடுத்து இனி இந்தியாவின் சர்வமும்
அம்பானி மயம் என்று சொல்லி இருக்கிறது. இது வெட்க கேடு!
கேட்டால் சொல்கிறார்கள்... இப்படி அவுட் சோர்சிங் செய்தால்
செலவு குறையுமாம், ... சேவையில் தனிக்கவனம் செலுத்தப்படுமாம்!
எப்படி இருக்கிறது பாருங்கள் இவர்கள் சொல்லும் காரணங்கள்..?

யாருக்குச் செலவு குறையும்?
யாருக்கு இதில் கொள்ளை லாபம்?
வங்கி கணக்குகள், கடன்களுக்கான சேவைக் கட்டணங்களை நீ அம்பானிக்கு
கொடுத்துவிட்டால், அதன் பின் NON FUND INCOME பூஜ்யமாகிவிடுமே வங்கிக்கு,
அத்தனையும் மொத்தமாகக் கொள்ளை அடிப்பதுடன், அதைத் தீர்மானிக்கும்
சக்தியாகவும் ரிலையன்ஸ் மாறுமே! அதனால் பாதிக்கப்படுவது யார்?


வங்கி கிளைகள் திறக்க ரிசர்வ் வங்கியின் அனுமதி வேண்டும் என்று
சொல்லிவிட்டு இப்படி அம்பானிக்கும் அவன் மச்சானுக்கும் அவுச் சோர்சிங் என்ற பெயரில் புறவாசல் வழியாக திறந்துவிட்டு கிளைகள் திறப்பதும்
பாரத ஸ்டேட் வங்கியைப் பின்பற்றி பிற அரசு வங்கிகளும் அவுட் சோர்சிங்
செய்ய வழிகாட்டுவதும் வங்கிகளை தனியார் மயமாக்குவதில் கொண்டு போய் முடியும். அதையும் விட ஆபத்தான தனிநபர் மயமாக்குவதில் கொண்டு
விடும்!


வங்கியில் வைக்கும் கணக்குகளும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களும் வங்கிக்கும் அந்த வாடிக்கையாளருக்கும் மட்டும் தெரிந்தவை. அதை இனி
ரிலையன்சும் தெரிந்து கொள்ளுமே! வங்கி வாடிக்கையாளரின் உரிமையை
விற்கும் அதிகாரத்தை வங்கிக்கு கொடுத்தது யார்?

வேலையில்லா திண்டாட்டம் பெருகி இருக்கும் இந்திய சூழலில் இந்தியாவின்
மிகப்பெரிய வங்கி எடுத்திருக்கும் இந்த முடிவு , இந்திய இளைஞர்களின்
எதிர்காலத்தைப் பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் தாந்தோன்றித்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து வங்கியில் பணி புரிபவர்களுக்கோ
வங்கி யூனியனுக்கோ எதுவும் தெரியவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.


பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிபவர்களை விட ரிலையன்ஸில் பணிபுரிபவர்கள் மிகச் சிறந்த மக்கள் சேவையைக் கொடுப்பார்கள்
என்று சொன்னால், இது அரசின் நிர்வாகத் திறமை இன்மையைக் காட்டுகிறதே தவிர இது ஒரு தீர்வல்ல.  ஆடத்தெரியாதவன் தெருக்கோணல் என்று சொன்னானாம்! இதே புத்தி நாளைக்கு வருமான வரித்துறை முதல்
காவல்துறை வரைக் கூட போகலாமே! இதே காரணத்தைச் சொல்லி
வருமான வரித்துறையை இன்னொரு அம்பானிக்கும் ரயில்வே பராமரிப்பு மற்றும் சேவையை அம்பானி மச்சான் மாப்பிள்ளைகளுக்கும்  ஒட்டு மொத்தமாக விற்று விடுங்களேன்!

வங்கியின் சேவைகள் விரிவடைந்திருந்தால் அதற்கான பணி இடங்களை நிரப்புவதும் படித்த நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதன் மூலம் பெருக்குவதும் ஒரு அரசின் அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த அடிப்படைகள் சரிந்து நொறுங்குகிறது.

வங்கியின் கிளைகள் இல்லாத இடங்களில் வங்கி சேவைகளைச் செய்ய படித்த இளைஞர்களையும் வங்கிப்பணியில் அனுபவம் கொண்டவர்களையும்
பயன்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தார்கள். அதைப் பற்றி அன்றைய  நிதித்துறை நடுவண அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி
(இன்றைய ஜனாதிபதி) 2011, பட்ஜெட் தொடரில் பேசினார்,
" TO REACH THE BENEFITS OF BANKING SERVICES TO THE 'AAM AADMI ' THE RBI HAD SET UP A HIGH LEVEL COMITTEE ON THE LEAD BANK SCHEME" என்று பெருமையாகப் பேசினாரே, அது என்ன ஆனது? ஆம் ஆத்மிக்கு வங்கிச் சேவை
வேண்டும் என்று எண்ணியவர்கள் அம்பானி வந்தால் வங்கிச் சேவை மேலும் சிறப்படையும் என்று சொல்கிறார்களே, என்ன துணிச்சல் இருக்கிறது இவர்களுக்கு? எல்லோரையும் கேணையன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? 

பேசாமல் இந்த தேர்தல் பரபரப்புக்கு நடுவில் கமுக்கமாக இந்திய ரிசர்வ் வங்கியிலும் மொத்தமாக அவுட் சோர்சிங்கிற்கு விட்(ற்)டு விடுங்கள்,
அதோடு சேர்த்து,

இந்திய தபால் துறை,
உளவுத்துறை,
காவல் துறை
நீதித் துறை
வருமான வரித்துறை
இந்தியன் ரயில்வே
முடிந்தால் இந்திய நதிகளையும்.....
அம்பானி வகையாறாக்களுக்கு
 ஒவ்வொருவருக்கும் பட்டா போட்டு
அவுட் சோர்சிங் என்ற பெயரில் 999 வருடங்களுக்கு மொத்தமாகக்  குத்தகைக்கு விட்டு விடுங்கள். 

அரோகரா...

Friday, May 2, 2014

குண்டு வெடிப்புக்குப் பின்...








சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு..

குண்டு வெடிப்பு செய்திகளைப் பார்த்துக் கொண்டே சாப்பாடு
மேசையில் இப்போதெல்லாம் எங்களால் சாப்பிட முடிவதில்லை.
ஏனேனில் மும்பையில் வாழும் நாங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு
வகையில் இதனால் பாதிக்கப்பட்டோம், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அந்தப் பாதிப்பின் அழுதக் கண்ணீரின் சுவடுகளும் இன்னும்
காய்ந்துவிடவில்லை.. தமிழகத்தில் வாழும் உங்கள் அனைவருக்கும்
சொல்ல விரும்பவதெல்லாம்.....


> பலியானவர்களின் ரத்தத்தின் மீது எவரும் அரசியல் நடத்த'
இடம் கொடுத்துவிடாதீர்கள்.

> எந்த ஒரு தனிப்பட்ட இனம், மதம் குறித்தும் பரப்பப்படும்
ஊகங்களும் ஊடகங்களின் பரபரப்பான செய்திகளுக்கும்
இரையாகிவிடாதீர்கள்.

> ரயில் நிலையங்கள் போன்ற பொதுஜன நடமாட்டம் அதிகமிருக்கும்
இடங்களில் இன்னார் நினைத்தால் தடுத்திருக்கலாம் என்றெல்லாம்
வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நம்பாதீர்கள்.

> ஆளும் அரசையோ காவல்துறையையோ கண்டிப்பதாலோ அவர்களின் கவனக்குறைவால் நடந்ததாகவோ பேசுவதைத் தவிர்க்கவும்.
நடைமுறை சாத்தியக்கூறுகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

> பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியுடன், ரத்ததானம், உறவினர்களுக்கு
அறிவித்தல் இத்தியாதி நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதில்
கவனம் செலுத்துங்கள்.

> மொத்தத்தில் எவரும் இம்மாதிரியான களத்தில் நின்று கொண்டு அரசியல் நடத்துவதை அனுமதிக்காதீர்கள். இதை நடத்திக் காட்டினால் தான்
இம்மாதிரியான நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கும் ஆபத்தான
அரசியலை முறியடிக்க முடியும்.




Wednesday, April 30, 2014

ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்











பெண்ணுடலை ஆணிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம் எது?
இரு முலைகளா?
ஜீவன் ததும்பும் கருமுட்டைகளா?
இவற்றின் செயல்பாடுகள் மூலம் நிகழும் பூப்பு, மாதவிலக்கு, சூல், மகப்பேறு,
தாய் -சேய் உறவுகளா?
இவை மட்டும் தானா?
இவை குறித்தப் பதிவுகள் மனிதன் கல்லில் கிறுக்கத் தொடங்கிய நாள் முதல்
இன்றைய கணினி யுகம் வரை தொடர்கின்றன.

பெண்ணுடலை அவள் பாலியல் உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
அது பெண்ணிய படைப்பாகிவிடுமா?

அன்று முதலே பெண்ணுடல் குறித்தும் உறுப்புகளின் செயல்பாடுகள்
குறித்தும் பதிவுகள் உண்டு. அவை அனைத்தும் ஆணின் பார்வையில்
அவன் வாரிசுகளைப் பெற்றெடுக்கும் அன்னையாக , அவன் காமத்தை
நிறைவு செய்யும் உடலாக , அவன் தன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள
உருவாக்கி இருக்கும் சமூகக் கோட்டைகளின் அறைகளாக, எப்போதாவது
அவனே உருவாக்கி வைத்திருக்கும் சாளரங்களின் வழி எட்டிப்பார்க்க
அனுமதிக்கப்பட்ட பச்சைக்கிளியாக...இப்படியாக ஆணின் பார்வையில் அவன்
சொல்லாடல்களில், தொன்மம், படிமம், குறியீடு, மொழி, இலக்கியம் , வரலாறுகளின் ஊடாக பெண்ணும் பெண்ணுடலும் பதிவு செய்யப்பட்டன.
ஆணின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் எந்த ஒரு செயல்பாடும்
இழிவானதாகவும் செவ்வியலுக்கு அப்பாற்பட்டதாகவும் வரையறுக்கப்பட்டது.
இந்தப் பதிவுகளில் பெண்ணுடல் சார்ந்த அனுபவங்களின் மொழிக்கு இடமில்லை. ஆனால் பெண்கள் தங்கள் உணர்வுகளைத் தாங்களே
எழுத வந்தப் போது அவள் உடலும் அவள் உடல் சார்ந்த அவள்
அனுபவமும் பெண்ணிய எழுத்தின் முதல் நிலையாக இடம் பெற்றன.
பெண்ணுடலை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இருக்கும் சில சூட்சம
விதிகளை இந்த அனுபவங்கள் கேள்விக்குட்படுத்தி இருக்கின்றனவா? என்றால்
அப்படியான ஒரு கலகக்குரல் எழவில்லை எனலாம்.
பெண்ணுடல் சார்ந்த அனுபவங்கள் அவளுக்கே அவளுக்கான சுய அனுபவங்களையும் தாண்டி சமூகவெளியில் இரண்டாம் பால்நிலையை
கேள்விக்குட்படுத்தவோ மறுதலிக்கவோ இல்லை.

எனக்கு முகம் இல்லை 
இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை
ஆண்களின் பார்வையில் இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல், சிறிய இடை,பருத்ததொடை
கதைக்கு அவர்கள் எப்போதும் எனது உடலையே
நோக்குவர் கணவன் தொடக்கம் கடைக்காரன்வரைக்கும்
இதுவே வழக்கம்.
                (அ,சங்கரி, சொல்லாத சேதிகள் பக் 9, 10)

என்று சமூகத்தில் ஆணின் பார்வையில் பெண்ணுடல் ஆத்மா இல்லாமல் வெறும் உறுப்புகளுடன் அலையும் ஆணின் நுகர்ப்பொருளாக இருப்பதை சங்கரி தன் கவிதைகளில் பதிவு செய்தார்.

யூதர் சமூகத்தில் பெண்ணின் மாதவிலக்கை தீட்டாக எண்ணி
அவளை விலக்கி வைத்து தனித்து வைத்திருப்பார்கள். இப்பழக்கமே
இந்திய சமூகத்திலும் இருக்கிறது.

"பெண்ணே உனக்கென்று
தனியிடம் உருவானது இங்கே
நீ புதிதாய் வயதிற்கு வந்ததற்கு
அல்லது
குழந்தை பெற்றதற்கு
.......
என்று பெண் , இயற்கையான கரு உற்பத்தியின் செயல்பாடுகளால்
விலக்கி வைக்கப்படுகிறாள். அந்த நாட்களில் அவள் சிரிப்பது கூட
மிகவும் போலியான விளம்பரங்களாக இருக்கிறது

விளம்பரத்திற்காய்  stayfree யுடன்
நடக்கும் சிரிக்கும் இளம்பெண்

என்று எழுதினார் கவிஞர் சுகந்தி சுப்பிரமணியம். (புதையுண்ட வாழ்வு)

ஈரப்பிசுப்போடு ஒரு நிமிடம்
உட்கார்ந்து இருப்பீர்களா
ரத்தப் பெருக்கோடும்
உறங்க வேண்டியிருக்கு
......
தொடாதே தள்ளிநில்
என்கிறாள் அம்மாவும்
எறும்புக்கும் நாய்க்கும்
எப்படியோ இந்த அவஸ்தை?

என்று தன் அவஸ்தையை மட்டுமே பதிவு செய்திருக்கும் அ.வெண்ணிலா (அ.வெண்ணிலா கவிதைகள். பக் 74)
மற்றும், இந்த உடற்கூறு பெண்ணுக்கு இயற்கை விதித்திருக்கும்
சாபமாகவே பார்க்கிறது சல்மாவின் மனமும்.

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
       (சல்மா, ஒரு மாலையும் இன்னொரு மாலையும் பக்74)

மேற்கண்ட கவிதைகள் அனைத்தும் பெண்ணுடலின் இயற்கையான
மாதவிலக்கை ஓர் அவஸ்தையாக வேதனையான அனுபவமாக
பதிவு செய்வதுடன் நின்றுவிட்டன.  மாதவிலக்கின் இரத்தப்போக்கை "இரத்த உறவுகள்" என்ற பார்வையில் நான் எழுதியிருந்த கவிதையும் என் நினைவுக்கு வருகிறது.

அடிபட்டபோது வலிக்கவில்லை
பொங்கிவந்த ரத்தம்
கட்டுகளை உடைத்துக் கசிந்து உடைந்ததில்
வலித்தது.
கட்டுகளின் அடியில்
கீறிப் பிளக்கும் காயம்.

மீண்டும் ஒரு நாள்
காயம் இன்றியே
சொட்டுச் சொட்டாக
ரத்தம்
தசைத்துணி பிழிந்து
சிந்தியது தரையில், சோபாவில்,
பள்ளிக்கூடத்து பெஞ்சில்
பார்க்கில் தியேட்டரில்

எங்கிருந்து 
பொங்கித்துடித்துச் சிதறி வழிகிறது
ரத்தம்?
என் சிறகுகள் அறுத்து
என் கால்களின் ஓடையில்
என் கைகளுக்கு விலங்காய்.
என் பிறப்பின் காயத்திலிருந்து
கசிகின்றதா? எங்கிருந்து?

ரத்தம்... ரத்தம் உறவாமே
உறவுகளின் கதவு
பூட்டாத சிறை
வாசலில்லாத வீடு
சிவப்பு ரத்தம் வெள்ளை ரத்தமாகி
வீங்கிப் பெருத்த முலையிலிருந்து
படைப்பின் சிருஷ்டியாய்.
(புதியமாதவி, நிழல்களைத் தேடி)

மாதவிலக்கு ஆண் பெண் உறவு, பாலூட்டும் பெண்
என்று படைப்பின் அடையாளமாய் கண்ட உணர்வுநிலையைத் தாண்டவில்லை என் கவிதையும்!

ஆனால் பெண்ணிய தளத்தில் இந்தப் படிகளைத் தாண்டி பெண்ணுடலை அவள் மாதவிலக்கை கொண்டாடுவதில் தனித்து நிற்கிறார்கள் இருவர்.
ஒருவர் என் இனிய தோழி கவிஞர் ஆழியாள்.
இன்னொருவர் நான் கொண்டாடும் கவிஞர் லூசிலி க்ளிஃப்டன். லூசிலி ஆப்பிரிக்கன் அமெரிக்கன் கவிஞர். (ஜூன் 27, 1936 - பிப் 13, 2010)




லூசிலி கவிதையில் பெண்ணுடலின் மாதவிடாயைக் கொண்டாடுகிறார்.

ரத்தச்சிவப்புடன் பிரகாசமாய் நிலவுத்துண்டாய்
பாயும் நதி
இதைவிட அழகான நதி வேறு இருக்கிறதா?

ஒவ்வொரு மாதமும் 
தவறாமல்
இதே ஆற்றுப்படுகையில் பாயும் நதி
இதை விட கடமை தவறாத நதி வேறு இருக்கிறதா?

பேரார்வத்துடனும் எழுச்சியுடனும் 
வலியுடனும் 
வருகிறது வருகிறது இந்த நதி.
இதைவிட தீரமிக்க நதி இருக்கிறதா?

ஏவாளின் மகளாக
கெய்ன் ஏபளின் தாயாக **
தொன்மையான நதி
இதைவிட வேறு நதி இருக்கிறதா?

பயங்கரமான நதியின் பிரவாகம்
இந்தப் பிரபஞ்சத்தில்
'இதைவிட சக்திமிக்க தண்ணீர் 
எந்த நதியிலும் இருக்கிறதா?

இந்த நதி அழகானது
நன்றியுள்ளது
பழமையானது பெண்மையானது
தீரமிக்கது
வணங்குகிறேன் இந்த நதியை - இது 
விலங்குகளின் ஊடாகவும் பாயட்டும்.

என்று முடிகிறது லூசிலியின் கவிதை.

(** கெய்ன், ஏபல் இருவரும் ஆதாம் ஏவாளின் மகன்கள்)

எறும்புக்கும்  நாய்க்கும் எப்படியோ இந்த அவஸ்தை?
என்று கேள்வி கேட்ட பெண்ணிய தளத்தை தாண்டி
இந்த நதி விலங்குகளின் ஊடாகவும் பாயட்டும் என்று
வேண்டுகின்ற பெண் உள்ளத்தைப் பார்க்கிறோம்.
ஏனேனில் இந்த நதியை பிரபஞ்சத்தின் ஜீவநதியாய்
கொண்டாடுகிறது பெண்ணுடல்.

இதே பாதையில் ஆழியாளின் கவிதைகளும் தமிழ்
இலக்கிய வட்டத்தில் இக்கருப்பொருள் குறித்து இதுவரை எழுதப்பட்ட கவிதைகள் தொடாத உச்சத்தை
தொட்டிருக்கின்றன. அண்மையில் (டிசம் 2013)ல்
வெளிவந்திருக்கும் கருநாவு தொகுதியிலிருந்து
இக்கவிதை.


(கருநாவு புத்தகவெளியீடு : சுகிர்தராணி, ஆழியாள், றஞ்சி & தெ.மதுசூதனன்)


ஃப்ரண்ட் வந்திட்டா என்பது தான் கவிதையின் தலைப்பே. மாதவிடாயை தன் தோழமை உறவாகக் கொண்டாடும் பெண்ணுடல்.

மிளகும் கிராம்பும் கூடின
கவிச்சை வயற்காடாய்
என்னைக் கமிழ்ந்தெழச் செய்த வண்ணம்
வருகிறாய் நீ மாதந்தோறும்.

மார்பு இரண்டின் கனம் ஏற
அடிவயிறு அலைந்துளைகிறது.
துளித்துளியஅய்ப்
பரவும் ஈரலிப்பின் வெதுவெதுப்பில்
நகக்கண்கள் இருபதும் பளபளக்கின்றன.
இடுப்போ இளகிக் கிடக்கிறது

கவிதையின் இவ்வரிகள் மாதவிடாய் காலத்து உடல்
மாற்றங்களை எல்லா கவிஞர்களையும் போலவே
சொல்கிறது. அடுத்த வரிகளில் தோழமைப் புகுந்து
கதைகள் பேச ஆரம்பிக்கிறது.
வந்திருப்பவள் வேறு யாருமல்ல, பெண்ணின் இணைப்பிரியாத தோழியாம்.

"உடன் பகிர 
இருபத்தியெட்டு நெடுநாட் கதைகள் உண்டு
(இருப்பதோ மூன்றே நாள்)
சொல்லி முடிப்பதற்குள் 
நெஞ்சு வெம்பித் தொண்டையும் கம்முகிறது
தொடர்ச்சியாய் என்னுள் எழும் வட்ட
வட்டக் கோபத்தை
ஏனேன்றே தெரியாத எதற்கோவான சலிப்பை
தூக்கிப் போட்டு உடைக்கிறேன்
சலீர் சலீரென அவை சிதறி நம்முன்
கிடக்கின்றன.

இந்த வரிகளில் தோழமையுடன் சேர்ந்து மாதவிடாய் காலத்து பெண்ணின் மனநிலையில் ஏற்படும் சலிப்பும் கோபமும் தோழியிடம் பகிர்ந்து கொள்ளும் கற்பனையாய் விரிகிறது.

"கதவடியில் அண்ணர் முறைத்துக் கொண்டு
நிற்கிறதையிட்டு நமக்கென்ன கவலை?
இப்போது நம்
குதித்தாடும் அசைவுகளொடான உடலின்
கூத்தாட்டம் தொடங்கிவிட்டது.
சிரிப்பும் எம்மை அப்பிக் கொண்டாயிற்று.

எம் சிரிப்பின் களி கூடக் கூட
முழுதாய் ஜொலித்துப் பெருவெளியில்
பிரகாசிக்கிறது சந்திரன்.
இதோ கால்களுகிடையே
சந்தோஷத்தின் புதிர்பாதைகளெல்லாம்
மடைதிறக்க
ஒரே அள்ளாய் அள்ளுப்பட்டுப் போகிறது
ஒரு துண்டுச் செங்கபிலப் பசுமை.

இந்நாளில் எந்நாட்களிலுமற்ற நிம்மதியுடன்
கழிமுகத்து வண்டற் படிவாய் - உன்
அடிவயிறு கட்டி உறங்குகிறேன் வெது
வெதுப்பாய் -அது
பிறப்புக்கு முன்னதாயும் சாவை மிக
அண்மித்ததாயும் இருந்தது.

என்று முடியும் இக்கவிதையின் கடைசி இரு வரிகள்
தத்துவார்தமானவை. ஒவ்வொரு மாதமும் பெண்ணுடல்
மாதவிடாய் ஊடாக கருமுட்டையின் பிறப்பையும் இறப்பையும் தொடர்ந்து நடத்தும் களமாக இருக்கிறது.
பிறப்பும் இறப்புமே உயிரியக்கத்தின் அடையாளம்.
பிறப்பும் இறப்பும் ஆக்கலும் அழித்தலுமான பிரம்மனும்
சிவனுமாய் இந்தப் பிரபஞ்சத்தின் அணுக்களாய்
இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த இயக்கதைப் பெண்ணுடலில் அதுவும் பெண்ணுடலை தீண்டாமைக்குட்படுத்திய மாதவிலக்கின் அடையாளத்தில் இருத்திக் கொண்டாடுவது என்பது
பெண்ணுடலைக் கொண்டாடும் பெண்ணியத்தின் உச்சம்.
ஆழியாள் பெண்ணிய தளத்தில் தனித்து நிற்கும் தளம் இது. 

உரத்துப் பேச கவிதை தொகுப்பில் ஆழியாள் ஒரு கவிதையில் சொல்லியிருப்பார், பெண் என்ற அடையாளத்தை உணரும் போதெல்லாம் ஏற்படும் வலியை. அதன் ரத்த வடுக்கள் வெடித்து சிதறி கிரகங்களாக உருபெறும். அப்போது உயிர்பெறும் என்மொழி, என் ஆதித்தாயின் பெண்மொழி என்பார்.
பெண்ணுடலைக் கொண்டாடிய ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளின் இக்கவிதை

Tuesday, April 29, 2014

தொட்டிச்செடி






வீடுகளை விட்டு வெளியில் வந்தாக வேண்டும்
அலங்கார வளைவுகளுடன்
எப்போதும் பளிச்சென இருக்கும்
வீடுகளின் அடையாளங்களைத் தொலைத்து
வெளியில் வந்தாக வேண்டும்.


குளிரூட்டப்பட்ட அறைகள்
மெத்தென்ற படுக்கை
தரை எங்கும் காஷ்மீரின் கார்பெட் விரிப்பு
சுவர்களில் தொங்கும் பெருமுலைக்காரிகள்
கண்ணாடியில் நிர்வாணத்தை ரசிக்கும் குளியலறை
இந்த அலங்காரங்கள் களையாத 
வீட்டின் கதவுகளைத் தாண்டி
வந்தாக வேண்டும்.
ஒப்பனைகளைக் கழற்றிவைத்துவிட்டு
நானும் என் கவிதையும்.


வனங்களை எரித்து மாளிகைக் கட்டியவர்கள்
எப்போதும் அறிந்ததில்லை
அவர்கள் இல்லங்களை அலங்கரிக்கும்
தொட்டிச்செடிகளின்  துயரங்களை.
கொஞ்சம் கொஞ்சமாக பச்சையம் இழந்து
செத்துக் கொண்டிருக்கின்றன
தொட்டிச்செடியின் இலைகள்
என்னைப் போலவே.


Saturday, April 19, 2014

மோதியின் வெற்றியில் ராகுலின் எதிர்காலம்?


தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து நானும் என் மும்பை முனியம்மாவும்
பேசிக்கொண்டிருந்தோம். இதுவரை எந்த ஓர் ஊடகமும் சொல்லாத
ஒரு கருத்தை என் முனியம்மா சொன்னாள் பாருங்கள்,


மோதி வெற்றி பெறுவாரா?
மோதி அலை வீசுகிறதா?
மோதி பிரதமரானால்..
விலைவாசி குறைந்துவிடும்,
வேலை வாய்ப்புகள் பெருகிவிடும்
தடையின்றி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்
நமக்கெல்லாம் பவர்கட் கிடையாது.
ரூபாயின் மதிப்பு கூடும்.
மொத்தத்தில் இந்தியா ஒளிரும்...

இப்படி எல்லாம்  நடக்குமா என்று கேட்டேன்.
அவள் சொன்னாள்...

இதெல்லாம் நடக்குமா எனக்குத் தெரியாதும்மா...ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

மோதி ஜெயிச்சா தான் ராகுல்காந்திக்கும் காங்கிரசுக்கும்
எதிர்காலம் இருக்கு! .

இல்லாட்டி, பாவம் அந்தப் புள்ள.. எப்படி அரசியல் பண்ணும் சொல்லுங்க,

இந்த மோதியும் சொல்றதெல்லாம் உண்மையா பொய்யானு
தெரிஞ்சுடும்ல,
அவரு பிரதமரானா அவரு சாயம் வெளுத்துப்போகும்
இல்லாட்டி இப்படித்தான் மோதி மோதி னு டிவியிலே ஒரே கூப்பாடா
இருக்கும்.

"நீ யாரு வரனும்ங்க, மோதியா காங்கிரசா ?"

"நீங்க சொல்லுங்க, உங்களுக்கு யாரு வரணும்?"

" எனக்கு ரெண்டு பேரும் வரக்கூடாது.."

"இதே பொழைப்பா போச்சும்மா உங்களுக்கு,
நடக்கிற காரியத்தைப் பத்தி எப்பவும் பேச மாட்டீங்க!'

முனியம்மா அலுத்துக் கொண்டாள்.

அவளைப் பொறுத்தவரை நான் பேசுவதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாதவை
என்ற எண்ணம்.
வர வர எனக்கும் அப்படி தோன்ற ஆரம்பித்துவிட்டது!
என்ன செய்வது, சொல்லுங்கள்!


Tuesday, April 15, 2014

காஞ்சி காமாட்சியும் ஜசோதா பென் நரேந்திர மோதியும்





காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் கடந்த மார்ச் 14-ம் தேதி உலக நன்மை வேண்டி தச மஹா வித்யா ஹோமம் தொடங்கியது. மார்ச் 23-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. பராசக்தி 10தேவியரின் உருவங்களில்

தரிசனம் தந்திருக்கிறாளாம்.

 மாதங்கி, புவனேஸ்வரி, பகளாமுகி, திரிபுரசுந்தரி, தாரா, மாகாளி, மகாலட்சுமி, சின்னமஸ்தா, தூமாவதி, பைரவி  என்பது தான் அந்த 10 தேவியரின் திருநாமங்கள்.இவர்களுக்கான சிறப்பு வழிபாடுதான் தச மஹா வித்யா ஹோமம்.


இந்தப் பத்து தேவியரும் சேர்ந்து ஜசோதா பென் நரேந்திர மோதிக்கு
தங்கள் ஆசிர்வாதத்துடன் ஒரு புடவையை அனுப்பி வைத்துவிட்டார்கள்.
யாகம் முடிந்தப் பி ன் அந்தப் புடவையை எடுத்துக் கொண்டு பிரதான அட்சகர்
நடராஜ சாஸ்திரி மார்ச் 26ல் டில்லி போய் நரேந்திர மோதியை சந்தித்து
பிரசாதம் கொடுத்து அப்படியே அம்மன் அனுப்பிய புடவையையும்
கொடுத்து உங்கள் மனைவியிடம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டாராம்!
நம் மோதி அவர்கள் தேவி பக்தராமே! சாஸ்திரி சொன்னதை அப்படியே
செய்திருப்பார்... அதன் பிறகு தான் நரேந்திர மோதிக்கு மனமாற்றம் ஏற்பட்டு
தன் தேர்தல் விண்ணப்ப படிவத்தில் மனைவியின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார் சாஸ்திரி.

உண்மை இப்படி தச மஹா வித்யா அவதாரமாக இருக்க
நம்   அம் ஆத்மி ஆட்கள்
அவர்களின் மிரட்டலுக்குப் பய்ந்து போய்த்தான் மோதி தன் மனைவியின்
பெயரைக் குறிப்பிட்டார் என்று சொல்லிக் கொண்டு அலைகிறார்கள்.
சரி அவர்களை விடுங்கள், நான் கூட என்னவோ என் வலைத்தளத்தில்
எழுதியதால் தான் மோதி உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார்
என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு இருந்தேன். எல்லாம் போச்சு..
(http://puthiyamaadhavi.blogspot.in/2013/12/blog-post.html)


எப்படியோ... சகோதரி ஜசோதா பென் அவர்களுக்கு நல்லதாக ஒரு புடவை
கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷமாக இருக்கிறது.

(செய்தி ஆதாரம் :தமிழ் ஒன் இண்டியா டாட் காம்)

Sunday, April 13, 2014

காந்தி , மகாத்மா அல்ல, ஓர் அரசியல்வாதி..






ஏப்ரல் 14. புரட்சியாளர் அம்பேத்கரின் 124 வது பிறந்தநாள்.

அம்பேத்கர் வெறும் பெயரல்ல;

கங்கையின் புனிதம் இந்த மகாநதியின் முன்னால் மண்டியிட்டது

கற்பனை அல்ல. நிஜம். கற்பனைகளை மட்டுமே நினைவில்  வைத்திருக்கும்

சமூகத்திற்கு நிஜங்களை அடிக்கடி நினைவூட்ட வேண்டி இருக்கிறது.

இந்த நாளில், அண்ணல் அம்பேத்கர் பி பி சி க்கு 1955ல்  கொடுத்த

நேர்காணலின் தொகுப்பிலிருந்து சில பகுதிகளை...  



நான் எப்போதும் சொல்வேன், காந்தியை நான் சந்திக்கும் போதெல்லாம்
ஒரு எதிரி நிலையில் தான் எங்கள் சந்திப்பு. மற்றவர்களை விட காந்தியை நான் நன்றாக அறிவேன். ஏனேனில் என்னிடம் தான் காந்தி என்ற மனிதன்
தனக்குள் புதைந்திருக்கும் கோர முகத்தைக் காட்டினார்.
தொண்டர்களாக காந்தியை அணுகியவர்களுக்கு அவரைப் பற்றி எதுவும்
அறிந்திருக்கவில்லை. மகாத்மா என்ற பொய்த்தோற்றத்தை மட்டும் பார்த்தவர்கள் அவர்கள்.

எனக்கு வியப்பாக இருக்கிறது, வெளிநாடுகளில், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் காந்தியைப் பார்க்கும் விதம். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, என் பார்வையில்
காந்தி இந்திய வரலாற்றின் ஒரு அத்தியாயம், அவ்வளவு தான்.
அவர் ஒரு சகாப்தம் அல்ல. காந்தி ஏற்கனவே மக்கள் நினைவிலிருந்து
மறைந்து கொண்டிருக்கிறார். காங்கிரசு கட்சி அவர் பிறந்தநாளுக்கோ
அவர் சம்பந்தப்பட்ட பிற நிகழ்வுக்கோ கொடுக்கும் விடுமுறை காரணமாகத்தான் அவர் நினைவு கூரப்படுகிறார். இவை இல்லை என்றால்
அவர் எப்போதோ மக்கள் நினைவிலிருந்து மறைந்திருப்பார்!

காந்தி எந்த அடிப்படை மாற்றங்களையும் செய்தவரில்லை. அவர் ஒரு
இரட்டை வேடதாரி. இரு மொழிகளில் அவர்  எழுதினார். ஹரிஜன் பத்திரிகையில் ஆங்கிலத்திலும் தீன் பந்து பத்திரிகையில் குஜராத்தியிலும்.
ஆங்கிலப் பத்திரிகையில் சாதிக்கு எதிராக தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக
எழுதிய சமதர்மவாதி. குஜராத்தி பத்திரிகையில் அவர் ஒரு ஆசாரபுருஷர்.
சாதியை, வர்ணாசிரமத்தை ஆதரிப்பவர். யாராவது அவர் இரண்டு மொழிகளிலும் எழுதியிருப்பதை ஒப்பாய்வு செய்ய வேண்டும்! ஆனால்
மேற்கத்திய நாடுகளின் மக்கள் அவர் ஆங்கிலத்தில் எழுதியதை மட்டுமே
அறிவார்கள். குஜராத்தியில் எழுதியதை எவரும் கண்டு கொள்ளவில்லை.
அவருடைய வாழ்க்கை குறிப்புகள் அவர் ஆங்கிலத்தில்
ஹரிஜன், யங் இந்தியா பத்திரிகைகளில் எழுதியதன் அடிப்படையில் வந்தவைத்தான்.

காந்தி ஒரு சீர்திருத்தவாதி அல்ல. அவர் ஒரு சானாதன இந்து.
அவர் தீண்டாமைப் பற்றி பேசியதெல்லாம் தீண்டத்தகாத மக்கள் காங்கிரசில்
இருக்க வேண்டும் என்பதால் தான். அவருடைய சுயராஜ்ய இயக்கத்தை க தீண்டத்தகாத மக்கள் எதிர்க்க கூடாது என்பதால் தான். அவர்களை முன்னேற்றும் எந்த நோக்கமும் அவருக்கு கிடையாது. நீக்ரோக்களுக்காக
அமெரிக்காவில் போராடிய கர்ரிசன் (வில்லியம் கர்ரிசன்) போன்றவர் அல்ல
காந்தி.


காந்தி இல்லை என்றாலும் இந்தியாவுக்கு அரசியல் விடுதலை கிடைத்திருக்கும், சற்று தாமதமாக. அதுவும் மக்களுக்கு நன்மையாகவே முடிந்திருக்கும். . அரசியல் அதிகாரம் பிரிட்டனிடமிருந்து கைமாறும் போது
அதற்கான தகுதியுடன் இந்திய மக்கள் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது
ஒரு வெள்ளத்தைப் போல வந்தது.(விடுதலை). மக்கள் அதற்குத் தயாராக இல்லை. நான் நினைக்கிறேன், இங்கிலாந்தின் லேபர் கட்சி ஒரு முட்டாள் கட்சி என்று.

(புனா ஒப்பந்தம் குறித்துப் பேசும்போது...)

காந்தி பேசினார், பேரம் பேசினார். நான் அவரிடம் நீங்கள் கடுமையான நிபந்தனைகளை விதிக்காவிட்டால், 'நான் உங்கள் உயிரைக் காப்பாற்ற .
தயாராக இருக்கிறேன். என் மக்களைப் பலி கொண்டு உங்கள் உயிரை நான்
காப்பாற்ற போவதில்லை. உங்கள் விருப்பத்திற்காக, (பைத்தியக்காரத்தனத்திற்காக) நான் என் மக்களின் நலனைத் தியாகம் செய்யப்போவதில்லை. ஒரு பொதுவான தேர்தல் எப்படி ஒரு சமூக நிலையை மாற்றும்? அது நடக்காது.

சீக்கியர்களைப் போல இசுலாமியர்களைப் போல தாழ்த்தப்பட்ட மக்களும்
தனிப்பிரிவாக மாறிவிடுவார்களோ என்று அவர் அச்சப்பட்டார். இந்த எண்ணம் தான் அவர் உள்ளத்தில் இருந்தது. அவர் ஓர் அரசியல்வாதி, மகாத்மா அல்ல.
நான் அவர் மகாத்மா என்பதை மறுக்கிறேன். அவரை மகாத்மா என்று நான்
அழைத்ததே இல்லை. நியாயப்படி பார்த்தால் 'மகாத்மா' என்ற அழைக்க
அவருக்கு எந்த தகுதியும் இல்லை.





the Interview can be heard at http://www.youtube.com/watch?v=ZJs-BJoSzbo

Thursday, April 3, 2014

சிரியா பெண்கவிஞர் மரம் அல்-மஷ்ரி கவிதை





சிரியாவின் சிறைக்கூடத்தில்
பிறந்த மகன்
கற்பழிக்கப்பட்ட தன் தாயிடம்
கேட்கிறான்
"அம்மா, ஒரு கதை சொல்லு'

(அவள் சொல்ல ஆரம்பிக்கிறாள்)
ஒரு விருந்தினர்...(சரி வேண்டாம்)
முன்பொரு காலத்தில்
ஒரே ஒரு ஊர்ல ஒரு குட்டிப்பையனும் அவன் அம்மாவும்.
அவர்கள் வீட்டில் ஒரு சன்னல்.
அவர்கள் இருவரும் அமைதியாக
அந்தச் சாலையைப் 
பார்த்துக் கொண்டிருந்தார்களாம்!"

பையன் குறுக்கிட்டான்.
"அம்மா, அது என்ன சன்னல்?'
- சன்னல் என்பது சுவரில் ஒரு சின்ன திறப்பு.
அது வழியாக சூரிய வெளிச்சம் வரும்
அந்தச் சன்னல் கம்பிகளில்
பறவைகள் கூட உட்காரும்!"

பையன் மீண்டும் குறுக்கிட்டான்.
'அம்மா, அது என்ன பறவைகள்?"
கதை சொன்ன அம்மா இப்போது
கைகளில் பென்சிலை எடுத்தாள்
சுவரில் ஒரு சன்னலையும் குட்டிப்பையனையும்
வரைந்தாள்.
குட்டிப்பையனுக்கு இரு சிறகுகளுடன்.


Tuesday, April 1, 2014

சல்மாவின் ஆவணப்படம்






சல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்.
sparrow வின் அம்பை என்ற லஷ்மி நான் மதிக்கும் , பெருமை கொள்ளும் ஒரு எழுத்தாளர்,  இனிய தோழி, வழிகாட்டி.சில்வர் ஜூப்ளி கொண்டாடிக் கொண்டிருக்கிறது
sparrow. ஒவ்வொரு மாதமும் கலை இலக்கிய சமூக தளத்தில் தொடர்ந்து
செயல்பட்டுக் கொண்டிருக்கும்  பெண்களுடன் நடத்தும் உரையாடல் நிகழ்வு
கடைசி சனி/ஞாயிற்றுக்கிழமையில்  நடக்கிறது. அம்பையின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது.

கடந்த சனிக்கிழமை, 29/3/14ல் அந்தேரி (மேற்கு)
நான் நிகழ்வுக்குப் போவதற்கு சிறிது  தாமதமாகிவிட்டது. சல்மாவின்
ஆவணப்படம் ஆரம்பித்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தான் ஆரம்பித்தது என்றார்கள். படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதமாக இருக்கிறது.
சேனல் 4ன் நிதி உதவியுடன் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் பார்த்தப் பின் சில கேள்விகள் எழுகின்றன.

1)ராசாத்தி சல்மாவைப் பற்றி டில்லி சென்றிருந்தப் போது யாரோ சொல்ல
இவரும் இருக்க அந்த அறிமுகத்தில் இந்தப் படம் எடுத்தவர்
இவர் வீட்டுக்கே வந்து இவர்களுடன் 3 மாதங்கள் தங்கி இருந்ததாகச்
சொல்கிறார்.. அவர் சொல்லும் தகவல்கள் அனைத்தையும் நாம் நம்பத்தான் வேண்டும். சல்மா ரொம்பவும் பிரபலமானவர் என்பதால்.

2) எப்போது வேண்டுமானாலும் தன் கணவர் தன் முகத்தில் ஆசிட் வீசிவிடலாம் என்ற அச்சத்தில் தன் குழந்தையை முகத்தோடு அணைத்துக் கொண்டே  தூங்கியதாகச் சொல்கிறார் சல்மா.
அதே கணவருடன் இன்று வரை தொடர்கிறது அவர் வாழ்க்கை???
இதைக் கேள்விக்குட்படுத்துவது அவருடைய தனிப்பட்ட வாழ்வை கேள்விக்குட்படுத்தியதாக என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடும்
என்பதை நானறிவேன். என்றைக்கு இதை எல்லாம் அவர் படம் எடுத்து
ஊர் ஊராக தேசம் தேசமாகச் சென்று காட்ட ஆரம்பித்துவிட்டாரோ அன்றைக்கு இது அவர் சார்ந்த தனிமனித விஷயம் என்பதைத் தாண்டி விடுகிறது. இவ்வளவும் அவர் கணவரைப் பற்றிய உண்மைகளாக கூட இருக்கலாம்.
ஆனால் என் இனிய சகோதரி சல்மா அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இப்படி எல்லாம் அவரைப் பற்றி நீங்கள் வெளி உலகத்திற்குக் காட்டியப்பின்னரும் அவர் உங்களுடன் வாழ்கிறார். வாழ அனுமதித்திருக்கிறது உங்கள் சாதியும் மதமும் உங்கள் குடும்பமும்
அவர் குடும்பமும். உங்களுக்குத் தெரியுமா சல்மா... எங்கள் சாதியில்
எங்கள் குடும்பத்தில் எங்கள் வீட்டில் மட்டுமல்ல, எந்தச் சாதியிலும் எந்தக் குடும்பத்திலும் எந்த வீட்டிலும் இம்மாதிரி வெளிப்படையாக பேசப்பட்டு விட்டால் அவள் வாழ்வது சாத்தியமில்லை! உங்களுக்கு அபரிதமான
சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.
.

3) பெண் வீட்டில் அடைப்பட்டிருப்பது என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல,
இந்திய தேசத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதையே
உங்கள் ஆவணப்படத்தில் " சல்மா சிறைவைக்கப்பட்டிருந்ததாக, பூட்டி
வைக்கப்பட்டிருந்ததாக, அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக..." சொல்லப்படும் வாசகம் 

ஒரு இருண்ட அறையின் பின்புலக் காட்சியில்

FROM THE AGE OF 13 HER FAMILY KEPT HER LOCKED UP IN THIS ROOM,

அதன் பின் சல்மா ஜன்னலருகில் வந்து நிற்பார்.


THAT WAS THE ONLY WINDOW OUTSIDE WORLD

உண்மையில் சல்மாவை இந்த அறையில் அவர்கள் குடும்பம் பூட்டி
வைத்திருந்ததா அல்லது வயதுக்கு வந்தப் பின் பெண்கள் வீட்டுக்குள்
மட்டுமே அடைபட்டிருக்கும் நிலையை இப்படி சொல்லுகின்றார்களா?
சல்மா...

நீங்கள் இந்த ஆவணப்படத்தைச் சுமந்து கொண்டு பயணிக்கும் தேசங்கள் எங்கும் எம்மாதிரியான அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை அறிவீர்கள் தானே? 

4) இந்தியா ஆப்கானிஸ்தான் அல்ல, அரபு நாடும் அல்ல.
நம் சல்மா அவர்கள் "மலாலா " அல்ல. ஆனால் இந்த ஆவணப்படம்
ஏதோ ஒரு வகையில் இந்திய இசுலாமிய சமூகத்தை சரியாகப் புரிந்து
கொள்ளாதவர்கள் மத்தியில் இசுலாமிய குடும்பங்களில் பெண்கள்
அறையில் பூட்டி வைக்கபப்டிருந்தார்கள் என்ற பிம்பத்தைக் கொடுக்கிறது. 
தவறுதலாக. 


5) இசுலாமியப் பெண்களின் திருமணச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்கிறார் சல்மா. அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, அரசியல் வாதியும் கூட.
திமுக வின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோ பெண்களுக்கான
இடம் குறித்தோ திமுக சல்மா எதுவும் வாய்திறப்பதில்லை.
அப்படியே அவர் பேசினாலும் அது திமுக வின் தலைவருக்கும் தளபதிக்குமான துதிப்பாடலாக இருக்கிறது.

6) சல்மாவின் கவிதைகளை அவர் மகன்கள் கேட்பதில்லை,என்கிறது ஆவணப்படம்.
ஆமாம் எந்தப் பெண் எழுத்தாளரின் எழுத்துகளை அவர்களின் பிள்ளைகள்
கொண்டாடுகிறாரார்களாம்?

7) சல்மா தன் தோழியிடம் பேசும் காட்சி வரும். அக்காட்சியில் சல்மா
புர்கா அணிந்து முகம் மறைத்து அடுப்பறையில் நின்று கொண்டு  பேசுவார். அந்தப் பெண்ணோ புடவையில் எல்லோரையும் போல.
முகத்திலிருந்து திரை விலகாமல் அடுக்களையில் தன் பால்யகால
சிநேகிதியுடன் பேசும் காட்சியில் என்ன சொல்ல வருகிறார்கள்?



8)இசுலாமிய மதம் பெண்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்கவில்லை
என்ற ஒரு பொதுக்கருத்தை தனக்குச் சாதகமாக
மிக புத்திசாலித்தனமாக இந்த ஆவணப்படம் கையாண்டிருக்கிறது.
அதே மதத்தைச் சார்ந்த சல்மாவை வைத்து.


9) பிரபலமானதும் அரசியல் அதிகார வட்டத்திற்குள் வந்தப் பின்னரும்
கணவர், குடும்பம் பற்றிய சல்மாவின் விமர்சனங்களை சம்மந்தப்பட்ட அவர்கள்  ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் சல்மாவுக்கு
நாம் உண்மையிலேயே பாராட்டு சொல்லத்தான் வேண்டும்.






Friday, March 14, 2014

பயமுறுத்தும் வெற்றிகள்




தோல்விகளைக் கண்டு நான் பயப்படுவதில்லை.
அதிலும் குறிப்பாக அரசியல் தோல்விகளை.
சீனிவாசன் என்ற மாணவனுடன் தேர்தலில் போட்டியிட்ட
பெருந்தலைவர் காமராசர் தோல்வி அடைந்தார்.
அவருடைய தோல்வியை விட சீனிவாசனின் வெற்றி
நம்மைப் பயமுறித்தியது! பெருந்தலைவர் தோற்றதில்
அவருக்கு தனிப்பட்ட முறையில் எந்த இழப்பும் இல்லை.
சீனிவாசன் என்ற அன்றைய மாணவர் அந்த வெற்றிக்குப்பின்
என்னவானார்? எனக்குத் தெரியாது. ஆனால் காமராசர் தன் தோல்விக்குப்
பின்னரும் அரசியலில் தனிப்பெரும் ஆளுமையாக நின்றார். இன்றும் நிற்கிறார்.


தமிழ்நாட்டின் அரசியல் கூட்டணி ..யாருக்கு வெற்றி?
தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை இதைப் பற்றிப் பேசிப்பேசி
ஊடகங்கள் தங்கள் ஒலி ஒளிக் கற்றைகளை நிரப்பிக் கொள்ளலாம்.
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் நாடறிந்த ஊழல் பேர்வழியாக இருக்கலாம்.
மதக்கலவரத்தைத் தூண்டிவிட்டவராக இருக்கலாம்.
இந்துக்களை இசுலாமியர்களை குண்டு வைத்து அழித்த
இந்து தீவிரவாதியாகவோ இசுலாமிய தீவிரவாதியாகவோ இருக்கலா.ம்
இப்படி இருக்கலாம்...
இருக்கலாம்..
இருக்கிறார்கள்
ஆமாம்..இருக்கிறார்கள்
அதனாலென்ன?
நாளை அவர்களே வெற்றி பெறலாம்.
அப்போது...?!!!



இப்போதெல்லாம் தோல்விகளை விட
வெற்றிகளைக் கண்டே
எனக்கு அச்சமாக இருக்கிறது!
தோல்விகளை மன்னித்துவிடலாம்.
வெற்றிகள் ரொம்பவும் கொடூரமானவை.
நியாயத்தின் நாடி நரம்புகளை அறுத்து எடுத்து
ரத்தம் குடிக்கும் காட்டேறியாக
வெற்றி ஊளையிடுகிறது.
சங்கீதம் என்று அதையும் கொண்டாட
ஒரு கூட்டம் காத்திருக்கிறது.
இமைகளைப் பிடுங்கிய இரவில்
கனவுகள் தற்கொலை செய்துக் கொண்டதற்காக
அழவும் முடியவில்லை.
தோல்விகளை விட வெற்றிகளே
என் கோப்பையில் விஷமாய்....

Monday, March 10, 2014

ஆஸ்கார் விருதும், இந்தியர்களின் வெள்ளை நிறப் பெண்கள் மீதான மோக வெறிக்கு முற்றுப்புள்ளியும்.

இக்கட்டுரையை ஊடறுவில் இன்று வாசித்தேன்.  கட்டுரையை எழுதி இருக்கும்
இக்பால் செல்வன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....

பெண்ணின் திருமணத் தேடல்களில் வெண்ணிறம் என்பது அனைத்து இந்திய ஆண்களின் எதிர்ப்பார்ப்பாக போய்விட்டது. வெண்ணிறம் கிடைக்காத பட்சத்திலேயே மாநிறம், கருநிறம் எனப் போகின்றது ஆண்களின் தேடல்கள். இதை நம்மவர்கள் என்று தான் உணரப் போகின்றார்களோ? அதுவரைக்கும் தொலைக்காட்சிகளில் Fairness Cream விளம்பரங்களும், திருமண சந்தையில் வெள்ளை பெண் வேண்டும் என்ற மானங்கெட்ட விண்ணப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நம் ஊரில் உள்ளவர்கள் எதோ ஆஸ்கார் உலக சினிமாவுக்கான விருது என்ற எண்ணத்தை ஆழமாக பதிந்து கொண்டுள்ளனர். ஆனால் அகாதமி அவார்டுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் அமெரிக்க சினிமாவுக்கு கொடுக்கப்படும் விருதுகள். ஒரே ஒரு விருது மட்டும் சர்வதேச படத்துக்கு கொடுப்பார்கள். அது அந்தளவுக்கு கௌரவமான ஒன்றாக கருதப்படுவதும் இல்லை. அதை விட பன்மடங்கு சிறப்பு வாய்ந்த சர்வதேச திரைப்பட விழா விருதுகள் பல உள்ளன.
ஆலிவுட் படங்களாகட்டும், பிற மொழி படங்களாகட்டும் இரண்டையுமே எனக்கு அறிமுகமானது தூர்தர்சன் தொலைக்காட்சி ஊடாகத் தான். மாநில மொழி திரைப்படங்களையும், சில பழைய ஆங்கில படங்களையும், நிறையவே இந்தி படங்களையும் ஒளிபரப்புவார்கள். அவ்வாறு தான் பிறமொழி படங்களை நான் சிறு வயது முதலே அறிந்துகொண்டேன்.
ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக பத்திரிக்கைகள் அவ்வவ்போது எழுதும் பாரசீக உட்பட வெளிநாட்டுப் படங்கள் குறித்த கட்டுரைகளே பிற மொழி படங்களை பற்றி எனக்கு அதிகம் தகவல்களை தந்தன. அது போக, கல்லூரிக் காலங்களில் வகுப்புக்களை மட்டம் போட்டு விட்டு படம் பார்க்கப் போகும் போது எல்லாம் கம்மி விலைக்கு Ticket கிடைப்பது என்னவோ பெரும்பாலும் ஆலிவுட் ( டப்பிங் ) படங்கள் ஓடும் தியட்டர்களில் தான். சில நேரம் சத்யம், தேவி தியட்டர்கள் தான் கதி என கிடப்போம்.
ஒருமுறை இதையும் தாண்டி மலையாள, கன்னட படங்களை அறிமுகம் செய்து வைத்தான் எனது நண்பன். அப்போது எல்லாம் பிறமொழி படங்கள் மீது கடுப்பே மிஞ்சும், ஒன்று மொழிப் பிரச்சனை மற்றொன்று நமது வழக்கமான ரசனைகளுக்கு மாறாக அவை இருக்கும். ஆன போதும் ஆனந்த தியேட்டரில் எதாவது ஒரு பிறமொழி படங்களை பார்ப்பதை எனது நண்பன் வழக்கமாகி வைத்திருந்தான். அவ்வாறே நானும் தொடங்கினேன். சில சமயம் அலயன்ஸ் பிராங்கைசில் எதாவது பிரஞ்சு படம் போட்டால் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை என்றாலும் எதாவது காட்சித் துண்டுகளுக்காகவாவது போய்விடுவேன். காலப் போக்கில் அதுவே நல்ல பிற மொழி படங்களையும் ரசிக்க வைக்கத் தொடங்கியது.
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கிய பின்னர், பெரும்பாலான படங்களை தவமிருந்தாவது பார்த்து விடுவோம். அப்போது எல்லாம் இணையம் அவ்வளவு பிரபலம் இல்லை. நெட் செண்டர்களுக்கு போய் படம் பார்க்கும் அளவுக்கு கணனி ஞானமோ, பணமோ, நேரமோ கிடையாது. அவ்வாறாக பிறரின் திணிப்புக்களில் தொடங்கிய சர்வதேச திரைப்படங்கள் குறித்த பரிச்சயம் இன்று என்னை பல படங்களை பார்க்க வைத்திருக்கின்றது. 

இந்த முறை நான் அதிகம் எதிர்பார்த்தது “12 Years a Slave”, “Dallas Buyers Club”, “Nebraska” ஆகிய திரைப்படங்களைத் தான். இந்த மூன்று படங்களுமே இம்முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தமையால், ஒரு வித ஆர்வம் தொற்றிக் கொண்டது.  இருந்த போதும் அதிகளவு விருதுகளை குவித்தது என்னவோ “Gravity” திரைப்படம் தான். எனக்கு என்னவோ அந்த படத்தில் அவ்வளவாக மனம் ஒட்டவில்லை. ஆன போதும் முதன்முறையாக அல்போன்சோ குவாரன் என்ற ஒரு லத்தீன் அமெரிக்க இயக்குநருக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. “Dallas Buyers Club” என்ற குறைந்த பட்ஜட் திரைப்படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. இந்த திரைப்படம் எய்ட்ஸ் மற்றும் தற்பாலினத்தோர் குறித்த மிக அருமையான கதைக்களத்தை தாங்கி வந்திருந்தது.
ஆஸ்கார் அகாதமி விருதுகள் பெரும்பாலும் அமெரிக்காவின் வெள்ளை இனத்தவருக்கு போலி புகழை தரவல்ல ஒரு வீண் விளம்பர வைபவம் என்றே நான் எப்போதுமே கருதுவதுண்டு. ஆனால் இம் முறை மக்களின் சினிமா ஒன்று வெற்றி பெற்றிருந்தது மகிழ்வை தந்தது. சிறந்த திரைப்படத்துக்கான விருது “12 Years a Slave” படத்துக்கு வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் இத் திரைப்படம் கிட்டதட்ட $140,000,000 டாலர்களை வசூலித்தது. அது போக சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகை, மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான மூன்று ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றுள்ளது.
ஏன் இந்த திரைப்படத்தை பற்றி எழுதுகின்றேன் என்றால் அடிமை முறை அமுலில் இருந்த காலத்தில் வாழ்ந்த கறுப்பின மக்களின் வலிகளையும், ரணங்களையும் பிரதிபலிக்கும் ஒரு திரைக்காவியம் என்றே சொல்லலாம். 1853-யில் வெளியான 12 Years a Slave என்ற புத்தகம் அந்தக் காலத்தில் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம். இதனால் ஏற்பட்ட கருத்து மாற்றமே ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கும் அடிமை முறையை ஒழிக்க எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற நாட்டுக்கும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க வரலாற்றிலேயே இந்த யுத்தம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. ஆபிரகாம் லிங்கனின் தலைமையில் நடந்த இந்த யுத்தத்தின் முடிவில் தான் அமெரிக்கா தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டதோடு, கறுப்பின கொத்தடிமை தொழிலாளர்களுக்கு விடுதலையும் கிடைத்தது.
இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்த புத்தகம் காலப் போக்கில் மறக்கப்பட்டது. இதன் அச்சுப் பிரதிகள் எல்லாம் அழிந்தே போய்விட்ட நிலையில், 1968-யில் லூசியானா மாநிலத்தில் ஒரு பண்ணையில் வளர்ந்த சியு ஏகின் ( Sue Eakin ) என்ற 12 வயது வெள்ளையின சிறுமியினால் விளையாட்டாக பண்ணை வீட்டு பரணில் கண்டு எடுக்கப்பட்டது. அதன் பின் அவரின் தொடர் முயற்சியால் அந்த புத்தகம் குறித்து பல மேலதிக தகவல்களை சேகரித்து மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தின் கதை தான் 12 Years a Slave என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகி உலக அளவில் திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது 
Lupita NyongoTIFF2013 (cropped).jpg
குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்த அறிமுகமாகி இருக்கும் லுபிடா நியோங்கோவுக்கு சிறந்த துணை நடிகை விருது கிடைத்துள்ளது. முக்கியமாக அவர் விருதை வாங்கிய பின் மேடையில் பேசியது அழகைக் கொண்டாடுவதாக போலித்தனங்களை சுமந்து கொண்டு திரியும் நமக்கு எல்லாம் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது.
கென்யாவைச் சேர்ந்த லுபிடா நியோங்கோவை பார்க்கும் நமக்கு முதலில் தோன்றுவது அவரின் கறுத்த மேனி தான். ஒருவர் இவ்வளவு கறுப்பாக இருக்க முடியுமா? அதுவும் ஒரு பெண் கறுப்பாக இருந்து விட்டால், இந்த சமூகம் அவளை எவ்வாறு நோக்கும். அதுவும் வெள்ளை நிற மோகம் கொண்ட வெளி உலகுக்குள் புகும் போது, அழகின் இலக்கணம் என்பதையே வெள்ளை நிறம் என்பதை எழுதா விதியாக பாவித்துக் கொண்டிருக்கும் இந்த கேடு கெட்ட உலகில் இவ்வளவு கறுப்பு நிற மங்கை அனைவரையும் பொறாமை கொள்ள வைக்கும் அளவுக்கு பேரழகியாய் தோன்றி, தனது முதல் படத்திலேயே ஆஸ்காரை தட்டிச் சென்றுள்ளார் இந்த இளஞ்சிட்டு. கறுப்பின் அழகு வெளுப்பின் அழகு என்ற பாடலின் உள்ளர்த்தம் இப்போது தான் புலப்பட்டது. லுபிடா நியோங்கோ எவ்வாறு தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார், எத்தனை வலிகளையும், கேலிப் பேச்சுக்களையும் கடந்து இந்த நிலை எட்டியுள்ளார் என்பதை அவரது சில நிமிடப் பேச்சுக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளது.
இதற்கு முன்னரும் பல கறுப்பின பெண்கள் விருதுகளை வாங்கி இருந்த போதும், என்னவோ லுபிடா நியோங்கோவின் பேச்சை உலகம் முழுவதும் அழகின் இலக்கணத்தின் பொருளை விளங்கிக் கொள்ளாமல் வர்த்தகப்படுத்தப்பட்டு வரும் முகப் பூச்சுகளிலும், வெள்ளை நிறங்களிலும் தேடிக் கொண்டிருக்கும் நமக்கு ஒரு பாடமாகவே அமைய வேண்டும்.
தனது பதின்ம வயதில் தான் கறுப்பாக இருந்ததை நினைத்து அழாத நாளில்லை, கடவுளை தொழாத தருணங்கள் இல்லை என அவர் மேடையில் உருகிப் பேசியது இவரைப் போல உலகில் எத்தனைப் பெண்களை போலி அழகுத்தனங்களை திணித்து நாள் தோறும் தோல்வியடைச் செய்து வருகின்றோம். கொஞ்சம் மாநிறத்தோடு போனால் வெற்றி கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை, முகப்பூச்சை பூசி வெளுத்துக் கொண்டு போனதும் வெற்றி காலடியில் கொட்டுவது போல நமது தொலைக்காட்சிகள் காட்டும் போது எல்லாம் நமது வீடுகளுக்குள் எத்தனை பெண்களின் தன்னம்பிக்கையை தகர்த்து எறிந்து கொண்டிருக்கின்றோம் என்றே தோன்றியது.
“ஒவ்வொரு நாளும் கறுப்பாக இருந்ததுக்கு வருந்தாத நிமிடங்களே இல்லை ” என அவர் தொடர்ந்து பேசினார். ஆனால் அவரின் சிந்தனையை மாற்றியமைத்தது அலக் வெக் என்ற சூடானைச் சேர்ந்த அழகி தான் எனவும், தனது பிம்பத்தை அவரிடத்தில் கண்டதாக அதுவே இன்று இவரை வெற்றியின் உச்சியில் அமர்த்தியுள்ளது எனவும் கூறினார்.
கல்கி கோச்சலின் என்ற பாலிவுட் நடிகை பிரஞ்சு பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு நன்றாக தமிழும், இந்தியும் பேசத் தெரியும். ஒருமுறை இந்துஸ்தான் டைம் பத்திரிக்கையில் எழுதுகின்றார் ” இந்தியாவில் பிறந்து வளர்ந்ததால் இங்குள்ள இனவெறித்தனம் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும், ஆனால் சில சமயங்களில் என்னாலே அதனை சகிக்க முடிவதில்லை. சிறிய நகரங்களுக்கு போகும் போது, அங்குள்ள ஆண்கள் அரைகுறை ஆங்கிலத்தில் என்னைப் பார்த்து  “Hey baby”, “Sexy lady.” எனக் கூறுவதைக் கேட்கும் போது கோபம் கோபமாக வரும். சில பத்திரிக்கையாளர்கள் என்னிடம் பேட்டி காணும் போது, நான் ஏன் ஆலிவுட்டில் நடிக்கவில்லை, இந்தியா உங்களுக்கு பிடித்திருக்கின்றதா என எதோ நான் நேற்று தான் இந்த நாட்டுக்கு வந்தது போல கேள்விக் கேட்கின்றனர்”  என தனது மனக் குமுறலை கொட்டித் தீர்த்துள்ளார்.
நிறம் ஒரு குறையல்ல, நிறம் ஒவ்வொருவரின் அடையாளம். அழகுக்கும் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை. அழகு ஒருவர் தம்மை எவ்வாறு துணிவுடன், பரிசுத்ததுடன், குறைவில்லாமல் வெளிப்படுத்திக் கொள்கின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது என்பதை இவர் இன்னொருமுறை நிரூபித்துவிட்டார். இனி இவரின் நிறத்தில் தனது பிம்பத்தைக் காணும் லட்சக்கணக்கான பெண்கள் கறுப்பு நிறத்தால் மனம் புழுங்காமல், தாழ்வுணர்ச்சிக் கொள்ளாமல் புறப்படக் கூடும். குறிப்பாக இந்தியாவில் உள்ள பெண்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் தன்மானத்தையும், தன்னம்பிக்கையையும் இந்த சமூகம், இந்த பொருளாதார வலயம், இந்த ஊடகங்கள் காலில் போட்டு மிதித்து அழிக்கப் பார்க்கின்றன. அதனை உடைத்து கூட்டுக்குள் இருந்து கிளம்பும் வண்ணத்துப்பூச்சிகளை போல புறப்படுதல் மிக மிக அவசியமாகும்.
இந்த முறை ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் எனது எண்ணத்தையும் கருத்தையும் நிறைத்து நீங்கா இடம் பிடித்தவள் லுபிடா நியோங்கோ என்ற அந்த இளம் பெண் தான் என்பதில் துளி கூட ஐயமில்லை. ஆஸ்கார் போக உலகம் முழுவதும் அவர் கிட்டத்தட்ட 24 விருதுகளை இந்த வெற்றிப் படத்தில் நடித்தமையால் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிறம் ஒரு குறை என்று அவர் அன்றே புழுங்கிப் போய் கிடந்திருந்தால், அவரது குடும்பமும் ஊக்கம் தராது விட்டிருந்தால், இன்று உலகம் இவரை அறிந்திருக்கப் போவதுமில்லை, வரும் தலைமுறையினர் பலருக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உதித்திருக்கப் போவதுமில்லை என்பது உண்மை.
இந்திய மக்களின் பொது நிறமான கரும் நிறமும், மாநிறமும் ஒதுக்கப்பட்டதாகவே ஆக்கிவிட்டனர். காலம் காலமாக ஆரியர், கிரேக்கர், இஸ்லாமியர், ஐரோப்பியர் என அயலகத்தில் இருந்து வந்தவர்களின் வருணம் வெள்ளை என்பதால், அதிகாரத்தின் நிறம் வெள்ளை என்பது எழுதாத சட்டமாகி விட்டது. இருபதாம் நூற்றாண்டின் கல்வியும், சமூக மாற்றங்களும் கூட நிற பேதங்களை நீக்கிவிடவில்லை. வெளிர் நிற மோகத்தை பிற்காலத்தில் வந்த சினிமா, பத்திரிக்கைகள் முதல் இன்றைய இணையம் வரை நன்கு வளர்த்துவிட்டன. அந்த ஊடகங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் பலரும் ஆதிக்கச் சாதியினர் என்பதால் அவற்றை மாற்ற ஒருவரும் முயலவில்லை.
பெண்ணின் திருமணத் தேடல்களில் வெண்ணிறம் என்பது அனைத்து இந்திய ஆண்களின் எதிர்ப்பார்ப்பாக போய்விட்டது. வெண்ணிறம் கிடைக்காத பட்சத்திலேயே மாநிறம், கருநிறம் எனப் போகின்றது ஆண்களின் தேடல்கள். இதை நம்மவர்கள் என்று தான் உணரப் போகின்றார்களோ? அதுவரைக்கும் தொலைக்காட்சிகளில் Fairness Cream விளம்பரங்களும், திருமண சந்தையில் வெள்ளை பெண் வேண்டும் என்ற மானங்கெட்ட விண்ணப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நன்றி இக்பால் செல்வன் ( கோடங்கி) & ஊடறு. காம்